குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்
பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு
தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா?
இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக