மார்ச் 15, 2017

அதே இனிப்பு, பழம்

அதே இனிப்பு, பழத்துடன்
செல்கிறது...
எல்லா விருந்திலும் பாட்டி - ம.ரமேஷ்
சிறுவிளக்கம்: இரண்டாவது அடியில் செல்கிறார் அல்லது செல்லும் என்று உயர்திணையில் வருவதுதான் சிறப்பு. அது கருதினும் இவ்வாறு எடுத்துச் செல்லும் பாட்டி, தாத்தாக்களை நாம் போவுதுபாரு என்று பண்பாடின்றித்தான் சொல்கிறோம் என்பதால் எழுதப்பட்டது. “அதே” என்ற சொல் தேவைதான். விருந்து நிகழ்ச்சிகளில் வாழை, லட்டு அல்லது ஜாங்கிரி என்பனதான் வைக்கப்படுகிறது (கிராமமாக இருக்கலாம் எனவும் யுகிக்கலாம்). குழந்தைகள் இதனை சலிப்பின்றி சாப்பிடும்... என்பதால் பேரனுக்கோ பேத்திக்கோ இருவருக்குமோ எடுத்துச் செல்கிறார். அப்படியென்றால் அந்தப் பாட்டி வீட்டில்தான் இருக்கிறார்... “அதே இனிப்பு, பழத்துடன் / செல்கிறது..." என்பதால் சுப நிகழ்ச்சி ஏதேனும் தடைபட ஏற்றிக் கொண்டு வந்த வண்டி திரும்பவும் செல்கிறதா.... இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்....

மார்ச் 12, 2017

Kavanur Srinivasan - பாரியன்பன் - ஹைக்கூ விமர்சனம்

நன்றி - Kavanur Srinivasan - 
ஹைக்கூ கவிதைகள் முகநூலில் ஆர்வத்துடன் எழுத முயற்சிக்கின்றனர்.பலர் எழுதியும் வருகின்றனர். இக்கவிதைகளை பல குழுக்கள் வரவேற்று கவிஞர்களை ஊக்குவித்து வருவதும் வாசகர்கள் அறிந்தவொன்று.
ஹைக்கூ உலகம் - முனைவர் ம.ரமேஷ் அவர்களால் கவிஞர்களுக்கு பயிற்சிகொடுத்து இவ்வகைமைகளை இனங்காட்டி எழுதவைத்துக்கொண்டிருக்கிறது.
' ஒரு ஹைக்கூவும் ஒரு தேநீர் கோப்பையும் ' என இக்குழுமமும் நடத்திவருகிறது.
ஒரு நூறு கவிஞர்கள் இருக்கலாம்.இப்படி மூன்றுவரிகளில் மூழ்கி முத்தெடுத்து தந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்னும்ஒரு சரியான வழிகாட்டியின்றி தான் ஆரம்பகவிஞர்கள் மனம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. போட்டிகள், விருதுகள், சான்றுகள் என ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 
ஹைக்கூ சற்று எழுதி பழகக்கற்றுக்கொண்டவர்கள் சக நண்பர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் தங்கள் பதிவுகளை முன் வைத்து நடத்துகின்றனர்.
யுகபாரதி கந்தகப்பூக்கள் அவர்களும் இதுகுறித்து விளக்கமளித்து வருதலை நானும் வாசித்து கடக்க தவறுவதில்லை.
ஹைக்கூ பற்றி நா.விச்வநாதன் அவர்களும் அடிக்கடி அடர்த்தியுடன் இவ்வகைமையில் கருத்துக்களையும் கவிதைகளையும் நகர்த்திச்செல்கிறார்.
ஹைக்கூ தோட்டம் என்ற குழுமம் ஆர்வத்துடன் தொடங்கி முழுதாக தொடரவியலாமல் நிறுத்தமும் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து ஹைக்கூ தோட்டம் , ஹைக்கூ உலகம் , எனது முகநூல் பக்கம் என்று அவ்வப்போது ஹைக்கூ பற்றிய கருத்துக்களை பதிவுசெய்து தற்போது இக்குழுவிலும் இதைப்பற்றி கருத்தினை இங்கு முதல்முறையாக பதிவிடுகிறேன்.
ஹைக்கூவை தெளிவுபடுத்தும் நபர்களின் வரிசையில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. 
இதைப்பற்றி புரிதலின்றி சிலர் எழுதிவருகிறார்கள் என்பது மேலோட்டமான கருத்து. சிலர் போலச்செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு. சிலர் அடிபிறழாமல் எடுத்து கவிதைதிருட்டு நடக்கிறது என்பதை ஆதாரத்தோடு எடுத்து பதிவது மனதை தடுமாறச்செய்துவிடுகிறது.
எது ஹைக்கூ ? அதை எப்படி எழுதவேண்டும் ? எப்படி அதை வாசிக்கவேண்டும் ? என்றெல்லாம் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன.ஒரு ஹைக்கூ படிப்படியாக எப்படி தோன்றியது என்றும் அது மூன்றுவரிகளில் எப்படி காட்சிபடுத்துகிறதென்றும்; அது முடிந்தபின் மனதிற்குள் விரிகிற காட்சிகளையும் கவிஞர்கள் அடிக்கடி சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
படங்கள் தந்தும்; இரண்டு வரிகள் தந்தும் ஹைக்கூவை பயிற்சியின் அடிப்படையென்று ஹைக்கூவை வலிந்தும் எழுத வைக்கப்பட்டு வருகின்றன.
ஹைக்கூவைப்பற்றிய செய்திகள்; கருத்துரைகள் எல்லோரும் கூறியது கூறலையே தரப்பட்டு வருகின்றன.
ஈரோடு.தமிழன்பன், நா.விச்வநாதன், மித்ரா, அமுதபாரதி, மு.முருகேஷ் மற்றும்பலர் ஹைக்கூவில் முத்திரை பதித்தவர்கள்.அவர்கள் நூலினை ஹைக்கூ எழுதவிரும்புபவர்கள் முழுமையாக வாசித்து பின் எழுதத்தொடங்கலாம்.
ஜப்பானிய ஹைக்கூக்கள் போல எழுதுவதென்றால் மனதில் ஜென் துளிர்க்க வேண்டும்.
தமிழக ஹைக்கூக்கள் சற்று வேறு நிலைப்பாடுகளில் பரவிகிடக்கிறது.
தெரிந்தவைகளையே சொல்லிக்கொண்டு இன்னும் வரிகளை நகர்த்தவிரும்பவில்லை. ஹைக்கூ உலகத்தில் ரமேஷ் இதனை சிறப்பாக வகைப்படுத்தியிருப்பார்.
சில புரிதல்களும் தெளிவுகளும் கவிஞர்களிடம் நிறைவாக இல்லையென்பதே ஹைக்கூவை பொருத்தவரை பொதுவில் வைக்கப்படுகிற ஒரு குற்றச்சாட்டு.
கவிஞர்கள் ஹைக்கூவை படைப்பதில் எந்த இடத்தில் கவனத்தை சிதறடித்து விடுகிறார்கள் என்பதை நான் வாசிக்கும் போது கவனிப்பதுண்டு.சில சமயம் சுட்டும்போது அது விவாதகளமாகவும்; தர்க்கமாகவும் மாறி மனதை உளவியல் ரீதியாகவும் பாதித்தும் இருக்கிறது.
நான் சரியான வழிகாட்டியா எனத்தெரியாது. இருந்தாலும் சில எனது அனுபவங்கள் உங்களுக்கு நல்ல ஒரு ஹைக்கூ எழுத மனதை கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை தான் அடிக்கடி எழுத தூண்டுகின்றன.
இன்றைய தினமலர் வாரமலரில் இதழின் பின் அட்டையில் பாரியன்பன், குடியாத்தம் அவர்களின் ஹைக்கூக்கள் பிரசுரமாகியிருந்ததை வாசித்தேன்.
நண்பர் பாரியன்பன் கவிதை சிந்தனை அதிகம் பெற்றவர். ஹைக்கூ , நவீனம் என்று எல்லா சிற்றிதழ்களிலும் வணிக இதழ்களிலும் முகநூலிலும் எழுதி வருபவர். எனது அருவி இதழிலும் தொடர்ந்து எழுதிவரும் இனிய நண்பர். சமீபத்தில் அவரது ஹைக்கூ நூலொன்றிற்கும் அணிந்துரை வழங்கியிருக்கிறேன். அவரது ஹைக்கூ கவிதைகள் இப்பதிவுக்காக இங்கு எடுத்துக்கொள்கிறேன்.
சில நிறைவுகளும் சில குறைகளும் இங்கு பொதுவில் வைப்பதால் எல்லோரும் திருத்திக்கொள்ளவும், ஒரு புரிதல் ஏற்படவும் இது பயன்படும்.
-இலைக்குப் பின்னால்
மறைந்து கொள்கிறேன்
பலத்த காற்றும் மழையும்.
சிறப்பான கற்பனை. இதை ஹைக்கூ என்று ஏற்கலாமா வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது ஒரு நவீன சிந்தனை.நவீன கவிதைத்தன்மையை உள்ளடக்கியிருக்கிறது.
கொஞ்சம் வரிகளை மாற்றிப்போட்டால் ஒரு ஹைக்கூவின் தன்மை பளிச்சிடும்.
- மறைந்து கொள்கிறேன்
இலைகள் பின்னால்
பலத்த காற்றும் மழையும்.
ஹைக்கூ மூன்றுவரி.ஒரு ஹைக்கூ இரண்டுவரியில் உள்ளது.
-முன் வாசலில் மணக்கிறது
கொடிமுல்லை.
ஆழ்ந்து யோசித்தால் சிறு மாற்றம் தரலாம்.
- ரசிக்கிறேன்
முன் வாசலில் கோலமில்லை
கொடி முல்லை.
பொதுவாக ஹைக்கூவிற்கு சொற்சிக்கனம் தேவை. ஒரு முறை எழுதிபார்த்துவிட்டு பொருள் மாறாமல் தேவையற்ற சொற்களை நீக்கலாம்.
பாரியன்பனின் ஹைக்கூ:
நேற்றின் மீதமிருந்தது
நெஞ்சில் உன் நினைப்பும்
சட்டியில் பழைய சோறும்.
இதை இப்படி சொற்கள் குறைத்து எழுதலாம் .
-நேற்றின் மீதமிருந்தது
உன் நினைவும்
கொஞ்சம் பழைய சோறும்.
பாரியன்பனின் இன்னொரு ஹைக்கூ:
-பிரார்த்தனைக்காக
ஏற்றப்படாத போதிலும்
கண்ணீர் சிந்தும் மெழுகுவர்த்தி.
கொஞ்சம்இப்படி மாற்றி யோசிக்கலாம்.
-பிரார்த்தனை
கண்ணீர் சிந்துகிறது
எரியும் மெழுவர்த்தி.
வாரமலரில் இன்று பிரசுரமான கவிதைகளில் சிலமட்டும் இப்படி அமைந்திருந்தால் ஹைக்கூ வாசிக்க சுவைகூடும் என்பதை முன்வைக்கிறேன்.
நணபர் பாரியன்பனுக்கும்; இக்குழுவிற்கும் வாசித்துக்கடப்பவர்களுக்கும் என் நன்றிகள்.
-காவனூர்.சீனிவாசன்.

மார்ச் 11, 2017

இதுதான் ஹைக்கூ விளக்கத்துடன் ராஜன் ராஜ்

சக்திப்பிரியன்    ஹைக்கூ
விளக்கம் - ராஜன் ராஜ்
அந்த ஹைக்கூவின் முதல் வரி
என ஆரம்பிக்கிறது. யாருக்கு நிறைமாதம் ஒரு பெண்ணுக்காக இல்லை விலங்கிற்காக என்பதை இங்கு தெளிபடுத்தடுத்தப்படுவில்லை கவிஞர்.
ஹைக்கூவை பொறுத்தவரை அது நல்ல சூட்சுமம் தான். அதையடுத்து ஹைக்கூவின் அடுத்த வரியை படித்தேன்.
என இரண்டாம் வரி நிறைவுகிறது. இந்த வரி முதலாம் வரிக்கான சந்தேகத்திற்கும் ஊகிப்பிற்கும் முற்றுப்புள்ளியாக அமைகிறது. விலங்கினத்தின் கர்ப்பம் பற்றி முதல் வரியில் கவிஞர் சொல்லவில்லை என்பதை இரண்டாம் வரி தெளிவாகச் சொல்கிறது. கணவன் சுமக்கிறான் என்னும் போது அவன் மனைவியாகத்தானே இருக்க வேண்டும்.
சரி ஏன் அவளை கணவன் சுமக்க வேண்டும். அன்பின் மிகுதியாலா இல்லை அவளால் நடக்க இயலாமையால, இல்லை பிரசவ வலியாலா அப்படியென்றால் வேறு ஏதும் வாகனமில்லையா அவளைச் சுமக்க, அப்படியாயின் குடும்பத்திற்கு வறுமையா என்னும் எண்ணங்கள் ஓடுகிறது.
இல்லாவிடின் வாகனத்திலிருந்து இறக்கி வேறு எங்கோ தூக்கியும் சென்றிருக்கலாம் தானே. எது எவ்வாறோ இருக்கட்டும் கணவன் தன் நிறைமாத கர்ப்பினி மனைவியை தூக்கிறான் என்பது மகிழ்வான விடயமே. தூக்குமளவிற்கு வீரமும் அவனுக்குள்ளது என்பதும் புலனாகிறது.
அத்தோடு கவிஞர் #சுமந்து_செல்கிறான்_கணவன் என இரண்டாம் வரியை முடித்திருப்பதிலிருந்து கவிஞர் தன்னைச் சொல்லவில்லை அதாவது அந்த கணவன் அவர் இல்லை என்பது புலனாவதோடு இங்கு கவிஞர் தவிர்ந்த இரண்டாம் நபர் பற்றியதாக இக் கவி அமைகிறது என்னும் முடிவை இரண்டாம் வரி எனக்களிக்கிறது. அப்படியே மூன்றாம் வரியையும் படித்தேன்
என மூன்றாம் வரி முற்றிலும் மாறுபட்டு அமைந்து திருப்பத்தை அளிக்கிறது. முன்பு நான் எதிர்பார்த்து ஊகித்த பலவற்றை மூன்றாம் வரி ஏமாற்றிவிட்டது. அந்நிலையில் மீண்டும் கவிதையை முழுமையாக ஒரு மூச்சாக படித்தேன்.
நிறைமாத கர்ப்பம்
சுமந்து செல்கிறான் கணவன்
ஒட்டகத்திற்கு தண்ணீர்
ஏன் கணவன் ஒட்டகத்திற்கு தண்ணீர் சுமக்க வேண்டும். ஒரு வேளை ஓட்டகத்திற்கு கர்ப்பமோ என எண்ணத் தோன்றுகிறது. அப்படியென்றால் தண்ணீர் சுமப்பவன் கணவன் என வருகிறதே மனிதன் எப்படி ஒட்டகத்திற்கு கணவனாக முடியும் என்னும் பெருத்த கேள்வி இப்போது எழுகிறது. அதற்கு ஒரு வேளை கவிஞர் பெண்பாலாக இருந்து அவருடைய கணவர் ஓட்டகத்திற்கு தண்ணீர் சுமந்து சென்றிருக்கலாம் அதை கவிதை எழுதும் அவனது மனைவி பார்த்து ஹைக்கூவாக சொல்லியிருக்கலாம் என நினைத்தால் பதில் சரியாக இருக்கும். ஆனால் சக்திபிரியன் திருமணம் ஆகாத ஒரு ஆண் என தெரிந்தவர்கள் இவ்வாறு நினைக்கமாட்டார்கள்.
பொதுவாக ஒட்டகங்கள் அரபு நாடுகளில் அதிகம் காணப்படும். சக்திபிரியன் அரபு நாட்டில் பணி புரிகிறார் அங்கு அவர் இப்படியான காட்சியை கண்டு எழுதியிருக்கலாம்.
