டிசம்பர் 22, 2015

ஹைக்கூவில் யாத்திகனின் பயணம்...

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம். –

யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.

டிசம்பர் 19, 2015

https://www.facebook.com/groups/TamilHaikuClub/

எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு - ந.க.துறைவன்

VathilaiPraba  அவர்களின் விளக்கம்
பல்வேறு விரிவுகளை விழிகளில் விரியச் செய்யும் கவிதையிது. முதல் வரியின் முதல் வார்த்தையை நீக்கி
"காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
என்று வாசிக்கும்போது கவிதை ஒரு வெறுமையை சுட்டுகிறது. யாரும் வராத சூழலில் இருக்கிறது இந்த பெஞ்சு.. பயன்பாடற்ற நிலையில் இருக்கிறதா எனவும் தோன்றுகிறது. விட்டுச் சென்ற உரையாடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? பூக்கள் சொரிந்து கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? ஒரு இணக்கமான சூழலை இந்த பெஞ்சுகள் தரும்தான்.. அவர்களுக்கான காத்திருத்தல்தான் இந்த காலியான பெஞ்சு.. வாருங்கள் நாமும் இந்த பெஞ்சில் உட்காரலாம்.. கவிதைகள் கூட நம்மில் .உரையாடலாம்..
ஆனால், கவிஞர்.. இப்படி எழுதுகிறார்...
"எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
முதல் வரியில் எல்லோருக்காகவும் என எழுதுகிறார்.. இந்த காலி பெஞ்சுக்குக்கூட ஒரு தாயன்பு இருக்கிறது பாருங்கள்... வெறுமையோ, தனிமையோ, குறியீடாக பெஞ்சு .இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். அமரலாம்.
- நன்றி வதிலைபிரபா.

டிசம்பர் 16, 2015

டாஸ்மாக் லோடு...

விதிமீறி நிறுத்திய வாகனங்கள்
அபராதம் வசூலித்தார்கள்; 10 அடி தள்ளி
பாதுகாப்போடு டாஸ்மாக் லோடு இறக்கம்

டிசம்பர் 11, 2015

டாஸ்மாக்

காலை 10 மணி வரையிலும்
எரியும் விளக்குகள்
டாஸ்மாக்  முன்பு

டிசம்பர் 06, 2015

அம்மா படமும் கட்சி சின்னமும்

இருவர் நிவாரணம் கொடுக்க
நான்கு பேர் கைகளில்...

அம்மா படமும் கட்சி சின்னமும்.

டிசம்பர் 03, 2015

சென்னை - வெள்ளக்காடு…

மழை… வெள்ளம்… மழை வெள்ளம்… எத்தனை சண்டை… எத்தனை எத்தனை எதிர் பேச்சு… என்று இருந்தவர்கள்தான் இன்று… முட்டியளவு தண்ணீர் வீட்டிற்குள் நுழைந்ததும்… முகம்பார்த்து பேசாத எதிர்வீட்டார்கள் வா… வந்துவிடு என் வீட்டிற்கு… என பகை… பேச்சு… எல்லாவற்றையும் மறந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்… பலரும் பல நிலைகளில் உயிரையே காத்துவருகிறார்கள்… சாதி… மதம்… இனம் என்று பாராமல்… மனிதநேயம் செத்துவிட வில்லை… மழைக்கு நன்றியென்றாலும் மழையே நின்றுவிடு!

அரசு எவ்வளவு செய்யும்!
நின்று கொல்லும் தெய்வம்!
மனிதனுக்கு மனிதன்தான் உயிர்.

டிசம்பர் 02, 2015

தண்ணியில்லா காடு...

ப்ளிஸ் சார்… ப்ளிஸ் சார்…
தண்ணியில்லா காடுன்னு மிரட்டுவீங்களே…
ப்ளிஸ்… மாத்திடுங்க சார்…

டிசம்பர் 01, 2015

ஏரிகள் உடைப்பு

ஏரிகள் உடைப்பு
வீணாகும் பல டிஎம்சி தண்ணீர்
மழைநீர் சேகரிப்பு தொட்டி?

நவம்பர் 23, 2015

ஆளும் கட்சிக்கொடியின் வண்ணம்

மணல் கொள்ளைபோகும்
வண்டி மாடுகளின் கொம்புகளில்…
ஆளும் கட்சிக்கொடியின் வண்ணம்

நவம்பர் 19, 2015

‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’

குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு சொல்லியதைக் கேட்டு… பார்த்து… குடும்பத்துக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்தாள்! ஒரு நாள் கணவனுக்குத் தெரியவர… ‘புருசனோட படுத்தாக்கூடத்தான் அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி விவாகரத்துப் பெற்று மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான். பிறிதொரு நாளில் மனைவியோடும் 3 குழந்தைகளோடும் அவனை ஒருநாள் பார்க்க… 40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!

நவம்பர் 18, 2015

முதிர்கன்னியாகியபின் திருமணம்...

கல்யாணம் பண்ணிக்கிட்டா
சுதந்திரம் போயிடுமுன்னு
பேசி… பேசி... பேசியே…
முதிர்கன்னியாகியபின்
திருமணம் செய்து கொண்டாள்!
திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது
அவளுக்கு…
மூன்று முடிச்சியில்தான்
சுதந்திரம் இருக்கிறதென்று!

பீடு அன்று... என்று?

“பீடு அன்று” என்றவள்
எரிக்க மட்டும் அழைத்தாள்

காய்கதிர்ச் செல்வனே…!

நவம்பர் 04, 2015

இலையுதிர் காலம் – முடிவு

நன்றி - ஹைக்கூ உலகம்
போட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவு:

S Naga Lingam
1.இலையுதிர்கால/
மரக்கிளையில் அசைந்தாடுகிறது/
ஏழைச்சிறுவனின் கிழிந்த சட்டை

2.குளிர் காற்றில்/
நடுங்குகிறது பறவைகள்/
இலையுதிர்கால மரத்தில் கூடு

3.மாலை நிலவொளியில்/
ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/
தூக்கணாங்குருவி கூடு

4.நீண்ட இரவு/
ஆனந்தம் பொங்குகிறது/
கரகாட்ட நிகழ்ச்சி

5.சோளக்கொல்லையோரம்/
சாய்ந்துகிடக்கிறது/
பாட்டியின் ஊன்றுகோல்
---
முல்லை நாச்சியார்
1.பனிமூட்ட இரவினில்/
இலையுதிர் காலத் திருவிழா/
சில்வண்டுகளின் ரீங்காரம்

2.கல்லறையில் மலர்ச்செண்டு/
அனைத்து ஆன்மாக்கள் திருவிழா/
பறவையின் சிறகொலி

3.நொருங்கப்போவது தெரியாமல்/
பழுக்கத் தொடங்கும் இலைகளில்/
முசுறுக் கூண்டு

4.இலையுதிர்காலத் தனிமை/
இலையுதிர்ந்த மரக்கூட்டில்/
இறந்த காகம்

5.வாடகைக்கு இடந்தேவை/
மரக்கீழ் பாடசாலை மாணவர்க்கு/
இலையுதிர் காலம்
---
மகிழ்நன் மறைக்காடு
1. மாட்டுக்கொட்டகையில் கொசுக்கள் /
சுற்றிச் சுற்றி வருகின்றன /
விற்ற பசுவின் நினைவுகள்

2. பூவுதிர்த்த காம்புகளில்/
மீண்டும் அரும்பும் மொக்குகள்/
அதிகாலைப் பனித்துளிகள்

3. வெள்ளை நிறப் பூக்கள் /
நெல்வயல் முழுதும் பூத்திருந்தது /
கொக்குகளின் கூட்டம்

4.உதிர்ந்த சருகுகளின் கீழ்/
பதுங்கும் பூச்சியினம்/
இலையுதிர் கால மழை

5.இருளடையும் மலை /
அழகாக்கிக் காட்டும் /
எங்கிருந்தோ வரும் ஒளி
https://www.facebook.com/groups/haikusenryuworld/

அக்டோபர் 26, 2015

சிவப்புத்தும்பியொன்று...

சிவப்புத்தும்பியொன்று
பசுமையாகப் பறக்கிறது…
புல்நுழைத்தக் குறும்பால்!

அக்டோபர் 20, 2015

செத்துத் தொலை… (பெண்ணியம்)

“நீ இல்லைன்னா செத்துடுவேன்.”
“செத்துத் தொலை…
உன்ன கட்டிக்கிட்டு
தினம் தினம் சாவுவதை விட
நீ ஒரேயடியாகச் செத்துத் தொலை…
ஒரு வாரமோ பத்து நாளோ
அழுது தொலைச்சிட்டு போயிடறேன்”
 செல்போனில் சப்தமாகப் பேசிவிட்டு
தேம்பி… தேம்பி…
அழுது… அழுது… அழுது…
கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
மறுமுனையில் பேசியவன்
நண்பர்களோடு மதுபானக் கடைக்குச் சென்றான்.


அக்டோபர் 14, 2015

ஆளும் கட்சி... கூட்டம் (ஹைபுன்)

ம. ரமேஷ் ஹைபுன்:

ஆளும் கட்சி ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல்வாதிகள் கட்அவுட்டுகள். இளைஞர்களின் வரவேற்பு பேனர்கள். கூடவே கோயில் சாமியுடன் சாமியார்களின் பேனர்கள்… கூட்டம் கூடிவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம். குடமுழக்காம். மறுநாள் செய்தித்தாளில் கருடன் கோயிலை மூன்றுமுறை சுற்றிச் சென்றது என்று எழுதியிருந்தார்கள்!
  
இரையைத் தேடிய கருடன்
வேகமாய்க் கீழ் இறங்குகிறது…
குடமுழக்கு மக்கள் கூட்டம்

(நன்றி - மகிழன் மறைக்காடு அரவிந்தன் அவர்களுக்கு. கோயிலில் விஷேசங்கள் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டுச் சென்றது என்று செய்தித்தாள்களில் அடிக்கடி படித்திருக்கிறேன். ஏன் அப்படி என்று தெரியாமல் இருந்தேன். மகிழ்நன் மறைக்காடு அவர்கள்தான் அது பக்திக்காக வரவில்லை. மக்களின் தலைகளை அது இரை என்று கருதிதான் கீழே வருகிறது என்று தெளிவுபடுத்தினார்.)

அக்டோபர் 12, 2015

நாய்கள்

இதுதான் ஹைக்கூ - 8

எச்சில் இலையை விட்டு
கலையும் காகங்கள்
தூரத்தில் ஓடிவரும் நாய் - பட்டியூர் செந்தில்குமார்



எச்சில் இலையை விட்டு - கலையும் காகங்கள் – எந்த எச்சில் இலை? எந்த இடத்தில் இருக்கும் எச்சில் இலை என்றும் கலையும் காகங்கள் என்பது எச்சில் இலையில் என்ன இருந்தது… அது சுவையாக இருந்ததா? இல்லையா? முழுவதும் சாப்பிட்டு விட்டு கலைகின்றனவா? எச்சில் இலையில் இருப்பது பிடிக்காமல் கலைகின்றனவா? என்று பொருள் விரியும்… கடைசி வரி படிக்கும்போது அந்த நாய் வருவதால் பயந்து பறக்கிறது – அந்த நாய் அந்த எச்சில் இலைக்குதான் வருகிறதா? எதேச்சையாக அந்தப் பக்கம் வருகிறதா என்று பொருள் விரியும்… - கவியருவி ம. ரமேஷ்.

அக்டோபர் 10, 2015

போட நீயும் உன் காதலும்...


இதுதான் ஹைக்கூ - 8

ஹைக்கூவா? சென்ரியுவா? - பார்ப்போம்

தங்க மோதிரம்
பித்தளை ஆனது
காதலி ஜூட். - (நன்றி) -Baalamirdhan Murthy

சென்ரியுதான்.. ஏன் பித்தளையானது என்ற சிந்தனையை முதலிரண்டு அடிகள் சிந்திக்க வைக்கிறது. வரதட்சணை அதிகம் கேட்டதால் இப்படி திருட்டுத்தனமாக போட வேண்டியிருந்ததா? அல்லது சாலையில் கிடந்த அந்த மோதிரத்தை தங்கமென்று எண்ணி எடுத்தவருக்குப் பித்தனையானதா? இப்படிப் பொருள் விரிய...விரிய…. சரி அப்படி என்னத்தான் பித்தளையானது என்று பார்க்க 3 அடியைப் படிக்கிறோம்.

கடைசி வரி ஹைக்கூவுக்கான திருப்பமாக (சென்ரியுக்கும் இந்த திருப்பம் - ஹைக்கூ அமைப்பு முறை பொருந்தும்) அமைந்திருக்கிறது. காதலி ஏன் ஜூட் என்ற சிந்தனைக்குப் பல பொருள் விரியலாம்.

இப்போதும் எப்போதும் காதல் எல்லாம் புனிதம் - ஒருத்தரையொருத்தரே நினைத்திருப்பது என்ற சப்பைக்கட்டெல்லாம் உடைய... இன்றைய நவீன காதலின் பிரச்சினையை- பழகிய பின் பிடிக்காமை, காமம் தீர்ந்ததும் விலகுதல் - பிறரைப் பிடித்துப்போதல் - பெற்றோர் ஏற்காமை - அல்லது அல்லது அல்லது என்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த 3 வது அடிக்கு. இன்றைய காதலர்களின் பிரச்சினையைப் பேசுவதால் இது சென்ரியு என்று எடுத்துக்கொள்வோம்.

அக்டோபர் 09, 2015

இதுதான் ஹைக்கூ - 7

"ஹைக்கூ பயிற்சிக்குரிய சிறு விளக்கம்..!" - நன்றி - கொள்ளிடம் காமராஜ்

இரா. கவிமலை, து. வெள்ளாளவிடுதி.
கேள்வி: ஐயா, ஒரு சிறு சந்தேகம்:
"விவவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள் கசாப்பு கடையில்..!"

இது ஹைக்கூவாக ரசிக்கப்படுமா?

இதற்கு என் விளக்கம்:-
இச் சொற்றொடரில் ஹைக்கூவிற்கான மையக்கரு உள்ளது..!
ஆனால் ஹைக்கூ வடிவம் இல்லை..!

பயிற்சி விளக்கம்:-
பொதுவாக ஒரு சிறந்த ஹைக்கூ என்பது மூன்று காட்சிகளை வாசகனுக்கு உணர்த்த வேண்டும்..! முதல் இரண்டு காட்சிகளில் மேலோட்மாகவும் மூன்றாவது காட்சியில் (அதாவது இறுதி வரியில்) ஆழமாகவும் மிகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டும்..!

இப்பொழுது அன்புத்தோழமைக் கவிச் சகோ இரா. கவிமலையின் ஹைக்கூவைக் காண்போம்..!

"விவசாயம் குறைந்து வருவதால் விலையேறின உழுத மாடுகள்
கசாப்பு கடையில்..!"

வார்த்தைகளை வடிவமைக்கும் முயற்சியில் கொஞ்சமும் தளரக் கூடாது..!

இன்னும் சரியான வார்த்தைகளைச் சேர்க்கும் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டீர்களென்றால் தங்களின் ஹைக்கூ முயற்சியில் வெற்றி கிட்டும்..!

உழுதமாடுகள் - எருதுகள் அல்லது மாடுகள்.
கசாப்பு கடையில் இறைச்சி விற்கப்படுகின்றது.

இப்பொழுது பாருங்கள்:

அமோக விற்பனை
மாட்டிறைச்சி
கசாப்பு கடையில்..!
இது முதல் நிலைப் பயிற்சி..!

இரண்டாவதாக.!
மாட்டிறைச்சி
அமோக விற்பனை
கசாப்பு கடையில்..!

மூன்றாவது (இறுதி) இறுதி நிலை..!
கசாப்பு கடையில்
அமோக விற்பனை
மாட்டிறைச்சி..!
இதுபோன்று புதிதாக எழுதுபவர்கள் முயற்சியுங்கள்..! என் இதயப்பூர்வ நல்வாழ்த்துகள்..!
என்றும் அன்புடன்:-
கொள்ளிடம் காமராஜ்,
திருச்சிராப்பள்ளி - 621 216.

அக்டோபர் 08, 2015

இதுதான் ஹைக்கூ -6

நன்றி - காவனூர் சீனிவாசன்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க. -மகிழ்நன் மறைக்காடு.

இதை இரண்டு மூன்று முறை வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.
ஒவ்வொரு வரியாய் மனதிற்குள் வாசித்து நிறுத்தி அடுத்த வரிக்கு செல்லுங்கள்.

இலைகள் உதிர்த்தமரம்...
அடுத்தவரி வினாக்குறியீடுடன்-
வந்தமருமா பறவைகள் ? ..
பொருள் மிகச்சாதரணமாக உள்ளதா?
ஒரு சாதாரணவரிபோல் தொடர்கிறதா?
ஏதேனும் சொல்ல வருகிறதா?
இலைகள் உதிர்த்தமரம் - என்பது ஒரு காட்சிப்பதிவை உணர்த்தவருகிறதென்றால் அடுத்தவரி வினாக்குறி மிகச்சரியாக பொருந்தவேண்டும். நீங்கள் மூன்றாவது வரிக்கு செல்லும்முன் நீங்கள் யூகிப்பதை கவிஞர் தரும்வரி இறுதியில் மாற்றிப்போட்டு ஒரு அதிர்வை அல்லது சிறு சலனத்தை நிகழ்த்தவேண்டும்.
இப்போது முதல் இரண்டுவரிகளை வாசியுங்கள்.
முதல்வரி வாசித்ததும் கொஞ்சம் இடைவெளி கொடுத்து பொறுமையாக..பொறுமையாக..

இலைகள் உதிர்க்கும் மரம்
வந்தமருமா பறவைகள் ?..

உங்களுக்குள் மூன்றாவது வரி தோன்றவேண்டும்.அதேவரி கவிஞருக்கும் வாசகனாய் மாறியிருந்தால் தோன்றும். வாசகனாய் அல்லாமல் கவிஞனாய் நின்று அதை கவிஞன் மாற்றிப்போடவேண்டும்.

மாற்றிப்போடும் தன்மை கொண்டதாய் இருந்தால் அது ஹைக்கூ ஆகிறது. மிகச்சாதரணமாக இருந்தால் அது கவித்துவமிக்கவரிகளாய் புதுக்கவிதை வகைமையிலோ அல்லது நவீனத்தன்மை வடிவிலோ உட்படுகிறது.
மூன்றுவரிகள் கொண்ட உரைநடை பலர் ஹைக்கூவாகவே கருதிக்கொள்வதால் ஹைக்கூக்கள் அடையாளமிழக்கின்றன.
சரி இப்போது மூன்றாவது வரிக்கு வருவோம்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள் ? -என்றவினாக்குறியோடு இரண்டுவரிகள் கவிஞர் முடித்துள்ளார்.

என்ன காடசிப்பதிவை மூன்றாவது வரி மாற்றிப்போடும் ? வாசகனைவிட இங்குதான் கவிஞன் அதிகம் நுட்பமாகதீவிரமாகயோசிக்கவேண்டும்.
அமரும் அல்லது அமராது எனசாதரணமாக பதில் தந்துவிடக்கூடியதாகஇது அமைந்தால் இது ஒரு உரைநடைத்தன்மை கொண்டதாய் ஆகிவிடும். திருப்பம் இல்லாமல் போனால் இதை ஹைக்கூவாக ஏற்கவும் இயலாது.
மேலும் அழகாக்க - என்றவரியை இறுதியில் வைத்துள்ளார்.
இப்போது சேர்த்து படியுங்கள்:
இலைகள் உதிர்த்தமரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க.
-மூன்றாவது வரி ஒரு சாதாரண திருப்பத்தை தந்து ஒரு கவித்துவத்தைமட்டும் உணர்த்திப்போகிற ஒரு தொடர்வரியாகத்தானே இருக்கிறது?

என்னஅதிர்வை இது தருகிறது?
இதே வார்த்தைகள்; இதே மூன்று வரிகள் கொஞ்சம் நுட்பமாய் சிந்தித்தால் ஒரு அதிர்வை சிறிதேனும் தரும்படி அமைத்து ஹைக்கூவாக தரலாம்.
எழுதி முடித்தபின் கொஞ்சம் மாற்றிப்போட்டு மாற்றிப்போட்டு சிந்தியுங்கள்.
முதல் வரியை இறுதியில் போட்டு இதே கவிதையை வாசித்துப் பாருங்கள் :
' வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க
இலைகள் உதிர்த்தமரம் '
இப்போது இது ஹைக்கூவாக நன்கு அடையாளம் காட்டலாம்.

எழுதிய உங்கள் கவிதைகளை மீளவாசித்துப்பார்த்து ஹைக்கூவாக அடையாளம் காணுங்கள் .

- காவனூர் சீனிவாசன்.

அக்டோபர் 07, 2015

முதல் முத்தம்!

காதல் கோட்டை
சரிய ஆரம்பிக்கிறது…
முதல் முத்தம்

ஏற்றத்தில் அம்மா

ஏற்றத்தில் அம்மா
கமலையில் நீரிரைக்கும் அப்பா
பாத்திகள் திருப்பும் சிறுவன் – ம. ரமேஷ்


(இதை வாசிக்க – சிந்திக்க…  பையன் பள்ளிக்குப் போவானா? அல்லது இங்கேயே வேலை செய்வானா.. இவன் யார்? கூலியா? அல்லது மகனா? என்கிற பல கேள்விகள் எழும்... கமலையில் நீர் இரைத்தால்தானே ஏற்றத்தில் அம்மாவால் நீரிரைக்க முடியும்? அப்படியென்றால் கமலையில் நீரிரைக்கும் அப்பா என்ற இரண்டாம் அடி முதலடியாகத்தானே வரவேண்டும்? – வர தேவையில்லை. யாரோ காணும் காட்சி அது. முதலில் ஏற்றமிரைக்கும் அம்மாவைக் கண்டிருக்கலாம். பின்னர் அப்பாவைக் கண்டிருக்கலாம். மேட்டில்தானே இருக்கும் ஏற்றம். அதனாலும் இருக்கலாம். பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்ற சிந்தனையும் – ஆண்களின் கண்ணில் முதலாவதாகப்படுவது பெண்ணாகத்தானே என்ற உளவியலும் காரணமாகலாம். இதை எழுதியவர் ஆண் என்பதால் இது சரியாகவும் இருக்கலாம். சரி பார்த்தவர் யாராக இருக்கும்? உங்கள் சிந்தனை மேலும் விரிவடையட்டும்… 

அக்டோபர் 06, 2015

நாமும் தீவிரவாதிகளே...!

தீவிரவாதிகளுக்குக் குண்டுகள்
நமக்கு விளையாட்டில் எதிர்ப்பைக் காட்ட
வாட்டர் கேன்கள்

அக்டோபர் 03, 2015

டாஸ்மாக் மது விலை

சம்பளதாரர்களுக்கு அதிக விலை
கூலிகளுக்கு குறைவாக விலை

கொண்டுவருமா டாஸ்மாக் மது விலை

செப்டம்பர் 19, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 5

ஹைக்கூவின் வெளிப்பாடு

கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்தி விடுவதில்லை. கவிதையின் மிகச் சிறிய வடிவமே, இதற்குக் காரணம் என்று கருதுதல் சரியன்று. ஹைக்கூ முழுப்பொருளையும் வெளியிட விரும்புவதில்லை என்பதே உண்மை.

“கருத்துப் பொருண்மையின் அளவில் எழுபது அல்லது எண்பது விழுக்காட்டை வெளியிடும் ஹைக்கூ நன்று. ஐம்பதிலிருந்து அறுவது விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் ஹைக்கூ மிக விழுமியது.” – என்று ஆர்தர் இ. கிறிஸ்டி தொகுத்த நூல் கூறுகிறது.

மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு

இதில் உள்ள இயற்கைப் பின்னணி, நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஓடும் மேகங்களால் ஏற்படும் கோடை மழை; இரவு நேரம்; மழையின் செல்வாக்குச் சிறிது நேரத்திற்கே! விடை பெற்றுச் செல்லும் மழையினால், மீண்டும் சந்திரன் வானில் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாகப் புல்லின் மீதுள்ள மழைத்துளிகளில் எல்லாம் நிலவின் பிம்பங்கள்! கோடை மழையின் அற்ப விளம்பர வாழ்வினை, உலகியலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்! நிரந்தரமான இருட்டடிப்பு, நிலையான பொருள்களுக்கில்லை. இவற்றையெல்லாம் கவிஞர் விரிவாக எடுத்துக் கூறவில்லை. உட்குறிப்பால் உணர்த்துகிறார். நாம் எழுதும் ஒவ்வொரு ஹைக்கூவும் இவ்வாறுதான் பயணிக்க வேண்டும்…


நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்

செப்டம்பர் 18, 2015

பசியுடன்...

தேன் எடுக்கும்
பட்டாம்பூச்சியின் மேல் பறக்கிறது
பசியுடன் வண்டு

செப்டம்பர் 17, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 3

பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது – பாஷோ

பாஷோ 1094 ஆம் ஆண்டு பத்தாவது திங்கள், பன்னிரண்டாம் நாள் தனது ஐம்பத்தொன்றாம் வயதில் இறந்தார். மாபெரும் ஹைக்கூக் கவிஞரின் கடைசிக் கவிதை இது. ஒரு பயணத்தின்போது பாஷோ கடுமையான நோய்க்கு உள்ளானார். அவருடைய மாணவர்கள் அவரிடம் விடைபெறு கவிதை (மரணத்திற்கு முன் எழுதுவது) எழுதச் சொன்னார்கள். என்னுடைய எந்தக் கவிதையும் மரணக் கவிதையாக இருக்க முடியும் என்று கூறி அவர்களுக்காக மேலேயுள்ள இறுதி ஹைக்கூ எழுதினார். பின்னர் நான்கு நாட்கள்  உயிரோடிருந்தார். அவருடைய கனவுகள் அலைந்து திரிய வறண்ட வயல்களே கிடைத்தன. ஆனால் அவருடைய ஹைக்கூக் கவிதைகள் ஆயிரம் பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்னும் பசுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நன்றி – ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைக்கூ 100 குறிப்புரையுடன்.

செப்டம்பர் 16, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கம்) 2

சீனா நடைமுறைத்தன்மை, ஜப்பானிய எளிமையும் தெளிவும், கொரியசுதந்திர உணர்வு, இந்தியாவின் தன்முனைப்பற்ற தன்மை இவற்றின் சங்கமமே கீழ்த்திசைஞானம். இத்தகைய ஞானத்தின் மீதான ஸென் குறித்தான கலையாக்க நுட்பமே ஹைக்கூ.

உலகமெல்லாம் விழிகள்
உறங்கித்தான் போனது
காத்திருக்கும் கதவு

இந்த ஹைக்கூவின் புரிதல் கடைசி வரியான காத்திருக்கும் கதவு என்ற வரியிலேயே ஊடாடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா என்னும் கதவு இருக்கிறது. உலகத்தின் மீதான இன்பம், துன்பம் என பல்வேறு வழிகள் உலகத்திற்கு உள்ளது. அத்தகைய பதிவுகள் நிரந்தரமாக விலகுவதில்லை என்பதைப் போன்றே, தூக்கமும் நிரந்தரம் கிடையாது என முதல் இரண்டு வரிகளுக்கான ஒப்புமை கட்டமைப்பு, கடைசிவரியில் ஹைக்கூவிற்கான ஞானவிசாரணையை தருவித்து, ஊக்குவித்துப் பயணிக்கிறது.


நன்றி – செல்லம்மாள் கண்ணன், ஓஷோ - தமிழ் ஹைக்கூவில் புரிதல் 

ஆகஸ்ட் 22, 2015

டாஸ்மாக் - பள்ளிக்கூடம்

புதியதாய் ஒரு டாஸ்மாக்
திறக்க… மூடப்படுகிறது
நாலுபேர் படித்த பள்ளிக்கூடம்

ஆகஸ்ட் 19, 2015

மகாகவி இதழில்...

மகாகவி இதழில் அமரன் அவர்கள் அப்துல் ரகுமான் முதலாய்… தமிழ் ஹைக்கூத் தொடர் ஆங்கிலத்தல் என்ற ஹைக்கூ தொடரை எழுதி வருகின்றார். தமிழ் ஹைக்கூக் கவிஞர்களின் ஹைக்கூக்களை ஆங்கிலத்தின் மொழிப்பெயர்த்து தமிழ் ஹைக்கூக்களின் புகழினை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் அவரின் இப்பணிக்கும் இதழை வெளியிடும் மகாகவி இதழ் ஆசிரியர் வதிலை பிரபா அவர்களுக்கும் என் நன்றிகள்.


ஆகஸ்ட் 18, 2015

டாஸ்மாக்

புதிய பேருந்து நிறுத்தங்கள்
முகசுழிப்பில் பயணிகள்!
டாஸ்மாக் முன் குடிமக்கள்.

ஆகஸ்ட் 17, 2015

ஹைக்கூவில் பருவ காலங்கள்

ஹைக்கூவில் பருவ காலங்கள் 
ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்கேற்றபடியும் கருத்துக்களுக்கேற்றபடியும் பிரிக்கப்பட்டன. அதில் ஐந்து பருவங்கள் உள்ளன. புத்தாண்டு, வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் காலம் என ஐந்தாகும். தற்காலத்தில் பருவகாலமின்றி எழுதுவது வழக்கமாகிறது; பருவம் தெரிவிக்கப்படாமல் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் ஒரு மறைமுகமான கருத்து ஏதாவது ஒரு பருவத்தைப் பற்றி இருக்கும்போது கவிதை மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. நாமும் தமிழ் ஹைக்கூக்களை மதிப்புடையதாகச் செய்வோம். பருவ காலங்களுக்கான பகுப்புகள் (கருப்பொருள்) கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மித்ரா, நெல்லை சு. முத்து, நிர்மலா சுரேஷ், பரிமளம் சுந்தர் ஆகியோரின் ஹைக்கூ ஆய்வு நூலிலிருந்து தொகுக்கப்பட்டு எடுத்துக்காட்டப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

வசந்த காலம்:
வசந்த காலம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் வருவதாகும்.
பருவம், தட்ப வெப்பம்:
நெடிய பகல், மெல்ல நகரும் நாள், இளவேனில் பகல், இளவேனில் கனவு, நெருங்கும் கோடை, வெப்பம், அமைதி, தெளிவு, குளிர்ச்சி.
வானவியல் பகுப்பு:
மங்கிய நிலவு, நிலவொளி, உறைபனி, மாலைப் பனி, பலமான காற்று, கிழக்குக் காற்று, இனிய தென்றல், மங்கிய காலை சூரிய ஒளி, வசந்த கால நிலவு.
புவியியல் பகுப்பு:
காடும், பெயரில்லாத மலையும், மூடுபனி, கடற்கரை, மந்தமான நீரோட்டம், நீளமானகரை, கடலின் நீரோட்டம், நீரின் சத்தம், சதுப்பு நிலம், கறம்பு நிலம், பசுமையான வயல்கள், தொலைவில் உள்ள வீடுகள்.
வாழ்வியல் பகுப்பு:
கடற்கரை மணலில் காலடிச் சுவடுகள், காதல் செயல்கள், வேட்டையாடுதல், நெல்விதைத்தல், தேயிலை பறித்தல், கிளிஞ்சல் சேகரித்தல்.
விலங்குகள்:
காதல் பூனைகள், பூனைக் குட்டிகள், எலிவளை, குயில், முயல், புறா, ஆந்தை, காட்டு வாத்து, கொக்கு, நாரை, கோழி, தவளை, தவளைக்குஞ்சுகள், மணலில் குளிக்கும் குருவிகள்.
தாவரங்கள், பூக்கள்:
தாமரை, புன்னைமரம், பலதரப்பட்ட கோரைகள், நடனமாடும் கொடி, புற்கள், பூண்டுகள், கடல்பாசி, வெங்காயப் பூக்கள், மலை ரோஜா போன்றவை.

கோடை காலம்
மே, ஜூன் மாதங்களை உள்ளடக்கியது இது.
பருவ, தட்பவெப்பப் பகுப்பு:
கோடைக்காலைத் துவக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு, குறுகிய இரவு.
வானவியல் பகுப்பு:
ஜூன் மழை, திடீர் மழை, வானவில், மின்னல், கோடை காலப் புயல்காற்று, குளிர்காற்று, கோடை மழை, வெப்பக் கதிரவன், எரியும் கதிரவன்.
புவியியல் பகுப்புகள்:
பச்சை மலைகள், தோட்டம், அமைதியான மலை, தோட்டத்தில் சூடான பொருட்கள், சதுப்பு நிலம், கோடை ஆறு, தெளிந்த நீர்வீழ்ச்சி.
வாழ்வியல் பகுப்பு:
சதுப்பு நிலத்தில் சவாரி செய்தல், மழைக்கால வேண்டுதல், நெல் விதைத்தல், பகல் தூக்கம், பறைகள் அடிக்கும் ஓசை, நிலவொளியில் துணிகளைத் துவைத்தல், குழந்தைகளைத் தூங்க வைத்தல், ஆற்றைக் கடக்கும் மகிழ்ச்சி.
பறவை, விலங்குகள், பூச்சிகள், பயிர்கள்:
கிராமத்துக் குருவிகள், மரத்தில் கட்டப்பட்ட குதிரை, மரங்கொத்தி, தோப்பில் விழும் அட்டை, குயில், நீர்க்கோழி, நண்டு, ஈக்கள், மின்மினி, வண்ணத்துப்பூச்சி, எறும்பு, பாம்பு, சிலந்தி, நத்தை, இறந்து விழும் விட்டில், காய்ந்துபோன நாணல்கள், சோளம், கோதுமை, திராட்சை, வாழை.

இலையுதிர் காலம்
ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை, வெட்பதட்ப நிலைப் பகுப்புகள்:
நீண்ட இரவுகள், இரவுக் குளிர், ஒளிரும் நிலவு.
வானியல் பகுப்புகள்:
மூடுபனி கிளம்பல், சிவப்பு நிறச் சூரிய வெப்பம், தெளிவான நீல வானம், இலையுதிர் கால மழை, வெள்ளைப் பனித்துளி.
புவியியல் பகுப்புகள்:
நெல், வயல், சதுப்பு நிலம், வெள்ளிய கடலலைகள், பரந்த கடல், பயங்கரமான மலைகள், வரிசையான மலைகள், இருளடையும் மலை.
வாழ்வியல் பகுப்புகள்:
மாலை நேரத்தில் பாதை வழியாக யாரும் போகாமை, இலையுதிர் காலத்தனிமை, குறட்டை ஒலி, புல்லின்மீது நடத்தல், காளான் சேகரித்தல்.
விலங்குகள்:
சிவப்புத் தும்பிகள், காய்ந்த கிளையில் அமர்ந்த காக்கை, கொக்கு. காட்டுப் பன்றிகளை அசைக்கும் காற்று, சப்தமின்றிச் செல்லும் காகம், சுவர்க்கோழி கூவுதல், பூனைகள், நடுங்கும் குரங்கு, இறந்த உருப்பில் அமர்ந்திருக்கும் காக்கை, பசுவின் கொட்டகையில் கொசுக்கள், சிள்வண்டுகள், புல்புல் பறவை, நாரை, மரங்கொத்திப் பறவை, வெட்டுக்கிளி, பூச்சிக் குரல்.
தாவரப் பகுப்புகள்:
சோளம், கோதுமை, திராட்சை, வாழை, ரோஜா ஆகியவை.

குளிர்காலம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கியது.
பருவகாலம், தட்பவெப்பப் பகுப்பு:
குளிர்காலம், குளிர்காலத் துவக்கம், குளிர்கால இரவு, மழைகால முதல் மழை, மழைகாலத் துவக்கம், மேமாத மழை, ஜூன்மாத மழை.
வானவியல் பகுப்பு:
குளிர் நிலவு, மங்கிய நிலவொளி, தேய்ந்த நிலவு, நள்ளிரவு மழை.
புவியியல் பகுப்பு:
சமவெளியில் ஓடும் மழை, ஆறு, சேதமான பாலம், நீர்வீழ்ச்சி ஓசை, பெயரில்லா சிற்றாறு.
வாழ்வியல் பகுப்பு:
முள்ளங்கி பிடுங்குதல், கண்களுக்கு வலி உண்டாவதால் விளக்கு ஏற்றாமை, அதிக குளிர்ச்சி, போர்வை, கம்பளியின் தேவை.  மழையால் குழந்தையை அழைக்கும் தாயின் பாசக் குரல்.
பறவை விலங்குகள்:
குளிர் காலத்தில் உயிரினங்களின் இயக்கம். தொடர் மழையால் மாட்டுக்கொட்டகை நீரில் மூழ்குதல். இரவு பகல் என்று அறியாமல் கூவும் சேவல். மழையில் எருதுகள், மழையில் திரியும் பூனை, தேரையின் அடங்கிய குரல்,  இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு.
தாவரங்கள்:
மழையால் பாதிக்கப்படும் தோட்டம், காற்றால் பாதிக்கப்படும் பயிர்கள் - வயல்வெளிகள், வெளிவரும் புற்கள், மரமொட்டுகள் வெளிவருதல், மழையால் ஒன்றன்மீது ஒன்றாக விழும் இலைகள்.