ஜூன் 27, 2012

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் (கஸல்கள்)


காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்
இயற்கை என்றானபோதும்
காதலில்
தோல்விகள் என்பது
செயற்கைதான்

நாம்
நம் காதலை
தோல்விக்குப் பிறகுதான்
இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டு
கவனமுடன் நடக்கிறோம்

கனவுகள்
எப்படியும் ஏமாற்றிவிட்டு
கலைந்துவிடுகிறது

சிலருக்குக்
கனவுகள் நினைவுகளாகிறது
நினைவுகள் கனவுகளாகிறது

இன்று தேவையில்லாமல்
யார் யாருக்கோ
விட்டுக்கொடுக்கிறோம்
அன்று விட்டுக்கொடுக்காததால்
பிரிந்து தவித்து அழுகிறோம்

ஜூன் 16, 2012

கடவுளும்தான் ஏமாற்றிவிட்டான் (கஸல்)


நான்
கண் கலங்கி நிற்கும்போதும்
உனக்கு
அதுவும் அழகென்றுக்கூறி
என் முகத்தில் வெட்கச் சிரிப்பைக்
கொண்டு வந்தவன் நீ

காதல்
துரோகங்களுடன் கூடிய
பாழுங் கிணறென்று தெரிந்தே
விழுந்தோம் - விழுகின்றோம்


காதலியே!
நீ மட்டும்தான்
என்னை
ஏமாற்றிச் சென்றுவிட்டாய் என்று
அழுது புலம்பிக்கொண்டிருக்காதே
அந்தக் கடவுளும்தான்
என்னை ஏமாற்றி இருப்பானென்று
நிம்மதி கொள்

ஜூன் 13, 2012

காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)


உன் அழகில்
என் உடல் 
சிலிர்த்துக்கொண்டு
காதல் கொண்டுவிட்டது

நான்
உன்னைக் காணும்
ஒவ்வொரு முறையும்
காதல்
இந்த உலகத்தின்
சாபம் என்றுதான்
நினைத்துக்கொள்கிறேன்

காதல் என்பது
இறைவனால் சபிக்கப்பட்ட
எல்லோருக்குமான சாபம்
சிலருக்குப் பலிக்கிறது
சிலருக்குப் பலிக்காமல்போகிறது

ஜூன் 11, 2012

கண்ணீர்கூட அழகென்றாய் (கஸல்)

குழந்தை
ஏன் அழுகிறதென்று
தாய்க்கே தெரியாததுபோல
நான்
அழுவதற்கானக் காரணமும்
காதலுக்குத் தெரியாமல் போய்விட்டது

எனக்குக் கண்ணீர்கூட
அழகென்றாய்
இன்று
அழ வைத்தே பார்த்துக்கொண்டிருக்கிறாய்

நினைவுகள்
மறந்துபோயிருக்கும் என்றெண்ணி
என்னை நீயும்
உன்னை நானும்
தவறாக நினைத்துக்கொண்டு
ஒருவரையொருவர்
நினைத்துக்கொண்டே இருப்போம்

ஜூன் 03, 2012

நான் வாழ்வதற்கான வரம் (கஸல்கள்)

இறைவா
எனக்கான வேண்டுதலை
நீ
எந்த நாளிலும்
நிறைவேற்றப்போவதில்லை தானே?

வயதுகள் வளர்கின்றது
நாம்
நம் காதலால்
இளமைக்குத் திரும்பி
குழந்தையாகிக் கொண்டிருக்கிறோம்

வழக்கம்போல்
நீ
விடைபெற்றுச் செல்கிறாய்
நீ வரும் கனவு
பாதியில் கலைந்துவிடுவதைப்போல

பூங்காவில்
என் பக்கத்தில்
அமர்ந்துபேச மறுப்பவள் நீ...
என்னை வந்து
கொஞ்சி விட்டுச் செல்லும்
உன் நினைவுகளைக்
கொஞ்சம் கட்டுப்படுத்தி வை

தினம் தினம்
உன்னைக் காண ஆசைப்படும்
என் மனத்திடம்
நீ
ஒவ்வொரு முறையும்
ஏதோ ஒன்றைச் சொல்லி
ஏமாற்றிவிட்டுப் போகிறாய்

என் நினைவுகளை
நிராகரிக்கும் நீ
கனவுகளை மட்டும்
ஏற்றுக்கொண்டு
உயிர் வாழ்வது ஏனோ?

நிம்மதியின்றித்
தவித்துக்கொண்டிருக்கும்போது
இறைவனிடம் கேட்டும் கிடைக்காத
எளிய வரத்தை
நீ என்னைப் பார்க்க
வந்து செல்லும்
அந்த ஒருநாள்தான்
நான் வாழ்வதற்கான
வரத்தைத் தந்துவிட்டுப் போகிறது