ஜனவரி 07, 2014

என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை

என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை

பனைமரத்தின் கீழ் பால் குடித்தேன்…!

          தமிழ் ஹைக்கூ கவிதைகளைச் சிற்றிதழ்களும் வணிக இதழ்களும் வெளியிட்டு வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கவிஞர்கள் பலரும் ஆர்வ மேலீட்டால் ஹைக்கூ கவிதை தொகுப்புகளை வெளியிட்டு அறிமுகமாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவருகின்றன. ஹைக்கூ கவிதை மீதான விமர்சனக் கணைகள் இன்னும் வீசிக்கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் மீறியே இன்று அமைதியாக ஹைக்கூ இயங்கி வருகிறது. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஹைக்கூவை ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற விழையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருவதை அறியமுடிகின்றது.

            சமீபத்தில் நண்பர் கவியருவி ரமேஷ் எழுதிய ஹைக்கூ கவிதைகளை இதழ்களின் வழியே படிக்க நேர்ந்தது. ஹைக்கூ கவிதைகள் நிறையவே படைத்து தனித்தொரு அங்கீகாரம் பெற்றிட வேண்டும் என்கிற முனைப்பு மிகுந்தே அந்த ஹைக்கூ கவிதைகளில் காணப் பெற்றன.   அந்த முனைப்பும்  தீவிர     ஆர்வமும் நான் அவரை நேரில் கண்டபோதும் வெளிப்பட்டு நின்றது. கவித்துவமிக்கத் தலைப்பான பனித் துளியில் பனைமரம்என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில ஹைக்கூ கவிதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய கருத்துகளை வாசகர்களிடையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

            பிரபஞ்ச இயக்கத்திற்கு எப்பொழுதும் ஓய்வு என்பதில்லை. புவியில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஓய்வு என்பதில்லை. எல்லாமே இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஓய்வு என்பது உறக்கமே; ஓய்வாகாது. உறக்கமின்றேல் மனிதனுக்குப் பல்வேறு வகையான மன, உளவியல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மருத்துவர் அந்நோய்க்கு மருந்தாக உறக்க மாத்திரை அளித்து நிவாரணமாக ஓய்வெடுக்க விடுகிறார். அப்படிப் பார்த்தால் ஓய்வு என்பது ஒரு பாவனையாகவே கருதப்படுகிறது. இந்த ஓய்வு நிலையினை,
இலை நிழலில்
இளைப்பாறுகின்றன
எறும்புகள்
 என்று சிறு எறும்பின் மூலமாக எடுத்துரைக்கிறார்.
            அரிசி புடைத்தல் கிராமப் பெண்களுக்கு லாவகமானதொரு செயல். அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு எனப் பல உணவுப் பொருட்கள் புடைத்துச் சுத்தம் செய்வதனை வீடுகளில் ஏதேனும் ஓரிடத்தில் உட்கார்ந்து புடைப்பதனைக் காணலாம். வீட்டில் முற்றத்தில் மகள் அரிசி புடைப்பதனை அம்மா ஏதோ ஒரு காரணம் முன்னிட்டு திட்டுகிறாள். அதனை வீட்டின் மாடத்தில் அமர்ந்திருக்கும் குருவி கண்டு களிக்கிறதாம். இதனை,
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
என்று அற்புதமானதொரு காட்சிப் படிமத்தைக்காட்டி சிந்திக்க வைக்கிறார் கவிஞர்.

            உழவுத் தொழில் விவசாயிகளின் ஜீவாதாரமான வாழ்க்கை. உழவுத் தொழிலை வள்ளுவப் பெருந்தகை  உயர்த்திப் போற்றுகிறார். உலக மாந்தர்களை எல்லாம் வாழ்விப்பது உழவுத் தொழிலே. ஆனால், அம்மக்களின் வாழ்நிலை இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் உயர்வாகப் பேசும்படி இல்லையென்பது வருத்தத்திற்கு உரியதே. அவர்களின் வாழ்க்கை எவ்வழி செல்கிறது என்பதனை,
ஏர் வழி செல்லும்
காளைகள்
விவசாயியின் வாழ்க்கை
 என்று காட்டுகிறார் கவிஞர்.
            விவசாயிகளின் ஏர் (நேர்) வழி வாழ்க்கையைப்
படம் பிடித்துக் காட்டும் கவிஞர் அவ்விவசாயப் மக்கள் எதிர்நோக்கும் மழையைப் பற்றியும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.
வாடிக் கொண்டிருக்கும் செடி
அடியில் எறும்பு புற்று
வருந்தியபோது மழை
 என்று வள்ளுவரைப் போன்றும், வள்ளலாரைப் போன்றும் வாடிக் கொண்டிருக்கும் செடிகளுக்காகவும் எறும்புகளுக்காகவும் பரிவு காட்டுகிறார்.

