ஜனவரி 08, 2014

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வுரை

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வுரை

 கவிதை புத்தகங்களை வாங்க


நகைப்பிற்குரிய மென்மையான கோபம்...
ஜப்பானிய ஹைக்கூ வகைமைகளில் சென்ரியூவும் ஒரு வடிவமாகும். எது ஹைக்கூ எது  சென்ரியூ என வகை பிரித்து வாசிப்பது வாசகனுக்குச்  சிரமமாகத் தோன்றும். அந்த அளவுக்கு ஹைக்கூவும் சென்ரியூவும் மயக்கமுற்றுக் காணப்படும். ஆனாலும், ஹைக்கூ, சென்ரியூவின் கரு வேறாகும். இதனை,
ஹைக்கூவில் இயற்கை உள்ளது. அது ஒரு நிகழ்வு ஆயினும் அதன் பின்னணியில் இயற்கை உண்டு. சென்ரியூவில் மனிதர்களும் சமுதாயமுமே இடம் பெறுகின்றனர். ஒரு தேசியத்துக்கு உரித்தான குணங்கள், மனிதர்களின் நூதனங்கள், முட்டாள் தனங்கள் இவை னைத்தும் நகைச்சுவையோடு சுட்டி காட்டப்படும். ஹைக்கூ இயற்கைக் கவிதை சென்ரியூ மக்கள் கவிதை என்பார் ஆய்வாளர் நிர்மலா சுரேஷ். சென்ரியூவை அறிமுகப்படுத்தும் கீழ்க்கண்ட,
1.சிரிக்கும் வில்லோ மரம் - நிர்மலா சுரேஷ்
2.ஒரு வண்டி சென்ரியூ - ஈரோடு தமிழன்பன்
3.சில ஹைக்கூ சில சென்ரியூ - கவிஞர் அமரன்
4.ஞானக்கோமாளி - எஸ். ஷங்கரநாராயணன்
5.கூறாதது கூறல் - எஸ். ஷங்கரநாராயணன்
6.ஊர்வலத்தில் கடைசி மனிதன் - எஸ். ஷங்கர நாராயணன்
7. திறந்திடு சிஷேம் - எஸ். ஷங்கரநாராயணன்
8. கடவுளின் கடைசி கவிதை - மணிகண்டன் (மாமதயானை)

9. ஒரு டீ சொல்லுங்கள் - கவின்
ஆகியோரின் மேற்கண்ட தொகுப்புகள் சென்ரியூ கவிதைகளாகவும் சென்ரியூ கட்டுரைகளாகவும் இது வரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகிய உள்ளன. கவியருவி ம. ரமேஷின் இந்தச் சென்ரியூ தொகுதி இவர்களுக்கு அடுத்த வரிசையில் இடம் பெறுவது மட்டுமல்லாமல் தற்சமயம்,
தமிழில் வெளிவரும் ஏராளமான சென்ரியூ கவிதை களையே  ஹைக்கூ கவிதைகள் என்று அழைக்கும் அறியாமைத் தனத்தை ஹைக்கூத் தொகுதிகளும் வணிக, சிற்றிதழ்களும் செய்து வரும் சூழலில் இந்தச் சென்ரியூ தொகுதி வருவது பாராட்டுக்குரியதும் சிறப்புக்குரியதும் கவனிப்புக்கு உரியதுமாகும்.
வாழ்க்கை முரண்கள், மனித குணநலன்கள், மன விகாரங்கள், நகைச்சுவை, அங்கதம், கேலி கிண்டல், மூடத்தனங்கள், அரசியல் விமர்சனங்கள் போன்ற இன்ன பிற அம்சங்கள் சென்ரியூவில் கையாளப்படும். பனித்துளியில் பனைமரம் என்னும் ஹைக்கூத் தொகுதியினை வெளியிட்டு அறிமுகமான கவியருவி ம.ரமேஷ், சென்ரியூவைப் படைத்துத் தந்துள்ளப் பாங்கினை இவ் ஆய்வுரை விளக்குகிறது.
பிள்ளைகளைப் பெற்றோர்கள் கொஞ்சம்கூட சுதந்திரமாய் இருக்கவிடுவதில்லை. வீட்டிற்குள்ளே கூட விளையாட அனுமதிக்காத நாம் வெளியில் சென்று விளையாடவும் அனுமதிப்பதில்லை. இதனை,
அம்மா விளையாடப்போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
என்ற சென்ரியூவால் எடுத்துக்காட்டுகிறார். ஹைக்கூ வெளியீட்டு உத்தியை ஜப்பானிய சென்ரியூ கவிதை  கைவிட்டுவிடாதபடி காத்துவர கவியருவி ம.ரமேஷின் சென்ரியூ கவிதைகளும் ஹைக்கூ வெளியீட்டு உத்தி யையே பயன்படுத்தி சென்ரியூ கவிதைகளைப் படைத் தளித்துள்ளார். அம்மாவிடம் குழந்தை விளையாடப் போகிறேன் என்கிறான். அம்மா என்ன விளையாட்டு என்று கேட்கிறாள். வெளியே சென்று விளையாடப் போகும் விளையாட்டு பெயரை மூன்றாம் அடியில் சொல்வான் என்று நாம் எதிர் பார்த்தால், எதிர்பாராத திருப்பமாக போய்ப் படிஎன்று முடிகிறது.
வீட்டில்தான் பெற்றோர்கள் இப்படியென்றால், பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களும் மாணவர்களின் விஷயத்தில் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள் கிறார்கள். இதனை,
பேசாமல் படி பேசாமல் படி
பேசிக்கொண்டே இருக்கும்
ஆசிரியர்
 என்பதால் அறியலாம். ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் கருதிப் படிக்கும் எந்திரமாக மாற்றி அமைக்கப் படி படி என்று நச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் படித்துக் கொண்டிருக்கச் சிலர் பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருக்க படி படி என்று ஆசிரியரே சப்தம் எழுப்பிக் கொண்டு இருக்கிறார். இதில் ஆசிரியரின் சப்தம் என்பது மாணவர்களின் நலனைச் சார்ந்தே அமைந்துள்ள தெனினும் வகுப்பு அறையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எரிச்சலாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறதென்று நகைக்கிறார்.
கிராமங்களில் விவசாயம் நொடிந்து வருகிறது. வயல் வேலைக்குக் கூலியாட்கள் கிடைப்பதும் அரிதாகி விட்டது. அவர்கள் வேறு வேலைகளுக்கு நகரங் களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். வயல் வெளிகள் வீட்டுமனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின் றன.  இந்நிலையில்,
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக் கொண்டிருந்தான்
கம்ப்யூட்டரில் விவசாயி
என்று இனி வரும் சில ஆண்டுகளில் நவீனமாக்கப்படும் வேளாண்மையைக் கல்வியை நினைத்து தற்போதே நகைக்கிறார்.
கல்வி என்பது இன்று தாராளமயமாக்கப்பட்ட வியாபாரம் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்விக் கடவுளான சரஸ்வதிக்குக் கையில் புத்தகமும் வீணையும்தான் இருக்கும். ஆனால் கவிஞரோ,
சரஸ்வதி கையில்
உண்டியல்
கல்வி வியாபாரம்
என்று கல்வி நிறுவனங்களின் இன்றையப் போக்கைச் சாடுகிறார்.
தமிழக அரசின் கஜானாவை அதிகம் நிரப்பிக் கொண்டிருக்கும் வருமானம், மதுக்கடைகளிலிருந்தும் மணல் குவாரிகளிலிருந்தும் கிடைக்கும் பெரும் பண மாகும். இவ்வருவாய் இல்லையெனில் அரசின் பல இலவசத் திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் போகும் என்பது மக்கள் அறிந்ததே. உயிர்ப் பலிகள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்புகள், பொதுமக்களின் போராட் டங்கள் என்று எதையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
பல மொழிகளில்
குடிகாரன் வாசித்தான்
மதுக்கடையின் பெயர்
என்னும் சென்ரியூவில் விளம்பரம் ஏதும் தேவையே இல்லாத மதுக்கடைக்குப் பல மொழிகளில் மதுக்கடை என்னும் பெயரை எழுதி விளம்பரம் செய்வதைக் கிண்டல் செய்கிறார். அதையும் அங்குக் குடிக்கும் ஒரு குடிகாரன் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதுதான் நகைப்புக்குரியதாகிறது. அதாவது, பல மொழிகள் தெரிந்த; நன்றாகப் படித்த ஒருவன் குடிப்பது என்பது படித்தவர்களிடமும் ஒழுக்கம் இன்று சிதைந்து விட்டதைக் காட்டக் கவிஞர் இச்சென்ரியூவைப் படைத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கிராமங்களில் இன்றும் பொதுவான சுடுகாடு என்பது இல்லை. சுடுகாடு வேண்டிப் போராடும் அவல நிலையிலேயே மக்கள் உள்ளனர். அப்படியே சுடுகாடு ஒதுக்க நிலம் கிடைத்தாலும், அதுவே,
சாதிக்கொரு சுடுகாடு
மாற்றம் ஏற்பட்டது
கட்சிக்கொரு சுடுகாடு
என்று அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறார். சாதிக்கொரு சுடுகாடு / மாற்றம் ஏற்பட்டது என்ற இரண்டு அடிகளை நாம் வாசிக்கும்போது சாதிகள் ஒழிந்து ஒன்றுபட்டு இருக்குமோ என்று நாம் எண்ணி மகிழும் நேரத்தில் அடுத்த அடியில் நம்மை எதிர்ப்பாராத அதிர்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறார்.
இந்நூற்றாண்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. சமுதாய ஒற்றுமையும் உதவும் மனப்பான்மையும் பெரிதும் குறைந்துவிட்டது. தன் குடும்பம், தன் வேலை, தன்னுடைய வருமானம் என்று மனிதர்கள் இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் பிறருக்காக வருந்தும் நிலையில் இல்லை  என்பதை இன்றைய இயல்பான நடைமுறைப் போக்கிலேயே கவிஞர் எடுத்துரைப்பதைப் பாருங்கள்:
அண்டை வீட்டில் இழவு
பக்கத்து வீட்டில் சப்தமாய்
தொலைக்காட்சித் தொடர்கள்
அண்டை வீட்டில் இழவு / பக்கத்து வீட்டில் சப்தமாய் என்று முதல் இரண்டு அடிகளைப் படைத்து மூன்றாவது அடியில் தொலைக்காட்சித் தொடர்கள் என்று முடிக்கிறார். முதல் இரண்டு அடிகளைப் படித்ததும்  பக்கத்து வீட்டிலிருந்து சப்தமாய் யாராவது அழுது கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கடைசி அடியை வாசித்தால் பெரும் அதிர்ச்சி ஏற்படு கிறது; தொலைக்காட்சித் தொடர்களை அதுவும் சப்தமாய் வைத்து; அழுகை ஒலி அவர்களின் காது களுக்குக் கேட்கக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வதால் அண்டை வீட்டாரிடமே நாம் மனித நேயத்தைக் கடை பிடிப்பதில்லை என்று தெரிகிறது. மறையும் மனித நேயத்தை நாம் மீட்டு எடுக்க வேண்டும் என்றும் சமுதாயத்துக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார் கவிஞர்.
கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய  காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன.
விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!
குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,
நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை
என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர்:
அம்மா  அப்பா
முதியோர்  இல்லத்தில்
மகன்  மருமகள்  விவாகரத்து

