ஜூலை 30, 2013

ம. ரமேஷ் ஹைபுன் - 22

 சாதியின் மேன்மை இனி வரும் காலங்களில்தான் அதிகரிக்கும். அதற்கு அரசியல் முக்கியக் காரணியாக இருக்கும். சாதி வேண்டாம் என்று நினைப்பவனும் சாதிக்குள் ஐயக்கிமாகிவிடுவான். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியதும் இல்லை. சாதிக்குள்தான் எல்லாம் என்ற கோட்பாடும் வலுப்பெறும். சாதி ஒழிந்தால் தொல்லையில்லை என்பவர்களுக்கு இனி இப்போது நடக்கும் நிகழ்வுகள் சாட்டையடிதான்…

மனிதனால் வளர்ந்து
மனித நேயத்தையே அழிக்கிறது

சாதியின் வேறுபாடு

ஜூலை 25, 2013

கடவுளும் அரசியல்வாதியும் (ஹைபுன்- 21)

கடவுளும் அரசியல்வாதியும்
சொர்க்கத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.
மேடை முழக்கம்போல்
கடவுளைப் புகழ்ந்தும்
சாத்தானை இகழ்ந்தும்
பேசியதைக் கண்டு
கடவுளே சொக்கித்தான் போனார்.
பேச்சுக்கிடையில்
ஆளும் கட்சிதான் கடவுள் என்றான்.
கோபம் வந்துவிட்டது கடவுளுக்கு.
நாங்கள் நினைத்தால் ஆக்குவோம்.
எதிர்கட்சிகள் ஆக்கியதை அழிப்போம்.
மாற்றி அமைப்போம்.
ஏன்
நீதி மன்றமும்
கொள்கை முடிவுக்குக் கட்டுப்பட்டுப்போகும் என்றான்.
கொஞ்சம் திமிராகவே!
ஆக்கல் அழித்தல் காத்தல் செய்யும்
நானே உயர்ந்தவன் என்றான் கடவுள்.
அரசியல்வாதி
இதைச் சொன்னதும் வாயடைத்துப்போனார்:
நாங்கள் நினைத்தால்
கடவுளே இல்லை என்று
சட்டம் கொண்டுவந்து
சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும்
தீர்மானம் நிறைவேற்றி
அரசியல் செய்வோம். வெற்றியும் பெறுவோம்.

கடவுள்
நீதிமன்றம்

உயர்ந்தது அரசியல்

ஜூலை 18, 2013

வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!

ஒப்புக்குச் சொல்லி அழ
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே  
உனக்கு மட்டும் ஏன் மரணம்?

தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்

இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?

கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.

நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்

அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!

ஜூலை 16, 2013

ஆசை யாரை விட்டது (கஸல்)

ஆசை 
யாரை விட்டது
அது
நம்மை மட்டும்
விட்டுவைக்க

காதலியே!
காதலில் தோற்றாலும்
வேறு ஒரு வாழ்க்கையை
அமைத்துக்கொள்வோம்
தனிமையில் வாழ
படைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்

அது, பூ
உதிர்ந்தால்
புன்னகைக்காக ஏங்குவதில்லை
நாம் காதலர்கள்
தோற்றாலும்
இழந்த அன்புக்காக

ஏங்காமல் இருந்துவிட முடியாது

ஜூலை 13, 2013

காதலுக்கு அழகு - ம. ரமேஷ் கஸல்

அழகில்
இளமையையும்
வலியில்
முதுமையும்
தருபவள்தான் நீ

இரவில்
நீளும் 
உன் நினைவுகள்தான் 
காதலுக்கு அழகு

பேச்சும் சிரிப்பும் 
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்

காதலுக்கு அழகு

ஜூலை 05, 2013

இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20

பாப்பாங்க
பேசுவாங்க
முத்தத்தோட எல்லாத்தையும் இழப்பாங்க
கேட்டா தெய்வீகக் காதல்னு சொல்வாங்க
அப்ப எல்லாம் தெரியாத
சாதி, அப்பா அம்மா பாசம்
கல்யாணத்துக்கு அப்புறம் தெரியும்!
கோர்ட் போவாங்க
பிரிஞ்சிருவோமுன்னு சொல்வாங்க!!
அவங்களோட சேர்த்து
எல்லாரும் தலையாட்டிக்குவாங்க!!!
அப்புறமா
ஒருத்தர் சாவாங்க.
இன்னொருத்தருக்கு
மனச்சாட்சி உருத்துமா!
அவங்களும்
தற்கொலைக்கு முயற்சி செய்யறப்ப
இந்த சினிமாவுல
ஈரோயினை ஈரோ காப்பத்துற மாதிரி
காப்பாத்திட்டாங்களாம்.
இதென்னடா காதல்
“இதுக்குதானே பெத்தவங்க
காதலே வேணாமுன்னு சொல்றோம்”.
இதைப் படித்தும்
காதல் மேல் நம்பிக்கை வைப்பதால்தான்
காதல் இன்றும் ஏமாற்றிக்கொண்டு
வாழ்கிறது.

கொலையும் தற்கொலையும்
ஆனாலும், வாழ்கிறது
காதல்

இன்னும் சில…

காதல் போயின் மறுமணம்
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது

சாதி
சாதித்துக்காட்டியது

காதல் தோற்றது

எனக்கொரு முத்தம் தா! (கஸல்) - ம. ரமேஷ்

அழகின் இளமையும்
வலியின் முதுமையும்
தருபவள்தான் நீ

நீ
நினைவுளின் புகைப்படம்
காலமெல்லாம் அழகு

எந்தக் குழந்தையாவது
எனக்கொரு முத்தம்
தா என்று கேட்டிருக்கிறதா?
அது போலதான்
காதலியும் கேட்கமாட்டாள்4

ஜூலை 02, 2013

மலர்களின் நிறம் - ம. ரமேஷ் ஹைக்கூ

பார்த்ததும்
வருத்தம் கொண்டாள்
மலர்களின் நிறம்

பலமாய் வீசும் காற்று
தள்ளாடும் உருவம்
காவல்பொம்மை

அழுதுகொண்டே
திரும்பிப் பார்க்கின்றது
இறைவனின் பாதம் சேர்ந்த பூ

உதிர்ந்திருக்கும் சருகுகள்
அழகாகத் தெரிகிறது
தெருக்கள்

மெல்லிய தீண்டல்
மெய் சிலிர்க்கிறது

காற்று பட்டு மலரும் பூ