மார்ச் 28, 2013

மூன்றாம் நாள் உயிர்த்தெழ வில்லை - ஹைக்கூ


மூன்றாம் நாள்
உயிர்த்தெழ வில்லை
காவல் பொம்மை

குழந்தைபோல் பேசுகிறது
என்னவென்று புரியவில்லை
சோளக்கொல்லை பொம்மை

கண் வழி புகும்
ஈக்கள்; அமைதியாய்
காவல்பொம்மை

சிலுவையில் மரணம்
வணங்கத்தான் ஆட்களில்லை
கழியில் காவல் பொம்மை

வெயில் மழை
இலவச வீடு கிடைக்குமா?
காவல்பொம்மை

மார்ச் 26, 2013

செருப்பு அடி - சென்ரியூக்கள்


செருப்பு மாலைகள்
சிரித்துக்கொண்டேயிருக்கும்
தலைவர் படங்கள்

தீ வைத்தும்
கருகி செத்துவிடவில்லை
உருவபொம்மை எரிப்பு

செருப்பு அடிகள்
ஈனம் மானம் ஏதும் இல்லை
தலைவர் உருவ பொம்மை

பால்வடியும் முகம்
ஆயிரம் தவறுகள் செய்கிறது
அரசியல்வாதிகள்

வாக்குக்காக கும்பிட்டவர்
அமைச்சரானார்
அவனா இவன்?

குளுகுளு காரில்
பார்வையிடுகிறார்
வறட்சி நிவாரணம்

பட்ஜெட் வாசிப்பு
மேசை தட்டும் அமைச்சர்கள்
டைம் ஆவுதுப்பா

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூக்கள்


பொறுப்புடன் படிக்கிறார்கள்
தேர்வுக்காக
தோல்வி அடைந்தவர்கள்

சுயநினைவின்றி
யோசிக்கிறோம்
கனவுகள்

சுயநினைவின்றி
கடந்து செல்கிறது
நெடுஞ்சாலைப் பயணம்

வெற்றுப் பார்வை
நிரம்பியிருக்கிறது
உள்ளார்ந்த அர்த்தங்கள்

அலங்கரிக்கப்பட்ட மேடை
அழுது கொண்டிருக்கிறார்கள்
பிரிவு உபச்சார நேரம்

கடுமையையும் மீறும்போது
சிரிப்புதான் வருகிறது
குழந்தையின் குறும்புத்தனம்

ஆயிரம் கனவுகள்
முடிச்சு போடப்படுகிறது
விடைத்தாளைக் கட்டும் மாணவர்கள்

மார்ச் 21, 2013

இனப்படுகொலை - சென்ரியூக்கள்


120 கோடி மக்கள்
சிக்கலைத் தீர்க்கவில்லை
இனப்படுகொலை

போரே குற்றம்தான்
குற்றத்திலும் பெருங்குற்றம்
பாலச்சந்திரன் படுகொலை

இலங்கைக்கு
பணிந்துதான் போகிறது
இந்தியா

ஒற்றுமைக்குள்
வேற்றுமை
தமிழன் இந்தியன்தான்

மாணவர்களின்
போராட்டம்
சாதனையாகிறது

வலுவற்றத் தீர்மானம்
மாற்றமின்றி ஆதரிக்கிறது
இந்தியா!

பத்து தலை
ராவணனாய் சிரிக்கிறது
இலங்கை

கொலைக் காட்சிகள்
எதிரிக்கு ஆதரவளிப்பு
அரசியலே சாக்கடைதான்

மார்ச் 19, 2013

நின்று கொல்லும் தெய்வமே - சென்ரியூக்கள்


நின்று கொல்லும்
தெய்வமே காத்துக்கிடக்கிறது
இந்திய தூக்குத் தண்டனை

பறை ஒலி
ஆட்டங்காட்டுகிறது
பாடைமுன் குடிகார கும்பல்

என்றாவது ஒரு நாள்
விளையாடிவிட்டு போகிறது
வாழ்க்கையில் காதல்

தாய் தந்தை இலவசம்
தமிழக தேர்தல் வாக்குறுதி
கூட்டுக்குடும்ப திட்டம்

கத்தியில்லையென தேடும்
குழந்தை
கத்திக்கப்பல்

மார்ச் 18, 2013

ம. ரமேஷ் சென்ரியூ


ஆசிரியர் போடும்
முட்டைகளைவிட சிறியது
சத்துணவு முட்டை

கொழுந்துவிட்டு எரிகிறது
எப்போதோ அணைக்கப்பட்டது
பாலச்சந்திரன் படுகொலை

மாணவர் போராட்டம்
பொங்கியெழுந்த அரசு
கல்லூரிகளுக்கு விடுமுறை

பசி பட்டினியோடு
வயிறு பருத்திருந்தது
ரத்தம் குடித்த கொசு

கண்டனக் குரல்கள்
அதிகரிக்கின்றன
டாஸ்மாக் சேல்ஸ் டார்கெட்

மார்ச் 17, 2013

ம. ரமேஷ் ஹைக்கூ

ஆடைகளில் கிழிசல்கள்
நாணும் காவல்பொம்மை
களை பறிக்கும் பெண்கள்

மார்ச் 15, 2013

ம. ரமேஷ் - ஹைபுன் 16

மேற்கத்திய கலாச்சார சீரழிவு இந்தியாவுக்குள் நுழைந்ததுபோல நகரத்து கொசுக்கள் கிராமத்துக்குள் புகுந்துகொண்டது. பேன் போட்டால் காணாமல் போகும் கொசுக்கள், கரண்ட் கட்டானதும் படையெடுக்கத் துவங்கி ரத்தம் உறிஞ்சி விடுகிறது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை என முறையின்றி கட்டாகும் கரண்டால், குழந்தைகளைக் கொசு கடித்துவிடக்கூடாது என்பதால் மின்சாரம் துண்டிக்கும் போதெல்லாம் கண் விழித்துக்கொள்கிறது. அப்பாடா… எல்லா கொசுக்களையும் கொன்னு போட்டாச்சின்னு நிம்மதி பெருமூச்சி விடும்போது கோழி கூவுகிறது.

கொல்லப்பட்ட கொசுக்காக
மாரடித்து அழுகிறது
அதிகாலையில் கூவும் கோழி 

மார்ச் 06, 2013

டாஸ்மாக் - சென்ரியூக்கள்


மதுவில் நீர் கலப்பு
முறைகேடு இல்லை
உயிர் காக்கும் அக்கறை

சேர்த்த பணத்தை
எண்ணும்போது மகிழ்ச்சி
டாஸ்மாக்குக்கு இது போதும்

நினைவெல்லாம்
நீயாகவே இருக்கிறாய்
10 மணிக்குதான் டாஸ்மாக்

உயிரே போனாலும்
இங்கேயேதான் போகனும்
டாஸ்மாக் பாரில் புலம்பல்

108 க்கு முன்னால்
விரைகிறது
மற்றொரு 108

காவல்பொம்மை - ஹைக்கூக்கள்


பனித்துளியை இழந்ததற்காக
புல் மரணிக்கிறது
கோடைகாலம்

ஆடையில் கிழிசல்கள்
சங்கடப்படும்
காவல்பொம்மை

சிலுவையில் தொங்கியும்
சிரித்துக் கொண்டேயிருக்கும்
காவல் பொம்மை

அப்படியும் இப்படியும்
திரும்பிப் பார்க்கிறது
வீசும் காற்றில் காவல்பொம்மை

இலையுதிர் காலத்திற்கு
ஒப்பாரி வைக்கும்
சில் வண்டுகள்

பின்னும் முன்னுமாக வாழ்க்கை (கஸல்)


புதைத்த பின்பும்
தோண்டி எடுக்கப்படுகிறது
காதல் நினைவுகள்

உன்மேல்
உண்டான காதலையும்
அதனால் உண்டான
கவிதைகளை மட்டும் விட்டுவிட்டு
மரணம்
என்னை
அவ்வுலகுக்கு அழைத்துச் செல்கிறது

நமக்கு மட்டும்
பின்னும் முன்னுமாக
வாழ்க்கை
நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மார்ச் 03, 2013

நவீன பெண்ணியம் - சென்ரியூ


தான் மட்டும்தான்
பெற்றுக்கொள்ள வேண்டுமா?
மடமையின் கேள்வி

நானும் சம்பாதிக்கிறேன்
சமைக்க வா!
விவாகரத்தின் தொடக்கம்

ஒரு நாள் பறிமாறு
கஷ்டம் தெரியும்
நவீன பெண்ணியம்

ஆடை உடுத்துதல்
எங்கள் விருப்பம்
டூ பீசும் சுமையே!

எதுக்கு
மதிக்க வேண்டும்
புல் ஆன கணவன்

மதுவுக்கும் 
நாங்கள் அடிமை
ஆணுக்குச் சமம்!

புகைக்கும் மதுவுக்கும்
ஆடைக்கும் கட்டுப்பாடு
ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு!

காதலின் உச்சம் (கஸல்)


கை அசைத்துவிட்டு
வேகமாய் நகர்கிறாய்
கடைசியாக நீ
திரும்பிப் பார்த்து செல்கையில்!
மெதுவாக
கண்ணீர் எட்டிப் பார்த்திருக்கிறது

 நீ
பேசாமல் சென்ற
மீதி வார்த்தைகள்தான்
இந்தக் கவிதைகள்

எந்த நிலையில்
காதலர்களின் மனம்
குளிர்ந்துபோகிறதோ
அதுதான் காதலின் உச்சம்
மற்றதெல்லாம் சொச்சம்தான்

அழாமல் இருக்க முடியுமா (கஸல்)


உன்னால்
என் ஆசைகள்
கொடிவிட்டு
படர்ந்து பூக்களும் மலர்த்தியது
நீ
அந்த ஆசையை களைபோல்
எளிதாகக் கிள்ளி எறிந்தாய்

என்றோ ஒரு நாள்
பார்த்துக்கொள்கிறோம்
அடிக்கடி
பார்த்துக்கொள்வதாய்
ஒரு நினைவு வந்து போகிறது

கவிதைகளை
இனி
எழுதக்கூடாது என்கிறாய்
சரி
உன்னால் 
அழாமல் இருக்க முடியுமா சொல்
நிறுத்திவிடுகிறேன்

ம. ரமேஷ் சென்ரியூ


அடுத்த தேர்தல்
அறிக்கையில் இலவசம்
மது, சைடிஸ்!

கடமையை செய்யாமல்
கை மேல் பலன்
அரசியல்

கையில் கறை
அழுக்குத் தேர்தல்
பாக்கெட்டில் 500 ரூபாய்

கொஞ்சமாய் கிள்
வலிக்கப்போகிறது
நினைவுகளின் வலி

பொட்டு வைத்த முகம்
அழகு என்கிறாய்
விதவை