மே 21, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 11

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன்.  இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறதுகிராமத்திற்கும்  அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.

அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.

இதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.

உணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
எறிந்த கல்

எறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

மேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.
நண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:
அதே நிகழ்வு அதே பாம்பு அதே தவளை நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

இரண்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.

தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ

என்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.

மேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.

அலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார்? ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:

தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்


எல்லாம் சரிஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க சிந்திப்பாங்க. சரிபாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார்? சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக