ஆகஸ்ட் 22, 2015

டாஸ்மாக் - பள்ளிக்கூடம்

புதியதாய் ஒரு டாஸ்மாக்
திறக்க… மூடப்படுகிறது
நாலுபேர் படித்த பள்ளிக்கூடம்

ஆகஸ்ட் 19, 2015

மகாகவி இதழில்...

மகாகவி இதழில் அமரன் அவர்கள் அப்துல் ரகுமான் முதலாய்… தமிழ் ஹைக்கூத் தொடர் ஆங்கிலத்தல் என்ற ஹைக்கூ தொடரை எழுதி வருகின்றார். தமிழ் ஹைக்கூக் கவிஞர்களின் ஹைக்கூக்களை ஆங்கிலத்தின் மொழிப்பெயர்த்து தமிழ் ஹைக்கூக்களின் புகழினை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் அவரின் இப்பணிக்கும் இதழை வெளியிடும் மகாகவி இதழ் ஆசிரியர் வதிலை பிரபா அவர்களுக்கும் என் நன்றிகள்.


ஆகஸ்ட் 18, 2015

டாஸ்மாக்

புதிய பேருந்து நிறுத்தங்கள்
முகசுழிப்பில் பயணிகள்!
டாஸ்மாக் முன் குடிமக்கள்.

ஆகஸ்ட் 17, 2015

ஹைக்கூவில் பருவ காலங்கள்

ஹைக்கூவில் பருவ காலங்கள் 
ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்கேற்றபடியும் கருத்துக்களுக்கேற்றபடியும் பிரிக்கப்பட்டன. அதில் ஐந்து பருவங்கள் உள்ளன. புத்தாண்டு, வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் காலம் என ஐந்தாகும். தற்காலத்தில் பருவகாலமின்றி எழுதுவது வழக்கமாகிறது; பருவம் தெரிவிக்கப்படாமல் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் ஒரு மறைமுகமான கருத்து ஏதாவது ஒரு பருவத்தைப் பற்றி இருக்கும்போது கவிதை மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. நாமும் தமிழ் ஹைக்கூக்களை மதிப்புடையதாகச் செய்வோம். பருவ காலங்களுக்கான பகுப்புகள் (கருப்பொருள்) கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மித்ரா, நெல்லை சு. முத்து, நிர்மலா சுரேஷ், பரிமளம் சுந்தர் ஆகியோரின் ஹைக்கூ ஆய்வு நூலிலிருந்து தொகுக்கப்பட்டு எடுத்துக்காட்டப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

வசந்த காலம்:
வசந்த காலம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் வருவதாகும்.
பருவம், தட்ப வெப்பம்:
நெடிய பகல், மெல்ல நகரும் நாள், இளவேனில் பகல், இளவேனில் கனவு, நெருங்கும் கோடை, வெப்பம், அமைதி, தெளிவு, குளிர்ச்சி.
வானவியல் பகுப்பு:
மங்கிய நிலவு, நிலவொளி, உறைபனி, மாலைப் பனி, பலமான காற்று, கிழக்குக் காற்று, இனிய தென்றல், மங்கிய காலை சூரிய ஒளி, வசந்த கால நிலவு.
புவியியல் பகுப்பு:
காடும், பெயரில்லாத மலையும், மூடுபனி, கடற்கரை, மந்தமான நீரோட்டம், நீளமானகரை, கடலின் நீரோட்டம், நீரின் சத்தம், சதுப்பு நிலம், கறம்பு நிலம், பசுமையான வயல்கள், தொலைவில் உள்ள வீடுகள்.
வாழ்வியல் பகுப்பு:
கடற்கரை மணலில் காலடிச் சுவடுகள், காதல் செயல்கள், வேட்டையாடுதல், நெல்விதைத்தல், தேயிலை பறித்தல், கிளிஞ்சல் சேகரித்தல்.
விலங்குகள்:
காதல் பூனைகள், பூனைக் குட்டிகள், எலிவளை, குயில், முயல், புறா, ஆந்தை, காட்டு வாத்து, கொக்கு, நாரை, கோழி, தவளை, தவளைக்குஞ்சுகள், மணலில் குளிக்கும் குருவிகள்.
தாவரங்கள், பூக்கள்:
தாமரை, புன்னைமரம், பலதரப்பட்ட கோரைகள், நடனமாடும் கொடி, புற்கள், பூண்டுகள், கடல்பாசி, வெங்காயப் பூக்கள், மலை ரோஜா போன்றவை.

கோடை காலம்
மே, ஜூன் மாதங்களை உள்ளடக்கியது இது.
பருவ, தட்பவெப்பப் பகுப்பு:
கோடைக்காலைத் துவக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு, குறுகிய இரவு.
வானவியல் பகுப்பு:
ஜூன் மழை, திடீர் மழை, வானவில், மின்னல், கோடை காலப் புயல்காற்று, குளிர்காற்று, கோடை மழை, வெப்பக் கதிரவன், எரியும் கதிரவன்.
புவியியல் பகுப்புகள்:
பச்சை மலைகள், தோட்டம், அமைதியான மலை, தோட்டத்தில் சூடான பொருட்கள், சதுப்பு நிலம், கோடை ஆறு, தெளிந்த நீர்வீழ்ச்சி.
வாழ்வியல் பகுப்பு:
சதுப்பு நிலத்தில் சவாரி செய்தல், மழைக்கால வேண்டுதல், நெல் விதைத்தல், பகல் தூக்கம், பறைகள் அடிக்கும் ஓசை, நிலவொளியில் துணிகளைத் துவைத்தல், குழந்தைகளைத் தூங்க வைத்தல், ஆற்றைக் கடக்கும் மகிழ்ச்சி.
பறவை, விலங்குகள், பூச்சிகள், பயிர்கள்:
கிராமத்துக் குருவிகள், மரத்தில் கட்டப்பட்ட குதிரை, மரங்கொத்தி, தோப்பில் விழும் அட்டை, குயில், நீர்க்கோழி, நண்டு, ஈக்கள், மின்மினி, வண்ணத்துப்பூச்சி, எறும்பு, பாம்பு, சிலந்தி, நத்தை, இறந்து விழும் விட்டில், காய்ந்துபோன நாணல்கள், சோளம், கோதுமை, திராட்சை, வாழை.

இலையுதிர் காலம்
ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை, வெட்பதட்ப நிலைப் பகுப்புகள்:
நீண்ட இரவுகள், இரவுக் குளிர், ஒளிரும் நிலவு.
வானியல் பகுப்புகள்:
மூடுபனி கிளம்பல், சிவப்பு நிறச் சூரிய வெப்பம், தெளிவான நீல வானம், இலையுதிர் கால மழை, வெள்ளைப் பனித்துளி.
புவியியல் பகுப்புகள்:
நெல், வயல், சதுப்பு நிலம், வெள்ளிய கடலலைகள், பரந்த கடல், பயங்கரமான மலைகள், வரிசையான மலைகள், இருளடையும் மலை.
வாழ்வியல் பகுப்புகள்:
மாலை நேரத்தில் பாதை வழியாக யாரும் போகாமை, இலையுதிர் காலத்தனிமை, குறட்டை ஒலி, புல்லின்மீது நடத்தல், காளான் சேகரித்தல்.
விலங்குகள்:
சிவப்புத் தும்பிகள், காய்ந்த கிளையில் அமர்ந்த காக்கை, கொக்கு. காட்டுப் பன்றிகளை அசைக்கும் காற்று, சப்தமின்றிச் செல்லும் காகம், சுவர்க்கோழி கூவுதல், பூனைகள், நடுங்கும் குரங்கு, இறந்த உருப்பில் அமர்ந்திருக்கும் காக்கை, பசுவின் கொட்டகையில் கொசுக்கள், சிள்வண்டுகள், புல்புல் பறவை, நாரை, மரங்கொத்திப் பறவை, வெட்டுக்கிளி, பூச்சிக் குரல்.
தாவரப் பகுப்புகள்:
சோளம், கோதுமை, திராட்சை, வாழை, ரோஜா ஆகியவை.

குளிர்காலம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கியது.
பருவகாலம், தட்பவெப்பப் பகுப்பு:
குளிர்காலம், குளிர்காலத் துவக்கம், குளிர்கால இரவு, மழைகால முதல் மழை, மழைகாலத் துவக்கம், மேமாத மழை, ஜூன்மாத மழை.
வானவியல் பகுப்பு:
குளிர் நிலவு, மங்கிய நிலவொளி, தேய்ந்த நிலவு, நள்ளிரவு மழை.
புவியியல் பகுப்பு:
சமவெளியில் ஓடும் மழை, ஆறு, சேதமான பாலம், நீர்வீழ்ச்சி ஓசை, பெயரில்லா சிற்றாறு.
வாழ்வியல் பகுப்பு:
முள்ளங்கி பிடுங்குதல், கண்களுக்கு வலி உண்டாவதால் விளக்கு ஏற்றாமை, அதிக குளிர்ச்சி, போர்வை, கம்பளியின் தேவை.  மழையால் குழந்தையை அழைக்கும் தாயின் பாசக் குரல்.
பறவை விலங்குகள்:
குளிர் காலத்தில் உயிரினங்களின் இயக்கம். தொடர் மழையால் மாட்டுக்கொட்டகை நீரில் மூழ்குதல். இரவு பகல் என்று அறியாமல் கூவும் சேவல். மழையில் எருதுகள், மழையில் திரியும் பூனை, தேரையின் அடங்கிய குரல்,  இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு.
தாவரங்கள்:
மழையால் பாதிக்கப்படும் தோட்டம், காற்றால் பாதிக்கப்படும் பயிர்கள் - வயல்வெளிகள், வெளிவரும் புற்கள், மரமொட்டுகள் வெளிவருதல், மழையால் ஒன்றன்மீது ஒன்றாக விழும் இலைகள்.

ஆகஸ்ட் 16, 2015

ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) - ரசித்தவை

ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) குறித்த சிறந்த  ஹைக்கூக்கள்:

1. பின்பனி இரவில்
உறைந்து போயிருந்தன
காதல் கிளிஞ்சல்கள் -Ilaval Hari Haran

2. வறண்ட குளத்தை
கடக்க முடியவில்லை
செழித்திருந்தன முட்புதர்கள் - Sayee Ram

3. பரந்த நிலப்பரப்பெல்லாம்
பாறை முகடுகள்
நீருக்கலையும் மீன்கள் -கூரா அம்மாசையப்பன் ராமசாமி

4. நிறம்மாறும் மேகங்கள்
உதிர்ந்த இலையில்
ஒரு துளி நீர் -கவிஞர் வீரா

5. பசுமையான வயல்கள்
இடம்பெயரும் குருவிகள்
தூரத்தில் வேடன் Vanarajan N

6. இரவின் நிசப்தத்தை
கிழித்தெறிகிறது
ஆந்தையின் அலறல் -Vanarajan N

7. தவறிய மழை
குறைப்பிரசவப்பூக்கள் நிகழுமோ
மகரந்த சேர்க்கை  -Aravindan R

8. மங்கிய நிலவு
இன்னும் கரை ஏறவில்லை
தவளைக் குஞ்சுகள் -சசி வீ

9. மெல்ல நகர்கிறது
வீட்டுக்கூரை மேல்
நத்தையும் சூரியனும் -Subhasree Sundaram

10. பறவைகளின் குரலில்
அன்பென அடைக்கலம்
கவன் கல்லின் மௌனம்! -Govind Dhanda

11. பயன்பாடில்லா சாலை
அழைக்கிறது
குருவிகளின் சப்தம் -Shahul Hameed

12. வீசிய விதை நெல்
சேற்றில் முழுகுகிறது
அடமானப் பொருள் -P.K. Samy

13. எலிவளையை எட்டிப்பார்த்த
முயலின் மீசை
மண்ணானது! -Amaruviappan Chary

14. கோபுரப் புறாக்கள் இறகை
அசைத்து இன்பத்தைக் கொண்டாடும்
உறை பனிக்காலம் -S Naga Lingam

15. குளிர் காலம்
போர்வை எதற்கு
சந்நதிக்குள் பல்லி -S Naga Lingam

16. பவுர்ணமி இரவு,
காளானைப் போல பூத்திருக்கிறது,
தூரத்து குடிசை. -Thooi Shan

17. கதிரோடு கண்ணாமூச்சி
மூடுபனி முகத்திரையில்
மேகக்கூட்டம்  -கடலூர் மாரி முத்து

ஆகஸ்ட் 15, 2015

தீர விசாரிப்பதும் பொய்!

நாலு தலைமுறைக்குச் சொத்து
பொய் சொல்றவன்
வாய்க்கு போஜனம் கிடைக்கிறது

கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதும் பொய்!

ஆகஸ்ட் 11, 2015

“ஏங்க…" “ஒரு மண்ணும் வேணாம்…”

“நீ
சம்பாதிச்சது போதும்
நாளைக்கிலிருந்து வேலைக்குப் போக வேண்டாம்”
“ஐயோ! எதுக்குங்க?”
“எந்தக் கேள்வியும் கேக்காதே
வேணாமுன்னா வேணாம்…”
“வீட்டிலிருந்தே எதாவது?”
“ஒரு மண்ணும் வேணாம்…”
“நான் தான் 
கைநெறைய சம்பாதிக்கறேன் இல்ல…”
…      …      …
…      …      …               
“சரிங்க…”

---

“ஏங்க…
நாளைக்கிலிருந்து வேலைக்குப் போகல”
“எதுக்குடா இப்ப திடீர்னு”
போவ பிடிக்கலைன்னா பிடிக்கலை
விடுங்களேன்”
“எதாவது பிரச்சினையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…”
“சரி உன் இஷ்டம்…”
சில மாதம் கழித்து
தோழியிடமிருந்து போன் வந்தது.
“அவரு டிரான்சுவர்ல போயிட்டாருடீ …”
“ஏங்க நான்
வேலைக்குப் போவலாமுன்னு இருக்கேன்”
“சரி…”

ஆகஸ்ட் 06, 2015

லிமர்புன் - கவியருவி ம. ரமேஷ்.

துரத்திச் சொல்லும் புலியை இடைமறிக்கின்றது யானையின் உருவம். மான் தப்பித்துச் செல்கின்றது. என்ன சாபமோ சிறிது நேரத்திற்குள் யானையை சுற்றிச் சுற்றி வரும் ஒரு சிங்கம்… ஓடிய தாகத்தில் ஓடும் நதியில் தண்ணீர் குடித்துத் திரும்பத் தயாராக இருக்கும் முதலை… காப்பதும், காக்கத் துடிப்பதுமாய்… இறப்பதுமாய்… பிறவற்றிற்கு உணவுமாய்…

ஒன்றைக் காத்திருக்கும்; பிறிதொன்றிடம் 
போராடி செத்தும் இருக்கும்
காப்பாற்றிய நிம்மதியோடு இறந்திருக்கும்

ஆகஸ்ட் 04, 2015

ஆணுக்குப் பெண் சமம் இல்லை!

கிளி பறந்துவிட்டால்
ஒரு கிளி வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு நாய் இறந்துவிட்டால்
வேறொரு நாயை வாங்கிக்கொள்ள முடிகிறது.
ஒரு பொருள் உடைந்துவிட்டால்
வேறொரு பொருள்…
இப்படியான வரிசையில் நீள்கிறது…
மனைவி இறந்துவிட்டால்
இன்னொரு மனைவியை
எளிதாக மணம் முடிந்துக்கொள்ள
ஓர் ஆணுக்கு!
பெண்ணுக்கு?