அசையும் இலைகள்
பாம்பு வாயில் தவளை
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு
அசையும் இலைகள் – எதன் காரணமாகவோ இலை அசைந்துள்ளது. ஆனாலும்,
அது என்ன இலை என்று முதல் வரியில் தெரியவில்லை.
பாம்பு வாயில் தவளை – சிக்கிவிட்டதா? ம். சிக்கிவிட்டது சென்ற
வாரம் தப்பித்த தவளை. இலை அசையும் போதே ஏதோ வருகிறது – ஆபத்து வருகிறது என்று தண்ணீரில்
குதித்து தப்பித்திருக்க வேண்டும். ஆனால் தப்பிக்கவில்லை – தவளைக்கு உணவு உண்ட மயக்கமாகக்கூட
இருக்கலாம். எது எப்படியோ சிக்கிவிட்டது.
சரி… ஹைக்கூவில் மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாகவும்
அதிர்ச்சியாகவும் முதல் இரண்டு அடியிலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்கிறார்களே!
– சரி மூன்றாவது அடிக்குத்தான் போய் பார்ப்போம்.
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு – இப்போது தெரிந்துவிடுகிறது
– என்ன தெரிகிறது? முதல் அடியில் அசைந்த இலைகள் – தாமரை இலைகள் என்பதும் தாமரை இலையின்
மீதுதான் அந்தத் தவளை இருந்திருக்கிறது என்பதும் தாமரையிலிருந்து என்பதால் தெரிகிறது.
அப்போது மூன்றாவது அடியில் இருக்கும் “பறக்கும் வண்டு”. ஆமாம்.
தாமரையில் தேன் எடுத்துக்கொண்டிருந்த வண்டு பாம்பு தவளையை விழுங்கியதால் – தாமரை அசைந்ததால்
– பயந்தோ – பயப்படாமலோ பாதியிலேயே பறந்துவிட்டது!
ஏன் பாதியில்தான் பறந்திருக்குமா என்ன? தேன் முழுவதையும்
அருந்தி விட்டு பறந்து செல்லலாம் என்றுகூட எண்ணி
பறந்திருக்கலாம். அப்போது பாம்பு தவளையை விழுங்கியது எதேச்சையாக நடந்திருக்கலாம்
என்று நான் நினைக்கிறேன். – நீங்கள் வேறு நினைக்கலாம். அவ்வாறு நினைத்ததை நீங்கள் ஹைக்கூவாக
எழுதலாம்.
(சரி – சென்ற வாரம் தப்பித்த தவளை இந்த வாரம் சிக்கிக்கொண்டது.
இந்த வாரம் பறந்த வண்டு? அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம்
என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா! இந்த விளையாட்டுக்கு நான் வரல!!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக