ஜூன் 28, 2016

சுவாதி கண் திறந்தேயிருக்கிறாள்…

அவன் கத்தியோடு இருந்தபோதுதான்
எவருக்கும் தடுக்கும் துணிவில்லை
கத்தியைத் தூக்கியெறிந்த பின்னாவது
யாராவது ஒருவர்
அவன்மீது கல்லெறிந்திருக்கலாமே…
சரி… விடுங்கள்…
நான் உங்கள்
அக்காவோ தங்கையோ
இல்லைதானே?

கோழை அவன்!
என் முன்னால் வந்து வெட்டியிருந்தால்
நானாகிலும் போராடித் தடுத்து
முடியாமல் போனபோது செத்திருப்பேன்.

அடுத்தொருத்தியை வெட்டும்போது
ஆண்மையும் துணிவுமிருந்தால்
முன்னால் வந்து வெட்டுங்கள்.

ஒரு சமயம் அவ்விடத்தில்
பெண்ணொருத்தி இருந்திருந்தாள்
அவள் கத்தி கூச்சலிட்டிருப்பாள்…
நீங்கள் ஆண்கள் என்ன செய்வீர்கள்?

பார்க்கத்தான் கண் திறந்தேயிருந்தேன்.

ஜூன் 24, 2016

பச்சைக்குதிரை

புன்னை மரத்தின்கீழ்
தலைமேல் விழுந்த பூ; இறங்கும்
கழுத்து வழியே எறும்பு

இருந்ததை எடுத்து
இல்லாத இடத்தில் சேர்த்தும்
பல்லாங்குழியிலும் தோல்வி

இனிப்பு நிறைந்த உலகின்
தனி வீட்டிலிருந்து வெளியேறுகிறது
மாம்பழ வண்டு

குனிடா…. மரியாதை இல்லாம…
டேய்… குனிடா… சீக்கிரம்…
பச்சைக்குதிரை

அடுக்கியது சரிய…
மீண்டும் அடுக்கியது சரிகிறது
ஏழுகல் ஆட்டம்

ஜூன் 02, 2016

இதுதான் ஹைக்கூ

ஆடுகின்றன
நரியின் இரண்டு பற்கள்
கழுத்து டாலரில் -
Jothi Jothi
-இது ஹைக்கூவா? சென்ரியுவா? சென்ரியுதான். முதல் இரண்டு அடியில் வரும் நரியை என்று எடுத்துக்கொண்டால் அது ஹைக்கூ. மூன்றாவது அடியை நோக்கினால் அது சென்ரியுவாக மாறி விடுகின்றது. 1. பெரும்பாலும் நரியை வேட்டையாடித்தான் பல் எடுக்கிறார்கள். வயதாகி இறந்த பின்னர் அல்ல. மிருக வதை அது. தடுக்க வேண்டும். 2.ஒரு மூடநம்பிக்கையின் காரணமாகவே அதனை அணிகிறார்கள். பேய் பிடிக்காதாம். இந்த எள்ளல்களை உள்ளடக்கமாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்துவதால் இது சென்ரியு வகைமையில் சேரும்...