ஜனவரி 25, 2014

என்னுடை ஹைக்கூ (பனித்துளியில் பனைமரம்) நூலுக்கு கவிஞர் இரா. இரவியின் விமர்சனம்

நன்றி - கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு

பனித் துளியில் பனைமரம் !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! poetramesh@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர் 
சலவன் பேட்டை 
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.

பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை இயற்கை  இயற்கை தவிர வேறில்லை என்று முழுக்க முழுக்க இயற்கையை பாடு பொருளாக்கி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .

ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் ந .க. துறைவன் அணிந்துரை மிக நன்று .படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும் வகையில் வடிப்பது ஹைக்கூ உத்திகளில் ஒன்று .நூலில் ஏராளமான காட்சிப் படுத்தும் ஹைக்கூ உள்ளன .

பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

பூக்களைப்  பார்த்தும் 
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி  !

படிப்பாளி உணர்ந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ .இந்நூலின் தலைப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

புல்லில் பனித்துளி 
பனித்துளியில் 
பனைமரம் !

ஆமை என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது அதன் ஓடு.ஆமையின்  ஓடு அதற்கு நிழல் தரும் கூடு .தன் நிழலை தானே பயன்படுத்திக் கொள்ளும் கட்சியைப் பார்த்து வடித்த ஹைக்கூ .

கொல்லும் கோடை 
நிழலில் இளைப்பாறும் 
ஆமைகள் !

ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நினைக்க வைக்கும் யுத்தியும் ஹைகூவில் உண்டு . அந்த வகையில் வடித்த ஹைக்கூ ஒன்று .

பூக்களுக்கு அச்சம் 
நெருங்கி வருகின்றன 
வண்டுகள் !

சோகத்திலும் சுகம் காணலாம் .பானை உடைந்து விட்டதே என்று வருந்துவது விடுத்து அதையும், கவிதைக்கண்ணுடன் ரசிக்கும் ரசனை நன்று .

குயவனின் 
உடைந்த பானை 
பிறை நிலவு !

ரோஜாவை பாடாத கவிஞரே இல்லை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் ரோஜா.நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்கள் ரோஜாவைப் பார்க்கும் பார்வை தனி விதம் .புது ரகம் .

சிரிக்கும் ரோஜாவும் 
கண்ணீர் வடிக்கும் 
பனித்துளி !

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள் .ஆனால் விவசாயிகள் இன்று  மகிழ்வாக இல்லை .அண்டை மாநிலங்கள் தமிழக விவசாயிகளை மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன .நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பது இல்லை தமிழக  விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் .சிலர் மனம் வெறுத்து தற்கொலையும் புரிகின்றனர் .விவசாயிகளின் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .என்னதான் இயற்கையை பற்றி பாடினாலும் பிரச்சனைப  பற்றிப் பாடும் போது வாசகர் மனதில் அதிர்வுகள் அதிகம் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு .

உணவின்றி விவசாயி 
வயிறு பெருத்திருக்கிறது 
காவல் பொம்மைக்கு !  

பறவைகளின் சோகத்தையும் ஹைக்கூ கவிதையில் உணர்த்தி உள்ளார் .

கூடு திரும்பவில்லை 
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை ! 

இந்த ஹைக்கூ படிக்கும்போது நம் வீட்டில் இருந்து சென்ற வீடு திரும்பாத உறவை நினைவுப் படுத்தும் .ஒரு ஹைக்கூவை படைப்பாளி மனதில் தோன்றியது போக வாசகர்கள் தனக்குத் தோன்றும் பல பொருள்களில் பொருள் கொள்ளலாம் .ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு .

நிலாவைப் பாடாத கவிஞரும் ஒரு கவிஞரா ? என்பார்கள் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களும் நிலாவைப் பாடி உள்ளார் .

புள்ளிகளை வைத்துவிட்டு 
கோலம் போடாமல் தவிக்கிறாள் 
நிலவுப்பெண் !

நிலா நிலா ஓடி வா ! மல்லிகைப் பூ கொண்டு வா ! என்ற பாடல் யாவரும் அறிந்த ஒன்று .அதையே மாற்றி சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .

எத்தனை பேருக்கு 
மல்லிகை கொண்டு வரும் 
ஒற்றை நிலவு !

இயற்கையை ரசிப்பது ஒரு கலை .அந்தக் கலை கைவரப்
பட்டவர்களுக்கு கவலை காணாமல் போகும் .வாழ்க்கை இனிக்கும்.நோய்கள் வருவதில்லை . மின்மினி ரசிப்பதும் சுகமான அனுபவம் 

யார் அணைப்பார்கள் 
இரவில் ஒளிரும் 
மின்மினி !

இலைகள் உதிர்ந்த மரம் பார்த்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .

வேண்டுதலின்றி 
மரங்களும் மொட்டை 
இலையுதிர் காலம் !

