டிசம்பர் 20, 2016

ஹைக்கூ திருத்தம்...

கவிஞர் வீரா
அணில்
நின்று கொண்டிருக்கிறது
பூனையின் கல்லறையில்.
திருத்தம் – 
பூனையின் கல்லறை
நின்றுகொண்டிருக்கிறது
அணில் 
- என்று வருவது சிறப்பு. யாரோ ஒருவர் ஆச்சர்யம்தான் கல்லறைகட்டியிருக்கிறார்கள்... அந்தக் கல்லறை நின்றுகொண்டிருக்கிறது - அவரின் அன்புக்குச் சாட்சியாகவும் அல்லது மூன்றாவது அடியில் இருக்கும் அணில் இரண்டாவது அடியில் நின்றுகொண்டிருக்கிறது - நின்றுகொண்டிருப்பது - பூனையின் கல்லறையை வணங்கியபடி என்று எடுத்துக்கொள்ளலாம். நட்பும் வெளிப்படும்.

நவம்பர் 04, 2016

சிலுவை

காவல் தெய்வத்தை மீறி
உள்ளே நுழையும் பாதிரியார்
வெளியேறினான் பரமசிவன்

ஒன்றிரண்டு மரங்கள்
வெடி கற்கள் சிதறியிருக்க…
ஒரு பாறையில் சிலுவை

அக்டோபர் 21, 2016

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்
மழை நின்ற பின்னிரவு
மெல்ல நகர்ந்து செல்கிறது
ஆமை முதுகில் நிலவொளி !
---------------------------------------------
உடைந்த வளையல்
உருப்பெறுகிறது பூக்களாய்
கலைடாஸ்கோப் !
---------------------------------------------
திரும்பத் திரும்ப
சலித்துக் கொள்கிறாள் உழத்தி
களத்தில் தானியங்களை !
---------------------------------------------
பட்டமரம்
கணநேரத்தில் பசுமையாகிறது
வந்தமரும் கிளிக்கூட்டம் !
---------------------------------------------
கைகளில்லை
முகத்தில் அறைகிறது...
கதவைத் திறந்ததும் காற்று !
---------------------------------------------
ஓய்வே இல்லை
முத்தமிட்டுக் கொண்டே...
கரையை அலைகள் !
---------------------------------------------
இணையாய்ப் பயணம்
இறுதிவரை தொடாமலேயே
வண்டிச்சுவடுகள் !
---------------------------------------------
முண்டியடிக்கும் கூட்டம்
அளந்து பேச முடியவில்லை
ரேசன்கடைக்காரர்.
---------------------------------------------
ரொம்ப கூச்சமோ ?
தொட்டதும் சுருண்டு விட்டாயே...
மரவட்டை !
---------------------------------------------
அருவருத்தவன்
ஆராதிக்கிறான்
பட்டாம்பூச்சி !
---------------------------------------------
புத்தகத்தில் மயிலிறகு
குஞ்சு பொரித்திருக்கிறது...
உதிர்த்துச் சென்ற மயில் !
---------------------------------------------
நடுநிசி தார்ச்சாலை
மனம் பிறழ்ன்றவன் காறியுமிழ...
சிறைபடுகிறது நிலா !
---------------------------------------------
எண்ணற்ற கால்கள்
இறந்து போன ஈக்கு...
இழுத்துச் செல்லும் எறும்புகள் !
---------------------------------------------
அசையும் வயற்கோரை
சிதறித் தெறிக்கும் சிறுமின்னல்
மழைக்கால நிலவொளி !
---------------------------------------------
சிவப்பாக இல்லை
பச்சையாகவே ; கிளிமூக்கு
மாங்காய் !
---------------------------------------------
குறைந்து வரும் மரங்கள்
கூடிக் கொண்டே போகிறது...
மண் - மழை இடைவெளி.
---------------------------------------------
உறக்கம் வராத இரவு
வானத்தை மூடி மூடித் திறக்கிறது
இமைகள்.

அக்டோபர் 06, 2016

ஹைக்கூக்களில் கிராமிய வாழ்வியல்

ஹைக்கூக்களில் கிராமிய வாழ்வியல் – நன்றி தமிழமுது கவிச்சாரல்


விட்டு விடுங்கள் என்னை
வேலையில்லா ஊதியம்
நூறு நாள் திட்டம்

முறை மாமன்
பரிசத்துக்கு பரிசளித்தான்
வலைத்தொடர்பு சாதனம் 

காணாமல் போனது
திருவிழா கூட்டத்தில்
உறவுகள்

விற்றன அகல்விளக்குகள்/
குடிசைக்குள் குயவன் திரும்ப /
நுழைகிறது நிலவொளி

Devarajan Rajan 
உறக்கம் விழித்தேன்/
முதுகில் பெருக்கல் ஓவியம்/
கயிற்றுக்கட்டில்.

J K Balaji   
ஆழ்ந்த உறக்கம் மரத்தடியில்
தெருவோரம் தாலாட்டும் நாய்கள்
ஒருநிமிட அன்னை 

தாங்கி பிடித்து
தாய்போல் தாலாட்டியது
மரத்தில் தூளி

மூழ்கியும் மலர்ந்தன
நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல் 

இறந்துபோனான் விவசாயி
வயிறு நிறைய சாப்பிட்டு
பூச்சி மருந்து

ஒற்றையடிப்பாதைக்குள்/
ஒளிந்து கிடக்கிறது/
மீத்தேன்.

சிறுமிக்கு வயிற்று வலியாம்
விருந்தும் மருந்தோடு
அடைக்கப்பட்டாள் கூண்டுக்குள்...!

ஒருவழிப்பாதை
இருபுறமும் புற்களும்
முட்களும் நிறைந்ததாக.!!

ஆனந்த பயணம்
அமர வசதியில்லை
நுங்கு வண்டி

சமைக்கும் முன்னே
புழுவுக்கு உணவாகிறது!
ரேசன் அரிசி!

ஒத்தையடிப் பாதை
கூடவே பயணிக்கிறது
கடந்த கால நினைவுகள்




செப்டம்பர் 29, 2016

பனையேறி

பத்து பதினைந்து; பனையேறி
குஞ்சோடு இறங்குகிறான்
மாரடிக்கும் கிளிகள்
முதலில் இவ்வாறு எழுதப்பட்டது -
பத்து பதினைந்துக்காய்
பனையேறி குஞ்சோடு இறங்குகையில்
பனையில் அமரும் கிளி மாரடிக்கும் (உரைநடை போல் இருக்கிறதுதானே!)
(பத்து பதினைந்து - ரூபாயை குறிக்கும். ஒரு சமயம் மரத்தையும் குறிக்க அவன் அதே தொழிலையே செய்துகொண்டு இருக்கிறான் என்பதுமாக ஹைக்கூவின் பொருள் விரியும். இன்னும் விரியும்...)

செப்டம்பர் 25, 2016

அரளிச் செடி


வீட்டை பூட்டி-திரும்பியதும்
முகம் பதித்து காத்திருக்கும்
மஞ்சள் நிறப் பூனை


உருவங்கள் தெளிவில்லை
அரளிச் செடியில்...
மஞ்சள் மஞ்சளாய் பூக்கள்


எங்கெங்கென்று தேடும்போது
கூவத் தொடங்குகின்றன…
கண்மறைவில் சுவர்க்கோழிகள்

செப்டம்பர் 23, 2016

கொள்ளிவாய்ப் பிசாசு

கொள்ளிவாய்ப் பிசாசு
தலைவிரித்தாடி செல்கிறது
தொலைவில் கண்மூடி நிற்கிறேன்

கொள்ளிவாய்ப் பிசாசு - விளக்கம் 

கிராமப்புறங்களில் பூமியிலிருந்து திடீர் திடீர் என நெருப்புச் சுடர் தோன்றி விட்டு விட்டு எரிந்துகொண்டே நகருவதைப் பார்த்திருக்கலாம். இதனைப் பார்க்கும் மக்கள் அறியாமையின் காரணமாக கொள்ளிவாய்ப் பிசாசு போகிறது என்று கூறுவர். நானும் சிறு வயதில் பார்த்திருகக்கிறேன். அப்போது பயந்து கண்மூடிய நினைவும் இப்போதும் இருக்கிறது. சரி... உண்மையிலேயே கொள்ளிவாய்ப் பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா என்றால், இல்லை என்றே அடித்துக் கூறலாம். பின் எப்படி இந்த நெருப்புச் சுடர் தோன்றுகிறது?
பூமியின் மீது கொட்டப்படும் அல்லது கொட்டும் இலைகள் மற்றும் மக்கும் பொருள்கள் ஆகியவை பாக்டீரியாக்களின் வினையினால் அழுகிய நிலையை அடைகின்றன. அழுகிய நிலையை அடைந்தபோது மீத்தேன் வாயு உண்டாகிறது. பூமிக்குள் (சதுப்பு நிலப் பகுதிகளில்) உண்டாகிய இந்த மீத்தேன் வாயு பூமியின் மேல் உள்ள சிறுசிறு துளைகளின் வழியாக வெளியேறுகின்றது.
மீத்தேன் வாயு சாதாரண வெப்ப நிலையில் தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரியும் தன்மையுடையது. எனவே, பூமியிலிருந்து வெளியேறிய மீத்தேன் வாயுவானது வாயு மண்டலத்தினுள் வந்தவுடன் தானாகத் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.
இந்த உண்மையை அறியாத மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு உலவுவதாகக் கூறுகின்றனர். (விளக்கத்துக்கான நன்றி - http://www.periyarpinju.com/2011/may/page08.php

செப்டம்பர் 21, 2016

காதலில் வெட்டு, குத்து

கிட்டாதாயின் வெட்டென மறவென்றால்
வெட்டி, குத்திவிட்டு  இம்மூடனும்
மரணித்துப் போகிறான்

இதுதான் ஹைக்கூ - 19 -காவனூர்.சீனிவாசன்

ஹைக்கூ மிகப்பெரிய காடு. இதில் பயணிப்பதென்பது கடினமானவொன்று. ஆனாலும் கடப்பவர்களுக்கு அபூர்வமான மலர்கள் கிடைக்கக்கூடும்.
ஒரு நீண்ட தவம். ஹைக்கூ என்பது பாலைவனத்தில் அரிதாய் கிடைக்கும் நீர்.
காலம் கற்றுக்கொடுக்கின்ற அரிய அனுபவங்கள்; எதிர்பாராமல் நேர்கொள்ளும் காட்சிகள் உணர்வுபூர்வமாக முன் நகர்த்திவைக்கையில் சூட்சுமமாக விரிகின்றன வேறு வேறு கோணங்களில்
அவரவர் பார்வைகளில்.
ஒரு ஆழ்ந்தபுரிதலுடன் ஒரு அவதானிப்பு. மனவேர்களை தீண்டி ஊடுருவி ஒரு இனம்புரியா சவ்வூடுபரவலை சில ஹைக்கூக்கள் நிகழ்த்திச்செல்லாமலில்லை.
கோபம் ,இறுக்கம், சமூக அக்கறை, அன்பின் ஈரம், இயற்கை, ஆன்மீகம், மனிதநேயம் இன்னும் இன்னும் சொற்களில் இழைபிரித்து இந்த ஹைக்கூக்கள் ஒரு குண்டூசியின் கூர்முனை போல் நறுக்கென்று தீண்டி அதிர்வையும்; சில இடங்களில் மலர்போல் மென்தன்மையும் கொண்டு மனதை நிறைத்துப்போகின்றன.
ஆழமுடன் வேரூன்றி கூர்மையுடன் வெளிப்படுகிற இக்கவிதையின் உட்பரிமாணங்கள் பல்வேறு நுட்பமான மனஇழைகளைக்கொண்டு பின்னப்படுகிறது. இதில் பிரபஞ்சவெளியின் ஒவ்வொரு துகளும் பாடுபொருளாக கொணரப்படுகின்றன.
புதிய தகிப்போடும்; நுட்பமான பார்வைகளோடும் கவிஞர்கள் எழுதிவருகின்றனர்.
எளிய சொற்கள் தான் ; இருண்மை அறுத்த நிலை; அரிதார ஒப்பனைகள் ஏதுமற்று மூன்றாம் வரியில் ஒரு வீர்யம். நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரிஅல்லது நெருங்கி இதயம்தீண்டி நெகிழச்செய்யும் ஒரு தென்றல்போல் ஒரு கணம் உச்சிமுதல் பாதம்வரை நிரம்பிவழியும் ஒரு உணர்வோட்டத்தை நிறைத்துப்போகிறமாதிரி காட்சிவிரிவுகள் நம்மை நகரவிடாமல் கட்டிப்போட்டுவிடுகிறது ஒரே புள்ளிக்குள்.
ஒரு படைப்பாளி , கவனத்தை கவரும் வகையில் தன்னை எந்த வடிவத்துக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளும் சாத்யம் உள்ளது.
இருவேறு கவிஞர்கள் வாழ்வும், இடமும் ,இருத்தலும் வேறு வேறு கோணங்களில் இருந்தாலும் சிந்தனைவயப்படும்போது; ஒரு பாடுபொருளை நகர்த்தி முன்வைக்கப்படும் போது இந்த கவிதைகளும் கற்பனைகளும் அவர்களை ஒரே கோட்டில் மிதக்கவிட்டு பார்த்து கோர்க்கின்றன.
இயற்கையோடு மனம் ஒன்றி ஒரு மாற்றுப்பிறவி சில கணங்களில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஒரு முரண் இருவருக்கும் வேறு வேறு கோணங்களில் பதிவாகிறது.
நான் வாசித்துக்கடக்கிறேன் . பூவாவதா? மொட்டாவதா? அன்றி விரல்களாவதா?
அடிக்கடி மாற்றி மாற்றி கலைத்துப்போட்டு என்னை அடுக்கிக்கொண்டிருக்கிறது இந்த இருவரின் ஹைக்கூக்கள்.
பூவை பிடித்திருக்கும் பொழுது
மொட்டாகி விடுகின்றது
உள்ளங்கை.
- பஸ்லீ ஹமீட்.
பொழுது போகவில்லை
விரல்களை குவித்து விரிக்கிறேன்
ஒரு பூ மலர்கிறது.
-ஜெம்ஸித் ஸமான்.
ஒரு நெம்புகோலை கொண்டு சமுதாயத்தை புரட்டிப்போடுகிறதோ இல்லையோ ஆழ்மனதில் நம்மை பூக்க வைத்து பார்த்துவிடுகிறது இவர்களின் இந்த ஹைக்கூக்கள்.கொஞ்சநேரம் செடியாகித்தான் கிடந்தேன்.
-காவனூர்.சீனிவாசன்.

செப்டம்பர் 20, 2016

இதுதான் ஹைக்கூ -18

பூத்து நிற்கும் கள்ளிச் செடி
செல்லமாய்த் தடவிச் செல்கிறாள்
இடுப்பில் குழந்தை - முனைவர் ம.ரமேஷ்


தாய் தடவிச் செல்கிறாளா? குழந்தை தடவிச் செல்கிறாளா? தாய் இடுப்பில் இருக்கும் குழந்தையைத் தடவிச் செல்கிறாளா? இல்லை யாரோ ஒருவர் அந்த கள்ளிப் பூவைத்தான் தடவிச் செல்கின்றார்களா? கொல்லாமல் விட்டதற்கான தடவளா அது? என்று பொருள் விரியும்… 

ஜூலை 04, 2016

பழமொன்ரியு... கூழானாலும் குளித்து...

குளித்தப்பின் பார்த்தேன்
சுத்தமாயிருந்தது…
சட்டியிலிருந்த கூழ்

சில ஹைக்கூக்கள்

நான் ரசித்த சில ஹைக்கூக்கள்:
சருகுகள் உதிரும்
மொட்டையாய் மரங்கள்
வசந்தகாலம் வருகிறது (வதிலை பிரபா, தீ, ப.52)
வசந்தத்தைக் காண
அலங்கரித்து நிற்கின்றன
மரம், செடி, கொடிகள் (வீ.தங்கராஜ், ஹைக்கூ வானம், ப.63)
குளிர்காயும் சிறுவர்கள்
மரத்திலிருந்து விழுகிறது
தீக்குள் பனித்துளி! (அ.தனபால், மீன் உடைத்த நிலா, ப.53)
குளிர் தாங்காமல்
தண்ணீரும் புகைத்தது
பனிபெய்யும் காலை
(சோலை. இசைக்குயில், சூரியனுக்கு வெட்கமில்லை, ப. 12)
குளிர்கால இரவு
போர்வைத் தேடும் மனிதன்
குளிக்கும் மலர்கள் (கன்னிக்கோவில் இராஜா, தொப்புள் கொடி, ப.27)
மார்கழிப் பனி்
நடுநடுங்கி ஒலிக்கிறது
கீறல் விழுந்த திருப்பாவை (ம.ரமேஷ், பனித்துளியில் பனைமரம், ப.34)
தள்ளு வண்டியில்
சிவப்பு பிறை நிலாக்கள்
தர்பூசணி (சொ.சரவணபவன், மின்னல் முகங்கள், ப.43)
அரச மரம்
தனிமையில் பிள்ளையார்
குளத்துப் பூக்களுக்கு வெட்கம் (ஆரிசன், குளத்தில் மிதக்கும் தீபங்கள், ப.29)
ஆடை அலங்காரம் அம்மனுக்கு
நைந்துபோன துண்டோடு
கோயில் பூசாரி (வானவன், மகரந்த துகள்கள், ப.29)
ஏழைகளின்
குழந்தைகள் காப்பகம்
மரநிழல் (மரிய தெரெசா, துளிப்பா தோப்பு, ப.48)
கழுகின் கள்ளப் பார்வை
பெருத்த கோழி
இறக்கைக்குள் திமிறும் குஞ்சுகள் (மு.முருகேஷ், என் இனிய ஹைக்கூ, ப.118)

