ஜூன் 23, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 16

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி

கிராமத்துப் பாட்டி என்று எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது? சரி… ஏன் அந்தப் பாட்டி கை எடுத்து கும்பிடுகிறார்? எங்கு நின்று கும்பிடுகிறார்? யாரைப் பார்த்துக் கும்பிடுகிறார்? விலாசம் எதாவது தவறியிருக்குமோ? கையெடுத்துக் கும்பிட்டு பிச்சைகிச்சை எடுத்துக்கொண்டு இருக்குமோ? பெற்ற பிள்ளைகளிடமே எதற்காகவாவது கெஞ்சிக்கொண்டு இருக்குமோ? என்று எவ்வளவோ பொருள் இருக்கலாம் அந்தப் பாட்டியின் கை எடுத்து கும்பிடுதலுக்கு. எல்லாரும் ஏதோ ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். பாட்டி எதற்காகவோ இரந்து நின்றால் அது சென்ரியூ. எந்த உதவியும் கேட்காமலிருந்தால் அது ஹைக்கூ. சரி மூன்றாவது அடிக்கு வருவோம்.

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
மங்கிய சூரிய ஒளி

அப்பாடா… மங்கிய சூரிய ஒளி தானா? ஓகோ… அந்தப் பாட்டி சூரியனை வணங்கி இருக்கிறார். மங்கிய சூரிய ஒளி என்ற மூன்றாவது அடிக்கு வருவோம். ஏன் மங்கலாகத் தெரிகிறது. பாட்டி வயதாகிவிட்டதன் காரணமா? கண் குறைபாட்டின் காரணமா? அல்லது சூரியனே மங்கலாகத் தெரிந்தானா?

சரி… ஹைக்கூவை இன்னும் சுருக்கலாம் இப்படி:

இரண்டாவது அடியில் கிராமத்துப் பாட்டி என்று இருப்பதை பாட்டி என்று சுருக்கிக்கொள்கிறேன். காரணம் கிராமம் என்ற சொல் இடம் பெற்றதால் அது நகரத்துப் பாட்டிகளை தவிர்த்துவிடுகிறது. முதல் அடியில் இருக்கும் கும்பிடும் என்பதை இரண்டாவது அடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.

கையெடுத்து
கும்பிடும் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
©    -கவியருவி ம.ரமேஷ்

(என் பாட்டி இறக்கும் வரையில் சூரியனை வணங்கியதைக் காலைப் பொழுதில் கண்டிருக்கிறேன். அதை நினைத்து எழுதிய கவிதை இது. நீங்களும் உங்கள் பாட்டியை நினைத்து ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதி பகிருங்களேன்.)

ஜூன் 20, 2014

மரத்தின் நிழல் - ஹைக்கூ

அடந்த மரத்தின் நிழல்
வெளியே வந்து உள்ளே போனது
ஜோசியக் கிளி

ஜூன் 19, 2014

ஜூன் 17, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 15

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்

மரக்கிளையில் ஏதோ ஒரு பறவை கூடுகட்டி குஞ்சு பொறித்துள்ளது. குஞ்சுகள் மரக்கிளையிலிருந்து விழுவதாய் அச்சப்படுகின்றனவே ஏன்? பலத்தக் காற்றா? யாராவது மரத்தை வெட்டுகிறார்களா? பயப்படும்படி குஞ்சுகளை விட்டுவிட்டு தாய்ப் பறவை எங்கே சென்றது? ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை? என்று நீள்கிறது முதல் இரண்டு அடிகள். மூன்றாவது அடியில் “தாவி விளையாடும் குரங்குகள்” என்று படிக்கும்போது மனது நிம்மதியாகிறது. அப்படியானால் குஞ்சுகள் விழ வில்லை. குரங்குகள்தான் அவை பயப்படும்படி விளையாடுகின்றன. குரங்குகளுக்கு விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குஞ்சுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. தாய்ப் பறவைக்கு குரங்குகளின் விளையாட்டு வாடிக்கையாகிவிட்டிருக்கும். குஞ்சுகள்தான் பழக்கிக்கொள்ள வேண்டும்.

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
©    -கவியருவி ம.ரமேஷ்

ஜூன் 12, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

என்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால்  ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள்  வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:

துளிர்க்கும் மரம்
மீண்டும் வெட்டப்படுகிறது
சேடையில் மக்கும் தளைகள்


மேற்கண்ட ஹைக்கூவில் இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால் ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில் – பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர் மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)

ஜூன் 06, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 13

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

இது எல்லாம் ஒரு ஹைக்கூவா? ஆமாம். இது ஹைக்கூ இல்லைதான். எப்படி ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.

இயற்கையைப் பாடுவது ஹைக்கூ. மானுடத்தைப் பாடுவது சென்ரியூ (இதுதான் ஹைக்கூ, சென்ரியூவின் சுருங்கிய சுருக்கம்).

இதில் மானுடத்தை மனித மனத்தை மனித நேயமின்மையை பகைமையை சுற்றுச் சூழல் சிதைவை அண்ணன் தம்பி உறவு முறிவை (நல்ல வேலை ஒருவரை யொருவர் வெட்டிக்கொள்ள வில்லை ) கிராமத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வை மேற்கண்ட கவிதை பாடுவதால் அது சென்ரியூ. 

மரத்தைக் வெட்டாமல் காத்திருந்தால் அது ஹைக்கூ.

வெட்டியதால் அது சென்ரியூ.

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்


மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால்  ஹைக்கூவாக மாறிவிடும். சரிஎங்கே நீங்கள் ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதுங்களேன். (வரும் வாரம் வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என் கவிதையில் மரம் வளர்கிறது மீண்டும் வெட்டவும் படுகிறது ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது.)

ஜூன் 02, 2014

காதலியோடு செல்லுங்கள் மனிதநேயம் பெருக! – நான் கடவுள்(25)

கைக்கோர்த்தபடி
காதலியோடு சென்றான் கடவுள்.
சாலையில் ஊனமுற்றோர் நடக்க
அடப் பாவமே என்று
சாலையைக்கடக்க உதவினான்;
இரக்கக்காரன் என மகிழ்ந்தாள்!
அம்மா தாயே! குரல் கேட்க
5 ரூபாயை எடுத்து நீட்டினான்;
அவள் முகம் மலர்ந்தது!
அந்தக் காதலர்கள்
கோயிலுக்குச் சென்றுதான் திரும்பியிருக்க வேண்டும்
வேகமாக பயணத்தால் கீழே விழ,
யாண்ட வண்டிய மெதுவா ஓட்டுன்னா கேக்கிறியா?
கேள் பிரண்டு வீட்டுக்குப் போறேன்னு சொல்லி,
அப்பப்ப உங்கூட வெளியே வற்றதே தப்பு
அடிப்பட்டு இருந்தா வீட்டுல என்னன்னு சொல்லறது
ஓடிப்போய்க் காப்பாற்ற
துடித்ததைகண்டு வியந்தாள்!
இத்தனைக்கும் மத்தியில் பூக்காரி வர
ஒரு ரோஜா; ஒரு முழம் மல்லி;
அவள் மனத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
சாலையில் கடவுள் உருவம் வரைந்ததற்கு மேலே
ஒரு பத்து ரூபாயை கடவுளிடமே வாங்கி
விட்டெரிந்து நடந்தாள் அவள்!
கடவுளும் மகிழ்ந்தார்!
மறுநாள்
அதே ஊனமுற்றவன்; பிச்சைக்காரன்;
வேறெரு முதியவர் விபத்தால்
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கவும்;
பூக்காரி கடவுளைக் கடக்க,
‘அண்ணா பூ வாங்கிட்டு வா’ன்னு சொன்ன
தங்கையின் பேச்சைப் மறந்தும்,
எதையும் கண்டுகொள்ளாமல்
செல்லில் காதலியுடன் பேசியபடியே
எல்லாவற்றையும் கடந்தார் கடவுள்!
(நீங்களும்
காதலியோடு செல்லுங்கள்
காதலி இல்லாதவர்கள்
காதலோடு செல்லுங்கள்

மனிதநேயம் பெருக!)

ஜூன் 01, 2014

ஈச்ச மரத்திலிருந்து...

ஈச்ச மரத்திலிருந்து
விழுகின்றன; யாரோ
எப்போதோ எரிந்த கற்கள்