கைக்கோர்த்தபடி
காதலியோடு சென்றான் கடவுள்.
சாலையில் ஊனமுற்றோர் நடக்க
அடப் பாவமே என்று
சாலையைக்கடக்க உதவினான்;
இரக்கக்காரன் என மகிழ்ந்தாள்!
அம்மா தாயே! குரல் கேட்க
5 ரூபாயை எடுத்து நீட்டினான்;
அவள் முகம் மலர்ந்தது!
அந்தக் காதலர்கள்
கோயிலுக்குச் சென்றுதான் திரும்பியிருக்க வேண்டும்
வேகமாக பயணத்தால் கீழே விழ,
“யாண்ட வண்டிய மெதுவா ஓட்டுன்னா கேக்கிறியா?
கேள் பிரண்டு வீட்டுக்குப் போறேன்னு சொல்லி,
அப்பப்ப உங்கூட வெளியே வற்றதே தப்பு
அடிப்பட்டு இருந்தா வீட்டுல என்னன்னு சொல்லறது”
ஓடிப்போய்க் காப்பாற்ற
துடித்ததைகண்டு வியந்தாள்!
இத்தனைக்கும் மத்தியில் பூக்காரி வர
ஒரு ரோஜா; ஒரு முழம் மல்லி;
அவள் மனத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
சாலையில் கடவுள் உருவம் வரைந்ததற்கு மேலே
ஒரு பத்து ரூபாயை கடவுளிடமே வாங்கி
விட்டெரிந்து நடந்தாள் அவள்!
கடவுளும் மகிழ்ந்தார்!
மறுநாள்…
அதே ஊனமுற்றவன்; பிச்சைக்காரன்;
வேறெரு முதியவர் விபத்தால்
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கவும்;
பூக்காரி கடவுளைக் கடக்க,
‘அண்ணா பூ வாங்கிட்டு வா’ன்னு சொன்ன
தங்கையின் பேச்சைப் மறந்தும்,
எதையும் கண்டுகொள்ளாமல்
செல்லில் காதலியுடன் பேசியபடியே
எல்லாவற்றையும் கடந்தார் கடவுள்!
(நீங்களும்
காதலியோடு செல்லுங்கள்
காதலி இல்லாதவர்கள்
காதலோடு செல்லுங்கள்
மனிதநேயம் பெருக!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக