செப்டம்பர் 24, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாக ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதோ? அதற்காக வருந்துவதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா?  

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

-       கவியருவி ம.ரமேஷ்

செப்டம்பர் 22, 2014

பாட்டியின் தவிப்பு

மேளச் சத்தம்
தகவல் போய் சேரவில்லை
கொல்லையில் தவிக்கும் பாட்டி

செப்டம்பர் 18, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 21

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!
முதல் இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஐயப்ப பக்தர்கள், தினம் உறங்கி எழுகிறார்கள் என்பதில் என்ன செய்தி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறது. தப்பு என்று நாம் நினைக்கும் செயல்களை செய்யாதவர்களாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு இருக்கும்போது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் பக்தர்கள் எவ்வாறு, எப்படி, எந்த மனநினைவில், மகிழ்ச்சியில், துன்பத்தில் எழுகிறார்கள் என்று முதலிரண்டு அடிகள் விரியும். மூன்றாவது அடியைப் படிக்கிறோம். பிள்ளையார் கோயில் என்று இருக்கிறது. என்ன வியப்பு பாருங்கள். ஐயப்ப பக்தர்கள் தினம் தினம் உறங்கி எழுவது பிள்ளையார் கோயில்! கடவுளின் உருவங்கள் வெவ்வேறு என்றாலும் கடவுள் ஒருவர்தானே!

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!

-       கவியருவி ம.ரமேஷ்

செப்டம்பர் 17, 2014

காகம் - காக்கை

மாடிவீட்டில் அமர்ந்த காக்கை
பசியில் கரைந்துகொண்டிருந்தது
குடிசையில் உண்டு பறக்கும் காக்கை…

செப்டம்பர் 15, 2014

முள்மேல் வண்டு

முள்மேல் அமர்ந்திருக்கிறது
அதிகாலையில் வண்டு
பூக்களில் பனித்துளி

செப்டம்பர் 08, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 20

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.

யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன், அவளை கை விட்டுவிட்டானா? அவனோடு வாழ இவளுக்குப் பிடிக்கவில்லையா? எதுவொன்றும் தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் இந்த ஹைக்கூ (இது ஹைக்கூ இல்லை, இது சென்ரியூ)வின் சிறப்பு. எனக்கு என்னவோ… ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எல்லோருக்குள்ளும் இருக்கும் மன நிலையில் அவள் பெற்றோர்களைப் பார்க்கவோ அல்லது பெற்றோர்கள் சமாதானம் அடைந்துவிட்டதால் அவள் வீடு வந்திருப்பாளோ என்றுதான் தோன்றுகிறது. சரி… அவன் ஏன் அவளுடன் வரவில்லை? உங்களுக்கு என்னென்னவோ தோன்றலாம்…
நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.
- கவியருவி ம.ரமேஷ்

செப்டம்பர் 04, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19

சுடுமணல்; மரமேதும் இல்லை
குயிலின் மெல்லிசை!
புல்லாங்குழல் விற்பவன்.

முதல் இரண்டு அடிகளில் சுடுமணல், மரம் இல்லை, குயிலின் மெல்லிசையை படிக்கிறோம். சுடுமணல் என்பதால் ஆறு நினைவுக்கு வருகிறது. மரம் ஏதும் இல்லை என்பதால் நிழல் இல்லை அதனால் மணல் சூடாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறோம். மரம் இல்லை என்றால் குயிலின் மெல்லிசை எங்கிருந்து வந்திருக்கும்? அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம்.  ‘புல்லாங்குழல் விற்பவன்’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன? ஆகாதுதானே? இப்படிச் சிந்தித்து ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்ப்போம். (முதல் அடியில் ‘சுடுமணல்’ வலிந்துதான் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடியின் பொருள் சிறக்க. சுடுமணலில் – நண்பகல் வேலையிலும் அவன் கடற்கரையில் உழைப்பதை எடுத்துக்காட்ட.)