டிசம்பர் 31, 2014

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! (பெண்ணியம்)

ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.

டிசம்பர் 15, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23

பொங்கல் திருநாள் - மாக்கோலம்
பசியாறும் எறும்புகள்
மிதித்துவிளையாடும் சிறுவர்கள்

இன்று அரிசி மாவில் கோலம் போடுவது என்பது அரிதே. இருப்பினும் சிலர் போடுகின்றார்கள். பொங்கல் திருநாள் விசேஷம் என்பதால் அரிசி மாவில் கோலம் போட்டு இருக்கின்றார்கள். அதை எறும்புகள் தின்று பசியாறிக்கொண்டிருக்கின்றன… சில எறும்புகள் சேமிக்க எடுத்து கொண்டும் சென்றிருக்கும்… செல்லும்… மூன்றாம் அடியில் மிதித்து விளையாடும் சிறுவர்கள் என்று இருக்கின்றது. மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் எறும்புகளை கவனிக்கமாட்டாடர்கள் என்பதை நாம் அறிந்ததே. அப்போது சில எறும்புகள் இறக்கும். என்னுடைய (தாய் மனதின்) கவலையெல்லாம் என்னவென்றால்…  அந்த எறும்புகள் சிறுவர்களைக் கடித்துவிடுமோ என்பதுதான்.

பொங்கல் திருநாள் - மாக்கோலம்
பசியாறும் எறும்புகள்
மிதித்துவிளையாடும் சிறுவர்கள் – ம. ரமேஷ்


டிசம்பர் 08, 2014

துப்பாக்கியிருந்தும்... பயம்!

துப்பாக்கியிருந்தும்
பயத்தோடு காவல்துறையினர்
நடுவில் விலங்கோடு திருடன்

நவம்பர் 20, 2014

புனிதம் தேடி...

கோயிலினுள் விழுந்தது
வில்வ இலைகள்

பெருக்கி குப்பையில் சேர்த்தார்

நவம்பர் 13, 2014

இந்திய வெற்றியும் மீனவர்கள் சிறைபிடிப்பும்

இலங்கையை
வென்றதற்காக
பட்டாசு வெடித்து
நாடாளு மன்றத்தில்
பாராட்டு தெரிவித்து
கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுகிறது
இந்தியா.
மறுநாள்…
மீன் பிடிக்கச் செல்லும்
தமிழக மீனவர்களின்
படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன
மீன்கள் களவாடப்படுகின்றன
மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்
படகையும் மீனவனையும்
சிறை பிடிக்கிறார்கள்.
கிரிக்கெட்டில்
இலங்கை தோற்றால்
மீனவர்களே
அந்தப் பக்கம் செல்லாதீர்!


ஞான மடைதல்...

முற்றும் நனைந்த பிறகு
ஒதுங்கி நின்றேன்.
நனையாமல் ஒரு குருவி!

நவம்பர் 11, 2014

பணம் காய்க்கும் மரங்கள்!

வெட்டி கடத்தப்படும்
மரங்கள்; பணம் காய்க்கும்
மரங்கள்

நவம்பர் 07, 2014

முள்மேல் வண்டு

ரோஜா முள்மேல்
காத்திருக்கிறது வண்டு
பூக்களில் பனித்துளி

அக்டோபர் 27, 2014

அம்மாவுக்கு மொட்டை!

மக்களுக்கு மொட்டைப் போட்ட
அமைச்சர்களே; இன்று போட்டுக்கொண்டார்கள்.
அம்மாவின் ஜாமினுக்காக!


அக்டோபர் 24, 2014

வழி தவறிய...

வழி தவறி வந்திருக்கிறது
எப்போது அதன் இடம் சேரும்
நத்தை

அக்டோபர் 16, 2014

போலீஸ் கொலை - ஹைபுன்

செய்தித்தாள் திருப்பினேன். கொலைகள் நிறைந்த செய்திகள். காதலை மறுத்தவள் கொலை. கள்ளக் காதல் கொலை… பணத்துக்காக கொலை… நகைக்காக கொலை… பகைக்காக கொலை…அரசியல் கொலை… ஆனால் இதைப் படிக்கும்போது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை: விசாரணைக்கு சென்றவர் காவல்நிலையத்தில் கொலை.

கொலைபழி வேண்டாம்
போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப்போங்கள்
அவர்களே கொன்றுவிடுவார்கள்!

அக்டோபர் 13, 2014

நல்ல நேரம் - ஹைபுன்

காலையில்
நாள் காட்டியைப் பார்த்தேன்.
ராசி சரியில்லை.
தொலைக்காட்சியைப் பார்த்தேன்
ஒவ்வொன்றிலும்
மாற்றி மாற்றி சொன்னார்கள்.
வருத்தமாக வெளியே சென்றேன்.
நண்பன் விசாரித்தான். சொன்னேன்.
அவன் நல்ல ஐடியா சொன்னான்.
ஒரு வருச காலண்டர்ல
எந்த ராசிக்கு நல்லதா போட்டிருக்கோ
அந்த ராசிக்கு ஏத்த மாதிரியே
வருசா வருஷத்துக்கும்
பேர மாத்திக்க

காலையிலேயே மழையென்று
நொந்து கொண்டார்கள்
மகிழ்ச்சியில் குழந்தைகள்

இப்படியும் எழுதலாம் என்பதற்காக சில

எல்லாவற்றிற்கும்
தீர்வுகள் கிடைக்கிறது
நண்பர்களிடம்

கால நேரம்
எல்லாருக்கும் ஒன்றுதான்
மகிழ்வில் இருக்கிறது வாழ்க்கை



அக்டோபர் 05, 2014

மனம்...

அசையும் செடிகள்
பாம்பு போகுமா!
காற்று அசைக்கிறது.

செப்டம்பர் 24, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாக ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதோ? அதற்காக வருந்துவதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா?  

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

-       கவியருவி ம.ரமேஷ்

செப்டம்பர் 22, 2014

பாட்டியின் தவிப்பு

மேளச் சத்தம்
தகவல் போய் சேரவில்லை
கொல்லையில் தவிக்கும் பாட்டி

செப்டம்பர் 18, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 21

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!
முதல் இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஐயப்ப பக்தர்கள், தினம் உறங்கி எழுகிறார்கள் என்பதில் என்ன செய்தி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறது. தப்பு என்று நாம் நினைக்கும் செயல்களை செய்யாதவர்களாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு இருக்கும்போது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் பக்தர்கள் எவ்வாறு, எப்படி, எந்த மனநினைவில், மகிழ்ச்சியில், துன்பத்தில் எழுகிறார்கள் என்று முதலிரண்டு அடிகள் விரியும். மூன்றாவது அடியைப் படிக்கிறோம். பிள்ளையார் கோயில் என்று இருக்கிறது. என்ன வியப்பு பாருங்கள். ஐயப்ப பக்தர்கள் தினம் தினம் உறங்கி எழுவது பிள்ளையார் கோயில்! கடவுளின் உருவங்கள் வெவ்வேறு என்றாலும் கடவுள் ஒருவர்தானே!

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!

-       கவியருவி ம.ரமேஷ்

செப்டம்பர் 17, 2014

காகம் - காக்கை

மாடிவீட்டில் அமர்ந்த காக்கை
பசியில் கரைந்துகொண்டிருந்தது
குடிசையில் உண்டு பறக்கும் காக்கை…

செப்டம்பர் 15, 2014

முள்மேல் வண்டு

முள்மேல் அமர்ந்திருக்கிறது
அதிகாலையில் வண்டு
பூக்களில் பனித்துளி

செப்டம்பர் 08, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 20

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.

யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன், அவளை கை விட்டுவிட்டானா? அவனோடு வாழ இவளுக்குப் பிடிக்கவில்லையா? எதுவொன்றும் தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் இந்த ஹைக்கூ (இது ஹைக்கூ இல்லை, இது சென்ரியூ)வின் சிறப்பு. எனக்கு என்னவோ… ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எல்லோருக்குள்ளும் இருக்கும் மன நிலையில் அவள் பெற்றோர்களைப் பார்க்கவோ அல்லது பெற்றோர்கள் சமாதானம் அடைந்துவிட்டதால் அவள் வீடு வந்திருப்பாளோ என்றுதான் தோன்றுகிறது. சரி… அவன் ஏன் அவளுடன் வரவில்லை? உங்களுக்கு என்னென்னவோ தோன்றலாம்…
நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.
- கவியருவி ம.ரமேஷ்

செப்டம்பர் 04, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19

சுடுமணல்; மரமேதும் இல்லை
குயிலின் மெல்லிசை!
புல்லாங்குழல் விற்பவன்.

முதல் இரண்டு அடிகளில் சுடுமணல், மரம் இல்லை, குயிலின் மெல்லிசையை படிக்கிறோம். சுடுமணல் என்பதால் ஆறு நினைவுக்கு வருகிறது. மரம் ஏதும் இல்லை என்பதால் நிழல் இல்லை அதனால் மணல் சூடாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறோம். மரம் இல்லை என்றால் குயிலின் மெல்லிசை எங்கிருந்து வந்திருக்கும்? அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம்.  ‘புல்லாங்குழல் விற்பவன்’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன? ஆகாதுதானே? இப்படிச் சிந்தித்து ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்ப்போம். (முதல் அடியில் ‘சுடுமணல்’ வலிந்துதான் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடியின் பொருள் சிறக்க. சுடுமணலில் – நண்பகல் வேலையிலும் அவன் கடற்கரையில் உழைப்பதை எடுத்துக்காட்ட.)


ஆகஸ்ட் 31, 2014

காதலியின் முகவாட்டில்...

மனைவியோடு
தூலீப் மலர்களை ரசிக்கையில்

காதலியின் முகவாட்டில் சிலர்

ஆகஸ்ட் 27, 2014

ஒரு சின்ன ஆசை...

சின்ன ஆசைதான்
என்னைப் பார்க்கும் குழந்தைகள்
கை அசைக்க வேண்டும்.

ஆகஸ்ட் 26, 2014

நீதி கிடைத்தும்... சென்ரியூ

நீதி கிடைத்தும்
அப்படியேதான் நின்றுகொண்டிருக்கிறாள்
ஒற்றைச் சிலம்போடு கண்ணகி

ஆகஸ்ட் 22, 2014

பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!

டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
ஐசியுதான் வெச்சி பாக்கனும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
ரொம்ப சீரியஸ்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!

ஆகஸ்ட் 14, 2014

ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள் (பெண்ணியம்)

என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்.

ஆகஸ்ட் 07, 2014

கோயில் - ஹைக்கூ

கோயில் பக்கத்திலே வீடு
நறுமனம் கமந்தாலும்
வீட்டில் ஊதுவர்த்தி

மயில்மேல் முருகன்
முருகன்மேல் புறாக்கள்
கோபுர தரிசனம்

ஜூலை 30, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 18

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
-       கவியருவி ம.ரமேஷ்

வயல்வெளியின் பசுமை கண்களை கவ்விக்கொள்ளும்… அத்துணை அழகு… மழையின்றி வயல்வெளிகள் வறண்டு போயிருப்பதை காண்கிறோம். மனம் வருந்துகிறோம். ஹைக்கூவில் வயல்வெளி பசுமையாக இருக்கிறது (முதலிரண்டு அடிகளில்). ஒரு சமயம் மழைக் காலமாக இருக்கலாம் போல. பசுடையாக என்ன தெரிகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை – எந்தப் பயிர் வகை என்பதும் புரியவில்லை… நெல், கம்பு, சோளம், கரும்பு, வாழை என்று எதாவது இருக்கும்போல… எது இருந்தால் என்ன? பசுமையாக இருக்கிறது என்றால் அந்த நிலப்பரப்பின் விவசாயியும் வருமானம் பார்ப்பான் அவன் மனசும் பசுமையாக இருக்கும் என்று நம்புவோம்.

ஆனால், 3 அடியில் உயர்ந்து நிற்கும் காடு என்று இருக்கிறதே!. அப்போது வயல்வெளி (இரண்டு மூன்றாம் அடிகள்)? மேற்கண்ட பயிர் வகைகள் எதுவும் இல்லையா? காடுதான் பசுமையாக இருக்கிறதா? வயல்வெளி தரிசாக இருக்குமோ? அல்லது வயல்வெளி வீட்டு மனைகளாக்கப்பட்டு இருக்குமோ? காடுகளை அழித்து  வீட்டு மனைகள் போடுவதை கண்டிருக்கிறோமே… தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு ஹைக்கூ எழுதுங்கள். 

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
-       கவியருவி ம.ரமேஷ்


ஜூலை 21, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17

குளத்தில் முகம் அளம்பி
மொட்டுக்களைப் பார்த்தேன்
மலரத் துவங்கியது
-       கவியருவி ம.ரமேஷ்

நேரடியாக 3 வது அடிக்குச் செல்கிறேன்: மலரத் துவங்கியது எது?  மனசா? தாமரையா? என்ற கேள்வி எழலாம். மனசு சரியில்லை என்று கோயிலுக்குச் சென்றிருந்திருக்கலாம். அந்த மனசு மலர்ந்திருக்கலாம். அவருக்குப் புதிய சிந்தனைகூட  மலர்ந்திருக்கலாம். ஏன் தாமரையே கூட மலர்ந்திருந்திருக்கலாம். அவர் சென்றது காலை நேரமாக இருந்திருக்கலாம் அப்போது சூரியன் வர தாமரை மலரத் துவங்கி இருக்கலாம். 2,3 ஆம் அடிகளைச் சேர்த்துப் பார்த்தால் (மொட்டு) – காதலியின் நினைவோ  – காம நினைவுவோ கூட  மலரத் துவங்க வாய்ப்பிருந்திருக்கும்… எனக்கு இப்படியான சிந்தனைகள்… உங்களுக்குள் என்னென்னவோ… முடிந்தால் சொல்லுங்கள் – ஒரு ஹைக்கூ எழுதுங்கள். மகிழ்வேன்.

ஜூலை 17, 2014

கடவுள்... அழுகை!

மாட்டியிருந்த படத்திலிருந்து
ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார் கடவுள்
சுவற்றில் முட்டிக்கொண்டு அழகை!
- கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ (கவிதை)

ஜூலை 11, 2014

காதலியிடத்தில்...

தூணிலும்  துரும்பிலும்
இருப்பவன்  நீ
என்  காதலியிடத்தில்
இல்லாமல்  போய்விட்டாயே?

என்  கவிதைகள்
காதலைச்  சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறு உயிர்ப்போடு  துளிர்க்கிறது

காதலியிடம்
குறை  இருக்கலாம்
அவள் 
என்ன  செய்வாள்  பாவம்?
அது
இறைவனின்  குறை 

ஜூலை 04, 2014

காதல் விளையாட்டு

இளமையைப் 
பரிசாகக் கேட்கிறது... 
காதல் விளையாட்டு! 

ஜூலை 03, 2014

அழுகாச்சி...

அழுவதுபோல்
என்னமாய் நடிக்கிறது
புற்களில் பனித்துளி

ஜூலை 01, 2014

பேஸ்புக்

என்னத்தான் படிச்சி கிழிச்சியோ
இதற்கும் கிடைக்கும் லைக்
பேஸ்புக்

மரணம் - ஹைக்கூ

பனித்துளியை இழந்ததற்காக
மரணிக்கிறது
கோடைகால புல் 

ஜூன் 23, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 16

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி

கிராமத்துப் பாட்டி என்று எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது? சரி… ஏன் அந்தப் பாட்டி கை எடுத்து கும்பிடுகிறார்? எங்கு நின்று கும்பிடுகிறார்? யாரைப் பார்த்துக் கும்பிடுகிறார்? விலாசம் எதாவது தவறியிருக்குமோ? கையெடுத்துக் கும்பிட்டு பிச்சைகிச்சை எடுத்துக்கொண்டு இருக்குமோ? பெற்ற பிள்ளைகளிடமே எதற்காகவாவது கெஞ்சிக்கொண்டு இருக்குமோ? என்று எவ்வளவோ பொருள் இருக்கலாம் அந்தப் பாட்டியின் கை எடுத்து கும்பிடுதலுக்கு. எல்லாரும் ஏதோ ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். பாட்டி எதற்காகவோ இரந்து நின்றால் அது சென்ரியூ. எந்த உதவியும் கேட்காமலிருந்தால் அது ஹைக்கூ. சரி மூன்றாவது அடிக்கு வருவோம்.

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
மங்கிய சூரிய ஒளி

அப்பாடா… மங்கிய சூரிய ஒளி தானா? ஓகோ… அந்தப் பாட்டி சூரியனை வணங்கி இருக்கிறார். மங்கிய சூரிய ஒளி என்ற மூன்றாவது அடிக்கு வருவோம். ஏன் மங்கலாகத் தெரிகிறது. பாட்டி வயதாகிவிட்டதன் காரணமா? கண் குறைபாட்டின் காரணமா? அல்லது சூரியனே மங்கலாகத் தெரிந்தானா?

சரி… ஹைக்கூவை இன்னும் சுருக்கலாம் இப்படி:

இரண்டாவது அடியில் கிராமத்துப் பாட்டி என்று இருப்பதை பாட்டி என்று சுருக்கிக்கொள்கிறேன். காரணம் கிராமம் என்ற சொல் இடம் பெற்றதால் அது நகரத்துப் பாட்டிகளை தவிர்த்துவிடுகிறது. முதல் அடியில் இருக்கும் கும்பிடும் என்பதை இரண்டாவது அடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.

கையெடுத்து
கும்பிடும் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
©    -கவியருவி ம.ரமேஷ்

(என் பாட்டி இறக்கும் வரையில் சூரியனை வணங்கியதைக் காலைப் பொழுதில் கண்டிருக்கிறேன். அதை நினைத்து எழுதிய கவிதை இது. நீங்களும் உங்கள் பாட்டியை நினைத்து ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதி பகிருங்களேன்.)

ஜூன் 20, 2014

மரத்தின் நிழல் - ஹைக்கூ

அடந்த மரத்தின் நிழல்
வெளியே வந்து உள்ளே போனது
ஜோசியக் கிளி

ஜூன் 19, 2014

ஜூன் 17, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 15

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்

மரக்கிளையில் ஏதோ ஒரு பறவை கூடுகட்டி குஞ்சு பொறித்துள்ளது. குஞ்சுகள் மரக்கிளையிலிருந்து விழுவதாய் அச்சப்படுகின்றனவே ஏன்? பலத்தக் காற்றா? யாராவது மரத்தை வெட்டுகிறார்களா? பயப்படும்படி குஞ்சுகளை விட்டுவிட்டு தாய்ப் பறவை எங்கே சென்றது? ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை? என்று நீள்கிறது முதல் இரண்டு அடிகள். மூன்றாவது அடியில் “தாவி விளையாடும் குரங்குகள்” என்று படிக்கும்போது மனது நிம்மதியாகிறது. அப்படியானால் குஞ்சுகள் விழ வில்லை. குரங்குகள்தான் அவை பயப்படும்படி விளையாடுகின்றன. குரங்குகளுக்கு விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குஞ்சுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. தாய்ப் பறவைக்கு குரங்குகளின் விளையாட்டு வாடிக்கையாகிவிட்டிருக்கும். குஞ்சுகள்தான் பழக்கிக்கொள்ள வேண்டும்.

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
©    -கவியருவி ம.ரமேஷ்

ஜூன் 12, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

என்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால்  ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள்  வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:

துளிர்க்கும் மரம்
மீண்டும் வெட்டப்படுகிறது
சேடையில் மக்கும் தளைகள்


மேற்கண்ட ஹைக்கூவில் இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால் ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில் – பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர் மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)