ஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்
பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
என்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம்
மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று
பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன்.
கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள் வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது – மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:
துளிர்க்கும் மரம்
மீண்டும் வெட்டப்படுகிறது
சேடையில் மக்கும் தளைகள்
மேற்கண்ட ஹைக்கூவில்
இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது
அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால்
ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில்
– பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு
துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர்
மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று
நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக