செப்டம்பர் 24, 2013

சோம்பேறிக் கடவுள்! (கடவுள் கடவுளாகிப்போனார் -22)

கடவுள் கடவுளாகிப்போனார் -22

கடவுளுக்கு உடல்நிலை
சரியில்லையென்று
மருத்துவமனை சென்றார்.
மருத்துவம் பார்த்து
பில் கொடுக்கப்பட்டது.
மீண்டும்
உடல்நிலை சரியில்லாமல் போனது.
கடவுளுக்குச் சோம்பேறித்தனம்
தொற்றிக்கொண்டது
சரி அப்புறம் பார்க்கலாம்
பார்க்கலாம் என்று
காலம் தாழ்த்தினார்.
ஒரு நாள் ஆம்புலன்ஸில்
போய் இறங்கினார்
அட்மிட்ஷன் நடக்கும் முன்பே
நான்கு லட்சம்
கட்டச் சொன்னார்கள்!
கடவுள் மறுத்து
மருத்துவம்  பாருங்கள்
பின்னர் கட்டிக் கொள்கிறேன் என்றார்!
முதலில் பில்
பின்னர்தான் ட்ரீட்மென்ட்
வாழ ஆசைப்பட்ட கடவுள்
பணம் கட்டினார்!
பணம் கட்டினார்!!
பணம் கட்டினார்!!!
நோய் குணமாகவே இல்லை
இறந்து போனார்!

இறப்பதற்கு முன்புதான்
புத்தி வந்தது கடவுளுக்கு!
நாமாக நடந்து சென்றால்
மருத்துவம் பார்த்த பின்னர்
பில் தருகிறார்கள்
நம்மை யாராவது தூக்கிச் சென்றால்
முதலில் பணம் கட்டு என்கிறார்கள்.

செத்தப் பிணங்களுக்குக் கட்டிய
பணங்களில் வாழ்கிறது
நவீன மருத்துவமனைகள்

செப்டம்பர் 21, 2013

நிர்வாணத்திற்கு வெட்கமில்லை…

எத்தனை
படங்களில் தொலைக்காட்சிகளில்
ஆடையிழந்து நிற்கும்
ஹீரோயினிக்கு
ஹீரோக்கள்
தன் ஆடையைக் கழற்றி கொடுத்திருப்பார்கள்.
ஆடையின்றி
நிற்கும்
ஹீரோக்கு
ஏன் எந்த ஹீரோயினியும்
 தன் ஆடையைக் கழற்றிக் கொடுப்பதில்லை!

பெண்ணே!
அரை நிர்வாணம்
வெட்கமில்லை என்னும் நீ
நிர்வாணத்தை
மறைக்கத் தானே நினைக்கிறாய்
பின் ஏன்
ஆடை சுதந்திரம் பற்றிய பேச்சு?

ஆடையின்றி இருப்பதில்
ஆணென்ன பெண்ணென்ன?
நிர்வாணம்
அசிங்கம் அசிங்கம்தானே!

செப்டம்பர் 19, 2013

ஓடிப்போனவள்… ஹைபுன் -24

கல்யாண வரவேற்பு தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. எல்லாம் முடிந்து உறங்கி எழுந்தார்கள். திரைப்பட பாணியில் மணப்பெண் காதலனோடு ஓடிவிட்டாள் என்று மண்டபத்தில் ஒரே பேச்சு. மண்டபம் அல்லோலப்பட்டது. ‘சனியன் இப்படிச் செஞ்சிபுட்டாளே நீதான் கண்ணு நம்ம குடும்ப மானத்தைக் காப்பாத்தனுமுன்னு’ ஓடிப்போனவளின் தங்கையின் காலில் விழுந்து கொஞ்சி சம்மதம் வாங்கிவிட்டார்கள். மாப்பிள்ளை பெருந்தன்மையோடு சம்மதித்தான். அவள் கழுத்தில் தாலி கட்ட கொட்டப்பட்ட கெட்டிமேள தாளத்தில், அக்காவின் திருமணத்தைச் சாக்காக வைத்து அழைத்திருந்த கல்லூரிக் காதலன் அழுதுகொண்டான். யார் காதலில் ஜெயித்தது?

ஆயிரங்காலத்துப் பயிர்
பிடுங்கி நடப்படுகிறது
வாடி வதங்கிப்போனது மனசு

இப்படியும் எழுதலாம் என்பதற்காகச் சில…

எல்லாம் முடிந்தபின்
வருந்துகிறார்கள்
மனிதர்கள்

மனிதனுக்குக் காதல் முக்கியம்
அதை விடவும் தேவையாகிறது
சமுதாயத்தில் மதிப்பு

இணைந்த உள்ளங்களை
பிரித்து வைத்தது
திருமணம்

செப்டம்பர் 12, 2013

கடவுள் கடவுளாகிப்போனார் -21

கடவுளுக்குப் போர் அடித்தது
திரைப்படம் பார்க்கப் போனார்

செய்தித் தாள்கள்
திரைப்பட விமரிசனங்கள் எல்லாம்
உண்மை சம்பவம் என்றது
ஆவல் பொங்க
சம்பவம் பார்க்க காத்திருந்தார்

புகைப்பிடித்தல்
உடல் நலத்திற்குக் கேடு
புற்று நோயை உண்டாக்கும்
உயிரைக் கொல்லும்!

ம்... கொல்லும் கொல்லும்
என்றது ஒரு குரல்

கடவுளுக்கு ஆரம்பமே அதிர்ச்சி
பெயர், பாத்திரங்கள், கதை, கதைக்களம் எல்லாம்
கற்பனையே!

எல்லாம் பழக்கப்பட்ட
கதைதான்
நடிகன், நடிகைதான் வேறு!

அப்புறம் என்ன
கதற கதற  கற்பழிப்பு நடந்தது
இந்தக் காட்சி
சித்திரிக்கப்பட்டது என்றது

முத்தம், கட்டிப்பிடிக்கும்
காட்சிகள் எல்லாவற்றிற்கும்
கற்பனையே என்று எழுத்து வந்தது

பேருந்து, ரயில், விமானத்தில்
சண்டை காட்சிகள்
எரிந்த அனைத்தும்
கிராப்பிஸ் என்றது
நடிகனும் டூப் என்றது

அப்புறம் எதுக்கு அவனுங்களுக்கு
கோடி கோடியா சம்பளம் என்றான் ஒருவன்

யார்ஆ அவன்
அதான் அப்ப அப்ப
ஸ்கிரின்ல
புகைபிடிக்காதீர் என்று
போடறான் இல்லை… அறிவில்ல…

டே நிறுத்துடா…
அப்படி உயிரை கொல்லறதா இருந்தா
கவர்மென்டே
கம்பனிகளை
இழுத்து மூடியிருக்குமுடா!

கடவுள் புகையை
நுகர்ந்தவாறே வெளியேறினார்.
ரசிகன் கட்டவுட்டுக்கு
பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது…

பொழுது போக்கு என்று
அதிலேயே பொழுதை போக்கி விடுகிறார்கள்...

தலையில் அடித்துக்கொண்டு நடந்தார்
கடவுள்!

செப்டம்பர் 05, 2013

காதல் செத்தா என்ன?

எதுவானாலும் என்ன? சரி,
நாம் ஒன்று நினைக்க
தெய்வம் ஏன் வேறு நினைக்கனும்

தள்ளி நின்ற பேருந்துக்காக
ஓடும் பணிப் பெண்கள்
ரசிக்கும் கண்கள்

காமம்
கண்ணை மறைக்கும்
ஆங்காங்கே போஸ்டர்

அங்கொரு காதல்
இங்கொரு காதல்
காதல் செத்தா என்ன?

காமத்தீயை அணைக்கும்
ரம்பை மேனனை ஊர்வசிகள்…
நடிகைகள்

செப்டம்பர் 03, 2013

அதே பிச்சைக்காரி! குழந்தையாய் நான்!!!

கோயில் முன்
பூமாலை வாங்க நின்றேன்-

குழந்தையோடு பிச்சைக்காரி
சாப்பாட்டுக்கு எதாவது குடு ‘சாமி’
பர்சை துலாவினேன்
1,2,5 சில்லறைகள்கள் இல்லை
பத்து ரூபாய் நோட்டு தென்பட
‘சில்லறை இல்ல போமா’ என்றேன்.
“அப்பா பத்து ரூபாயைக் கொடுத்துடுப்பா
குழந்தைய பாக்கப் பாவமா இருக்கு” என்றான் மகன்.
கை, கால் நல்லாதானே இருக்கு
போ… மா…

தரிசனம் முடித்து-
100 ஐ மகனிடம் கொடுத்து
உண்டியலில் போடு என்றேன்.
“ஏம்பா…
சாமிக்கு கை, கால் நல்லா தானே இருந்திச்சி
ஒடைஞ்சி போயில்லையே?” என்றான்.

டே… சாமி கண்ண குத்தப்போவூது…
என்று பலவந்தமாகக்
கையைப் பிடித்து
உண்டியலில் நுழைத்தேன்.

மாலை நேரம் –

இரண்டு பேர் வந்தார்கள்.

‘அந்தச் சாமி’க்கு கூழ் ஊத்துறோம்
டொனேஷன் என்றார்கள்…

பாக்கெட்டிலிருந்து பணம்
எடுத்துக்கொடுத்தேன்.

500 கொடுத்தாதான்
கௌரவமா இருக்கோ என்று
மனைவி கட்டிலில் சிணுங்கினாள்.

காலையில் அந்தப் பிச்சைக்காரிக்கு
10 கொடுத்திருக்கலாமோ என்ற
சிந்தனையில் உறங்கினேன்.

கனவில்
அதே பிச்சைக்காரி

குழந்தையாய் நான்!

செப்டம்பர் 01, 2013

மெல்லிய தீண்டல்

ஹைக்கூ

அப்படியும் இப்படியும்
பார்க்கும் கண்கள்
மோனோலிசாவின் ஓவியம்

உதிர்ந்திருக்கும் சருகுகள்
அழகாய்த் தெரிகிறது
தெருக்கள்

மழை, வெயில்
வீடின்றித் தவிக்கிறது
வயலில் காவல் பொம்மை

மெல்லிய தீண்டல்
சிலிர்க்கிறது

மலரும் பூ

- அருவி இதழில் பிரசுரமானது. அருவி இதழ் எண் 18

அருவி
14, நேரு பஜார்
திமிரி
வேலூர் மாவட்டம் - 632 512