உற்று நோக்கினால் ஹைக்கூ வடிக்கலாம் என்பதை உணர்த்திடும் நூல் .இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார்கள் . தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி படிப்பாளி  நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் 



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

ஜனவரி 13, 2014

பல்லுக்குப் பல் - senryu

வருங்கால முதல்வரே
புன்னகையோடு ப்ளக்ஸ் போர்டு
First Birth Day!

பல்லுக்குப் பல்
அட நல்லா இருக்கே

ஊழலுக்கு ஊழல்

ஜனவரி 10, 2014

ஓராயிரம் சென்ரியூ - நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஓராயிரம் சென்ரியூ !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !

நூல்  விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர் 
சலவன் பேட்டை 
வேலூர்  .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் .   

இயற்கையைப்  பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் பிரச்சனைகளைப் பாடுவது சென்ரியூ  என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு இந்த நூல் சென்ரியூ  எழுதி உள்ளார் .

ஹைக்கூ  ,சென்ரியூ எப்படி அழைத்தாலும் உள்ளடக்கம் கருத்து மின்னல் இருந்தால் நன்று .படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வலைகளை, எண்ண அலைகளை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் . 

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் .சில நேரங்களில் சில வழக்குகளின் தீர்ப்புகள் கடைசி நம்பிக்கையும் பொய்க்கும்  விதமாக வந்து விடுகின்றன .அந்த ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ள சென்ரியூ.

அடித்து துவைத்தேன் 
வெளுக்கவில்லை 
நீதிதேவதையின் கண்கட்டி !

நாடறிந்த குற்றவாளி சாமியார் விடுதலையான நிகழ்வை நினைவூட்டிய சென்ரியூ.

பாமரனை மன்னிக்க சாமியார் 
சாமியாரை மன்னிக்க ?
நீதிமன்றங்கள் !

பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார் .வரதட்சணைக்  கொடுமையைப் பற்றியும் எழுதி உள்ளார் . மணமகன் விலை நிர்ணயத்திற்குத்தான் பட்டப் படிப்புகள் பயன்படுகின்றன என்ற உண்மையையும்  உணர்த்திடும் சென்ரியூ .

மருத்துவ  படிப்பு 
வரதட்சணை  வேண்டாம் 
மருத்துவமனை மட்டும்  !

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதலுக்கும் பொய்யான கவிதை அழகு .என்று நினைத்து பொய்யாக கற்பனைக் கவிதை வடிக்கும் கவிஞர்கள் மிகுதி .அதனை உணர்த்திடும் சென்ரியூ .

காதல் கவிதைக்கு 
அறிவே இல்லை 
பொய் பேசுகின்றன ! 

பழமொழிகளை பொன்மொழிகளை ஒட்டியும் ,வெட்டியும் கவிதை படைப்பது ஒரு யுத்தி .அந்த யுத்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். பகுத்தறிவு சிந்தனையும் விதைத்து உள்ளார் .ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் .பணக்காரர்கள்  மேலும் மேலும் பணக்காரர்களாகி வரும் அவலம் உணர்த்துகின்றார் 

கொடுத்து கொண்டேயிருக்கிறது 
கூரையைப் பிய்த்து தெய்வம் 
கூரை வீடானுக்குத் துன்பம் !

எள்ளல் சுவையுடன் உள்ள சென்ரியூ .நன்று 

விலங்கு வதை கூடாது  
கண்டு கொள்ளவில்லை
மயில்  மேல் முருகன் ! 

படிக்கும் வரிகளை வாசகர் மனதில்  காட்சிப் படுத்தி கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அந்த வகையில் வடித்துள்ள சென்ரியூ .

புயல் இல்லை 
கப்பல்கள் தரை தட்டியது 
காகிதக் கப்பல்கள் !

இயற்கையை பாடுவது ஹைக்கூ  இந்த நூல் முழுவதும் சென்ரியூ என்று அறிவித்து ஓராயிரம் சென்ரியூ தலைப்பிட்டு உள்ளார் . அவர் அறியாமலே அவர் இலக்கணப்படி  ஹைக்கூவும் உள்ளது .

போகும்போது கண்கசக்கி 
சிவப்பாக்கிக் கொள்கிறாய் 
செவானம் !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நல்ல படிப்பாளி அவரிடம் ஒரு வேண்டுகோள் இனி வரும் படைப்பில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .ஆங்கிலச் சொல் கலந்துள்ள சென்ரியூகள் .

எதற்கு நாற்காலி ?
ஷ்டெச்சர்  
வீல்சேர் போதும் !

வியர்வைக் கொட்டுகிறது
சாப்ட்வேர் என்ஜினியருக்கு 
மின்சார துண்டிப்பு !

படித்தவர்கள்  வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தவிப்பை உணர்த்தும் சென்ரியூ நன்று .

எந்த வேலைக்கு தயார் 
மவுனம் சம்மதம் 
முதுகலைப் பட்டதாரி !

