அக்டோபர் 21, 2016

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்
மழை நின்ற பின்னிரவு
மெல்ல நகர்ந்து செல்கிறது
ஆமை முதுகில் நிலவொளி !
---------------------------------------------
உடைந்த வளையல்
உருப்பெறுகிறது பூக்களாய்
கலைடாஸ்கோப் !
---------------------------------------------
திரும்பத் திரும்ப
சலித்துக் கொள்கிறாள் உழத்தி
களத்தில் தானியங்களை !
---------------------------------------------
பட்டமரம்
கணநேரத்தில் பசுமையாகிறது
வந்தமரும் கிளிக்கூட்டம் !
---------------------------------------------
கைகளில்லை
முகத்தில் அறைகிறது...
கதவைத் திறந்ததும் காற்று !
---------------------------------------------
ஓய்வே இல்லை
முத்தமிட்டுக் கொண்டே...
கரையை அலைகள் !
---------------------------------------------
இணையாய்ப் பயணம்
இறுதிவரை தொடாமலேயே
வண்டிச்சுவடுகள் !
---------------------------------------------
முண்டியடிக்கும் கூட்டம்
அளந்து பேச முடியவில்லை
ரேசன்கடைக்காரர்.
---------------------------------------------
ரொம்ப கூச்சமோ ?
தொட்டதும் சுருண்டு விட்டாயே...
மரவட்டை !
---------------------------------------------
அருவருத்தவன்
ஆராதிக்கிறான்
பட்டாம்பூச்சி !
---------------------------------------------
புத்தகத்தில் மயிலிறகு
குஞ்சு பொரித்திருக்கிறது...
உதிர்த்துச் சென்ற மயில் !
---------------------------------------------
நடுநிசி தார்ச்சாலை
மனம் பிறழ்ன்றவன் காறியுமிழ...
சிறைபடுகிறது நிலா !
---------------------------------------------
எண்ணற்ற கால்கள்
இறந்து போன ஈக்கு...
இழுத்துச் செல்லும் எறும்புகள் !
---------------------------------------------
அசையும் வயற்கோரை
சிதறித் தெறிக்கும் சிறுமின்னல்
மழைக்கால நிலவொளி !
---------------------------------------------
சிவப்பாக இல்லை
பச்சையாகவே ; கிளிமூக்கு
மாங்காய் !
---------------------------------------------
குறைந்து வரும் மரங்கள்
கூடிக் கொண்டே போகிறது...
மண் - மழை இடைவெளி.
---------------------------------------------
உறக்கம் வராத இரவு
வானத்தை மூடி மூடித் திறக்கிறது
இமைகள்.

அக்டோபர் 06, 2016

ஹைக்கூக்களில் கிராமிய வாழ்வியல்

ஹைக்கூக்களில் கிராமிய வாழ்வியல் – நன்றி தமிழமுது கவிச்சாரல்

விட்டு விடுங்கள் என்னை
வேலையில்லா ஊதியம்
நூறு நாள் திட்டம்

முறை மாமன்
பரிசத்துக்கு பரிசளித்தான்
வலைத்தொடர்பு சாதனம் 

காணாமல் போனது
திருவிழா கூட்டத்தில்
உறவுகள்

விற்றன அகல்விளக்குகள்/
குடிசைக்குள் குயவன் திரும்ப /
நுழைகிறது நிலவொளி

Devarajan Rajan 
உறக்கம் விழித்தேன்/
முதுகில் பெருக்கல் ஓவியம்/
கயிற்றுக்கட்டில்.

J K Balaji   
ஆழ்ந்த உறக்கம் மரத்தடியில்
தெருவோரம் தாலாட்டும் நாய்கள்
ஒருநிமிட அன்னை 

தாங்கி பிடித்து
தாய்போல் தாலாட்டியது
மரத்தில் தூளி

மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல் 

இறந்துபோனான் விவசாயி
வயிறு நிறைய சாப்பிட்டு
பூச்சி மருந்து

ஒற்றையடிப்பாதைக்குள்/
ஒளிந்து கிடக்கிறது/
மீத்தேன்.

சிறுமிக்கு வயிற்று வலியாம்
விருந்தும் மருந்தோடு
அடைக்கப்பட்டாள் கூண்டுக்குள்...!

ஒருவழிப்பாதை
இருபுறமும் புற்களும்
முட்களும் நிறைந்ததாக.!!

ஆனந்த பயணம்
அமர வசதியில்லை
நுங்கு வண்டி

சமைக்கும் முன்னே
புழுவுக்கு உணவாகிறது!
ரேசன் அரிசி!

ஒத்தையடிப் பாதை
கூடவே பயணிக்கிறது
கடந்த கால நினைவுகள்