ஏப்ரல் 30, 2014

சமாதி வேண்டாம்! - ஹைக்கூ



வெற்றுத் தரையாகவே விடுங்கள்
கல்லறை வேண்டாம்; புள் முளைத்து
பனித்துளிகள் அமரட்டும்

ஏப்ரல் 28, 2014

காவல்பொம்மை - ஹைக்கூ

குருவிக் கூட்டம்
சுகமான காற்றால் கண்ணுறக்கம்
காவல்பொம்மை

ஏப்ரல் 27, 2014

மூத்திரம் கொடுத்ததாய்... - ஹைக்கூ

பல்லிச் சப்தம்
‘உச்’கொட்டும் பாட்டி
கைத்தட்டிச் சிரிக்கும் குழந்தை

நடக்காததையெல்லாம்
நடப்பதாய்ச் சொல்லும் கிளி
தலையாட்டிக்கொண்டு நான்

மூத்திரம் கொடுத்ததாய்
கதை சொல்லும் நண்பன்
வேலிக்குள் பகுங்கும் ஓணான்

ஏப்ரல் 26, 2014

காதலின் வெற்றி - ஹைபுன்

காதல் இப்படித்தான் இனி வெற்றி பெறும். சம பொருளாதாரம் உள்ளவர்களுக்குத் திருமணம் பிரச்சினையின்றி முடியும். ஆமாம்… பொருளாதாரம் என்பது பணம் இல்லை. படிக்காதவனுக்குப் படிக்காதவள்; கூலி வேலை செய்பவனுக்குக் கூலிவேளை செய்பவள்; வக்கிலுக்கு வக்கில்; டாக்டருக்கு டாக்டர்; சாதிக்குச் சாதி; பணத்துக்குப் பணம்… இப்படி…

காதலின் வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கிறது
பொருளாதார பின்னணி

ஏப்ரல் 23, 2014

ஓட்டுக்குப் பணம் – தப்பில்ல

போடுவோமையா ஓட்டு
வேட்பாளரைப் பாத்து
நேத்து குடுத்த
பெரிய நோட்டை கேட்டு...
நம்மக்கிட்டயிருந்து எடுத்துது
நம்மக்கிட்டயே வந்து சேருது...
மொகம் சுழிக்காமல்
யாரு குடுத்தாலும்
வாங்கிக்கடீ...
கோட்டர் குடுத்தாலும் வாங்கிக்கடீ
ஒண்ணுக்கு ரண்டா வித்திடலாம்
கருப்புப் பணம்
கொஞ்சம்
அவங்க கணக்குல குறையும்டீ
இதே பொழப்புதான் உங்களுக்கு!
ஏன்டீ
நீ மட்டும் கூட்டத்துக்குக் கூட்டம்
போனீயே
சரி விடுங்க -
ரண்டு மூனு மாசம்
குடும்பத்த ஓட்டிடலாம்
ஓட்டால!!!

“பணம் கொடுக்கறதும் தப்பாம்
வாங்கறதும் தப்பாம்”
அப்புடியா? ம்… அப்புறம்…

ஏப்ரல் 22, 2014

ஹைக்கூ

நன்றி - http://www.nanthalaalaa.com/2014/04/13.html

@
கனவுகளோடு
சிறகு விரித்த பட்டாம்பூச்சி
இழுத்துச் செல்லும் எறும்பு!

@
திருவிழாவில் தொலைந்த
குழந்தைக்குத் தெரிகிறது
எல்லோரும் அம்மாவாய்!
-கவியருவி ம.ரமேஷ்,
9865224292

ஏப்ரல் 20, 2014

ஆறுதலின் துன்பம்!

ஆயிரம் வார்த்தைகள் பேசிய
உன் விழிகள்
இன்று
ஒரு வெற்றுப்பார்வையுடன்
திரும்பிக்கொள்கிறது

கண்கள் சிந்தும்
கண்ணீரின்போது
உன் தோள்மேல் சாயும்
என் நினைவுகள்

உன்
ஆறுதல்கூட
பிறிதொரு பொழுதில்
துன்பத்தையே தருகிறது
இனி

உன் ஆறுதலும் வேண்டாம்

ஏப்ரல் 19, 2014

வரதட்சணை ஒழிப்போம்!

வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
 மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு  சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டுக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.

வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு

ஏப்ரல் 16, 2014

துறத்தப்பட்டவள் - Tamil haiku

கட்டுப்பாடு என்னிடமிருந்தும்
இலையுதிர்த்த மரத்தில்
சிக்கிக்கொண்டது பட்டம்

துறத்தப்பட்டவள்
பறித்துக்கொண்டிருந்தாள்
முல்லைப் பூ

கடித்துவிடுமாவென
பயந்துகொண்டிருந்தேன்
கொஞ்சிக்கொள்ளும் விலங்குகள்

பாம்பைப் பற்றிக் கவலைப்படாமல்
மழையை வரவேற்கிறது
இசைபாடும் தவளைகள்

தூக்கிக்கொண்டுபோய்விட
இருப்பிடம்தான் தெரியவில்லை
தானியம் சுமக்கும் எறும்புகள்

ஏப்ரல் 15, 2014

காலம் காலமா சூரியன், ரட்ட எல - ஹைபுன்

எனக்கு ஒரே கொழப்பமா இருந்திச்சி… ஓட்டுப் போட்டுட்டு வந்துட்டீயா? இதோ பாரு வெரல்ல மைய… எதுக்கு போட்ட? பணம் கொடுத்த நம்ம தலைவருக்குதான் போட நெனச்சேன்… அங்க போயி பாத்தா சின்னமே காணல… தலைவரு நிக்கலை கூட்டணி கட்சிதான் நம்ம தொகுதியில நின்னுச்சி வேறெ ஒரு சின்னம் சொன்னாங்களே காதுல விழல… எங்க ஞாபகம் இருக்கு… நமக்கு எல்லாம் காலம் காலமா சூரியன் இல்லன்னா ரட்ட எலதானே தெரியும்.

கூட்டணிக் கட்சிகள்
தோல்வியுற்றன
சின்னங்களில் குழப்பம்

சங்ககால - ஹைக்கூ

கூடைகூடையாய்
அருநெல்லிக்கனி
மலையேர வள்ளல்கள் இல்லை

போர்வை பெற்ற
மயில் மறந்தது
நடனம் ஆட!

தேர்பெற்ற முல்லைக்கொடி
பூப்பித்தது
தங்க மலர்கள்

ஏப்ரல் 12, 2014

பாரமாகும் சருகு - ஹைக்கூ

உதிரும் சருகு
பாரமாகிப்போனது
இரை சுமக்கும் எறும்பு

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்
முதியோர் இல்லம்

சவ வீட்டின்மேல்
கரையும் காகங்கள்
வெடிக்கும் பட்டாசுகள்

வயிற்றில் குத்தி குத்தி
விளையாடும் குழந்தை
அமைதியாள் பிள்ளையார்

வாழ்நாள் முடிந்து
புன்னகையோடு மடிகிறது
உதிரும் பூ

ஏப்ரல் 11, 2014

எதிர்வீட்டு நிலா - ஹைக்கூ

பக்தர்களுக்கு மட்டுமின்றி
காக்கைகளுக்கும் ஒலிக்கும்
கோயில் மணி

எல்லாம் இருந்தும்
பறக்க முடியவில்லை
பட்டாம்பூச்சிபோல

நிலவைப் பாதி
மறைத்து நிற்கிறது
எதிர்வீட்டு நிலா

உடையாமல்
பசியாற்றியிருக்கிறது
யானை உண்ட விளாம்பழம்

ஏப்ரல் 10, 2014

கிராமக் குளியல் - ஹைக்கூ

உடம்பு தேய்த்துக் குளிக்கும்
கிராமத்துச் சிறார்கள்
குளக்கரையில் புற்றுமண்

ஏப்ரல் 09, 2014

ஏப்ரல் 08, 2014

மாநிலச் சிறைகள் - ஹைபுன் கவிதை

தண்ணீரும் மின்சாரமும் இருந்தால் கொடுக்கமாட்டோமா? குடித்ததுபோக கையில் கோட்டர் வைத்திருந்தவன் தெளிவாகக் கேட்டான்: இந்த கோட்டர் பாட்டில் எங்கிருந்து வந்துச்சி… இங்க இருந்து இல்லதானே? அதே மாதிரி தண்ணியையும் கரண்டையும் கெடக்கிற எடத்துலயிருந்து எடுத்துட்டு வர வேண்டியதுதானே! ஒரே அமுக்காக அமுக்கியது அவனைக் காவல்துறை.

எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறை

ஏப்ரல் 07, 2014

காதலின் பயணம் - கஸல்

நம் காதலால்
நமக்கு நாமே
அசிங்கமாகிப்போனோம்

நமக்கான
துயரத்தின் மகிழ்ச்சிதான்
நாம்
சிந்தும்
கண்ணீர்த் துளிகள்

காதலின்
நெடும்பயணம்
வெறுமனே முற்றுப்பெறுகிறது

ஏப்ரல் 02, 2014

மக்கு காவல்பொம்மை - ஹைக்கூ

அறுவடையானபின்பும்
அதே கம்பீரத்தில்
மக்கு காவல்பொம்மை

ஏப்ரல் 01, 2014

ஜாதி ஓட்டுகள் - ஹைபுன் கவிதை

நான் உங்கள் ஜாதி. நீங்களும் என் ஜாதி. எனக்கு நீங்கள் ஓட்டுப் போட்டுதான் ஆக வேண்டும். நானும் ஜாதிக் கட்சியுடன் தான் கூட்டணி வைத்து இருக்கிறேன். என்னை கைவிட்டால் என் ஜாதியே கைவிட்டாக அர்த்தம்… பல்லைக் காட்டி, கை எடுத்துக் கும்பிட்டு… பேசி விட்டுச் சென்றார். ஓட்டு நாள் வந்தது. வாக்கு எண்ணப்பட்டது. டேய் நம்ம ஜாதி வேட்பாளர் ஜெயிச்சுட்டாருடா… கொண்டாட்டம் தொடங்கியது. மறுநாள், ஜாதி வேட்பாளர் கட்சி மாறிவிட்டார்.

வெற்றித் தோல்விளை
இன்று தீர்மானிக்கிறது
ஜாதி ஓட்டுகள்