அக்டோபர் 25, 2013

டேட்டிங் (பெண்ணியம்)

டேட்டிங்
டேட்டிங் என்கிறாய்!

சரிபோய்த் தொலையலாம்!!

தனி அறை!
தனிமை!!
இருவர் கையிலும்
புகை!!! மது!!!

நீ
தொட்டு ரசித்தபோது
அந்த மாமல்லபுரத்துச்
சிற்பமே
நாணி குறுகிப்போனது

கல்லுக்கு எப்படி
உணர்ச்சியிருக்கும் என்று
அவள் யோசிக்கவே இல்லை!

கவிதை
கவிதை என்றவள்
புகையும் மதுவும் மயக்கிய
மயக்கத்தில் -
மூன்று மாதத்தில்
கர்ப்பமாகிப்போனாள்!

மருத்துவமனையில்
படிக்கிற பொண்ணுதானே
கொஞ்சம்
கவனமா இருந்து
மாத்திரை எடுத்துக்க வேண்டியதுதானே!
இப்ப பாரு அபாஷன்!!
சரிசரி
கவுண்டருல
பணம் கட்டிட்டு போ!!!

கரு கலைத்தபோது
காதல்
தொலைந்து போனது.
படிப்பு தொடர்ந்தது.
வேலையில் சேர்ந்தாகிவிட்டது.

அவள் வயிற்றிலிருந்து
பிள்ளையை இறக்கி
வைத்தது தெரியாமல்
அவள் அம்மா
வயிற்றில்
நெருப்பைக் கட்டிக்கொண்டு
இருக்கிறேன் என்றாள்

திருமண நிச்சயம்
நடந்தது.
திருமணம் நடந்தது.
எல்லாம் நடந்தது.
குழந்தை பாக்கியம்தான்
இல்லை என்றது
அபாஷன் செய்த அதே மருத்துவமனை!

குழந்தை இல்லைன்னா என்ன?
வேற பெண்ண கட்டிக்க மாட்டேன்’  என்றான் அன்பான கணவன்.

அழுது கொண்டாள்!
அன்று நடந்த தவற்றை மறைத்து
அழுது கொண்டிருக்கிறாள்!!
அவள் அழும்போதெல்லாம்
அவன் குழந்தை இல்லையென்று
அழுவதாக நினைத்து
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அக்டோபர் 24, 2013

கனவின் மணவறையில்...!

நீங்க மறுக்கும்
நினைவுகள்
கனவுகளாய்
பரிணமிக்கின்றன

கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் இருந்தும்
தாலி கட்ட
கைகள்
நீளவில்லை

நாம்
இணைந்திருக்கிறோம்
பிரிந்திருப்பதாகக்
கனவு வருகிறது

அக்டோபர் 19, 2013

பசுமை புரட்சி

ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?

அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது

கொடி ஏற்றும்போது 
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.

அக்டோபர் 17, 2013

தப்பான நண்பனே நலமா?!

என்ன தான் இருக்கிறது
கொஞ்சம் கொடு நண்பா
புகைத்துப் பார்க்கிறேன்!

என்னடா உளறுகிறாய்
அப்படி என்ன போதை இருக்கு
கொஞ்சம் ஊத்து பாக்கலாம்!

அட… இந்த உலகம்
நல்லாதானே இருக்கு!

கொஞ்சமாய்
தவறு செய்தால்தான் என்ன?

என்னடி தப்பு?
படிக்கும் பொண்ணுன்னா
தப்பு செய்யக்கூடாதா!
ஆண் என்ன? பெண் என்ன?

என் குழந்தை
என் குடும்பம்
என் வாழ்க்கை
என்ன
மகிழ்ச்சிதான் இல்லை!

தவற்றை எல்லாம்
கற்றுக் கொடுத்த நண்பா

நீ எப்படி இருக்கிறாய்?

அக்டோபர் 12, 2013

தலையறுத்தச் சேவலாய்த் துடிக்கிறது!

காதலி கொடுத்த காதலை
அவள் பெற்றோர்கள்
தடுத்துவிட்டார்கள்!
இறைவன் கொடுக்க
நினைத்ததை
தடுக்க இவர்கள் யார்?

தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது
என் நெஞ்சு
உயிர்ப் பிரியும் முன்
தேடி அலைகிறது
உன் அன்பிற்காக!

உன் தாய்க்கு
நீ வயிற்றின்
நெருப்பு இல்லை
கொல்லிக் கட்டை!

அக்டோபர் 11, 2013

கொடுத்த முத்தங்கள் வீண்தானே!

கண்ணை இறுக்கி
உன்னை
மனக்கண் முன்
நிறுத்தி
கொடுத்த
முத்தங்கள் எல்லாம்
வீண்தானே!

என்று கவிதை எழுத
முடிந்த உன்னால்
வேறு என்ன செய்ய முடிந்தது?

இன்று கவிதையாகவும்
கற்பனையாகவும்
தவிப்பது

நான் அல்லவா?!