மே 31, 2016

இதுதான் ஹைக்கூ...

பழுதடைந்த கட்டுமரம்
சாந்தமாக அசைந்து வருகிறது
தக்கை
 -எஸ். நாகலிங்கம்
தக்கை - என்பதற்குப் பதிலாகச் சிறு திருத்தம் கொண்டு இதை சென்ரியுவாகப் படைக்கலாம். மூன்றாவது அடி  இறந்த மீனவன் சடலம்” என்று எழுதினால் பன்முகம் பெறுவதைக் காணமுடியும். தக்கை என்பது கடலில் அரிதுதானே?
‘‘பழுதடைந்த கட்டுமரம்
சாந்தமாக அசைந்து வருகிறது
இறந்த மீனவன் சடலம்
’’
-இப்போது பாருங்கள்...மீனவன் உயிருக்கு எவ்வாறு போராடியிருப்பான். பழுதடைந்த படகும், அவன் உடலும் சாந்தமாக - உயிரற்று வருவதற்கும் பொருந்தி மீனவர்களின் துயரையும் சித்திரிப்பதாய் அமைந்திருக்கிறது.

மே 15, 2016

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 24

(2) சேற்றில் கால்கள்
சிக்க சிக்க… நடக்கும்
எருதுகள்

முதலில் இப்படி எழுதப்பட்டது:
(1) உழவனின் கால்
சேற்றில் சிக்க சிக்க… நடக்கிறது
நான்கு கால்களில் எருதுகள்

ஹைக்கூ வாசிப்பின்படி முதல் இரண்டு அடிகளை வாசிக்க ‘சிக்க சிக்க’ எது நடக்கிறது? யார் நடக்கிறார்? நடக்கிறார்கள்? என்று வினா எழுகின்றது. மூன்றாவது அடியில், எருதுகள் என்று வரும்போது, உழவனின் கால்தான் சேற்றில் சிக்குகிறது எனவும் பொருள் விரியும். திருத்தப்படாத ஹைக்கூவில் (1) உழவுன், சேறு என்பதால் அவன் வயலை உழுதுகொண்டிருக்கலாம். ‘சிக்க’ என்பதால் அது ‘சேடை’யாக இருக்கலாம் என்பது உறுதியாகிறது. ‘சிக்க’ என்று ஒரு முறைமட்டுமே எழுதியிருக்கலாம். ஏன் இரண்டு முறை என்றால், ‘சிக்க’ ‘சிக்க’ என்று வரும்போது அவர் புதியவர் என்று பொருள்படவும் செய்யும்… மேலும், அவர் சலித்துப்போகாமல் மீண்டும் மீண்டும் உழுதலையும் எடுத்துக்காட்டும். இரண்டாவது அடியில் ‘நடக்கும்’ என்பது ‘நடக்கிறது’ என்று முதலில் எழுதப்பட்டது. பின்னர் உழுபவருக்கும் எருதுகளுக்கும் பொருந்துமாறு சிந்திக்க ‘நடக்கும்’ என்பது சரியெனப்பட்டது. ஹைக்கூ வாசிப்பின்படி திரும்பவும் முதலிரண்டு அடிகளை வாசித்துவிட்டு மூன்றாவது அடிக்கு வருகிறோம். ஹைக்கூவின் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்கு பெயர்ச்சொல் மூன்றாம் அடியில் அமைய வேண்டும் என்ற அறிஞர்களின் கூற்றுப்படி எருதுகள் எழுதப்பட்டது. மூன்றாவது அடியில் ‘எருதுகள்’ என்று மட்டுமே கூட வந்திருக்கலாம். பின்னர் ஏன் அந்த ‘நான்கு கால்களில்’ என்றால், அந்தப் பக்கமாய் போகும் – பார்க்கும் யாரேனும் இப்படிப் பேசிக்கொண்டு போகலாம்: “நாலு காலு இருக்கிற மாடுகளே சிக்காம நடக்குதுங்கள்… அவரைப் பாரு…” என்பதாலும், வடிவ நெருடலுக்கு இட்டுச் செல்லாத அமைப்புக்குமாக சேர்த்தே எழுதப்பட்டது. இறுதியில் உழவன் என்று ஏன் முதலிலேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்று எண்ணி, இறுதியாக கொஞ்சம் மாற்றி (2வது) – ஹைக்கூவாக மாற்றம் செய்யப்பட்டது. இப்போது ஒன்று, இரண்டிற்கும் மேற்பட்ட பொருளைத் தரும் ஹைக்கூவாக மாறியிருக்கிறதை கவனிக்கவும்.  

முதலில் இப்படி எழுதப்பட்டது:
(1) உழவனின் கால்
சேற்றில் சிக்க சிக்க… நடக்கிறது
நான்கு கால்களில் எருதுகள்

முடிவாக:
(2) சேற்றில் கால்கள்
சிக்க சிக்க… நடக்கும்
எருதுகள்

மே 14, 2016

எம்.ஜி.ஆர் செத்துட்டாரா? - தேர்தல் சென்ரியுக்கள்

எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?
என்ன தம்பி சொல்ற?
அப்ப ரட்ட எல சின்னம் இருக்கே?

தொழுவத்தில் மாடுகள்
அம்மா அம்மா… சட்டசபையில்
தமிழக MLAக்கள்

எங்கிருந்து வந்தது
இத்தனை கோடி
லட்சக்கணக்கான தொண்டர்கள்

ஒருவர்கூட சிறையில்லை 
தேர்தலுக்கு யாரும் கொடுக்கவில்லை
யாரும் பணம் பெறவில்லை!

ஐந்தாண்டுகள் எட்டிப்பாராதவர்
வீட்டுக்கு வீடு பொய்யாய்…
உங்கள் வீட்டுப் பிள்ளை

மின்சாரம் துண்டிப்பு
வீடுவீடாய் பணம்; திருட்டு
வேட்பாளரின் தொண்டன்

தன் பணம் - கட்சி பணத்தில்
கொடுப்பதுதான் இலவசம்
நீதிமன்றம் தீர்ப்பு தருமா?

ஓட்டுக்குப் பணம்; கொடுப்போர்
வாங்குவோரை காட்டிகொடுக்க மாட்டோம்
எதிர் எதிர் கட்சியினர் சத்தியம்!

மே 07, 2016

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23

”பசி வேளை
நாலுபேருக்கு நிறைந்தது
கூட்டாஞ்சோறு” – ம.ரமேஷ்.

திருத்தத்திற்கு முன்னர் இப்படி எழுதப்பட்டது:
கொஞ்சம் சோறு; பசி வேளையில்
நான்கு பேருக்கு மனம் நிறைந்தது
கூட்டாஞ்சோறு

-    மூன்றாம் அடியில் கூட்டாஞ்சோறு என்று வந்துவிட்டதால் முதல் அடியில் வரும் கொஞ்சம் சோறு என்பது தேவையற்ற சொல்லாகப்பட்டது. பசி வேளையில் என்பது பசி வேளை என்று மாற்றப்பட்டது. வேளையில் என்பது உரைநடை வார்த்தை. வேளை என்பது ஹைக்கூ வார்த்தை. மனம் என்ற வார்த்தை நால்வருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. யாரேனும் ஒருவருக்காவது இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று இருந்திருக்கும். அதனால் மனம் என்ற சொல் நீக்கப்பட்டது. நீக்கப்பட்டதால் இன்னும் அதன் பொருள் விரிகின்றது. நால்வருக்கும் நிறைந்தது என்றால்? கொஞ்சம் சோறு எப்படி நிறைத்திருக்கும்? மனம், மகிழ்ச்சி, விளையாடும் சுதந்திரம் என்பவை நிறைந்திருக்கும் என்பதைக் குறிப்பால் சுட்டும் விதமாக அமையும். நான்கு பேருக்கு என்பது நாலுபேருக்கு என்று மாற்றப்பட்டது. நான்கு பேர் என்றால் நால்வரைமட்டுமே குறிக்கும்… நாலு பேர் என்றால் நான்கு என்ற எண்ணிக்கையைமட்டுமே குறிக்காது இன்னும் சிலரையும் சேர்த்துக் குறிக்குதானே. அந்த நாலுபேரு குழந்தைகளா? வளர்ந்தவர்களா? என்ற வினாவிற்கு மூன்றாம் அடி பதில் சொல்கிறது. கூட்டாஞ்சோறு என்பதால் சிறுவர்கள்தான் என்று. ஒரு மூன்று அடி ஹைக்கூவுக்குள் இவ்வளவு இருக்க வேண்டுமா என்றால்? இருந்தால் நல்லது.