ந்தச் சென்ரியூ தொகுப்பில் சென்ரியூக்கான பண்புகள், வெளியீட்டு முறைமைகள் ஆகியவற்றைக் கைவிடாமல் படைத்திருப்பது  பாராட்டுக்குரியதாகும். கிராமம்; கிராமம் சார்ந்த சூழல்கள், குடும்பச் சிக்கல் களால் சமுதாயச் சிக்கலாக மாறிப்போன தீமைகள், முதியோர்களின் அவல நிலை, இளைஞன் - இளைஞி களின் மனப் போக்குகள், காதல் வெற்றித் தோல்வி கள், திருமணம், விவாகரத்து, விபச்சாரம், திரைப் படம்; தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் போக்கும்; நடிகர் நடிகைகளின் செயல்பாடுகளும், அரசியல்வாதிகள், ஊழல்கள், சாதி மத இனங்களின் மூடத்தனங்கள், புகை; மதுவின் தீமைகள், கடவுள்; தெய்வங்களின் மீதான பார்வை, சுற்றுச்சூழல் என இந்தச் சமுதாயத்தில் நிகழும் முரணான சம்பவங்களை  நகைப்புக்கு ரியதாக்கிச் சற்று மென்மையான கோபத்தில் தன் சென்ரியூ கவிதைகளின் வாயிலாக வெளிக்காட்டியுள்ளார். சமுதாயத்தில் இந்தப் புதிய வகைச் சென்ரியூ கவிதைகள் மலர்ந்து மனம் வீசி பரவும்போது துர்நாற்றமெடுத்திருக்கும் சமுதாயச் சிக்கல்கள் அனைத்தும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி நல்லதொரு மனம் நிறைந்த சமுதாயமாக மாற்றம் பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
- ந.க. துறைவன்


கவிதை புத்தகங்களை வாங்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக