மே 27, 2010

இதழ் பிரசுரம்

என் தொடக்கக் காலக் கவிதைகள் சில பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. அவ்வாறு இதழ்களில் பிரசுரமானக் கவிதைகளைத் தொடக்கத்தில் மகிழ்ச்சியோடு சேகரிக்கத் தொடங்கினேன். பின்னர் சேகரிப்பதை நிறுத்திக் கொண்டேன். இப்போது நிறுத்திக் கொண்டதின் தவற்றை உணர்கிறேன்.(பல இதழ்களை நண்பர்கள் எடுத்தும் சென்று விட்டார்கள்.) பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளை ஆதாரத்துடன்  தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

 
காதல் வயப்பட்டவள்...

துடப்பமே கையில் எடுக்காதவள்

காலை மாலை

தெரு வாசலைப் பெறுக்குகிறாள்...

குடத்தையே கையில் எடுக்காதவள்

தெருக் குழாயில்

நீர்ப் பிடித்து

இடுப்பில் சுமக்கிறாள்...

புள்ளிகளே வைக்கத் தெரியாதவள்

கோலம் போட

தொடங்கிய இடத்திலேயே

வந்து முடிக்க முடியாமல்

எதிர் வீட்டு

ஜன்னலைப் பார்த்து சிரிக்கிறாள்!

(தினத்தந்தி - குடும்ப மலர் 18.1.2004 )



 
தெருக்கோடிப் பெண்ணே...

நீ உலாவியது என்னமோ

தெருவில் தான் ஆனால்

அடிவைத்ததெல்லாம்

என் இதயத்தில்!

நீ போகின்ற பாதை

எதுவென்று தெரியவில்லை

ஆனால் நீ

வருகின்றப் பாதை

என் இதயமாக இருக்கட்டும்!

(முத்தாரம் 1.8.2003)

 
வடு...

வேறு ஒருவனுடன்

திருமணமானாலும்

பழைய நைந்த

பட்டுச் சேலையைப்

பார்க்கும்போது

ஞாபகம் எனக்கு...

பூப்பெய்திய போது

வாங்கிக் கொடுத்த

முறைமாமனுக்குக்

கட்டி அழகு காட்டியது!

(தினமலர் - வாரமலர் 13.7.2003)



நவீனக் காதல்

எல்லோரையும் போல

ஆயிரம்

ஆயிரம்

கனவுகளோடுதான்

காதலிக்க ஆரம்பித்தேன்

நீயோ

ஆயிரமாயிரம் வைத்திருப்பவனை

காதலிக்க ஆரம்பித்து விட்டாய்!

(முத்தாரம் 31.1.2003)



ரட்டை அழகு!

அழகானக் கவிதை

பெண்கள்!

அதைவிட அழகு

எத்தனை முறை உச்சரித்தாலும்

சலிக்காத

உங்களின் பெயர்கள்!!

(ராணி 2.2.2003)



சுமைதாங்கி!

ஆறடிக் கூந்தலில்

ஐந்து ஆறு முழம் பூ

அழகாய்தான் இருக்கிறது

ஆனால்

அதன் சுமை தாங்காமல்

என் இதயம்

( ராணி 23.3.2003)



நிம்மதி…

பிரிந்திருந்து

கஷ்டப்படுவதைவிட

வா, காதலி

திருமணம் செய்துகொண்டு

கஷ்டப்படுவோம்

இருவரும்

இணைந்து விட்டோம் என்ற

நிம்மதியாவது இருக்கட்டும்

(முத்தாரம் 23.1.2004)



உன்னிடமிருந்து...

எப்பொழுதாவது

ஒரு கடிதம்...

என்றாவது ஒரு

தொலைபேசி அழைப்பு...

ஆயுள் முடிவதற்குள்

ஒரு சந்திப்பு...

இவைகளில்

ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு

என் முதல் காதலியே!

(தினத்தந்தி - குடும்ப மலர் 7.12.2003)



உன்னிடம்

கற்றுக் கொண்ட

காதலுக்காக

என் இதயத்தை

குருதட்சனையாக

ஏற்றுக்கொள்

(முத்தாரம் 14.5.2004)

 
வடியும் ரத்தம்...

காதலே நீ

ஏற்படுத்திவிட்டுப் போன

காதல் காயங்களிலிருந்து

வடியும் ரத்தம்

என் கவிதைகள்

(முத்தாரம் 3.9.2004)



நீ காதலித்துத் தோற்றதால்

அனுபவித்துக் கொண்டிருக்கும்

ஒரு தலையின்

கொடுமையைத் தானே

உன்னை நான்

காதலித்துக் கொண்டிருப்பதால்

அனுபவிப்பேன்

என்பது கூடத் தெரியாமல்

நீ என்னை

வெறுத்துக் கொண்டுள்ளாயே!

(குடும்ப நாவல் டிசம்பர் 2003)


தன்னைத் தானே

எரித்துக் கொள்கிறாள்

என்பது கூடத் தெரியாமல்

எரித்துக் கொண்டுள்ளாள்!

அவளை வர்ணித்து

எழுதிக் கொடுத்த

கவிதைகளை!!

(குடும்ப நாவல் ஜுன் 2004)

மே 25, 2010

குறட்கூ கவிதைகள்

புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. என்னுடைய குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.

 
காதலுக்குக் கண்ணில்லை

கண்ணீர் உண்டு


 
எல்லா ஊரும்

நம் ஊரில்லை


 
கடமையைச் செய்

பலனை எதிர்பார்


 
தாலியில்லாமல் தொட்டபோது

காதல் செத்துப்போனது


 
உருக்கொடுத்து சிலையாக்கியதும்

கல்லாகிப்போனான் இறைவன்

 
நடிகைகளிடம் போட்டி

ஆடை குறைப்பதற்கு


  காதல் வானில்

நட்சத்திரங்களாய் தடைகள்



கன்னித்தமிழ் கற்பிழந்தது

ஆங்கிலக் கலப்பு



காதல் அழகானது

வாழ்க்கைப் பாழானது



பட்டம் இருக்கிறது

நூல் இல்லை



என் வீட்டுக்கதவை

நான் தாழிட்டதில்லை



சொர்கத்தையும் நரகத்தையும்

காட்டுகிறது காதல்



பூக்களின் அழகு

ஆடையுடுத்துதலில் இருக்கிறது



சிறையில் என்ன?

என்பதே இல்லை



உன்னால் தகர்ந்தது

இறைவனின் கனவு



சண்டை போடுகிறது

உண்டியலில் பணக்கட்டுகள்



எழுதாதக் கவிதைகள்

அரும்பாத மொட்டுக்கள்



காதலில் விழுந்தேன்

அடிப்படவில்லை வலிக்கிறது



நீ குற்றவாளி

வெட்கப்படாமல் சிரிக்கிறாய்



நேரம்போத வில்லை

உன்னை நினைப்பதற்கு



காதலுக்குத் தாகம்

கண்ணீர் கொடு



மலர்கள் வாடுகிறது

பூக்காரி சிரிக்கிறாள்



உன் நினைவுகள்

உண்டியல் காசு



தண்ணீர் ஓடவில்லை

ஆறு ஆறுதான்



காதல் தோல்வி

அறுசுவை விருந்து



என் பட்டினியைப்

பசி அறியவில்லை



நான் குற்றவாளி

நீ சிறைச்சாலை



பயணம் ஒன்றுதான்

பாதைகள்தான் வேறுவேறு



நான் ஊமையானேன்

பூக்கள் பேசியது



காதல் கதை

விளக்கைத்தேடும் விட்டில்



வண்டுகள் மொய்க்க

பூதான் காரணம்



முள்களை எடுக்க

முள்ளைத் தேடுகிறேன்



காதல் கவிதைகளுக்கு

முற்றுப்புள்ளி இல்லை



நீயும் அங்கில்லை

நானும் இங்கில்லை



நான் பயணி

காதல் பாதை



மயானச் சந்தையில்

காதலர்களின் இரைச்சல்



காதல் நினைவுகள்

ஜன்னலோரப் பயணம்



கூவத்தில் வெழுக்கிறேன்

இறைவனின் ஆடைகளை



கவிதையையும் காதலையும்

காவடியாகச் சுமக்கிறேன்



நம் காதல்

கருச்சிதைவு ஆகிவிட்டது



ரோஜாவுக்கு முள்

காதலிக்குக் காதலன்



மின்னலின் தோலுக்கு

கண்சிமிட்டுகிறது நட்சத்திரங்கள்



பூக்களைப் பறிக்காதீர்கள்
தொலைவில் வண்டுகள்


 
குறை குடம்

காதலர் மரணம்


 
காதலர்கள் திருமணம்

பெற்றவர்கள் செய்தித்தாளில்



சமய போதனைகள்

பாவம் பக்தர்கள்





தலைவாரிப் பூச்சூட்டினேன்

பேன்பார்த்தேன் பொம்மைக்கு



கந்துவட்டி தடைச்சட்டம்

கோயிலில் உண்டியல்!



ஈர்த்து எரிக்கிறது

கோயில்தீபம் விட்டில்களை



காது செவிடாகிவிட்டது

பக்தர்களிடம் கடவுள்


  வைத்தது முற்றுப்புள்ளி

போடப்போவது கோலம்



கொடிகட்டிப் பறக்கிறது

நடிகைகளின் மேலாடை

 ஐந்துஆறு முழம்பூ

சுமைதாங்காமல் இதயம்



வலக்கண் அழுவது

இடக்கண் அறியாதிருக்கட்டும்



புல்மேல் பனித்துளி

உன்மேல் அழகு

மே 22, 2010

சீர்க் கவிதை

காலந் தோறும் அடி வரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்கள் வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க் கவிதை எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை (கூடார்த்தம்) ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன்.


• பூக்கள்
இறைவனின் அழகு


• மழை
பூமிக்கான ஒப்பாரி


• விபச்சாரம்
தினமொரு கற்பு


• கல்வி
முதலீடு


• இலவசங்கள்
அரசியல்வாதிக்கு லாபம்


• சாதி
அரசியல் சூச்சமம்


• சமயம்
கட்டுச்சோறு


• கண்ணாம்பொத்தி
நீதிதேவதையும் வழக்குகளும்


• கண் பார்வை
குருடர்கள்


• சாலைகள்
விபத்துப் பகுதி


• தீவிரவாதி
கருணையாளன்


• உலகம்
இறைவனின் சந்நிதி


• பெண் விடுதலை
இந்திய சுதந்திரம்


• கடல் அலை
கால்வாறுதல்


• காதல்
இரண்டாவதாக வாய்ப்பது


• குடுகுடுப்பைக்காரன்
எதிர்காலமற்றவன்


• கவிதை
பொய்மெய்


• கடவுள்
அவனுக்குள் அவன்


• விவாகரத்து
கொத்துமல்லியின் விதை


• சீரியல்
கதையல்ல நிஜம்


• தீர்ப்பு
யாருக்கு உண்மை


• கடிகாரம்
மனித இயக்கி


• தேன்
பூக்களின் எச்சில்


• வெள்ளை நிறம்
எல்லோரும் கலங்கம்


• கரு
விடியல்


• துடப்பம்
சுத்தத்தை அசுத்தப்படுத்துவது


• தாலி
விபச்சாரத்திற்குப் பாதுகாவல்


• நிலவில் மனிதன்
பொருளாதார இழப்பு


• குழந்தை
இறைவனுக்குப் பொம்மை


• அறுவடை
வீட்டுக்குப் பதர்


• ராமர்பாலம்
ராவணர்களுக்குக் கொண்டாட்டம்


• கட்டுச்சோறு
சுமை


• கருணைமனு
வினைக்குத் தினை


• மின்மினி
அசைவ மின்சாரம்

மே 16, 2010

காதல் கவிதைகள்


•என்
தலைவிதி
உன்
தலை வகிடுபோல்
நேராக
உன்னிடம் வந்து
முடிகிறது


உன்னிடமிருந்து...
எப்பொழுதாவது
ஒரு கடிதம்...
என்றாவது ஒரு
தொலைபேசி அழைப்பு...
ஆயுள் முடிவதற்குள்
ஒரு சந்திப்பு...
இவைகளில்
ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு
என் முதல் காதலியே!


•ஆறடிக் கூந்தலில்
ஆறு முழம் பூ
அழகாய்தான் இருக்கிறது
ஆனால்
அதன் சுமை தாங்காமல்
என் இதயம்


•இன்று
உன்னை நினைத்தாலும்
தலையறுத்தச் சேவலாய்
துடிக்கிறது
என் நெஞ்சு

•உன்னிடம்
கற்றுக் கொண்ட
காதலுக்காக
என் இதயத்தை
குருதட்சனையாக
ஏற்றுக்கொள்

•என் நினைவுகள்
உன் மடிமேல்
நீ
தலைகோத
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது

•நீ அகப்படாததால்
என்
இதயம்
தூண்டில் புழுவாய்த்
தவிக்கிறது

•என் உயிர் நீ
 

எனக்கு மரணம் இல்லை
நான் தான் நீ
நீ தான் நான்
ஒன்றை விட்டு ஒன்று பிரியாது
ஒரு சமயம்
என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று

•துன்பத்தில் இன்பம்
பிரிந்திருந்து
கஷ்டப்படுவதைவிட
வா, காதலி
திருமணம் செய்துகொண்டு
கஷ்டப்படுவோம்
இருவரும்
இணைந்து விட்டோம் என்ற
நிம்மதியாவது இருக்கட்டும்

•காதலியின் காதல்
நான்
காதலியைத் தொலைத்து விட்டேன்
யாராவது
திருமணம் செய்துகொண்டிருந்தால்
அவளிடமிருந்து
என் 'காதலை' மட்டும்
திரும்ப வாங்கி வந்து
எனது கல்லரையில்
சேர்த்து விடுங்கள்
புண்ணியம் கிடைக்கும்
உங்களுக்கு

•காதலின் பொய்
உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ...

•எதிர் பாராத கேள்வி
தொலைந்த
காதலியிடம்
ஆயிரம் கேள்விகள்
கேட்கப் போனேன்
அவள்
ஒரே கேள்விதான் கேட்டால்
'யான்டா என்ன அழவெச்ச'?

•காதல் குருடர்கள்
'காதலுக்குக்
கண் இல்லை'யென்று
தெரிந்தும் கூட
வாழ்க்கையில்
கை கோர்த்து
நடக்கத் தெரியவில்லை
காதலர்க்கு...

•ஏமாற்றம்

 
மழைத் தூரலில்
நனையப் பிரியம் என்றாய்
நான்
நனைந்து கொண்டிருக்கிறேன்.
நீ
குடைபிடித்துக்கொண்டு போகிறாய்…

•காதலியின் வேண்டுதல்
காதலனே
எனக்காக
உன் உயிர் வேண்டாம்
என் காதலை
மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு

•முதல் தோல்வி
என்
முதல் தோல்வி
குட்டிப் போடும் என்று
மயில் இறகை
புத்தகங்களுக்கிடையே
வளர்த்தது!

•தேடல் புதிது
நாம்
ஒரு நாள் முழுவதும்
தேடி அலைந்தோம்
எங்கேயோ போய்
ஒளிந்துகொண்டது
மரணம்.
தப்பித்தேன்
நான்.
பிழைத்தாய்
நீ.

•புது சாக்கு
நீ
நலம் விசாரிக்க
வருவாய் என்றுதான்
படுத்துக்கொண்டிருக்கிறேன்
காய்ச்சல்
நீங்கியப் பின்பும்.

•நினைவின் முடிவு
வளரும் நாட்களில்
ஒரு நாள்
சோர்வுற்று
உன்னை
நினைக்க மறந்திருந்தால்
புள் முளைத்த
நிலத்திற்குள்
கனவின்
பூப்பறிக்கச் சென்றிருப்பேன்

•நம்பினால் நம்புங்கள்
தலைதீபாவளிக்கு வந்திருந்தாள்
புஸ்வானமாக்கி விட்டுப் போனவள்
சரவெடி வெடிக்க...
பற்றவைக்கும்போது கூட
என் நெஞ்சு
புகைந்து கொண்டுதான் இருந்து
என்னவாகிவிடுமோ என்று
பயந்து
கண் மூடி திறந்தபோது
என் மனசு போல
அவள் கையில் இருந்த
நெருப்பும்
அணைந்திருந்தது!


•காதலி!
நீ
எனக்கு
காதலியானவள் அல்ல
கவிதையானவள்.
என் ஒரு கவிதையையும்
நீ படிக்க முடியாத போது
என் கவிதைக்கு என்ன மதிப்பு
எழுதியக் கவிதைகளை
அழித்து விடுகிறேன்.
நீ
எனக்கு
காதலியானவள் அல்ல
கவிதையானவள்.
என் ஒரு கவிதையையும்
நீ படிக்க முடியாத போது
என் கவிதைக்கு என்ன மதிப்பு



•இனி அவள் அப்படிதான்
உன் வீதி வழியே
கடந்து சென்றபோது
என் பாடையிலிருந்து
உதிர்ந்த பூக்களை
தெருவே கூட்டிப் பெறுக்கிக்
குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டது.
நீ மட்டும் இன்னும்
வாசலை கூட்டாமல் இருக்கின்றாய்.


•அவசரம்...
கல்லரையிலும்
உன் நினைவுகளின்றி
தூங்க முடியவில்லை
அவசரப் பட்டுவிட்டேனா?


•காதல் சோறு
இறந்த
என் காதலுக்கு
சோறு வைத்தேன்
எந்தக் காக்கையும்
சோறு எடுக்க வரவில்லை

• உண்மை பொய்
 

காதலியோடு சுற்றுலா சென்றேன்
காடு மலை அருவி சோலை
என்று ரசித்தவள் சொன்னாள்:
எவ்வளவு அழகு! என்று
நான் சொன்னேன்:
அழகு தான்
ஆனால்
உன்னைப்போல்
பேசுவதில்லையே என்று


• எமனின் ஏமாற்றம்
என் உயிரை
எடுக்க வந்த
எமன்
வெறும் கையோடு
திரும்பிப் போனன்.
காதலி
என் உயிரை
எப்போதோ
எடுத்துச் சென்று விட்டதால்!


• வானவில் சோறு
ஒரு மழைக்கால இரவில்
நமக்கு மட்டுமே தெரிந்த
அந்த வானவில்-
ஆறு ஆண்டுகள் கழித்து
நேற்றைய மழை இரவில்
காட்சியளித்ததை கவனித்திருப்பாளா?
ஆம் காதலா!
என் குழந்தைக்கு
அதைக் காட்டிதான்
வானவில் சோறு ஊட்டினேன்.


• மெரினாக் காதல்
ஒரு சமயம்
கடல் அலைகளைப்
பார்த்துப் பார்த்து
கற்றுக் கொண்டிருப்பாளோ?
என்னை
ஏமாற்றி விட்டுப் போக!


• காதல் கல்லறைகள்
பற்றும்-
பாசமும்-
அன்பாய்
அடித்துக் கொண்டு
அழுகின்றது
கல்லரையில்.


• காதல் கெட்டுப் போவதில்லை
கப்பலேறிய மானம்
கரை கடந்தது
காதலர் பிணம்...
தெய்விகக் காதல்
கோயிலுள்
காதலர் பிணம்...
பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.

சமூகக் கவிதைகள்

• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

• இக்காலமும் பொற்காலம்
அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்

• தெளிவு கொள்
பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...

• நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது

• கவலைப்படாதே …

மழைக்காகக் கூட
பள்ளிக் கூடம்
ஒதுங்க வில்லையா
கவலைப்படாதே !
ஒன்றும் பிரச்சினை இல்லை
MLA
MP
Doctor
பட்டங்களைப் போட்டுக் கொள்ளலாம்

• பணம் பார் ஆளும்
பிணம்
வாய்த்திறக்கிறதோ இல்லையோ
வாக்காளன்
பட்டனை அழுத்தும்போது
பிணமாகிப் போகிறான்

• திருத்தல்கள்
நண்பர்கள் நாங்கள்
ஜோசியம் பார்த்தோம்
கிளி
சீட்டை எடுத்துக் கொடுத்தது
அவன் சொன்னான்:
வரும் 'தை'யில் கல்யாணம்
சரி விட்டுத் தொலையுங்கள்,
எங்களைப் பார்க்கும்
சமூகம் சொல்கிறது:
'தள்ளிக்கிட்டுப் போறான்'

• பொய்கள்
கண்ணால் பார்ப்பதும் பொய்!
காதால் கேட்பதும் பொய்!
தீர விசாரிப்பதும் பொய்!
நீதி மன்றத்தில் தீர்ப்பு

• விதன்டா வாதம்
மரண தண்டனைக்கு
இடைவிடாமல்
குரல் கொடுக்கும்
அந்த சப்தத்தில்
என்கவுண்டர்கள்
காதில் விழுவதில்லை

• பின்பற்றுதல்
'பசித்திரு
தனித்திரு
விழித்திரு'
பக்கத்தில்
தொலைக்காட்சி பெட்டி

• ஆட்டோகாரனுக்கு
'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ

• சுயம் வரம்
எலி வலையில்
மாப்பிள்ளை தேடும்போது
ஜாக்கிறதை
பாம்பும் இருக்கலாம்
எலிக்குப்
பல 'படுக்கை'களும் இருக்கலாம்

• விபச்சாரம்
ஒரு விபத்தில்தானே
விழுந்து விட்டாய்
ஏன் 'படுத்துக்கொண்டே' இருக்கிறாய்?
விழித்து எழுந்திடு

• உண்மை
கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை

• சோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்
வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்

• பரபரப்பு தீர்ப்பு
குற்றவாளியென
உயர்நீதி மன்றம்
ஆயுள் தண்டனை...
மறுநாள்
அவனுக்கு
உச்சநீதி மன்றம்
விடுதலை...

• படைப்பாளனிடம் ஒரு கேள்வி
இறைவா
இதென்ன விளையாட்டு
பிள்ளையார் படிக்கப் போய்
குரங்கானக் கதையாய்
ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?

• இந்தியா
ஒரு வேகத்துக்காக
மாட்டை அடிக்கும்
வண்டியோட்டி...
தலையில் கொட்டி
திறமையை அடக்கும்
பெற்றோர்...
வல்லரசிற்கு
நடைபோடும்போது
அரசியல் ஓட்டுக்காக
இலவசங்கள்...

• திருமணம்
காலையில் வரும்
அரசியல்வாதிக்கு
நள்ளிரவில் தயாராகும்
சாலைகள்போல
6 - 7.30 முகூர்த்தத்திற்காக
நீயும் தயாராகிறாய்
சடங்காயிருந்த
திருமணம்
அரசியல் விழாக்களாகி விட்டதால்
கலாச்சார வேகத்தில்
திருமணத்தின் புனிதமும்
கெட்டுவிட்டது

• கவிப்பேரரசு வைரமுத்துவே!
நவீன பெண்கள்
சமையலரைக்கும்
கட்டியலரைக்கும் இடையே
ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிட வில்லை
சீரியல்களின் இடைவேளைகளில்
சமையலரைக்கும்
தொலைக்காட்சி அறைக்கும்
ஓடி ஓடி ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிடுகிறார்கள்.

• குதர்க்கம் 1
அண்ணலும் நோக்க வில்லை
அவ ளு ம் நோக்க வில்லை
வால்மீகி சொன்னது சரி
உன் ராமன்
சந்தேகப் பட்டவன் கம்பா!

• குதர்க்கம் 2
இன்றும்
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
பாதுகையைப்
பறித்துக் கொள்கிறார்கள்

• அப்படியா? அப்படித்தான்!
இரத்த பாசத்தைத் தவிர
சிரையில் என்ன?
என்பதே இல்லை

• சதை அழகு
பூக்களின் அழகு
அதன் ஆடை
உடுத்துதலில் இருக்கிறது!
ஆண்டாண்டுக்கு
மாறும் அழகு...
தெரு அழகி -
ஊர் அழகி -
உலக அழகியே -
உங்கள் அழகு
எதில் இருக்கிறது?
ஆடை உடுத்திக் கொண்டிருக்கும்
பூக்களைப் பார்.


•அழகிய முரண்கள் 1
குற்றவாளியென
சிறை தண்டனை
நன்னடத்தையில்
விடுதலை

•கேளுங்கள் சொல்லப்படும்
விபத்தில் சிக்குண்டவரிடம்
வேலையின்றித் திரிபவரிடம்
ஏன்
காதலில் தோற்றவரிடம் கூட
வலியைப் பற்றிக் கேட்காதீர்கள்
முதியோர் இல்லத்தில்
போய் கேளுங்கள்
வலி சொல்லப்படும்

•நடைப் பிணங்கள்
அடிப்பட்டுத் துடிக்கிறான்
எல்லோரும் விரைகிறார்கள்
அவரவர் அலுவலுக்கு...
ஒரு நடைப்பிணம்
அருகில் சென்றது
நகை பணம்
அபகரித்துச் சிரித்தது
சைரன் ஒலி கேட்ட போது
மெதுவாக
அவன் உயிர்
பிரியத் தொடங்கியது.

•மெளனமாய் இறைவன்
வேல் குத்தி
அழகு குத்தி
உண்ணா நோம்பிருந்து
மொட்டையிட்டு
நீ
படைத்த உடம்பை
வதைத்துக் கொண்டவனுக்கு
அப்படி என்ன
பெரியதாகக் கொடுத்துவிட்டாய்?

•முடிவு தேடும் தொடக்கம்!
ஏழு திணைகளாய்...
கடையெழு வள்ளல்களாய்...
வல்லரசுகள் தோன்றும்.
வேந்தரும் அரசருமாய்
அரசியல்வாதிகளுக்கு
ஊராட்சிகள் மாவட்டங்கள்
தனித்தனி நாடுகளாக்கப்படும்.
கப்பம் கட்டுவார்கள்...
விபச்சாரிகள் மீண்டும்
தேவதாசிகளாய்ப் போற்றப்படுவர்...
நக்கீரன் பாட்டில்
எந்தக் குற்றமும் இருக்காது...
முப்படைகளுக்குப் பதிலாக
அணுகுண்டு வீச்சுகள்...
உண்மைக் காதல் கொண்ட
ஓர் ஆண்
ஒரு பெண்ணைத் தவிர
பாம்பும் இறந்திருக்கும்...
இருவரும் ஆடையின்றித் திரிவார்கள்
விலக்கப்பட்ட கனியென்று
எதுவும் இல்லை.

•விபச்சாரி உண்மை பேசுகிறாள்
இருபத்து மூன்றில்
ஒன்று...
இரண்டு...
மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில்
நான்காகிப்போனது...
இப்படியே
வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்
இல்லை என்றாள்
நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”

•கண்டது கனவு
நேற்று இரவின் காலையில்
இந்தியா வல்லரசாகி இருந்தது.
சுவிஸ் வங்கியிலிருந்து
கறுப்பு பணம் திரும்பியிருந்தது!
இருந்தும்
உலக வங்கியிடம்
கடன் கேட்டுக்கொண்டிருந்தது!!
தனிக் குடித்தனங்களில்
விவாகரத்து வழக்குகள்...
காதல் போர்வைக்குள்
காம விளையாட்டுகள்...
அரசியல்வாதிகள்
தனி வங்கி ஆரம்பித்திருந்தார்கள்...
எல்லோர் கையிலும் துப்பாக்கி...
நீதிமன்றம்
மனித இன படுகொலைக்கு மாற்றாக
பறவை, விலங்கு சுட்டதற்கு
மரண தண்டனை விதித்துக் கொண்டிருந்தது...
திரைப்படம், தொலைக்காட்சி
ஆடையை முற்றும் துறந்த
நவீன கலாச்சாரத்தை
போதனை செய்து
‘நாமே குழந்தை
நமக்கேன் குழந்தை’ என்றது.
நான்
கலைந்த ஆடையை
உடுத்திக்கொண்டு எழுந்தேன்.


• இதுதான் உண்மை
முற்றும் துறந்தேன்-
ஓடி வந்து
தன் அங்கியை
ஆடையாக உடுத்தினார்
இயேசு...
ஞானப் பழத்தோடு
ஓடி வந்தார்
முருகன்.
ஆச்சரியமாகப் பார்த்தேன்
சொன்னார்:
“அப்போதே அண்ணன்
கொடுத்து விட்டார்”
பாபர் மசூதியிலிருந்து
நபியும் ராமனும்
பால் சொம்போடு
புறப்பட்டதாகப்
புத்தர் சொன்னார்.


• திணை மாற்றம்
சோர்ந்துபோய்
தரையில் விழுந்தேன்.
நத்தைகள்
தண்ணீர் கொடுத்தது...
வண்டுகள்
தேன் கொடுத்தது...
காற்று
புழுக்கத்தைப் போக்க
காக்கை வாயில் எச்சமிட்டது.
இதுகூட பரவாயில்லை!
கண் விழித்துப் பார்த்தேன்:
என்னைச் சுற்றி மனிதர்கள்-
செய்தி சேகரிப்பாளர்கள்
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்-
காவல் துறையினர்
என்னைக் கோடுபோட்டு
ஓவியமாய் வரைந்திருந்தார்கள்-
வயிற்றுப் பசியைப் போக்க
இவைகள் எதுவும்
சிந்திக்கவில்லை.


• ஈழக் காதலி!
எத்தனை ஆயிரம்
கனவுகளோடு
உலா வந்தோம்.
இன்று
உன் நினைவுகளே இன்றி
சுற்றுகிறேன் நடைப்பிணமாய்
உன் சடலத்தைத் தேடி.
எந்தத் தாக்குதலுக்கு
எந்த இடத்தில்

வீர மரணமடைந்தாய்.


• ஈழக் காதலன்
உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்


• ஈழத்தின் நெருப்பு
சடலத்தினைத்
தேடும் போது
உடன்கட்டை ஏறினாள்!
அவள் தலைமேல்
குண்டுமழை


• பைத்தியங்கள்
சங்க காலம்
இனி எக்காலம்?
எப்படிப் பாடுவது
வீர மரணத்தை?
தோட்டாக்கள்
புற முதுகைத் துளைக்கிறதே!


• வாக்கு சேகரிப்பு
ஒலிப் பெருக்கியின்
சப்தத்திற்கிடையே
யார் காதிலாவது
விழுந்ததா அரசியல்வாதிகளே?
அந்த
ஊமையின் கோரிக்கை.


• வெளிநாட்டு மோகம்
தாயின்
முலைப் பாலைத்தானே
குடித்தாய்.
வேசிக்குச் சோறூட்ட
ஏன் பறக்கிறாய்?


• மகன் தாய்க்காற்றும் உதவி
மகனே
உன்னப் பாக்க
என் மனசு
அருவறுக்குது!
இனிமே
என்ன வந்து பாக்காத
முதியோர் இல்லத்துல.


• ம்ருக நேயம்
அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!

பெண்ணியக் கவிதைகள்


• பெண்ணியம் பேசுகிறேன்
அச்சம்
மடம்
நாணம்
களையெடுங்கள்
பயிர்ப்பு செழிக்கட்டும்

• கள்ளத் தனம்
கற்பென்றதும்
பொங்கிவிடுகிறது
சர்க்கரைப் பொங்கல்
இரண்டாவது
காதலில்தானே
எல்லோரும்
வாழ்ந்து வருகிறோம்



• வரம் தந்த சாமிக்கு ஆராரிராரோ...

சீரியல் பார்த்து
தாய் அழுகிறாளென்று
தெரியாமல்
குழந்தையும்
சேர்ந்து அழுகிறது பாவம்

• பாவம் என்பது பாவம்
மாங்காய் கடிப்பது
மசக்கைக்காக அல்ல
அந்த ஆசை முடிந்து
பத்தாண்டுகளாகி விட்டது
பத்து சவரன் இல்லாமல்...
மாங்காய் கடிப்பது
ஒரு வேளைக் கஞ்சை
ரசித்து குடிக்க...

• நில் கவனி செல்
'நாலு புள்ள பெத்தா
நடுத்தெருவுல சோறு'
பழமொழி தப்புடா கண்ணா
'அனாத இல்லத்துல சோறு'

• விடுபட்டவர்கள் பட்டியலில்...

செல்வ செழுமையினருக்கும்
நடிகைகளுக்கும் கூட
'பட்டம்' கிடைப்பதில்லை...
பள்ளிக்கூட பக்கமே ஒதுங்காத
ஏழைக்கு கிடைத்து விடுகிறது
முதிர்க்கனி 'பட்டம்'

• உங்களோடு ஒரே போராட்டம்
உனக்கெதிரான ஒரு குரல்
வெளியே
ஒலித்துக் கொண்டிருக்கிறது
நீ
கதவைத் தாழிட்டு
தொலைக்காட்சியைக்
கட்டியழுதுக் கொண்டிருக்கிறாய்

மே 03, 2010

என் சாவுக்காவது வருவாயா? - காதல் தோல்வி கவிதைகள்

(‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்துகொண்டது இக்கஸலுக்கும் பொருந்தும். பேச்சுச் சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ்க் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகிவிடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.)

என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்

நீ
துப்பிய எச்சிலாள்
கிருமியாய் வளருகிறது
என் காதல்


• காதல் கவிதைகளைக்
கிறுக்கியவன் இறைவன்
அதன் அர்த்தம் புரியாததால்
கல்லறையில்
காதலர்கள்


• இறைவா
உன் சந்நிதியில் என்ன
எல்லைப் பிரச்சினை?


• இறைவா
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன


• உச்சநீதி மன்றத்தில்
காதலர்களே வாதாடுகிறார்கள்
முதன் முறையாக
நீதிதேவதையின் கண்கட்டு
அவிழ்க்கப்பட்டுள்ளது


• என் கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


• நீ
என்னை
மறந்துபோய்
நினைத்திருக்கலாம்
துன்பத்தில்
நினைக்கும்
பக்தன்போல


• நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியாள்


• உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்
தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது


• கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்


• என் காதல் கொடி
எட்டி மரத்தை
இறுக்கப் பிடித்துக்கொண்டது


• நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்


• வா, வேண்டுமானால் காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்


• இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது


• வா, உடம்பை
பதியம் போடுவோம்
இறைவனுக்கு
விளையாடப் பொம்மைகள்
வேண்டுமாம்


• இறைவா!
நீ எழுதியக்
கவிதைகள்
நவீனமாகிவிட்டன


• விட்டுக்கொடுத்தல்
பெருந்தன்மையா?
கையாகாலாதத்தனமா?
இறைவா
விளக்கம் கொடு?


• காதல் தோல்விக்குத்
தற்கொலையா?
வெட்கப்படுகிறது
கல்லறை


• ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்ட
சக்தியில்லை


• நீ
எனக்குச்
செயற்கைச் சுவாசம்


• நாம்
காதலிலேயே வாழ்ந்து
வாழ்க்கையை
முடித்துக்கொண்டோம்


• காதல் அழகானது
வாழ்க்கைப் பாழானது


• உன் நினைவுக்கு
என் கவிதை
அஞ்சலி செய்கிறது


• உன்னால்
இறைவனின்
படைப்பு சுதந்திரம்
பறிபோய்விட்டது


• உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள்


• இறைவா
சுகம் அழைத்தபோதும்
உன் சந்நிதியில்
விட்டிலாய் கிடக்கிறேன்


• வீட்டைப் பெறுக்கிச்
சுத்தம் செய்து
குப்பையில் கொட்டிவிட்டேன்
காதலோடு சேர்த்து
உன் கவிதைகளையும்


• காதல் ஒன்று சாகும்போது
பூ வாசம்
உடன்கட்டை ஏறுகிறது
சுவாசக் கட்டை ஒன்று
பட்டுப்போய் விடுகிறது


• பாவபுண்ணியங்களை
தலை மூழ்கினேன்
என் ஆடைகள்
காணவில்லை


• உன்
பொன்னாடையைத் தா
உடல் குளிர்கிறது


• வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக


• மழைச் சாரலாய்ப் பொழிகிறது
தூவானத்தின் கவிதைகள்


• நாம்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்


• இறைவா
உனக்குப் பசிக்கும்போது
என்னை
பறிமாறிக்கொள்





• உன் பிரிவால்தான்
நம் காதல்
உயிர் வாழ்கிறது


• என் பெயரை
பச்சைக்குத்திக் கொள்ளாதே
மணவறையில்
பெயர்கள் மாறிவிடலாம்




• நீ
ஒளிந்துகொண்டிருக்கிறாய்
அது கூடத் தெரியாமல்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்


• கடிதத்தைப் படித்து
எச்சில் துப்புகிறாய்
அது பூ விதழ்களாய்
அதன் மேல் விழுகிறது


• இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ
கிழித்தெரிந்தாய்


• என் நண்பன்
செத்துக்கிடக்கிறான்
நீ
பிரிந்து போகிறாய்


• பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்


• இறைவன்
பேன் பார்க்கும் சாக்கில்
மறந்து போன
என்
தலையெழுத்தைப் பார்க்கிறான்





• உன்
நினைவுகள் கனவுகளையும்
தூங்க விடுவதில்லை


• நவீன விட்டில்
விளக்கை அணைத்துவிட்டு
சூரியனில் பாய்கிறது


• மொட்டுக்கள்
அழுது சேர்த்தக்
கண்ணீர்தான்
தேன் துளிகள்


• பிரிவுகள்
சோகமானபோதும்
கவிதைகள்
அழகாய் இருக்கின்றன




• இறைவன்
ஓட்டி விளையாடும்
வாழ்க்கைச் சக்கரம்
பாதியிலேயே
தடம் புரண்டுவிடுகிறது


• அவள்
ஏற்படுத்திய
காயத்திற்கு
நீதான் மருந்து


• இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரை


• உனக்கு
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை





• உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது


• என் சோகத்திற்கு
குயிலும் வானம்பாடியும்
இரங்கல் பாடுகிறது


• உன்னை
மேய்ப்பதற்குள்
எனக்குத்
தண்ணிகாட்டி விடுகிறாய்



• உன்னால்
கோயில்
பொழிவிழந்து
காணப்படுகிறது



• நாம் விளையாடுவது
கண்ணாம்பொத்தி
நான்
எங்கே போய் ஒளிய
நீ பிரகாசித்துக் கொண்டுள்ளாய்


• எல்லா எழுத்துக்களையும்
கவிதையாக்கி விட்டேன்
பேச வார்த்தையில்லாததால்
பைத்தியக்காரனாய்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்


• காதலி கை விட்டதால்
உன் கால் பிடிக்கிறேன்



• உன்னைப் பழிப்பதற்காக
நரகம் வேண்டாம்
உன்னைப் புகழ்வதற்காகச்
சொர்க்கமும் வேண்டாம்
என்னைக்
காதலியிடத்தில்
சேர்த்துவிடு போதும்



• காதலர்களுக்குச் செவிசாய்ப்பதா?
பெற்றோர்க்குச்
செவி மடுப்பதா?
குழப்பத்தில் இறைவன்


• ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
பாவம் காதல்


• தவளைத்
தன்வாயால் கெடுவதுபோல்
நான்
என் காதலால் கெட்டேன்


• எழுதாதக் கவிதைகள்
அரும்பாத மொட்டுக்கள்



• அரும்பு மீசைக்குப்
பூச் சூட்டியவளே
இன்று வா
சடைப் பின்னிப்
பூ வைப்பாய்


• நீ குற்றவாளி
வெட்கப்படாமல் சிரிக்கிறாய்


• கூட்டிக் கழித்துப் பார்த்தேன்
காதலில்
கண்ணிர்தான் மிச்சம்


• ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது


• என் இதயத்தை
வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டாய்
கடன்காரன் போல


• எனக்குப்
பாடை கட்டாதீர்கள்
சவக்குழி வெட்டாதீர்கள்
நெருப்பும் மூட்டாதீர்கள்


• இறைவனின் தோட்டத்தில்
நமக்கு
விருப்பமானப் பூவை
நாமே
பறித்துக் கொள்ளலாம்


• நிலவுப் பெண் படிக்க
என் கவிதைகளை
நட்சத்திரங்களாக்கி விட்டேன்


• என் பாடையைச் சுமக்க
காதலி!
நீ
மட்டும்தான் இருக்கிறாய்




• மலர்ப் பாதத்தில்
பூக்கள் இருப்பதை விட
அவள் கூந்தலில்
அழகாயிருக்கிறது


• உன் கேமிரா கண்ணில்
படைப்புகள்
கவர்ச்சியாயிருக்கிறது



• தோட்டத்தில்
எந்தப் பூவைப்
பறிக்கப் போகிறாய்
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது


• பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்


• சோகம் அழகாய் இருக்கிறது
பூந்தோட்டத்தில் பூக்கும்போது


• உன்
மெளனம் பேசுகிறது
வாய் ஊமையாகிவிட்டது


• எரியூட்டப்படாத
பிரேதங்களாய்
இனி நாம்
உலவ வேண்டும்


• கண்ணீர் வெள்ளம்
என்னைக் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறது



• என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு கருவறை
ஒரு கருவறை
இறைவனைச்
சுமந்துகொண்டிருக்கிறது


• உன் காதலை
பாவமன்னிப்புச் சீட்டில்
எழுதிப் போக்கிக் கொண்டாய்
எனக்கு மது


• வேலைகளின் அவசரங்களில்
இடைமறிக்கும்
டிக்கேட் பரிசோதகரைப் போல்
நீ
என் வாழ்வில்
குறுக்கிட்டாய்


• சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
பிறந்த குழந்தைகள்தான்
நட்சத்திரங்கள்


• வா, உடம்பைப்
பதியம் போடுவோம்
இறைவனுக்கு
விளையாடக் குழந்தைகள்
வேண்டுமாம்


• இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ
படிக்காமல் கிழித்தெரிந்தாய்


• என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்


• நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
காதலி
என்னைத்
தண்டித்து விட்டாள்


• உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு


• உன் நினைவுகளில்
கண் மூடினேன்
நான்
இறந்து விட்டதாய்
நினைத்துப்
பாடைகட்டி விட்டிருக்கிறார்கள்


• நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன்
பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது



• காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா
நீ இருப்பது அப்போது
தெரியாமல் போய்விட்டது


• மழைநாளில்
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்


• நீ
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது


• கடித்தக் கொசு
என்னிடமே
அடிபடுவதுபோல
என் காதலும்
என்னிடமே
அடிபடுகிறது


• 
• எறிந்த
‘கவண்’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது


• உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன


• நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்



• காதலர்கள் நாம்
ஏன் சாகவேண்டும்?
பூவும் வண்டும்
செத்தாப் போகிறது?


• நீ
நீயாக இருக்கும்போது
நான் நீயாகி விடுகிறேன்


• என் கவிதையின் அழகை
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்


• நீ
செருப்பைக் காட்டினாய்
அது
இறைவனின் கையாய்
ஆசீர்வதிப்பதாய்ப் பட்டது


• நீ
விலகியபோதுதான்
உன் போதையால்
உடல் உறுப்புகள்
செயலிழந்தது


• நீ
முடி வளர்க்கின்றாய்
நான்
மொட்டைமாடியில்
பூச்செடி வளர்க்கின்றேன்


• கனவில்
மறைந்த பாதை
நீ


• ஆசைக்கும்
பேராசைக்கும்
இடையே
காதலின் ஆயுள்
கழிகிறது


• உன் அருளை
எனக்கும் கொஞ்சம்
வைத்திரு
வரிசையில்
கடைசியாக வருகிறேன்


• காதலி
பூக்களைப் பறித்தால்தான்
மாலை சூட முடியும்


• ஒருவருக்கு
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?


• என் காதல்
ஆலயத்திற்கு வெளியே
உள்ள
பிச்சைப்பாத்திரம்


• ஆலயத்திற்கு வெளியே
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்


• காதல்
விளக்கைத்தேடும்
விட்டில்



• உன் உயிர் வேண்டாம்
காதலை மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு




• தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல்
போய்விட்டாயே?


• என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
மறுஉயிர்ப்போடுத்
துளிர்க்கிறது


• காதலியிடம்
குறை இருக்கலாம்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
இறைவனின் குறை


 செல்லாதக் காசுகளை
உண்டியலில்
சேர்த்து வைத்துள்ளேன்


• உன்னை இழந்தது
சோகம் தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்


• இறைவா
என் நினைவுகள்
அவனுக்கு
சந்தோசத்தை மட்டுமே
கொடுக்க வேண்டும்


• என் கவிதைகளை
என்னிடமே சேர்த்துவிடு
காதல் செத்துப்போகட்டும்
பாவம்
கவிதைகளாவது
வாழட்டும்


• ஆலயத்தில் வாசகம்
சப்த்தம் போடாதே!
இறைவா
நான் எப்படி
புலம்பாமல்
இருக்க முடியும்?


• இறைவன்
கொடுத்த வரம் நீ
நீ
கொடுத்த வரம்
இறைவன்


• இக்கவிதைகள்
காதலின் கண்கள்
பாவம்
கண்ணீர் சொட்டுகிறது


• நிலவு
கன்னத்தில் அறைந்ததால்
விண்மீன்
பூமியில்
சமாதியானது


• என் கவிதை
சிலுவை மரத்தில்
மூன்றாம் நாளல்ல
நீ வாசிக்கும்
அன்றுதான்
உயிர்த்தெழும்


• நீ
விலக்கப்பட்ட கனி
அறியாமல்
உன்னைப்
பறித்துவிட்டேன்


• மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்


• என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்



கைப்பேசி - 98652 24292