ஜூலை 20, 2012

கவியருவி ம. ரமேஷ் - ஹைபுன் 6


பக்கத்துவீடு. அழகுகள் நிறைந்திருக்கும் இடம். என் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அழகாய்த் தெரியும் எதிர் வீட்டுத் தோட்டம். பூச்செடியும் பூக்களும் நிறைந்திருக்கும். நாம் பேச்சுக்குப்பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்என்று சொல்வோமேஉண்மையாகவே சொல்வேன். அந்தத் தோட்டத்தைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டதும் உண்டு. அந்த வீட்டுக் கல்லூரிப் பெண் – காதலித்ததாக நினைவு. பூக்களைப் பறிக்கும்போது தோட்டம் அழகாக இருக்கும். பறித்துச் சென்றபின்னும் அழகாகவே இருக்கும்!

பறித்துவிட்ட காம்பில்
அமர்ந்து அஞ்சலி செய்கிறது
நேற்று தேனருந்திய வண்டு


ஜூலை 19, 2012

ம. ரமேஷ் ஹைக்கூ


மழை வெள்ளம்
மிதந்து செல்கின்றன
சருகுகளில் எறும்புகள்

சிரிப்பு சப்தத்துடன்
ஒன்றாய் உதிர்கின்றன
சருகுகள்

ஜூலை 17, 2012

ம. ரமேஷ் - ஹைபுன் -5


தோட்டம்
என் கவலைகளைத் தீர்க்கும் மருந்து.
மாலையில் தோட்டத்தில் அமர்ந்து ரசிப்பதும்
ருசிப்பதும் வழக்கம்.
மரம் செடி கொடிகளில்
கனியும் பழமும் இருந்தாலும்
பறவைக்கு
பூச்சிகளின் மீது ஏதோ ஒரு கண்.
நாம் அசைவம் சாப்பிடுகிறோமே
அதுபோல அதற்கும் ஆசையோ என்னவோ?
கனி பழங்களை விட்டுவிட்டு
பூச்சிக்காகக் கீழ்நோக்கி வருகிறது பறவை

தன் நிழலிலிருக்கும் பூச்சிகளை
மரம், சருகு கொண்டு மறைக்கிறது
பறவைகள் கொத்தும் முன்

மன்னிப்பு ஏன் கேட்கிறாய்? (கஸல்)


மன்னிப்பு ஏன் கேட்கிறாய்?
எனக்கு
உன் காலடிபட்டு
கலைந்துபோன
வாயிற்கோலம்தான் அழகு!

எந்தத் தெய்வமும்
செவிசாய்க்கவில்லை
கடைசியில்
காதலியின்
காலடியிலேயே வீழ்ந்துவிட்டேன்

ஏன் தயக்கம்?
நீ எந்நிலையில் இருந்தாலும்
வா
நான் உன்னை
காதலித்துக் கொண்டேதானிருக்கிறேன்

ஜூலை 12, 2012

காதல் தோல்விக்குப் பிறகு... கஸல்


நம் காதல்
ஒன்றிரண்டு
ஆசைகளோடு
முற்றுப்பெற்றுவிட்டது

ஆசை ஆசையாய்
ஆயிரம் ஆசைகள்
காதல் தோல்விக்குப் பிறகு

எதற்கும்
வருந்தாதவர்களையும்
வருந்தச் செய்துவிடுகிறது
காதல்

நான்
உன்னைக் கடைசியாகச்
சந்தித்தபோது
என்னோடு வந்துவிடுஎன்று
சொல்லியிருந்தால்
என்னோடு
வந்துவிட்டிருப்பாயோ என்னவோ!



எந்நிலையிலும்
அழாதவர்களைக்கூட
அழவைத்து
வேடிக்கைப் பார்த்துவிடுகிறது
காதல்

ஜூலை 08, 2012

வாழ்தல் வேண்டி…


“ஏன் இப்படிப் போராட்டம் நடத்துகிறீர்கள்?”
“பள்ளிக்கூடம் போனவர்கள்தானே நீங்கள்?”
“ஆமாம். பன்னிரண்டாம் வகுப்பு வரை”
“பள்ளி நாட்களில்
நீங்கள் அனைவரும்
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
எடுத்துக்கொண்டவர்கள்தானே?”
“ஆமாம். அமைதி நெறியிலும்
அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று…”
“சரி. பிறகு ஏன் கைது செய்யப்பட்டு
இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறீர்கள்?”
“என்ன ஐயா செய்வது
படிப்பு வேறு
வாழ்க்கை வேறு என்றாகிவிட்டதே!”

ஜூலை 06, 2012

காதலும் செத்துப்போனது!


குறட்கூ கவிதைகள்
புதுக்கவிதையின்  பரிணாமத்தில்  புதுவகை  இக்  குறட்கூகுறள்போல்  கூவுவதால்  குறட்கூதிருவள்ளுவரின்  குறள்  இரண்டு  அடிகளில்  ஏழு  சீர்களில்  கருத்துக்களை  எடுத்துரைக்கிறதுகுறட்கூ  இரண்டு  அடிகளில்  மொத்தம்  நான்கே   சீர்களில்  (முதலடியில்  இரண்டு  சீர்கள்  இரண்டாம்  அடியில்  இரண்டு  சீர்கள்கருத்துக்களை  எடுத்துரைக்கிறதுஇக்  குறட்கூவும்  என்  பரிசோதனை  முயற்சிகளில்  ஒன்று  என்பதிலும் கவிஞர்  தனிகைச்செல்வனின்  தமிழின்  முதல்  குறட்கூ  வகைக்  கவிதைகளைத்  தொடர்ந்து  என்னுடைய  இக்  குறட்கூ  வகைக்  கவிதைகளை  உங்களுக்கு  அறிமுகப்  படுத்துவதிலும்  மகிழ்கிறேன்.   



·       காதலுக்குக்  கண்ணில்லை
கண்ணீர்  உண்டு

·       எல்லா  ஊரும்
நம்  ஊரில்லை

·       கடமையைச்  செய்
பலனை  எதிர்பார்

·       தாலியில்லாமல்  தொட்டபோது
காதலும்  செத்துப்போனது

·       உருக்கொடுத்து  சிலையாக்கியதும்
கல்லாகிப்போனான்  இறைவன்


ஜூலை 05, 2012


பூக்களைப் பறித்தவள்
முக மலர்ச்சியின்றி தொடுக்கிறாள்
கணவனை இழந்தவள்

பூ உதிரும் நேரம்
எடுத்துச் சூடப் போகும் கையால்
நெஞ்சில் தொடரும் பாரம்

காதல் மட்டும் லாபமாகிறது (கஸல்)


நாம் பிரிந்த நேரம்
கைகள் மட்டும்
இணைந்தேயிருந்தன
எந்த நிலையிலும்
தற்கொலைக்கு முயற்சிக்கமாட்டேன்என்று
சத்தியம் செய்துகொண்டு

நீ
நெருங்குகையில்
ஏற்றிவைத்த தீபம்
அணைகிறது

கோயில் தீபங்களும்
உன் அழகை
எட்டி எட்டிப் பார்க்கின்றன

வாய்த்தாலும்
தோற்றாலும்
காதல் மட்டும் லாபமாகிறது

காதலின்
இலக்கணம்தான்
இந்தக் கவிதைகள்