டிசம்பர் 11, 2013

பெண்ணியவாதி! - ஹைபுன்

பெண்ணியத்தால் பல மகிழ்ச்சிகளை சந்தோஷங்களை இன்பங்களை இழந்ததுதான் நிறைய… எதிர் வீட்டுப்பெண் கணவனுக்குக் கால் பிடித்துவிடுகிறாள்… குளித்தால் அழுக்குத் தேய்த்து மகிழ்கிறாள்… கணவன் விழித்திருக்கும் வரையில் விழித்திருந்து கணவனுக்குத் தேவையானதை செய்து அவருடனேயே உறங்கி சீக்கிரம் எழுகிறாள் சந்தோஷமாக… வீட்டில் அனைத்தையும் செய்கிறாள்… எப்போதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இன்பமுமாக புன் முறுவலுடனேயே காணப்படுகிறாள்… அவ்வவப்போது சிரிப்புச் சப்தம் கேட்கவே அவளைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு!... நானோ, நானே தான் சமைக்கனுமா? நீ சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடனுமா? தூங்கினாதான் தூங்கனுமா? என்று கேள்விக் கேட்டு  வாழ்வின் இன்பங்களை சந்தோஷங்களை மகிழ்ச்சிகளை இழந்துதான் வருகிறேன்… ஏனென்றால் நான் பெண்ணியவாதி!

மகிழ்ச்சி சந்தோஷம் இன்பம்
எல்லாம் தொலைந்து போனது
பெண்ணிய முகமுடி 

டிசம்பர் 08, 2013

பூக்கள் - ஹைக்கூ

மழை
சேரும் சகதியுமாய் தரை
உதிரும் பூக்கள்

பூக்கள் தூய்மையாகிறது
பாதங்கள் சகதியாகிறது
மழைக் காலம்

கோடை காலம்
பனித்துளிகள் இடத்தில்
மழைத் துளிகள்

டிசம்பர் 02, 2013

திருடாத திருடன்! - சென்ரியு

திருடனுக்கும்
திருட மனம் வரவில்லை
திண்ணையில் உப்பு மூட்டை

நல்ல நேரம், நட்சத்திரம்
சுகப் பிரசவம்

சிசேரியன்!

நவம்பர் 27, 2013

படிக்காதவன் - ஹைக்கூ

உயரத்தில் நடக்கும்
திருட்டு
இளநீர் குடிக்கும் அணில்

படிக்காதவன்
நேராக வரைகிறான்
உழு வயல்

காவல் காத்த களைப்பு
வியர்வை சொட்டும் காவல்பொம்மை
காலை பனித்துளி

அரிப்பு
சொரிந்துகொண்டே இருக்கிறது
வயக்கோல் காவல்பொம்மை

பயிர்கள்
வீரியமுடன் வளர்கிறது

களைகள்

நவம்பர் 25, 2013

காவல்பொம்மை - ஹைக்கூ

முதிர்கண்ணன்
திருமண ஆசையில்லை
காவல்பொம்மை

வரப்புச் சண்டை
விலக்காமல் புன்னகை செய்யும்
காவல்பொம்மை

காவல் பொம்மைக்கு
தாடியை வழித்துவிட்டது
நள்ளிரவு மழை

குருவிகள் சப்தம்
கேட்க ஆசை
காவல்பொம்மை

கோடைகாலம்
புல்மேல் பனித்துளிகள்
கோடை மழை

நவம்பர் 22, 2013

கடவுளின் பெரியப்பா!

கடவுளின் பெரியப்பா – (கடவுள் கடவுளாகிப்போனார் - 23)

பெரிய தொகை கட்டும்படி
கடவுளிடம் பில் நீட்டப்பட்டது.
ஆமாம்.
கடவுளின் பெரியப்பாவுக்கு
உடல் நலம் சரியில்லை!
விழுந்து விழுந்து கவனித்துதார் கடவுள்!
நாற்பது ஆண்டுகள்
வாயக் கட்டி வயித்தக் கட்டி
சேர்த்து வைத்த பணம் எல்லாம்
ஏழுநாள் மருத்துவச் செலவுக்கே போதவில்லை.
பக்கத்து வீட்டுக்காரரிடம்
கடன் வாங்கும்படி பெரியப்பா கட்டளையிட்டார்.
கடவுள்
பக்கத்து வீடு அக்கத்துவீடு என்று
பலரிடமும் கடன் வாங்கி
மருத்துவம் பார்த்தார்.
சரியாகிவிடும் சரியாகிவிடும்
இந்தப் பணத்தைக் கட்டுங்கள்
அந்தப் பணத்தைக் கட்டுங்கள் என்று
கடவுளிடம்
பணத்தைப் பற்றி மட்டுமே
மருத்துவர்கள் பேசினார்கள்.
நான்கு மாதம் கடந்த நிலையிலும்
உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.
பணம் கட்ட திண்டாடிய போது
இன்னும்
ரண்டு நாளுதான் இருப்பாரு…’ என்று சொல்ல
வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
ஆறுமாதம்
உயிரோடிருந்து பின்னர் இறந்தார்!
பத்தாண்டுகள் கழித்து
கடவுளுக்கும் நோய் வந்தது
பிள்ளைகளுக்கு
பணமாவது நஷ்டமாகாமலிருக்கட்டும் என்று எண்ணி
தனது நோயை மறைத்துவிட்டார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
கடவுளின் பிள்ளைகள்
மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.
கடவுளுக்கே
நேரம் குறித்துவிட்டார்கள் என்று
வெளியே பேசிக் கொள்ள
மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள்:
ரண்டு நாளைக்கு
முன்ன வந்து இருந்தா காப்பாத்தியிருக்கலாமுன்னு…’
கடவுள்
பெரியப்பாவின் நிலையை நினைத்துக்கொண்டார்.
எந்தக் கடனும் இல்லாமல்
மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.

