ஜூலை 30, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 18

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
-       கவியருவி ம.ரமேஷ்

வயல்வெளியின் பசுமை கண்களை கவ்விக்கொள்ளும்… அத்துணை அழகு… மழையின்றி வயல்வெளிகள் வறண்டு போயிருப்பதை காண்கிறோம். மனம் வருந்துகிறோம். ஹைக்கூவில் வயல்வெளி பசுமையாக இருக்கிறது (முதலிரண்டு அடிகளில்). ஒரு சமயம் மழைக் காலமாக இருக்கலாம் போல. பசுடையாக என்ன தெரிகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை – எந்தப் பயிர் வகை என்பதும் புரியவில்லை… நெல், கம்பு, சோளம், கரும்பு, வாழை என்று எதாவது இருக்கும்போல… எது இருந்தால் என்ன? பசுமையாக இருக்கிறது என்றால் அந்த நிலப்பரப்பின் விவசாயியும் வருமானம் பார்ப்பான் அவன் மனசும் பசுமையாக இருக்கும் என்று நம்புவோம்.

ஆனால், 3 அடியில் உயர்ந்து நிற்கும் காடு என்று இருக்கிறதே!. அப்போது வயல்வெளி (இரண்டு மூன்றாம் அடிகள்)? மேற்கண்ட பயிர் வகைகள் எதுவும் இல்லையா? காடுதான் பசுமையாக இருக்கிறதா? வயல்வெளி தரிசாக இருக்குமோ? அல்லது வயல்வெளி வீட்டு மனைகளாக்கப்பட்டு இருக்குமோ? காடுகளை அழித்து  வீட்டு மனைகள் போடுவதை கண்டிருக்கிறோமே… தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு ஹைக்கூ எழுதுங்கள். 

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
-       கவியருவி ம.ரமேஷ்


1 கருத்து: