ஜூலை 30, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 18

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
-       கவியருவி ம.ரமேஷ்

வயல்வெளியின் பசுமை கண்களை கவ்விக்கொள்ளும்… அத்துணை அழகு… மழையின்றி வயல்வெளிகள் வறண்டு போயிருப்பதை காண்கிறோம். மனம் வருந்துகிறோம். ஹைக்கூவில் வயல்வெளி பசுமையாக இருக்கிறது (முதலிரண்டு அடிகளில்). ஒரு சமயம் மழைக் காலமாக இருக்கலாம் போல. பசுடையாக என்ன தெரிகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை – எந்தப் பயிர் வகை என்பதும் புரியவில்லை… நெல், கம்பு, சோளம், கரும்பு, வாழை என்று எதாவது இருக்கும்போல… எது இருந்தால் என்ன? பசுமையாக இருக்கிறது என்றால் அந்த நிலப்பரப்பின் விவசாயியும் வருமானம் பார்ப்பான் அவன் மனசும் பசுமையாக இருக்கும் என்று நம்புவோம்.

ஆனால், 3 அடியில் உயர்ந்து நிற்கும் காடு என்று இருக்கிறதே!. அப்போது வயல்வெளி (இரண்டு மூன்றாம் அடிகள்)? மேற்கண்ட பயிர் வகைகள் எதுவும் இல்லையா? காடுதான் பசுமையாக இருக்கிறதா? வயல்வெளி தரிசாக இருக்குமோ? அல்லது வயல்வெளி வீட்டு மனைகளாக்கப்பட்டு இருக்குமோ? காடுகளை அழித்து  வீட்டு மனைகள் போடுவதை கண்டிருக்கிறோமே… தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு ஹைக்கூ எழுதுங்கள். 

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
-       கவியருவி ம.ரமேஷ்


ஜூலை 21, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17

குளத்தில் முகம் அளம்பி
மொட்டுக்களைப் பார்த்தேன்
மலரத் துவங்கியது
-       கவியருவி ம.ரமேஷ்

நேரடியாக 3 வது அடிக்குச் செல்கிறேன்: மலரத் துவங்கியது எது?  மனசா? தாமரையா? என்ற கேள்வி எழலாம். மனசு சரியில்லை என்று கோயிலுக்குச் சென்றிருந்திருக்கலாம். அந்த மனசு மலர்ந்திருக்கலாம். அவருக்குப் புதிய சிந்தனைகூட  மலர்ந்திருக்கலாம். ஏன் தாமரையே கூட மலர்ந்திருந்திருக்கலாம். அவர் சென்றது காலை நேரமாக இருந்திருக்கலாம் அப்போது சூரியன் வர தாமரை மலரத் துவங்கி இருக்கலாம். 2,3 ஆம் அடிகளைச் சேர்த்துப் பார்த்தால் (மொட்டு) – காதலியின் நினைவோ  – காம நினைவுவோ கூட  மலரத் துவங்க வாய்ப்பிருந்திருக்கும்… எனக்கு இப்படியான சிந்தனைகள்… உங்களுக்குள் என்னென்னவோ… முடிந்தால் சொல்லுங்கள் – ஒரு ஹைக்கூ எழுதுங்கள். மகிழ்வேன்.

ஜூலை 17, 2014

கடவுள்... அழுகை!

மாட்டியிருந்த படத்திலிருந்து
ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார் கடவுள்
சுவற்றில் முட்டிக்கொண்டு அழகை!
- கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ (கவிதை)

ஜூலை 11, 2014

காதலியிடத்தில்...

தூணிலும்  துரும்பிலும்
இருப்பவன்  நீ
என்  காதலியிடத்தில்
இல்லாமல்  போய்விட்டாயே?

என்  கவிதைகள்
காதலைச்  சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறு உயிர்ப்போடு  துளிர்க்கிறது

காதலியிடம்
குறை  இருக்கலாம்
அவள் 
என்ன  செய்வாள்  பாவம்?
அது
இறைவனின்  குறை 

ஜூலை 04, 2014

காதல் விளையாட்டு

இளமையைப் 
பரிசாகக் கேட்கிறது... 
காதல் விளையாட்டு! 

ஜூலை 03, 2014

அழுகாச்சி...

அழுவதுபோல்
என்னமாய் நடிக்கிறது
புற்களில் பனித்துளி

ஜூலை 01, 2014

பேஸ்புக்

என்னத்தான் படிச்சி கிழிச்சியோ
இதற்கும் கிடைக்கும் லைக்
பேஸ்புக்

மரணம் - ஹைக்கூ

பனித்துளியை இழந்ததற்காக
மரணிக்கிறது
கோடைகால புல்