நவம்பர் 28, 2012

ம. ரமேஷ் சென்ரியுக்கள்


சுத்தப் பொய் இருந்தும்
வாய்த் திறக்காமல்
கண்கட்டிய தேவதை

திரைப் படக் காதல்
வளர்ந்து நிற்று பாடம் சொல்கிறது
தொடக்கப் பள்ளிக் காதல்

கை கால் மூக்கு
அப்படியே பாட்டன் மாதிரி
மறுபிறப்பு

பேசாமல் படி பேசாமல் படி
பேசிக்கொண்டேயிருக்கும்
ஆசிரியர்

புன்னகையைவிட
பொன்னகைதான் வாழ்க்கை
ஏழைப் பெண்ணுக்கு

ஆசைப்படாமலிருக்க
துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறது
மனசு

மரத்தில் கீறல்
வலி காணமல்போனது
காதலர்கள் பெயர்கள்

நகர முடியாமல்
பேருந்து நெரிசல்
பாடை ஊர்வலம்

ம. ரமேஷ் ஹைக்கூ


காலையிலேயே
யார் அடித்திருப்பார்கள்?
சிவந்திருக்கும் ரோஜா

காயம் அடையாமல்
தேனெடுக்கும் வண்டுகள்
ரோஜா தோட்டம்

பொட்டிழந்தவள் விற்கிறாள்
பூக்களை யாரும் வாங்கவில்லை
கடற்கரையில் நுரைப்பூக்கள்

முன்பின்
அறிமுகமில்லை
சிரிக்கும் குழந்தை

என்னென்ன ஆசையோ
சொல்ல வாய்த் திறக்கும்
பிஞ்சுக் குழந்தை

கை வீசி
நடக்கும் காற்று
புயல்

விளையாடும் அணில்
உண்டிவில்லோடு
இளமைக்கால நினைவு

நவம்பர் 24, 2012

ம. ரமேஷ் ஹைக்கூ


தென்னங்கீற்று
அசையும் நேரம்
காற்று வாங்கும் நாற்று

அழகாய் இருக்கிறது
முகமா? என்கிறாய்
செவ்வானம்

யார் சொல்லிக் கொடுத்தது
விரையும் காக்கைகள்
கோயில் மணி

விரையும் பேருந்து
நிறையும் மகிழ்ச்சி
கை அசைக்கும் குழந்தை

முள் மஞ்சம்
சுகமான உறக்கம்
காக்கை கூடு

அடுக்குமாடி
குடியேற ஆசை
தூக்கணா குருவிக்கூடு

வாடிய பயிர்
அவசரமாய்
மேயும் ஆடு/மாடு

வானமெங்கும்
மின்மினிகள்
தீபாவளி இரவு

உண்டிவில்
இழுக்கும் சிறுவன்
ஏமாற்ற நினைக்காத பறவை!

ம. ரமேஷ் சென்ரியு


சட்டங்கள் தேவைதான்
கொலைகாரர்களுக்குக்
கருணை காட்ட.

தலைமேல்
நிழல்
தொப்பி

பள்ளிச் சுவர்
நோட்டீஸ் ஒட்டாதீர்
ஆளும்கட்சி போஸ்டர்

சிரிக்க
பயிற்சி கொடுக்கப்படும்
விரையும் நடிகைகள்

கழுதை கெட்டா
குட்டிச்சுவறு
சாமியாருக்குச் சிறை

நாய்கள் குறைக்கிறது
திருடர்கள் பயமில்லை
குழந்தை எதாவது?

காம்பு இல்லாத
மலர்
உள்ளங்கை

நள்ளிரவு
அந்தி வெளிச்சம்
மின்மினிகள் ஒளி

விடுதலை நாள்
மகிழ்ச்சி இல்லை
தொலைந்த வாலிபம்

தங்கத்தில் தாலி
திருடர்கள் ஜாக்கிரதை
அம்மன் கழுத்தில் மஞ்சள்கயிறு

நவம்பர் 22, 2012

ம. ரமேஷ் சென்ரியு


மின்தடை இரவுகள்
திருடர்களுக்கு எரிச்சல்
உறங்காத விழிகள்

ஒரு வேளைகூட பட்டினி
அடுப்பெரிக்க சோம்பேறித்தனம்
விலையில்லா அரிசி திட்டம்

வீதி நிறைய
பட்டாசு காகிதம்
சீனா தயாரிப்பு

அழாதே பாட்டி
நான் இருக்கிறேன்
முதியோர்இல்லத்தில் பேரன்

கேபிள் ஒயரில்
பயமின்றி நடக்கிறது
பிச்சைக்காகச் சிறுமி

அந்தரத்தில் சிறுமி
தந்தையின் சாட்டை அடி
சமுதாயத்துக்கு

கூரைக்குள் நடந்தால்
சாதனையும் திறமையும்
பேரூந்து நிறுத்தமென்றால் பிச்சை

மாலை குடிப்பதற்காக
வேகமாக வேலை செய்கிறான்
அப்பனுக்காகக் குழந்தை

ம. ரமேஷ் ஹைக்கூ


அமர இடமில்லை
நகரத்தில் வருந்தும்
பனித்துளிகள்

விசித்திரம்
கனவில்லா இரவு
மரணம்

காற்றின்
போக்குக்குப் போகும்
கையில் நூலிருந்தும் பட்டம்

ஒன்றும் அறியாததுபோல
மறுநாள் வீசும் காற்று
புயல் ஓய்ந்த கடற்கரை

ஓடைநீர்
சலசலக்கிறது
மேடு பள்ளம்

சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
தொடரும் பருந்து

ம. ரமேஷ் ஹைபுன் - 8


வாங்கிக்கொடுத்த பொம்மையை மாலையில் பார்க்கிறேன். கை, கால், தலை, உடல் என்று வேறுவேறு இடத்தில் இறைந்து கிடக்கின்றனஅதட்டினால் குழந்தை கை தட்டிச் சிரிக்கிறது. என்ன இப்படிச் செய்கிறாளே என்று படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கை, கால், தலை, உடல் எல்லாம் தனித்தனியாக இருப்பதைக் கண்டு அலரியடித்துக் கொண்டு எழுந்தேன். அடகனவுதானா?. அப்படி கனவு என்று விட்டுவிட முடியாது. சிதறிக்கிடந்த  கை, கால், தலை, உடலை எல்லாம் திரும்ப இணைத்துவிட்டு நான் விளக்கை அணைத்துவிட்டு உறங்கினேன். குழந்தை சிரித்துக் கொண்டேயிருக்கிறது உறங்காமல்

சிரிப்புச் சப்தம்
எட்டிப் பார்த்தேன்
குழந்தையுடன் பொம்மை

(வேறு எப்படியெல்லாம் எழுதலாம் என்பதற்காக சில எழுதியிருக்கிறேன். ஹைபுன் எழுதுபவர்களுக்கு உதவும் என்பதால்…)

சிரிக்கும் குழந்தை
உறங்கும் அப்பா
விழித்திருக்கும் பொம்மை

கடித்தப் பாம்பை
அடிக்க முடியவில்லை
கனவு

கை கால் தலை
சிதைந்தும் சிரிக்கும்
பொம்மையுடன் குழந்தை

கை கால் இணைகிறது
உயிர் பெறுகிறது
குழந்தையின் மனசு

© கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்

நவம்பர் 21, 2012

ம. ரமேஷ் - சென்ரியு


களங்கம் சுமக்கும்
கருவறைகள்
மூன்றாவதும் பெண்

எச்சில் இலை எடுக்க
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி

மின் விளக்கிடம்
கற்றுக்கொண்டேன்
கண் சைகை

தங்க நாற்கரச் சாலை
அப்புறப்படுத்தியது
மரங்களை வெட்டாதீர் பலகை

இதழ்கள் புன்னகைக்கிறது
மனம் சுருங்குகிறது
உறவினர் வருகை

நியாய விலைக்கடை
தெருக்கள் தோறும் விரிவு
டாஸ்மாக்

சிறைச்சாலையைவிட
அதிக கொடுமை
அகதிகள் முகாம்

காதல் திருமணம்
முதல் இரவு
கருத்து வேறுபாடு

மௌனத்தால்
தோல்வி அடைந்தது
மௌனம் சம்மதம் குறியீடு

ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?

ம. ரமேஷ் - ஹைக்கூ


கிழக்கையும் மேற்கையும்
இணைக்கிறது
வானவில்

இடி தாக்கியதில்
எரிந்து போனது
பாவம் தென்னை மரம்

இடி சப்தம்
நடுநடுங்குகிறது
உயர்ந்த மரங்கள்

மரம் அசைய
நடுக்கத்தில் அசைகிறது மனம்
ஒற்றையடிப் பாதை

குயில் பாடுகிறது
எரிச்சலாய் வருகிறது
சில்வண்டு சப்தம்

பூக்களிலிருந்து
விடைபெறும் வண்டுகள்
காதலர்கள் நுழைவு

ஆண் பனை
பயன்பட்டது
விசிறி

நள்ளிரவு
சமிக்கை கொடுக்கிறது
விண்மீனுக்கு மின்மினி

நட்சத்திரத்தின்
காதலி
மின்மினி

பட்ட மரத்தில்
(கருப்பாய்) கறுத்த கனிகள்
காக்கை கூட்டம்

நவம்பர் 18, 2012

ஹைக்கூ


இலைமறைக்காயில்
தனியாகத் தெரிகிறது
கிளியின் அலகு

ஜன்னல் குடையும்
வண்டுகள்
வயிற்றுப் பசி

பூ ஒன்று உதிர்ந்தது
வருத்தத்தில்
அந்தி (பொழுது) சாய்கிறது

காக்கைக் கூட்டம்
விரைகிறது
பொழுது சாயும் நேரம்

கயிறு இன்றி
ஊஞ்சல் ஆடுகிறது
குரங்கினம்

நள்ளிரவு வராமைக்கு
எரிந்து கொண்டிருக்கிறது
அணைக்கப்படாத தெருவிளக்கு

கையில் புல்லாங்குழல்
இசைக்க மனமில்லை
பாடும் சில்வண்டுகள்

புகை வண்டி
புன்னகையில் கையசைக்கும்
கொடி மல்லி

குழந்தையும் தெய்வமும்
ஒன்றுதான்
திட்டினாலும் சிரிக்கும்

நவம்பர் 04, 2012

ஆண்டிற்கு ஒரு முறை பார்த்துக்கொள்ள முடிகிறது


நகரத்தில்
எதிர் வீட்டில் வசிப்பவர்களை
ஆண்டிற்கு ஒரு முறை
பார்த்துக்கொள்ள முடிகிறது
தீபாவளியன்று
அதுவும் மாலையில்
பட்டாசு வெடிக்கும்போது!

பேச கூட நேரமிருப்பதில்லை
பட்டாசு வெடிக்கும்போது
கவனத்துடன் வெடிக்க வேண்டுமே!
அதனால் ஓரிரு வினாடி மட்டும்
பார்த்துக்கொள்ள முடிகிறது
ஆனால்
நலம் விசாரிக்க முடியவில்லை!

இதில் என்ன முரண்பாடு
இருந்துவிடப் போகிறது
பெற்றவர்களைக் கிராமத்தில்
தவிக்க விட்டுவிட்டு
நாம் மட்டும் சொகுசு வாழ்க்கை
வாழ முற்பட்டுவிட்டபோது
மனித நேயம் என்ன வேண்டிகிடக்கு!

மின்னஞ்சலிலும் முகநூலிலும்
மட்டுமே
தீபாவளி வாழ்த்துகள்
கூறிக்கொள்ளும் நமக்கு!