அது எப்படியான காட்சி என்பதே இறுக்கமான முடிச்சாக அமைகிறது. கணவனும் மனைவியும் ஒட்டகத்தில் பிரயாணம் போயிருக்கலாம். அது அவர்களின் ஏழ்மையாலும் இருக்கலாம் இல்லாவிடின் செல்வந்த குடும்பமாக இருக்கலாம். பணக்கார குடும்பமெனின் பிறகு ஏன் ஒட்டகத்தில் மனைவியை ஏற்றிச் செல்ல வேண்டும் என்னும் கேள்வி எனக்கு எழுவது போல் உங்களுக்கும் எழலாம். கர்ப்பகாலங்களில் பெண்களின் ஆசைகளோ ஆச்சரியமானதாக அமையும். அவ்வாறான ஆசையால் இப் பெண் ஓட்டகத்தில் போக ஆசைப்பட்டிருக்கலாம். இல்லாவிடின் பணக்காரர்களுக்கும் ஏழ்மையை அனுபவிக்கும் ஆசை எழுவது சகஜமானதே அப்படியாகவும் இந்த காட்சியை பார்க்கலாம். பிறகு ஏன் ஓட்டகத்திற்கு தண்ணீர் சுமந்து வர வேண்டும் என்னும் கேள்வியும் எழுகிறது. ஒட்டகத்திற்கு தாகமோ அல்லது களைப்போ மயக்கமோ ஏற்பட்டிருக்கலாம் அதனால் நகரமுடியாமல் அது படுத்தபடியோ அல்லது நின்றபடியோ இருந்திருக்கும் தன் நிறைமாத மனைவியை அழைத்துச் செல்ல ஒட்டகத்திற்கு தண்ணீரை கொடுத்து அதன் களைப்பை போக்க முற்பட்டிருக்கலாம். அதற்காக கணவன் தண்ணீர் சுமந்து வந்திருக்கலாம் எனவும் எண்ணத் தோனுகிறது.
இன்னொர் வகையில் நிறைமாத கர்ப்பவதியான மனைவியை கவனிக்காத கணவனின் அசமந்த போக்கை சக்திபிரியன் நகைக்கிறாரோ எனவும் எண்ணத் தோனுகிறது. ஒட்டகத்தை வளர்க்கும் பராமரிக்கும் கணவன் தனது கர்ப்பமான மனைவியை கவனிக்காது பொறுப்பற்று இருப்பதை ஜாடையாக எள்ளி நகையாடி சொல்வது போலும் தெரிகிறது.
ஆனால் இதில் இன்னொர் படிகத்தன்மையும் உள்ளது. அது எப்படியாக என்றால் இந்த குடும்பம் ஒரு வறுமைக் குடும்பமாக இருப்பின் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் மனைவியின் மருத்துவச் செலவீனங்களுக்காக பாடுபாடும் கணவனின் உழைப்பையும் அவனுக்கு இருக்கும் இரு பக்க நெருக்கடியும் சக்திபிரியன் சொல்லியிருக்க கூடும்.
இப்படியாக பொருள் தேடலில் சிக்கல் தன்மை ஏற்படுவதற்கு காரணம் கவிஞரின் வெளிநாட்டு பணியே. இதனால் கவிதையின் காட்சி எந்த நாட்டிற்குரிய களமாக இருக்கும் என்பது இதிலுள்ள பெரிய சிக்கடியாகும். நான் நினைக்கிறேன் கவிதையின் முதல் வரியான
நிறைமாத கர்ப்பம்
என்பது தமிழகத்தை சுற்றியும் பின்னிரு வரிகளான
சுமந்துசெல்கிறான் கணவன்
ஒட்டகத்திற்கு தண்ணீர்
என்பவவை அரபு தேசத்தினை களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். அது எவ்வாறு என்றால் தன்னுடன் பணி புரியும் சக நண்பரின் மனைவி தமிழ்நாட்டில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கலாம். அதை பணிபுரியும் நண்பர் சக்திபிரியனிடம் சொல்லியிருக்கலாம். நண்பர் ஒட்டகத்தை பரமாரிக்கும் வேலையில் ஈடுபடும் போது சக்திபிரியனுக்கு நண்பர் முன்னர் சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வந்ததும் மூன்றாம் நிலை மனிதராக கவிதை எழுதியிருக்கலாம்.
இல்லாவிடின் ஒட்டகத்திற்கு தண்ணீர் வைக்கும் நண்பர் தன் மனைவியை பார்க்க முடியாமல் படும் அவஸ்தையும் ஆதங்கத்தையும் சொல்ல சக்திபிரியனின் கவிதை உள்ளம் விரிந்து அதனை உள்வாங்கி ஹைக்கூவாக மலரச் செய்திருக்கலாம் என்பதையே எனது முடிவான அனுமானமாக அமைகிறது.
எது எவ்வாறாயினும் ஒரு ஆணின்,உழைப்பு,வேதனை,ஆற்றாமை, ஆசை, வெளிநாட்டு வாழ்வில் இருந்தபடி உள்நாட்டிலிருக்கும் மனைவி மீதான அன்பு, கரிசனை என்பதை சொல்வதாகவும் அமைகிறது. ஒரு கோணத்தில் கணவனின் அசமந்த போக்கை சொல்வதாகவும் இக் ஹைக்கூவை கவிஞர் சக்திபிரியன் விரியச் செய்துள்ளார்.
இந்த கவிதையின் பொருள் இறுக்கத்திற்கு காரணம் காட்சியின் களங்கள் எங்கு என்பதை திட்டவட்டமாக சொல்லாமையே. அதுதான் இக் ஹைக்கூவின் வெற்றியுமாக மாறியிருக்கிறது.
நண்பர் சக்திப்பிரியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னொரு ஹைக்கூவோடும் இன்னொரு தேநீர் கோப்பையோடும் மீண்டும் வருவேன்.
பா.தா

மார்ச் 05, 2017

இதுதான் ஹைக்கூ - தெளிவு கொள்வோம்.

 Saradha Kannan - ராஜன் ராஜ் - நன்றி
#மூன்றடிக்கு நூறடிகள் விமர்சனம்.. 
ஹைக்கூ மீது அவருக்குள்ள தணியா தாகத்தை காட்டுகிறது..
சேவல் சண்டை 
காலில் பலத்த காயம் 
கூட்ட நெரிசல் - Saradha Kannan

#பலமான_ஈற்றடியோடு_ஒரு_ஹைக்கூ
ஒரு நல்ல ஹைக்கூ வாசகனுள் தரிப்பை ஏற்படுத்திவிடும். அந்தஹைக்கூ தன்னைப் பற்றி தேட வாசகனை அழைத்தும்விடும். அப்படியான ஒரு ஹைக்கூவை நேற்றிரவு Saradha Kannan அவர்களின் முகநூல் பதிவில் படிக்க நேர்ந்தது மகிழ்சியளித்தது என்பதோடு அதன் ஈற்றடி விசாரங்களை என் சிந்தைக்கு ஏற்படுத்தியது. அந்த கவிதையின் முதலாம் வரி
#சேவல்_சண்டை
என ஆரம்பமாகிறது. இவ்வரியை நான் படித்ததும் இயல்பாக இரு சேவல்கள் சண்டையிடும் காட்சி என் மனக் கண்களுதோன்றியது. நாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்குள் இவ்வாறு சேவல் சண்டை நிகழ்வது இயல்பானதே. என நினைத்துவிட்டு இரண்டாம் வரியை படித்தேன்.
#காலில்_பலத்த_காயம்
என இரண்டாம் வரி அமைந்திருந்தது. சரி யாரின் காலுக்கு பலத்த காயம் இரு சேவலில் ஒரு சேவலின் காலுக்கா இல்லை அந்த சண்டையை பார்த்திருப்பவருக்கா என்னும் எண்ணத்தை இரண்டாம் வரி கொடுத்திருக்கையில் மூன்றாம் வரியை படித்தேன்.
#கூட்ட_நெரிசல்
என மூன்றாம் முடிந்திருந்தது. மீண்டும் ஒரு மூச்சாக ஹைக்கூவை வாசித்தேன்.
சேவல் சண்டை 
காலில் பலத்த காயம் 
கூட்ட நெரிசல்
நாம் எதிர்பாராத ஆச்சரியமான திருப்பத்தைத்தான் இந்த மூன்றாம் வரி தந்திருக்கிறது. 
இந்த வரியால் என்னுள் எழுந்த பல ஐயங்களின் கட்டுக்களை என்னால் அவிழ்க்க முடிந்தது.
அந்தவகையில் இந்த சேவல்ச் சண்டை கிராம/நகரத்தில் இடம் பெறும் சேவல் சண்டை போட்டி என்னும் முடிவை ஈற்றடி தந்தது.