            மனிதர்கள் ஆடை உடுத்தவில்லை எனில் நிர்வாணமாகக் காட்சியளித்து விலங்கினங்களைப் போலத் தோன்றுவார்கள். அந் நிர்வாண உருவத்தைப் பார்ப்பதற்குச் சகிக்கத் தோன்றுமா? இலைகளைத் தன் இடுப்பில் ஆடையாக அணியத் தொடங்கிய மனிதனின் அழகு, இன்று நாகரீகம்  என்ற வார்த்தை போதையில் மயங்கி,  மீண்டும் ஆடைகள் அரை நிர்வாணமாக மாறி வருகின்றன.
ஆடை
உடுத்தலில் இருக்கிறது
பூக்களின் அழகு
 ஆடை உடுத்தியிருப்பதால்தான் அனைத்துப் பூக்களும் அழகாகக் காட்சி  அளிப்பதாகவும், பூக்களும் ஆடை அணிந்துள்ளன என்று கண்டுணர்ந்த இக்கவிஞனின் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

            பூக்கள் மரங்களுக்கு அழகு சேர்ப்பதைப் போன்று பூக்கள் பெண்களின் கூந்தலுக்கும் அழகு சேர்க்கிறது. பெண்கள் கூந்தலில் சூடியப் பூக்கள் மாலைப் பொழுது வருவதற்குள் வாடி போய்விடுகிறது. பெண்களின் உடல் வெப்பநிலை, காற்றின்மை, உணர்வுநிலை, மனச் சோர்வு, மன அழுத்தம் ஆகிய மனநிலை சிக்கல் களுக்குக் காரணமாகச் சொல்லலாம். பெண்கூந்தலின் மீதான பார்வையைப் பதித்திருக்கிறது இந்த ஹைக்கூ:
கூந்தல்
சிக்குண்டது
பூக்கள்
பெண்கள் தலையில் லாவகமாகப் பூவை வைப்பதும் எடுப்பதையும் காணலாம். ஆனால் சிக்குண்டது என்று இன்றைய பெண்ணியவாதிகளின் பார்வையில் இருந்து அவர்களின் அவலநிலையை உணர்த்துகிறார்.

            இருவர் உள்ளங்களைக் கவர்ந்து வசீகரிக்கும் உணர்வே காதலாகும். இக் காதல் காந்த சக்தி இரு மனங்களையும் இணைத்துக் கொண்டு இயங்கும் வேகம் அபரிமிதமானதாகும். காந்தம் இரும்போடு இணைந்தும் விலகியும் ஆட்டம் போடும். அதே போன்றுதான் காதலும் இணைந்தும் விலகியும் விளையாட்டு காட்டும். ஆனால், காதல் மௌனமாக நடந்தேறும்போது தன்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்று
காதலனாலும், தன்னைக் காதலிக்கிறானா இல்லையா என்று காதலியாலும் உணர்ந்து கொள்வதற்கு அவர்களுள் நடந்தேறும் மௌனம் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே திகழும். அக் காதலை,
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மௌனம்
என்று காதலை புதுமையாக் காட்டுகிறார். காதலின் மௌனத்தைக் காட்டிய கவிஞர் காதலுக்குண்டான தனிமையையும் பேசுகிறார். தனிமையில்தான் காதல் உணர்வு மேலெழுந்து உடல் மனமெல்லாம் பரவி அதன் வெற்றி தோல்விகளுக்கான வழிவகைகள் காண முயற்சிகள் மேற்கொள்ளும். ஆனால், வெற்றியடையும் காதலைவிட, தோல்வியைத் தழுவும் காதலே மிக அதிகம். காதலர்கள் காதல் தோல்வியில் அல்லல் பட்டுக் கண்ணீர் சிந்தும் சோகத்தை,
தனிமையில் காதலர்கள்
பேசும் மொழி
கண்ணீர்
என்று காதலர்களின் உணர்வுகளைப் புரிந்து இந்த ஹைக்கூவினைப்   படைத்துள்ளார்.

            மனிதன் உழைத்தோ ஊழல் செய்தோ அல்லது தவறான வழியில்  பொருளை ஈட்டி சேர்த்து வைக்கும் பண ஆசைக்கு எல்லை இல்லாமலே போய்விட்டது. நீதி போதனைகளாக  அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள், ஆசைப்படாதே என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால், மனிதன் எதைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது மிகப் பெரிய கேள்விக்குரியாகிறது. எது எப்படியோ பல மனிதர்களின் ஆசைகள் திடீரென நிறைவேறாமல் இடையிலேயே நின்று போய்விடுகிறது. அப்படிப் பட்ட ஒரு மனிதனின் ஆசை,
            சேர்த்து வைத்த ஆசைகள்
சிதறு தேங்காயாகி விட்டது
மரணம்
என்று மரணத்தினால் ஆசைகள் நிறைவேறாமல் போய் விட்டது என்பதை சிதறு தேங்காய்என்ற சொல் வழக்கில் மிக அழகாகக் கொண்டு வந்து இந்த ஹைக்கூவில் சொல்லி வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.