நவம்பர் 19, 2013

ஆணும் பெண்ணும் அஃறிணைகள் - சென்ரியூ

காதல் வந்த
ஆணும் பெண்ணும்
அஃறிணைகள்

முற்றும் துறக்க நினைத்து
தவமிருக்கிறார்கள்
மனைவி நகையுடன் தெய்வங்கள்

சிதறு தேங்காய்
அழுகியிருக்கிறது
சீண்டாத குரங்குள்

விற்கும் பொருட்களின்
விலை சரியாக இருக்கிறது
கள்ளச் சந்தை

சில நேரம்
நன்மையைக் கொடுக்கிறது

சோம்பேறித்தனம்

நவம்பர் 18, 2013

காமமா? காதலா? - சென்ரியூ

புன்னகை
பொங்குகிறது
உயர்ந்த பரிசுபொருள்

முகம் மூடி, இறுக்கி
அணைத்தபடி; பயணம்
காமமா? காதலா?

நடவுப் பெண்கள்
மரத்தில் குழந்தைகள்
நகரத்தில் வேளைக்காரி

பணத்தைத்
தின்னும் மந்தைகள்
அரசியல்வாதிகள்

நவம்பர் 11, 2013

அடிப் போடி நாயே! – மேல்

ஒரு நாள் கூட
நான் நாய்க்குச் சோறிட்டதில்லை
வாலாட்டும் நாயை
ச்சீ… போ என்று
விரட்டிவிட்டு இருக்கிறேன்.
ஆசை ஆசையாய்
அன்பாய்… உயிராய்
உன்னையே சுற்றிச் சுற்றிக்
காதலித்தேன்.
காதலின்
வேக கட்டுப்பாட்டை மீறியதால்
சுடுகாட்டுத் தீயினுள்
எரிந்து சாம்பலாக
விறகுகள் அடுக்கி
தயாராக வைத்திருக்கிறார்கள்
நண்பர்கள்.
கடைசி வரை நீ வரவேயில்லை…
ச் சீ… என்று முன்னர்
துரத்திவிட்ட நாய் கூட
கொள்ளி வைக்கும் முன்
என்னை சுற்றிச் சுற்றி வந்தது
நீ வரவேயில்லையே ஏன்?

(வேலையில்லை போ!) ம. ரமேஷ் ஹைபுன் – 25

. ரமேஷ் ஹைபுன் – 25 (வேலையில்லை போ!)
வீட்டில் வழக்கம்போல் நடந்துகொள்ளாமல் முகமலர்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்கள். பேருந்தில் நெரிசல் இல்லை. நேர தாமதம் இல்லை. சரியான நேரத்திற்கு போய் சேர்ந்தாகிவிட்டது. கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியாகப் பதில் சொல்லியதில் முதல் முறையாக முகத்தில் நிம்மதியான மகிழ்ச்சி. மச்சான் வேலை கெடச்சிடும்டாரொம்ப சந்தோஷம்டாஇங்க யாருஉங்களுக்கு வேலை இல்லைன்னிட்டாரும்என்ன படிச்சி என்ன புரியோஜனம் எவன் எவனுக்கோ அரசியல்வாதீங்க சிபாரிசு செய்யறதால கஷ்டப்படுறவங்களுக்கும் உண்மையானவங்களுக்கும் வேலை கிடைக்காம தள்ளிப் போயிடுது என்று நொந்து வாச்மேன் கதவை மூடினார். அவன் மகிழ்ச்சி இருண்டது.

படிப்புக்குப் பெரியதாய்
மரியாதை ஒன்றும் இல்லை
எல்லாரும் படித்திருக்கிறார்கள்.

(புதியவர்களுக்காக - இப்படியும் சில எழுதலாம்…)

எல்லாம்
அரசியல்வாதியின் கையில்
தேர்ந்தெடுப்பது நாம்

சிபாரிசுகளுக்கு
மட்டும் இங்கு வேலை
அலுவலகங்களில் நோட்டிஸ்போட்

என்னப் படிச்சி
என்னத்தக் கிழிச்ச
சம்பாதிக்க துப்பு இல்ல

வேலைவாய்பு அலுவலகம்
நிறைந்திருக்கிறது
வேலைவாய்ப்பற்றோரின் அட்டைகள்

திருடமுடியாதது; எரியாதாது
மதிப்பு மிகுந்தது; அட போடா
காசு பணம் துட்டு மணி