வாக்களிக்க பணம் வாங்கும் அவலத்தை தொற்று நோயாய் பரவி விட்ட கேவலத்தை உணர்த்தும்  சென்ரியூ நன்று .

உங்கள்  ஓட்டு
எங்கள் ஓட்டு
ஐ நுறு ஆயிரத்திற்கே  ! 


அங்கதச் சுவையுடன் அரசியல் குறித்த விமர்சனம் மிக நன்று .

வாலாட்டி சாப்பிட்டு 
தெருவையே கடிக்கிறது 
அரசியல் !

நூல் முழுவதும்  சிந்திக்க வைக்கும் கருத்துக்களை விதைக்கும் தாராளம் ஏராளம் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு படைத்ததற்காகப் பாராட்டுக்கள் . இனி படைக்கப் போவதற்காக வாழ்த்துக்கள் .

 
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

ஜனவரி 08, 2014

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வுரை

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வுரை

 கவிதை புத்தகங்களை வாங்க


நகைப்பிற்குரிய மென்மையான கோபம்...
ஜப்பானிய ஹைக்கூ வகைமைகளில் சென்ரியூவும் ஒரு வடிவமாகும். எது ஹைக்கூ எது  சென்ரியூ என வகை பிரித்து வாசிப்பது வாசகனுக்குச்  சிரமமாகத் தோன்றும். அந்த அளவுக்கு ஹைக்கூவும் சென்ரியூவும் மயக்கமுற்றுக் காணப்படும். ஆனாலும், ஹைக்கூ, சென்ரியூவின் கரு வேறாகும். இதனை,
ஹைக்கூவில் இயற்கை உள்ளது. அது ஒரு நிகழ்வு ஆயினும் அதன் பின்னணியில் இயற்கை உண்டு. சென்ரியூவில் மனிதர்களும் சமுதாயமுமே இடம் பெறுகின்றனர். ஒரு தேசியத்துக்கு உரித்தான குணங்கள், மனிதர்களின் நூதனங்கள், முட்டாள் தனங்கள் இவை னைத்தும் நகைச்சுவையோடு சுட்டி காட்டப்படும். ஹைக்கூ இயற்கைக் கவிதை சென்ரியூ மக்கள் கவிதை என்பார் ஆய்வாளர் நிர்மலா சுரேஷ். சென்ரியூவை அறிமுகப்படுத்தும் கீழ்க்கண்ட,
1.சிரிக்கும் வில்லோ மரம் - நிர்மலா சுரேஷ்
2.ஒரு வண்டி சென்ரியூ - ஈரோடு தமிழன்பன்
3.சில ஹைக்கூ சில சென்ரியூ - கவிஞர் அமரன்
4.ஞானக்கோமாளி - எஸ். ஷங்கரநாராயணன்
5.கூறாதது கூறல் - எஸ். ஷங்கரநாராயணன்
6.ஊர்வலத்தில் கடைசி மனிதன் - எஸ். ஷங்கர நாராயணன்
7. திறந்திடு சிஷேம் - எஸ். ஷங்கரநாராயணன்
8. கடவுளின் கடைசி கவிதை - மணிகண்டன் (மாமதயானை)

9. ஒரு டீ சொல்லுங்கள் - கவின்
ஆகியோரின் மேற்கண்ட தொகுப்புகள் சென்ரியூ கவிதைகளாகவும் சென்ரியூ கட்டுரைகளாகவும் இது வரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகிய உள்ளன. கவியருவி ம. ரமேஷின் இந்தச் சென்ரியூ தொகுதி இவர்களுக்கு அடுத்த வரிசையில் இடம் பெறுவது மட்டுமல்லாமல் தற்சமயம்,
தமிழில் வெளிவரும் ஏராளமான சென்ரியூ கவிதை களையே  ஹைக்கூ கவிதைகள் என்று அழைக்கும் அறியாமைத் தனத்தை ஹைக்கூத் தொகுதிகளும் வணிக, சிற்றிதழ்களும் செய்து வரும் சூழலில் இந்தச் சென்ரியூ தொகுதி வருவது பாராட்டுக்குரியதும் சிறப்புக்குரியதும் கவனிப்புக்கு உரியதுமாகும்.
வாழ்க்கை முரண்கள், மனித குணநலன்கள், மன விகாரங்கள், நகைச்சுவை, அங்கதம், கேலி கிண்டல், மூடத்தனங்கள், அரசியல் விமர்சனங்கள் போன்ற இன்ன பிற அம்சங்கள் சென்ரியூவில் கையாளப்படும். பனித்துளியில் பனைமரம் என்னும் ஹைக்கூத் தொகுதியினை வெளியிட்டு அறிமுகமான கவியருவி ம.ரமேஷ், சென்ரியூவைப் படைத்துத் தந்துள்ளப் பாங்கினை இவ் ஆய்வுரை விளக்குகிறது.
பிள்ளைகளைப் பெற்றோர்கள் கொஞ்சம்கூட சுதந்திரமாய் இருக்கவிடுவதில்லை. வீட்டிற்குள்ளே கூட விளையாட அனுமதிக்காத நாம் வெளியில் சென்று விளையாடவும் அனுமதிப்பதில்லை. இதனை,
அம்மா விளையாடப்போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
என்ற சென்ரியூவால் எடுத்துக்காட்டுகிறார். ஹைக்கூ வெளியீட்டு உத்தியை ஜப்பானிய சென்ரியூ கவிதை  கைவிட்டுவிடாதபடி காத்துவர கவியருவி ம.ரமேஷின் சென்ரியூ கவிதைகளும் ஹைக்கூ வெளியீட்டு உத்தி யையே பயன்படுத்தி சென்ரியூ கவிதைகளைப் படைத் தளித்துள்ளார். அம்மாவிடம் குழந்தை விளையாடப் போகிறேன் என்கிறான். அம்மா என்ன விளையாட்டு என்று கேட்கிறாள். வெளியே சென்று விளையாடப் போகும் விளையாட்டு பெயரை மூன்றாம் அடியில் சொல்வான் என்று நாம் எதிர் பார்த்தால், எதிர்பாராத திருப்பமாக போய்ப் படிஎன்று முடிகிறது.
வீட்டில்தான் பெற்றோர்கள் இப்படியென்றால், பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களும் மாணவர்களின் விஷயத்தில் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள் கிறார்கள். இதனை,
பேசாமல் படி பேசாமல் படி
பேசிக்கொண்டே இருக்கும்
ஆசிரியர்
 என்பதால் அறியலாம். ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் கருதிப் படிக்கும் எந்திரமாக மாற்றி அமைக்கப் படி படி என்று நச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் படித்துக் கொண்டிருக்கச் சிலர் பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருக்க படி படி என்று ஆசிரியரே சப்தம் எழுப்பிக் கொண்டு இருக்கிறார். இதில் ஆசிரியரின் சப்தம் என்பது மாணவர்களின் நலனைச் சார்ந்தே அமைந்துள்ள தெனினும் வகுப்பு அறையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எரிச்சலாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறதென்று நகைக்கிறார்.
கிராமங்களில் விவசாயம் நொடிந்து வருகிறது. வயல் வேலைக்குக் கூலியாட்கள் கிடைப்பதும் அரிதாகி விட்டது. அவர்கள் வேறு வேலைகளுக்கு நகரங் களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். வயல் வெளிகள் வீட்டுமனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின் றன.  இந்நிலையில்,
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக் கொண்டிருந்தான்
கம்ப்யூட்டரில் விவசாயி
என்று இனி வரும் சில ஆண்டுகளில் நவீனமாக்கப்படும் வேளாண்மையைக் கல்வியை நினைத்து தற்போதே நகைக்கிறார்.
கல்வி என்பது இன்று தாராளமயமாக்கப்பட்ட வியாபாரம் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்விக் கடவுளான சரஸ்வதிக்குக் கையில் புத்தகமும் வீணையும்தான் இருக்கும். ஆனால் கவிஞரோ,
சரஸ்வதி கையில்
உண்டியல்
கல்வி வியாபாரம்
என்று கல்வி நிறுவனங்களின் இன்றையப் போக்கைச் சாடுகிறார்.
தமிழக அரசின் கஜானாவை அதிகம் நிரப்பிக் கொண்டிருக்கும் வருமானம், மதுக்கடைகளிலிருந்தும் மணல் குவாரிகளிலிருந்தும் கிடைக்கும் பெரும் பண மாகும். இவ்வருவாய் இல்லையெனில் அரசின் பல இலவசத் திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் போகும் என்பது மக்கள் அறிந்ததே. உயிர்ப் பலிகள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்புகள், பொதுமக்களின் போராட் டங்கள் என்று எதையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
பல மொழிகளில்
குடிகாரன் வாசித்தான்
மதுக்கடையின் பெயர்
என்னும் சென்ரியூவில் விளம்பரம் ஏதும் தேவையே இல்லாத மதுக்கடைக்குப் பல மொழிகளில் மதுக்கடை என்னும் பெயரை எழுதி விளம்பரம் செய்வதைக் கிண்டல் செய்கிறார். அதையும் அங்குக் குடிக்கும் ஒரு குடிகாரன் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதுதான் நகைப்புக்குரியதாகிறது. அதாவது, பல மொழிகள் தெரிந்த; நன்றாகப் படித்த ஒருவன் குடிப்பது என்பது படித்தவர்களிடமும் ஒழுக்கம் இன்று சிதைந்து விட்டதைக் காட்டக் கவிஞர் இச்சென்ரியூவைப் படைத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கிராமங்களில் இன்றும் பொதுவான சுடுகாடு என்பது இல்லை. சுடுகாடு வேண்டிப் போராடும் அவல நிலையிலேயே மக்கள் உள்ளனர். அப்படியே சுடுகாடு ஒதுக்க நிலம் கிடைத்தாலும், அதுவே,
சாதிக்கொரு சுடுகாடு
மாற்றம் ஏற்பட்டது
கட்சிக்கொரு சுடுகாடு
என்று அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறார். சாதிக்கொரு சுடுகாடு / மாற்றம் ஏற்பட்டது என்ற இரண்டு அடிகளை நாம் வாசிக்கும்போது சாதிகள் ஒழிந்து ஒன்றுபட்டு இருக்குமோ என்று நாம் எண்ணி மகிழும் நேரத்தில் அடுத்த அடியில் நம்மை எதிர்ப்பாராத அதிர்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறார்.
இந்நூற்றாண்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. சமுதாய ஒற்றுமையும் உதவும் மனப்பான்மையும் பெரிதும் குறைந்துவிட்டது. தன் குடும்பம், தன் வேலை, தன்னுடைய வருமானம் என்று மனிதர்கள் இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் பிறருக்காக வருந்தும் நிலையில் இல்லை  என்பதை இன்றைய இயல்பான நடைமுறைப் போக்கிலேயே கவிஞர் எடுத்துரைப்பதைப் பாருங்கள்:
அண்டை வீட்டில் இழவு
பக்கத்து வீட்டில் சப்தமாய்
தொலைக்காட்சித் தொடர்கள்
அண்டை வீட்டில் இழவு / பக்கத்து வீட்டில் சப்தமாய் என்று முதல் இரண்டு அடிகளைப் படைத்து மூன்றாவது அடியில் தொலைக்காட்சித் தொடர்கள் என்று முடிக்கிறார். முதல் இரண்டு அடிகளைப் படித்ததும்  பக்கத்து வீட்டிலிருந்து சப்தமாய் யாராவது அழுது கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கடைசி அடியை வாசித்தால் பெரும் அதிர்ச்சி ஏற்படு கிறது; தொலைக்காட்சித் தொடர்களை அதுவும் சப்தமாய் வைத்து; அழுகை ஒலி அவர்களின் காது களுக்குக் கேட்கக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வதால் அண்டை வீட்டாரிடமே நாம் மனித நேயத்தைக் கடை பிடிப்பதில்லை என்று தெரிகிறது. மறையும் மனித நேயத்தை நாம் மீட்டு எடுக்க வேண்டும் என்றும் சமுதாயத்துக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார் கவிஞர்.
கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய  காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன.
விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!
குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,
நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை
என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர்:
அம்மா  அப்பா
முதியோர்  இல்லத்தில்
மகன்  மருமகள்  விவாகரத்து

ந்தச் சென்ரியூ தொகுப்பில் சென்ரியூக்கான பண்புகள், வெளியீட்டு முறைமைகள் ஆகியவற்றைக் கைவிடாமல் படைத்திருப்பது  பாராட்டுக்குரியதாகும். கிராமம்; கிராமம் சார்ந்த சூழல்கள், குடும்பச் சிக்கல் களால் சமுதாயச் சிக்கலாக மாறிப்போன தீமைகள், முதியோர்களின் அவல நிலை, இளைஞன் - இளைஞி களின் மனப் போக்குகள், காதல் வெற்றித் தோல்வி கள், திருமணம், விவாகரத்து, விபச்சாரம், திரைப் படம்; தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் போக்கும்; நடிகர் நடிகைகளின் செயல்பாடுகளும், அரசியல்வாதிகள், ஊழல்கள், சாதி மத இனங்களின் மூடத்தனங்கள், புகை; மதுவின் தீமைகள், கடவுள்; தெய்வங்களின் மீதான பார்வை, சுற்றுச்சூழல் என இந்தச் சமுதாயத்தில் நிகழும் முரணான சம்பவங்களை  நகைப்புக்கு ரியதாக்கிச் சற்று மென்மையான கோபத்தில் தன் சென்ரியூ கவிதைகளின் வாயிலாக வெளிக்காட்டியுள்ளார். சமுதாயத்தில் இந்தப் புதிய வகைச் சென்ரியூ கவிதைகள் மலர்ந்து மனம் வீசி பரவும்போது துர்நாற்றமெடுத்திருக்கும் சமுதாயச் சிக்கல்கள் அனைத்தும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி நல்லதொரு மனம் நிறைந்த சமுதாயமாக மாற்றம் பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
- ந.க. துறைவன்


கவிதை புத்தகங்களை வாங்க


ஜனவரி 07, 2014

என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை

என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை

பனைமரத்தின் கீழ் பால் குடித்தேன்…!

          தமிழ் ஹைக்கூ கவிதைகளைச் சிற்றிதழ்களும் வணிக இதழ்களும் வெளியிட்டு வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கவிஞர்கள் பலரும் ஆர்வ மேலீட்டால் ஹைக்கூ கவிதை தொகுப்புகளை வெளியிட்டு அறிமுகமாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவருகின்றன. ஹைக்கூ கவிதை மீதான விமர்சனக் கணைகள் இன்னும் வீசிக்கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் மீறியே இன்று அமைதியாக ஹைக்கூ இயங்கி வருகிறது. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஹைக்கூவை ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற விழையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருவதை அறியமுடிகின்றது.

            சமீபத்தில் நண்பர் கவியருவி ரமேஷ் எழுதிய ஹைக்கூ கவிதைகளை இதழ்களின் வழியே படிக்க நேர்ந்தது. ஹைக்கூ கவிதைகள் நிறையவே படைத்து தனித்தொரு அங்கீகாரம் பெற்றிட வேண்டும் என்கிற முனைப்பு மிகுந்தே அந்த ஹைக்கூ கவிதைகளில் காணப் பெற்றன.   அந்த முனைப்பும்  தீவிர     ஆர்வமும் நான் அவரை நேரில் கண்டபோதும் வெளிப்பட்டு நின்றது. கவித்துவமிக்கத் தலைப்பான பனித் துளியில் பனைமரம்என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில ஹைக்கூ கவிதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய கருத்துகளை வாசகர்களிடையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

            பிரபஞ்ச இயக்கத்திற்கு எப்பொழுதும் ஓய்வு என்பதில்லை. புவியில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஓய்வு என்பதில்லை. எல்லாமே இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஓய்வு என்பது உறக்கமே; ஓய்வாகாது. உறக்கமின்றேல் மனிதனுக்குப் பல்வேறு வகையான மன, உளவியல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மருத்துவர் அந்நோய்க்கு மருந்தாக உறக்க மாத்திரை அளித்து நிவாரணமாக ஓய்வெடுக்க விடுகிறார். அப்படிப் பார்த்தால் ஓய்வு என்பது ஒரு பாவனையாகவே கருதப்படுகிறது. இந்த ஓய்வு நிலையினை,
இலை நிழலில்
இளைப்பாறுகின்றன
எறும்புகள்
 என்று சிறு எறும்பின் மூலமாக எடுத்துரைக்கிறார்.
            அரிசி புடைத்தல் கிராமப் பெண்களுக்கு லாவகமானதொரு செயல். அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு எனப் பல உணவுப் பொருட்கள் புடைத்துச் சுத்தம் செய்வதனை வீடுகளில் ஏதேனும் ஓரிடத்தில் உட்கார்ந்து புடைப்பதனைக் காணலாம். வீட்டில் முற்றத்தில் மகள் அரிசி புடைப்பதனை அம்மா ஏதோ ஒரு காரணம் முன்னிட்டு திட்டுகிறாள். அதனை வீட்டின் மாடத்தில் அமர்ந்திருக்கும் குருவி கண்டு களிக்கிறதாம். இதனை,
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
என்று அற்புதமானதொரு காட்சிப் படிமத்தைக்காட்டி சிந்திக்க வைக்கிறார் கவிஞர்.

            உழவுத் தொழில் விவசாயிகளின் ஜீவாதாரமான வாழ்க்கை. உழவுத் தொழிலை வள்ளுவப் பெருந்தகை  உயர்த்திப் போற்றுகிறார். உலக மாந்தர்களை எல்லாம் வாழ்விப்பது உழவுத் தொழிலே. ஆனால், அம்மக்களின் வாழ்நிலை இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் உயர்வாகப் பேசும்படி இல்லையென்பது வருத்தத்திற்கு உரியதே. அவர்களின் வாழ்க்கை எவ்வழி செல்கிறது என்பதனை,
ஏர் வழி செல்லும்
காளைகள்
விவசாயியின் வாழ்க்கை
 என்று காட்டுகிறார் கவிஞர்.
            விவசாயிகளின் ஏர் (நேர்) வழி வாழ்க்கையைப்
படம் பிடித்துக் காட்டும் கவிஞர் அவ்விவசாயப் மக்கள் எதிர்நோக்கும் மழையைப் பற்றியும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.
வாடிக் கொண்டிருக்கும் செடி
அடியில் எறும்பு புற்று
வருந்தியபோது மழை
 என்று வள்ளுவரைப் போன்றும், வள்ளலாரைப் போன்றும் வாடிக் கொண்டிருக்கும் செடிகளுக்காகவும் எறும்புகளுக்காகவும் பரிவு காட்டுகிறார்.

            மனிதர்கள் ஆடை உடுத்தவில்லை எனில் நிர்வாணமாகக் காட்சியளித்து விலங்கினங்களைப் போலத் தோன்றுவார்கள். அந் நிர்வாண உருவத்தைப் பார்ப்பதற்குச் சகிக்கத் தோன்றுமா? இலைகளைத் தன் இடுப்பில் ஆடையாக அணியத் தொடங்கிய மனிதனின் அழகு, இன்று நாகரீகம்  என்ற வார்த்தை போதையில் மயங்கி,  மீண்டும் ஆடைகள் அரை நிர்வாணமாக மாறி வருகின்றன.
ஆடை
உடுத்தலில் இருக்கிறது
பூக்களின் அழகு
 ஆடை உடுத்தியிருப்பதால்தான் அனைத்துப் பூக்களும் அழகாகக் காட்சி  அளிப்பதாகவும், பூக்களும் ஆடை அணிந்துள்ளன என்று கண்டுணர்ந்த இக்கவிஞனின் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

            பூக்கள் மரங்களுக்கு அழகு சேர்ப்பதைப் போன்று பூக்கள் பெண்களின் கூந்தலுக்கும் அழகு சேர்க்கிறது. பெண்கள் கூந்தலில் சூடியப் பூக்கள் மாலைப் பொழுது வருவதற்குள் வாடி போய்விடுகிறது. பெண்களின் உடல் வெப்பநிலை, காற்றின்மை, உணர்வுநிலை, மனச் சோர்வு, மன அழுத்தம் ஆகிய மனநிலை சிக்கல் களுக்குக் காரணமாகச் சொல்லலாம். பெண்கூந்தலின் மீதான பார்வையைப் பதித்திருக்கிறது இந்த ஹைக்கூ:
கூந்தல்
சிக்குண்டது
பூக்கள்
பெண்கள் தலையில் லாவகமாகப் பூவை வைப்பதும் எடுப்பதையும் காணலாம். ஆனால் சிக்குண்டது என்று இன்றைய பெண்ணியவாதிகளின் பார்வையில் இருந்து அவர்களின் அவலநிலையை உணர்த்துகிறார்.

            இருவர் உள்ளங்களைக் கவர்ந்து வசீகரிக்கும் உணர்வே காதலாகும். இக் காதல் காந்த சக்தி இரு மனங்களையும் இணைத்துக் கொண்டு இயங்கும் வேகம் அபரிமிதமானதாகும். காந்தம் இரும்போடு இணைந்தும் விலகியும் ஆட்டம் போடும். அதே போன்றுதான் காதலும் இணைந்தும் விலகியும் விளையாட்டு காட்டும். ஆனால், காதல் மௌனமாக நடந்தேறும்போது தன்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்று
காதலனாலும், தன்னைக் காதலிக்கிறானா இல்லையா என்று காதலியாலும் உணர்ந்து கொள்வதற்கு அவர்களுள் நடந்தேறும் மௌனம் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே திகழும். அக் காதலை,
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மௌனம்
என்று காதலை புதுமையாக் காட்டுகிறார். காதலின் மௌனத்தைக் காட்டிய கவிஞர் காதலுக்குண்டான தனிமையையும் பேசுகிறார். தனிமையில்தான் காதல் உணர்வு மேலெழுந்து உடல் மனமெல்லாம் பரவி அதன் வெற்றி தோல்விகளுக்கான வழிவகைகள் காண முயற்சிகள் மேற்கொள்ளும். ஆனால், வெற்றியடையும் காதலைவிட, தோல்வியைத் தழுவும் காதலே மிக அதிகம். காதலர்கள் காதல் தோல்வியில் அல்லல் பட்டுக் கண்ணீர் சிந்தும் சோகத்தை,
தனிமையில் காதலர்கள்
பேசும் மொழி
கண்ணீர்
என்று காதலர்களின் உணர்வுகளைப் புரிந்து இந்த ஹைக்கூவினைப்   படைத்துள்ளார்.

            மனிதன் உழைத்தோ ஊழல் செய்தோ அல்லது தவறான வழியில்  பொருளை ஈட்டி சேர்த்து வைக்கும் பண ஆசைக்கு எல்லை இல்லாமலே போய்விட்டது. நீதி போதனைகளாக  அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள், ஆசைப்படாதே என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால், மனிதன் எதைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது மிகப் பெரிய கேள்விக்குரியாகிறது. எது எப்படியோ பல மனிதர்களின் ஆசைகள் திடீரென நிறைவேறாமல் இடையிலேயே நின்று போய்விடுகிறது. அப்படிப் பட்ட ஒரு மனிதனின் ஆசை,
            சேர்த்து வைத்த ஆசைகள்
சிதறு தேங்காயாகி விட்டது
மரணம்
என்று மரணத்தினால் ஆசைகள் நிறைவேறாமல் போய் விட்டது என்பதை சிதறு தேங்காய்என்ற சொல் வழக்கில் மிக அழகாகக் கொண்டு வந்து இந்த ஹைக்கூவில் சொல்லி வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.

புல், பனித்துளி ஆகியன ஹைக்கூ கவிதையின் உயிர் எனலாம். இந்த இயற்கையின் அற்புதங்கள் பார்க்கப் பார்க்க தெகிட்டாத இன்பம். பெரிய ஆலமரத்தில் சிறிய பழம் எத்தனை அழகு. வயல் வரப்புகளில் புல்லின் மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிதான் எத்துனை பெரிய பேரழகு. இருப்பினும் இது பலருக்குத் தினம் காணும் நிகழ்வாகவே நின்றுவிடுகிறது. ஆனால் இக்கவிஞரின் கற்பனையோ அப்பனி துளிக்குள்ளும் ஒரு விஸ்வரூபத் தரிசனத்தைக் கண்டுள்ளது. இவ்வகையிலான கருப்பொருளால்தான் நாம் ஹைக்கூவை வியக்கவும் முடிகிறது.

புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
நீண்ட நெடிய பனைமரம் ஒரு பனித்துளிக்குள் காட்சி அளிக்கும் இயற்கைத் தன்மையைக் கண்டு உணர்ந்து படைத்துள்ள இக்கவிதை கவிஞரின் இயற்கையின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் கற்பனை வளத்தையும்  எடுத்துக்காட்டுவதோடு அறிவியல் பார்வை கொண்ட அழகியல் கவிதையாகவும் அமைந்துள்ளது.

குழந்தைகளின் மன உலகில் நுழைவதற்குப் பெரியவர்களுக்குக் குழந்தை மனம் தேவைப் படுகிறது. அக்குழந்தை மனம் எல்லாருக்கும் வாய்ப்பது அரிது. ஒரு சிலருக்கே அது கை வரப்பெறும். கவிஞரும் குழந்தைகளின் செயல்களை உற்று நோக்குகிறார். அக் குழந்தைகளின் பல்வேறு விளையாட்டுகளில் நிலாச் சோறு, மண்சோறு ஆக்கிப் படைத்துப் பசியாற்றிக் கொள்வதும் ஒன்று. இன்று குழந்தைகள் ஒன்றாகக் கூடி  விளையாடும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால்குழந்தைகளைத் தடுத்துவிட்டதாலும் அவ்வகையான கருப்பொருள்கள் கவிதையாக்கம் பெறுவது தவிர்க்க முடியததாகும். 
குழந்தைகளுக்குப் பசி
தாமே சமைத்து உண்டார்கள்
மண்சோறு
என்று அக்குழந்தைகளின் பசிக்கான காரணத்தைச் சொல்லாமல் அக் குழந்தைகள் தாமே சமைத்து மண் சோறு உண்டு பசி ஆறியதாக நினைத்து மகிழ்ந்ததைக் காட்சிபடுத்துகிறார். இக்கருப்பொருளில் அமைந்த பிறிதொரு ஹைக்கூ கவிதையில் குழந்தைகள்  மீதான பெற்றோர்களின்  கண்டிப்பினைச் சுட்டிக் காட்டுகிறார்.  அக்கவிதை:
குழந்தைகளை
கட்டவிட மறுக்கிறோம்
மணல்வீடுகள்
ஆறு, கடற்கரை, மணல் குவியல் ஆகிய  ஏதேனும் ஓர் இடத்தில் சந்தோஷமாக விளையாடும் குழந்தைகளை மணல விளையாடதே வா ஒடம்பு மண்ணாகும்; அழுக்குச் சேரும்என்றெல்லாம் அவர்களை அதட்டிக் கண்டிப்பதனைக் கவிஞர் கண்டிக்கிறார். குழந்தைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு நல்வழிப் படுத்த வேண்டும் என்கிறார்.
ஹைக்கூ கவிதைகளின் வாசிப்பு அனுபவம் கவிஞருக்கு ஹைக்கூவை எழுதுவதற்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது. இத் தொகுப்பில் இயற்கை சார்ந்த கவிதைகள் மிகுந்து காணப்படுகின்றன. இவர் வாழும் சமூகத்தைக் கூர்ந்து நோக்கிய பார்வையால் ஹைக்கூ கவிதைகளுக்குக்கான கருப்பொருள்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. கவிஞரின் அகவயக் கருத்துணர்வால் உருவான பிறப்பு, இறப்பு, உடல், மனம் சார்ந்த கவிதைகள், பெற்றோர்கள், குழந்தைகள், ஆண், பெண், அன்பு, கருணை, காதல், பெண்மை எனப் பல்வேறு நிலைகளில் உருவான ஹைக்கூ கவிதைகளும்  இக்கவிதைத் தொகுப்பில் கருப் பொருளாகியுள்ளன. இன்னும் கொஞ்சம் ஹைக்கூக்களின் நுட்பங்களைக் கூர்ந்து நோக்கி சீரிய முயற்சிகள் மேற்கொண்டால்  தமிழுக்குச் செழுமையான ஹைக்கூ கவிதைகள் நிறைய கிடைக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன என்று கூறி கவிஞர் கவியருவியை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்.

சுவையானது; குளிர்ச்சியானது
சுட்டெரிக்காத முக்கண்
பனை நுங்கு
- ந.க. துறைவன்
கவிதை புத்தகங்களை வாங்க