புல், பனித்துளி ஆகியன ஹைக்கூ கவிதையின் உயிர் எனலாம். இந்த இயற்கையின் அற்புதங்கள் பார்க்கப் பார்க்க தெகிட்டாத இன்பம். பெரிய ஆலமரத்தில் சிறிய பழம் எத்தனை அழகு. வயல் வரப்புகளில் புல்லின் மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிதான் எத்துனை பெரிய பேரழகு. இருப்பினும் இது பலருக்குத் தினம் காணும் நிகழ்வாகவே நின்றுவிடுகிறது. ஆனால் இக்கவிஞரின் கற்பனையோ அப்பனி துளிக்குள்ளும் ஒரு விஸ்வரூபத் தரிசனத்தைக் கண்டுள்ளது. இவ்வகையிலான கருப்பொருளால்தான் நாம் ஹைக்கூவை வியக்கவும் முடிகிறது.

புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
நீண்ட நெடிய பனைமரம் ஒரு பனித்துளிக்குள் காட்சி அளிக்கும் இயற்கைத் தன்மையைக் கண்டு உணர்ந்து படைத்துள்ள இக்கவிதை கவிஞரின் இயற்கையின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் கற்பனை வளத்தையும்  எடுத்துக்காட்டுவதோடு அறிவியல் பார்வை கொண்ட அழகியல் கவிதையாகவும் அமைந்துள்ளது.

குழந்தைகளின் மன உலகில் நுழைவதற்குப் பெரியவர்களுக்குக் குழந்தை மனம் தேவைப் படுகிறது. அக்குழந்தை மனம் எல்லாருக்கும் வாய்ப்பது அரிது. ஒரு சிலருக்கே அது கை வரப்பெறும். கவிஞரும் குழந்தைகளின் செயல்களை உற்று நோக்குகிறார். அக் குழந்தைகளின் பல்வேறு விளையாட்டுகளில் நிலாச் சோறு, மண்சோறு ஆக்கிப் படைத்துப் பசியாற்றிக் கொள்வதும் ஒன்று. இன்று குழந்தைகள் ஒன்றாகக் கூடி  விளையாடும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால்குழந்தைகளைத் தடுத்துவிட்டதாலும் அவ்வகையான கருப்பொருள்கள் கவிதையாக்கம் பெறுவது தவிர்க்க முடியததாகும். 
குழந்தைகளுக்குப் பசி
தாமே சமைத்து உண்டார்கள்
மண்சோறு
என்று அக்குழந்தைகளின் பசிக்கான காரணத்தைச் சொல்லாமல் அக் குழந்தைகள் தாமே சமைத்து மண் சோறு உண்டு பசி ஆறியதாக நினைத்து மகிழ்ந்ததைக் காட்சிபடுத்துகிறார். இக்கருப்பொருளில் அமைந்த பிறிதொரு ஹைக்கூ கவிதையில் குழந்தைகள்  மீதான பெற்றோர்களின்  கண்டிப்பினைச் சுட்டிக் காட்டுகிறார்.  அக்கவிதை:
குழந்தைகளை
கட்டவிட மறுக்கிறோம்
மணல்வீடுகள்
ஆறு, கடற்கரை, மணல் குவியல் ஆகிய  ஏதேனும் ஓர் இடத்தில் சந்தோஷமாக விளையாடும் குழந்தைகளை மணல விளையாடதே வா ஒடம்பு மண்ணாகும்; அழுக்குச் சேரும்என்றெல்லாம் அவர்களை அதட்டிக் கண்டிப்பதனைக் கவிஞர் கண்டிக்கிறார். குழந்தைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு நல்வழிப் படுத்த வேண்டும் என்கிறார்.
ஹைக்கூ கவிதைகளின் வாசிப்பு அனுபவம் கவிஞருக்கு ஹைக்கூவை எழுதுவதற்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது. இத் தொகுப்பில் இயற்கை சார்ந்த கவிதைகள் மிகுந்து காணப்படுகின்றன. இவர் வாழும் சமூகத்தைக் கூர்ந்து நோக்கிய பார்வையால் ஹைக்கூ கவிதைகளுக்குக்கான கருப்பொருள்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. கவிஞரின் அகவயக் கருத்துணர்வால் உருவான பிறப்பு, இறப்பு, உடல், மனம் சார்ந்த கவிதைகள், பெற்றோர்கள், குழந்தைகள், ஆண், பெண், அன்பு, கருணை, காதல், பெண்மை எனப் பல்வேறு நிலைகளில் உருவான ஹைக்கூ கவிதைகளும்  இக்கவிதைத் தொகுப்பில் கருப் பொருளாகியுள்ளன. இன்னும் கொஞ்சம் ஹைக்கூக்களின் நுட்பங்களைக் கூர்ந்து நோக்கி சீரிய முயற்சிகள் மேற்கொண்டால்  தமிழுக்குச் செழுமையான ஹைக்கூ கவிதைகள் நிறைய கிடைக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன என்று கூறி கவிஞர் கவியருவியை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்.

சுவையானது; குளிர்ச்சியானது
சுட்டெரிக்காத முக்கண்
பனை நுங்கு
- ந.க. துறைவன்
கவிதை புத்தகங்களை வாங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக