அக்டோபர் 26, 2015

சிவப்புத்தும்பியொன்று...

சிவப்புத்தும்பியொன்று
பசுமையாகப் பறக்கிறது…
புல்நுழைத்தக் குறும்பால்!

அக்டோபர் 20, 2015

செத்துத் தொலை… (பெண்ணியம்)

“நீ இல்லைன்னா செத்துடுவேன்.”
“செத்துத் தொலை…
உன்ன கட்டிக்கிட்டு
தினம் தினம் சாவுவதை விட
நீ ஒரேயடியாகச் செத்துத் தொலை…
ஒரு வாரமோ பத்து நாளோ
அழுது தொலைச்சிட்டு போயிடறேன்”
 செல்போனில் சப்தமாகப் பேசிவிட்டு
தேம்பி… தேம்பி…
அழுது… அழுது… அழுது…
கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
மறுமுனையில் பேசியவன்
நண்பர்களோடு மதுபானக் கடைக்குச் சென்றான்.


அக்டோபர் 14, 2015

ஆளும் கட்சி... கூட்டம் (ஹைபுன்)

ம. ரமேஷ் ஹைபுன்:

ஆளும் கட்சி ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல்வாதிகள் கட்அவுட்டுகள். இளைஞர்களின் வரவேற்பு பேனர்கள். கூடவே கோயில் சாமியுடன் சாமியார்களின் பேனர்கள்… கூட்டம் கூடிவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம். குடமுழக்காம். மறுநாள் செய்தித்தாளில் கருடன் கோயிலை மூன்றுமுறை சுற்றிச் சென்றது என்று எழுதியிருந்தார்கள்!
  
இரையைத் தேடிய கருடன்
வேகமாய்க் கீழ் இறங்குகிறது…
குடமுழக்கு மக்கள் கூட்டம்

(நன்றி - மகிழன் மறைக்காடு அரவிந்தன் அவர்களுக்கு. கோயிலில் விஷேசங்கள் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டுச் சென்றது என்று செய்தித்தாள்களில் அடிக்கடி படித்திருக்கிறேன். ஏன் அப்படி என்று தெரியாமல் இருந்தேன். மகிழ்நன் மறைக்காடு அவர்கள்தான் அது பக்திக்காக வரவில்லை. மக்களின் தலைகளை அது இரை என்று கருதிதான் கீழே வருகிறது என்று தெளிவுபடுத்தினார்.)

அக்டோபர் 12, 2015

நாய்கள்

இதுதான் ஹைக்கூ - 8

எச்சில் இலையை விட்டு
கலையும் காகங்கள்
தூரத்தில் ஓடிவரும் நாய் - பட்டியூர் செந்தில்குமார்



எச்சில் இலையை விட்டு - கலையும் காகங்கள் – எந்த எச்சில் இலை? எந்த இடத்தில் இருக்கும் எச்சில் இலை என்றும் கலையும் காகங்கள் என்பது எச்சில் இலையில் என்ன இருந்தது… அது சுவையாக இருந்ததா? இல்லையா? முழுவதும் சாப்பிட்டு விட்டு கலைகின்றனவா? எச்சில் இலையில் இருப்பது பிடிக்காமல் கலைகின்றனவா? என்று பொருள் விரியும்… கடைசி வரி படிக்கும்போது அந்த நாய் வருவதால் பயந்து பறக்கிறது – அந்த நாய் அந்த எச்சில் இலைக்குதான் வருகிறதா? எதேச்சையாக அந்தப் பக்கம் வருகிறதா என்று பொருள் விரியும்… - கவியருவி ம. ரமேஷ்.

அக்டோபர் 10, 2015

போட நீயும் உன் காதலும்...


இதுதான் ஹைக்கூ - 8

ஹைக்கூவா? சென்ரியுவா? - பார்ப்போம்

தங்க மோதிரம்
பித்தளை ஆனது
காதலி ஜூட். - (நன்றி) -Baalamirdhan Murthy

சென்ரியுதான்.. ஏன் பித்தளையானது என்ற சிந்தனையை முதலிரண்டு அடிகள் சிந்திக்க வைக்கிறது. வரதட்சணை அதிகம் கேட்டதால் இப்படி திருட்டுத்தனமாக போட வேண்டியிருந்ததா? அல்லது சாலையில் கிடந்த அந்த மோதிரத்தை தங்கமென்று எண்ணி எடுத்தவருக்குப் பித்தனையானதா? இப்படிப் பொருள் விரிய...விரிய…. சரி அப்படி என்னத்தான் பித்தளையானது என்று பார்க்க 3 அடியைப் படிக்கிறோம்.

கடைசி வரி ஹைக்கூவுக்கான திருப்பமாக (சென்ரியுக்கும் இந்த திருப்பம் - ஹைக்கூ அமைப்பு முறை பொருந்தும்) அமைந்திருக்கிறது. காதலி ஏன் ஜூட் என்ற சிந்தனைக்குப் பல பொருள் விரியலாம்.

இப்போதும் எப்போதும் காதல் எல்லாம் புனிதம் - ஒருத்தரையொருத்தரே நினைத்திருப்பது என்ற சப்பைக்கட்டெல்லாம் உடைய... இன்றைய நவீன காதலின் பிரச்சினையை- பழகிய பின் பிடிக்காமை, காமம் தீர்ந்ததும் விலகுதல் - பிறரைப் பிடித்துப்போதல் - பெற்றோர் ஏற்காமை - அல்லது அல்லது அல்லது என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த 3 வது அடிக்கு. இன்றைய காதலர்களின் பிரச்சினையைப் பேசுவதால் இது சென்ரியு என்று எடுத்துக்கொள்வோம்.

அக்டோபர் 09, 2015

இதுதான் ஹைக்கூ - 7

"ஹைக்கூ பயிற்சிக்குரிய சிறு விளக்கம்..!" - நன்றி - கொள்ளிடம் காமராஜ்

இரா. கவிமலை, து. வெள்ளாளவிடுதி.
கேள்வி: ஐயா, ஒரு சிறு சந்தேகம்:
"விவவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள் கசாப்பு கடையில்..!"

இது ஹைக்கூவாக ரசிக்கப்படுமா?

இதற்கு என் விளக்கம்:-
இச் சொற்றொடரில் ஹைக்கூவிற்கான மையக்கரு உள்ளது..!
ஆனால் ஹைக்கூ வடிவம் இல்லை..!

பயிற்சி விளக்கம்:-
பொதுவாக ஒரு சிறந்த ஹைக்கூ என்பது மூன்று காட்சிகளை வாசகனுக்கு உணர்த்த வேண்டும்..! முதல் இரண்டு காட்சிகளில் மேலோட்மாகவும் மூன்றாவது காட்சியில் (அதாவது இறுதி வரியில்) ஆழமாகவும் மிகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டும்..!

இப்பொழுது அன்புத்தோழமைக் கவிச் சகோ இரா. கவிமலையின் ஹைக்கூவைக் காண்போம்..!

"விவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள்
கசாப்பு கடையில்..!"

வார்த்தைகளை வடிவமைக்கும் முயற்சியில் கொஞ்சமும் தளரக் கூடாது..!

இன்னும் சரியான வார்த்தைகளைச் சேர்க்கும் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டீர்களென்றால் தங்களின் ஹைக்கூ முயற்சியில் வெற்றி கிட்டும்..!

உழுதமாடுகள் - எருதுகள் அல்லது மாடுகள்.
கசாப்பு கடையில் இறைச்சி விற்கப்படுகின்றது.

இப்பொழுது பாருங்கள்:

அமோக விற்பனை
மாட்டிறைச்சி
கசாப்பு கடையில்..!
இது முதல் நிலைப் பயிற்சி..!

இரண்டாவதாக.!
மாட்டிறைச்சி
அமோக விற்பனை
கசாப்பு கடையில்..!

மூன்றாவது (இறுதி) இறுதி நிலை..!
கசாப்பு கடையில்
அமோக விற்பனை
மாட்டிறைச்சி..!
இதுபோன்று புதிதாக எழுதுபவர்கள் முயற்சியுங்கள்..! என் இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்..!
என்றும் அன்புடன்:-
கொள்ளிடம் காமராஜ்,
திருச்சிராப்பள்ளி - 621 216.

அக்டோபர் 08, 2015

இதுதான் ஹைக்கூ -6

நன்றி - காவனூர் சீனிவாசன்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க. -மகிழ்நன் மறைக்காடு.

இதை இரண்டு மூன்று முறை வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.
ஒவ்வொரு வரியாய் மனதிற்குள் வாசித்து நிறுத்தி அடுத்த வரிக்கு செல்லுங்கள்.

இலைகள் உதிர்த்தமரம்...
அடுத்தவரி வினாக்குறியீடுடன்-
வந்தமருமா பறவைகள் ? ..
பொருள் மிகச்சாதரணமாக உள்ளதா?
ஒரு சாதாரணவரிபோல் தொடர்கிறதா?
ஏதேனும் சொல்ல வருகிறதா?
இலைகள் உதிர்த்தமரம் - என்பது ஒரு காட்சிப்பதிவை உணர்த்தவருகிறதென்றால் அடுத்தவரி வினாக்குறி மிகச்சரியாக பொருந்தவேண்டும். நீங்கள் மூன்றாவது வரிக்கு செல்லும்முன் நீங்கள் யூகிப்பதை கவிஞர் தரும்வரி இறுதியில் மாற்றிப்போட்டு ஒரு அதிர்வை அல்லது சிறு சலனத்தை நிகழ்த்தவேண்டும்.
இப்போது முதல் இரண்டுவரிகளை வாசியுங்கள்.
முதல்வரி வாசித்ததும் கொஞ்சம் இடைவெளி கொடுத்து பொறுமையாக..பொறுமையாக..

இலைகள் உதிர்க்கும் மரம்
வந்தமருமா பறவைகள் ?..

உங்களுக்குள் மூன்றாவது வரி தோன்றவேண்டும்.அதேவரி கவிஞருக்கும் வாசகனாய் மாறியிருந்தால் தோன்றும். வாசகனாய் அல்லாமல் கவிஞனாய் நின்று அதை கவிஞன் மாற்றிப்போடவேண்டும்.

மாற்றிப்போடும் தன்மை கொண்டதாய் இருந்தால் அது ஹைக்கூ ஆகிறது. மிகச்சாதரணமாக இருந்தால் அது கவித்துவமிக்கவரிகளாய் புதுக்கவிதை வகைமையிலோ அல்லது நவீனத்தன்மை வடிவிலோ உட்படுகிறது.
மூன்றுவரிகள் கொண்ட உரைநடை பலர் ஹைக்கூவாகவே கருதிக்கொள்வதால் ஹைக்கூக்கள் அடையாளமிழக்கின்றன.
சரி இப்போது மூன்றாவது வரிக்கு வருவோம்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள் ? -என்றவினாக்குறியோடு இரண்டுவரிகள் கவிஞர் முடித்துள்ளார்.

என்ன காடசிப்பதிவை மூன்றாவது வரி மாற்றிப்போடும் ? வாசகனைவிட இங்குதான் கவிஞன் அதிகம் நுட்பமாகதீவிரமாகயோசிக்கவேண்டும்.
அமரும் அல்லது அமராது எனசாதரணமாக பதில் தந்துவிடக்கூடியதாகஇது அமைந்தால் இது ஒரு உரைநடைத்தன்மை கொண்டதாய் ஆகிவிடும். திருப்பம் இல்லாமல் போனால் இதை ஹைக்கூவாக ஏற்கவும் இயலாது.
மேலும் அழகாக்க - என்றவரியை இறுதியில் வைத்துள்ளார்.
இப்போது சேர்த்து படியுங்கள்:
இலைகள் உதிர்த்தமரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க.
-மூன்றாவது வரி ஒரு சாதாரண திருப்பத்தை தந்து ஒரு கவித்துவத்தைமட்டும் உணர்த்திப்போகிற ஒரு தொடர்வரியாகத்தானே இருக்கிறது?

என்னஅதிர்வை இது தருகிறது?
இதே வார்த்தைகள்; இதே மூன்று வரிகள் கொஞ்சம் நுட்பமாய் சிந்தித்தால் ஒரு அதிர்வை சிறிதேனும் தரும்படி அமைத்து ஹைக்கூவாக தரலாம்.
எழுதி முடித்தபின் கொஞ்சம் மாற்றிப்போட்டு மாற்றிப்போட்டு சிந்தியுங்கள்.
முதல் வரியை இறுதியில் போட்டு இதே கவிதையை வாசித்துப் பாருங்கள் :
' வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க
இலைகள் உதிர்த்தமரம் '
இப்போது இது ஹைக்கூவாக நன்கு அடையாளம் காட்டலாம்.

எழுதிய உங்கள் கவிதைகளை மீளவாசித்துப்பார்த்து ஹைக்கூவாக அடையாளம் காணுங்கள் .

- காவனூர் சீனிவாசன்.

அக்டோபர் 07, 2015

முதல் முத்தம்!

காதல் கோட்டை
சரிய ஆரம்பிக்கிறது…
முதல் முத்தம்

ஏற்றத்தில் அம்மா

ஏற்றத்தில் அம்மா
கமலையில் நீரிரைக்கும் அப்பா
பாத்திகள் திருப்பும் சிறுவன் – ம. ரமேஷ்


(இதை வாசிக்க – சிந்திக்க…  பையன் பள்ளிக்குப் போவானா? அல்லது இங்கேயே வேலை செய்வானா.. இவன் யார்? கூலியா? அல்லது மகனா? என்கிற பல கேள்விகள் எழும்... கமலையில் நீர் இரைத்தால்தானே ஏற்றத்தில் அம்மாவால் நீரிரைக்க முடியும்? அப்படியென்றால் கமலையில் நீரிரைக்கும் அப்பா என்ற இரண்டாம் அடி முதலடியாகத்தானே வரவேண்டும்? – வர தேவையில்லை. யாரோ காணும் காட்சி அது. முதலில் ஏற்றமிரைக்கும் அம்மாவைக் கண்டிருக்கலாம். பின்னர் அப்பாவைக் கண்டிருக்கலாம். மேட்டில்தானே இருக்கும் ஏற்றம். அதனாலும் இருக்கலாம். பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்ற சிந்தனையும் – ஆண்களின் கண்ணில் முதலாவதாகப்படுவது பெண்ணாகத்தானே என்ற உளவியலும் காரணமாகலாம். இதை எழுதியவர் ஆண் என்பதால் இது சரியாகவும் இருக்கலாம். சரி பார்த்தவர் யாராக இருக்கும்? உங்கள் சிந்தனை மேலும் விரிவடையட்டும்… 

அக்டோபர் 06, 2015

நாமும் தீவிரவாதிகளே...!

தீவிரவாதிகளுக்குக் குண்டுகள்
நமக்கு விளையாட்டில் எதிர்ப்பைக் காட்ட
வாட்டர் கேன்கள்

அக்டோபர் 03, 2015

டாஸ்மாக் மது விலை

சம்பளதாரர்களுக்கு அதிக விலை
கூலிகளுக்கு குறைவாக விலை

கொண்டுவருமா டாஸ்மாக் மது விலை