யாருக்கு பலத்த காயம் ஏன் பலத்த காயம் வர வேண்டும் என்பதற்கான புதிர்களுக்கான விடையும் இவ் ஈற்றடியிலே உள்ளது. சேவல் சண்டை போட்டியை பார்க்க பார்வையாளர்கள் நிறைந்திருந்திருக்கலாம். அதனால் இக் கவிஞரும் அக்கூட்டத்தில் நின்றிருக்கலாம் அதில் அவர் கால் மிதியுன்டு இருக்கலாம் இல்லாவிடின் வேறு ஒரு பார்வையாளனின் கால் மிதி பட்டு காயம் வந்திருக்கலாம். இல்லாவிடின் கவிஞருக்கு அல்லது வேறு பார்வையாளருக்கு ஏற்கனவே காலில் சிறு காயமிருந்திருக்கலாம் நெரிசலால் அது பலமாக பெரிதாக மாறியிருக்கலாம். இல்லாவிடின் மிதிபட்டு அல்லது காலில் ஏற்கனவே கவிஞருக்கு அல்லது வேறு ஒரு பார்வையாளருக்கு காயமிருந்திருப்பின் அவ் வலியை போக்க அமர முடியாத அளக்கு இருக்கும் சன நெருசலை கவிஞர் சொல்லி இருக்கலாம். இல்லாவிடின் உண்மையிலே கோழியின் காயத்தையும் சொல்லியிருக்கலாம். எனவும் எண்ணுகிறேன்.
இவற்றை விடுத்து இவ்வாறும் அமைந்திருக்க கூடும் சேவல் சண்டையிட அவற்றின் கால்களில் காயம் வர எந்தச் சேவல் வெற்றியீட்ட போகிறது என்னும் ஆர்வத்தில் மக்கள் கூடுவதையும் சாரதா கண்ணன் சொல்லியிருக்கலாம்.
இல்லாவிடின் சேவல் சண்டை நிகழ்த்த தடையிருப்பின் பொலிஸாரோ அல்லது அது குறித்த அமைப்போ வந்திருக்கலாம் அதனால் மக்கள் பீதியில் ஒடும் போது கீழே விழுந்து காயம் வந்திருக்கலாம், இல்லாவிடின் விழுந்தவரை மக்கள் மிதித்து காயம் வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
இவற்றைத் தவிர இவ்வாறும் நிகழ்ந்திருக்கக்கூடும். இரு தரப்பு சேவல் காரர்களின் வெற்றி தோல்வி சண்டையாக உருவெடுத்திருக்கலாம். அதில் யாருக்கோ பலத்த காயத்தை ஏற்படுத்தும் படியான தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம். இல்லாவிடின் அச் சண்டையில் பீதியுற்று மக்கள் ஓடும்போது யாரோ ஒருவரின் கால் மிதிபட்டோ விழுந்தோ காயப்பட்டிருக்கலாம்.
ஏன் இற்றையேல்லாம் விடுத்து சண்டைச் சேவல் பார்த்திருப்பவரை கொத்தியிருக்கலாம். காலில் காயமிருந்திருக்கலாம் அது கொத்து வாங்கிய பின் பலமாக மாறியிருக்கலாம். இல்லாவிடில் சேவல் தூரத்த சேவல் சண்டை பார்க்க வந்தவர்கள் கலைந்து ஓடியிருக்கலாம் அதனால் மிதிபட்டு விழுந்து யாரோ ஒருவருக்கு காயம் வந்திருக்கலாம்.
தவிர அரசியல் கட்சிகளின் கண்ணோட்டத்தோடு குறியீட்டு கவிதையாகவும் இதனை பார்க்கலாம் தொண்டர்களின் பாதிப்பு நிலையை சுட்டுவதாகவும் இக் ஹைக்கூ என் பார்வையில் அமையப் பெறுகிறது.
மேற் சொன்ன ஹைக்கூ குறித்த பார்வைகள் எனது பார்வைகளே நீங்கள் வேறு கோணங்களுடாகவும் பார்க்க இயலும் நண்பர்களே. அதில் தவறில்லை.
இந்த ஹைக்கூவின் முழுப் பலமும் இதன் சிறப்பான ஈற்றடியிலே அமைந்துள்ளது. அத்தோடு அது முன்னிரு வரிகளுக்கு இயைபுபட்டு வந்திருப்பதோடு பாரிய திருப்பத்தையும் கொடுத்துள்ளது. அருமையான ஹைக்கூவை படைத்த சாரதா கண்ணன் அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இப்போது சேவல் சண்டையை பார்த்த உணர்வுவோடு நிறைவு செய்கிறேன். மீண்டும் இன்னொரு ஹைக்கூவோடு வேறு பரிணாமத்தோடு வருவேன்.
பா.தா