பிப்ரவரி 28, 2013

காதலும் கடந்து போகும் - கஸல்


அழாதவளைக்கூட
அழுதால் அழகென்று
புகழ்ந்துவிட்டுப் போய்விட்டாயே!
இன்று
நான் சிந்தும் கண்ணீரை
நீ அறிவாயா?

ஆயிரம்தான் சொல்லுங்கள்
காதலனுக்கு காதலியும்
காதலிக்கு காதலனும்தான்
கவிதை!

நமக்கான வாழ்க்கையில்
காதலும் ஒன்று
நீ
கை அசைத்துவிட்டுபோவதுபோல
அதுவும் கடந்து போகும்

ம. ரமேஷ் சென்ரியூக்கள்


அழுக்கும் அசிங்கமும்
தெரிந்தே மறைக்கிறேன்
விபச்சாரி

ரோட்டோரம்
அமர்க்களமாய் நடக்கிறது
டாஸ்மாக் கடைகள்

காலை சுற்றிய நாய்
கடித்து வைத்தது
நாய் நன்றியுள்ளது!

மந்திரி விரைகிறார்
ஓரங்கட்டப்படுகிறது
ஆம்புலென்ஸ்

தன்னிலையை
மறந்துபோனார்கள்
டாஸ்மாக் சாதனை

பிப்ரவரி 24, 2013

பதினெட்டில் விடுதலை - ம. ரமேஷ் சென்ரியூக்கள்


கற்பழிப்புடன் கொலை
பதினேழரை வயது
பதினெட்டில் விடுதலை

எங்கேனும்
குண்டு வெடிக்கும்
பாவம் பாகிஸ்தான்

பிரதமர்
எச்சரிக்கிறார்
சிரிக்கும் மக்கள்

அங்கும் இங்கும்
குண்டுகள் வெடிப்பு
பயத்துடன் உளவுத்துறை

துப்பு கொடுங்கள்
பணம் பெறுங்கள்
சிரிப்புதான் வருது

உளவுதுறையை
உளவு பார்க்கிறார்கள்
பொது மக்கள்

என்ன சட்டமோ
போங்க
சிறைவாசிகள்

பிப்ரவரி 19, 2013

கடவுள் – 20 (கடவுள் இல்லை என்றார் கடவுள்!)


தமிழ் ஈழம் காண
உல்லாச பயணம் புறப்பட்டார் கடவுள்.
ஏதோ சண்டை என்ற கேள்விப்பட்டார்.
அட எப்படித்தான்
சண்டை போடுகிறார்கள் என்று
மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தார்.
சண்டை என்றால் சண்டை
பயங்கர சண்டை
சண்டை என்றால் சங்கப் போர் அல்ல.
ஆய்தம் ஏந்திய படைகளுக்கும்
கையில் ஆயுதம் ஏதுமற்றவர்களுக்கும்!
இந்த சண்டையை எந்தப் வகையில் சேர்ப்பது.
தலைவர்களைப் பிடிப்பதுதான்
அவர்களது லட்சியமாக இருந்தது.
தலைவர்கள் அகப்படாதபோது
அவர்களின் குடும்பத்தினரை
காவு வாங்க முடிவைடுக்கப்பட்டது.
தகப்பன்கள் செய்த நல்ல செயலுக்காக
மனைவிகளும் பிள்ளைகளும்
துன்புறுத்தப்பட்டார்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பும் நடந்தது.
தட்டிக் கேட்பார் என்று நினைத்த கடவுள்
அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினையென்ற
தகவல் கேட்டு திடுக்கிட்டுப்போனார்.
சரி நாம் தான் எதாவது செய்ய வேண்டும்என்று
கடவுளுக்கும் புத்தி வரவே இல்லை.
நாம் படைத்ததை இவர்கள் அழிக்க யார்
அதிகாரம் கொடுத்தது என்ற
உணர்ச்சி கூட இல்லாமல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.
தலைவனின் மகன் பிடிபட்டான்.
இரண்டு நாள் உணவு கொடுக்கப்பட்டது
இந்தச் சிறுவனைக் கொன்று
நாம் சாதிப்பதென்ன…
யாருக்கும் கொள்ள மனம் வரவில்லை.
கொல்ல உத்திரவு.
நான்கு அடி முன்னால் சென்று
துப்பாக்கி குறி பார்த்தது.
தீபாவளி துப்பாக்கியைப் பார்த்தவன்
ஆசைப்பட்டு அங்கிள் அதை கொடுங்கள்
நான் விளையாடிட்டு தருகிறேன் என்றான்.
சுடத் துணிந்தவன் அழுதுகொண்டான்!
ஏன் அழறீங்க…
கொடுக்க விரும்பம் இல்லன்னா
அழாதீங்க என்றான்!
கண்களை துடைத்தும் விட்டான்.
திரும்ப ஒருவன் குறி பார்த்தான்
சிறுவனுக்கு விபரீதம் புரிந்தது
ஆனாலும் சிரித்துக்கொண்டான்
சுடுபவனை நினைத்து!
ஏனென்றால் அவனுக்குப் பின்னால்
கடவுள் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
காப்பற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்தவனை
நான்கு தோட்டாக்கள் துளைத்தன.
இறந்தது நான் அல்ல
கடவுளே நீ தான் என்று சொன்ன
அந்தச் சிறுவனின் கண்கள் இருண்டது.
சுட்டவன் திரும்பிப் பார்த்து நடுங்கிப்போனான்
பக்கத்தில் தெரியாத யாரோ புதியவர்!
அந்தப் புதியவரான கடவுளிடம்
இப்ப சொல்லுங்கள்
கடவுள் இல்லைதானே என்றான்.
கடவுளோ… தனக்கு பிறப்பு இறப்பு இல்லை
முக்காலம் கடந்தவன்
பரிபூரணமானவன்
துன்பம் என்றால் ஓடோடி வருபவன் என்ற
மிகையான கற்பனைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
கையில் இருந்த துப்பாக்கிக்குப் பயந்துபோன கடவுள்
ஆமாம்
கடவுள் இல்லை என்றார்!

பிப்ரவரி 14, 2013

காதலர் தினம் – கஸல் -6




காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!

காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது

உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்

பிப்ரவரி 13, 2013

காதலர் தினம் – கஸல் -5




திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்

இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது

எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது 

காதலர் தினம் – கஸல் -1




நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?

கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது

காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு

காதலர் தினம் – கஸல் -2




பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!

நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது

காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்

காதலர் தினம் – கஸல் -3




எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்

இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்

கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்

காதலர் தினம் – கஸல் -4


இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!

கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்

காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை

பிப்ரவரி 01, 2013

கடவுள் – 19


கடவுள் கடவுளாகிப்போனார் - கடவுள் – 19

பூ பழம் தேங்காய் உடன்
கோயிலுக்குச் சென்றார் கடவுள்!
பீய்ந்த செருப்பை விட
கட்டணமாக 5 ரூபாய் தண்டம் -
கற்பூரம் ஊதுவத்தி 10க்கு வாங்கி
கோயில் வாசப்படிக்கு வந்தவர் அதிர்ந்தார்!
எந்தச் சாமி இத்தன பேரின்
கண்ணைக் குத்தியிருக்கும்!
பள்ளிக்குச் செல்லாத அவர்கள்
மனப்பாடம் செய்து வைத்திருந்த
டீக்குப் பணம் 5 ரூபாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்!
கடவுளுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை
விரைவு அர்ச்சனை சீட்டை
10 ரூபாய் கொடுத்து வாங்கியவர்
மறுபடியும் அதிர்ந்தார்
அந்த வரிசையிலும் நீண்ட கூட்டம்!
முதியவர்கள் ஏதோ தெரிந்த மந்திரத்தை
முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்
கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி
அந்த வாரத்தில் புதிதாக வந்த
திரைப்படத்தின் குத்துப்பாடலை
சப்தமாகப் பாடிக்கொண்டிருந்தது!
காதலர்கள் கைகளை இறுக்கமாகப் பிடித்துகொண்டு
தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு
முன்னால் போக அனுமதியளித்து
நின்ற இடம்விட்டு நகராமல் இருந்தார்கள்.
கடவுள் கொஞ்சம்கொஞ்சமாய் முன்னேறி
4 மணிநேரத்துக்குப் பின்
ஓரிரண்டு வினாடியே தரிசித்துவிட்டு வெளியேறினார்.
பசியெடுத்ததோ என்னவோ
வேற்று மதத்தினர் கொடுத்துக்கொண்டிருந்த
பிரசாத்ததை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்!
வெளியேறியபோது வாங்கிவந்த
பிரசாத்ததை 5 ரூபாய் கேட்டவர்களுக்குக் கொடுக்க
கூட்டத்தில் ஒருவர்
முறைத்த பின் வாங்கிக்கொண்டார்!
நெரிசல். அமைதிக்காகச் சென்ற இடத்தில் சப்தம்.
கழிவுகள்.
பயணம் முடிவதற்குள் பேரூந்து விபத்து
நான்கு பேர் பலியாக
அதிஷ்டவசமாக
மயிரிழையில் உயிர்ப் பிழைத்தார் கடவுள்!
வருத்தத்தோடு தெரு முனையில் வந்தபோது
இளைஞன் ஒருவன்
வேப்பமரத்தடியில் இருந்த
கல்லை வணங்கி
மகிழ்ச்சியோடு திரும்பியதைக் கண்டார்.
பேசாம நாமும் இங்கேயே
சாமி கும்பிட்டு
இருக்கும் வேலையைக்
கவனித்திருக்கலாம்…
கடவுளுக்கும் புத்தி வந்தது!!!