ஜூன் 28, 2016

சுவாதி கண் திறந்தேயிருக்கிறாள்…

அவன் கத்தியோடு இருந்தபோதுதான்
எவருக்கும் தடுக்கும் துணிவில்லை
கத்தியைத் தூக்கியெறிந்த பின்னாவது
யாராவது ஒருவர்
அவன்மீது கல்லெறிந்திருக்கலாமே…
சரி… விடுங்கள்…
நான் உங்கள்
அக்காவோ தங்கையோ
இல்லைதானே?

கோழை அவன்!
என் முன்னால் வந்து வெட்டியிருந்தால்
நானாகிலும் போராடித் தடுத்து
முடியாமல் போனபோது செத்திருப்பேன்.

அடுத்தொருத்தியை வெட்டும்போது
ஆண்மையும் துணிவுமிருந்தால்
முன்னால் வந்து வெட்டுங்கள்.

ஒரு சமயம் அவ்விடத்தில்
பெண்ணொருத்தி இருந்திருந்தாள்
அவள் கத்தி கூச்சலிட்டிருப்பாள்…
நீங்கள் ஆண்கள் என்ன செய்வீர்கள்?

பார்க்கத்தான் கண் திறந்தேயிருந்தேன்.

ஜூன் 24, 2016

பச்சைக்குதிரை

புன்னை மரத்தின்கீழ்
தலைமேல் விழுந்த பூ; இறங்கும்
கழுத்து வழியே எறும்பு

இருந்ததை எடுத்து
இல்லாத இடத்தில் சேர்த்தும்
பல்லாங்குழியிலும் தோல்வி

இனிப்பு நிறைந்த உலகின்
தனி வீட்டிலிருந்து வெளியேறுகிறது
மாம்பழ வண்டு

குனிடா…. மரியாதை இல்லாம…
டேய்… குனிடா… சீக்கிரம்…
பச்சைக்குதிரை

அடுக்கியது சரிய…
மீண்டும் அடுக்கியது சரிகிறது
ஏழுகல் ஆட்டம்

ஜூன் 02, 2016

இதுதான் ஹைக்கூ

ஆடுகின்றன
நரியின் இரண்டு பற்கள்
கழுத்து டாலரில் -
Jothi Jothi
-இது ஹைக்கூவா? சென்ரியுவா? சென்ரியுதான். முதல் இரண்டு அடியில் வரும் நரியை என்று எடுத்துக்கொண்டால் அது ஹைக்கூ. மூன்றாவது அடியை நோக்கினால் அது சென்ரியுவாக மாறி விடுகின்றது. 1. பெரும்பாலும் நரியை வேட்டையாடித்தான் பல் எடுக்கிறார்கள். வயதாகி இறந்த பின்னர் அல்ல. மிருக வதை அது. தடுக்க வேண்டும். 2.ஒரு மூடநம்பிக்கையின் காரணமாகவே அதனை அணிகிறார்கள். பேய் பிடிக்காதாம். இந்த எள்ளல்களை உள்ளடக்கமாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்துவதால் இது சென்ரியு வகைமையில் சேரும்...

மே 31, 2016

இதுதான் ஹைக்கூ...

பழுதடைந்த கட்டுமரம்
சாந்தமாக அசைந்து வருகிறது
தக்கை
 -எஸ். நாகலிங்கம்
தக்கை - என்பதற்குப் பதிலாகச் சிறு திருத்தம் கொண்டு இதை சென்ரியுவாகப் படைக்கலாம். மூன்றாவது அடி  இறந்த மீனவன் சடலம்” என்று எழுதினால் பன்முகம் பெறுவதைக் காணமுடியும். தக்கை என்பது கடலில் அரிதுதானே?
‘‘பழுதடைந்த கட்டுமரம்
சாந்தமாக அசைந்து வருகிறது
இறந்த மீனவன் சடலம்
’’
-இப்போது பாருங்கள்...மீனவன் உயிருக்கு எவ்வாறு போராடியிருப்பான். பழுதடைந்த படகும், அவன் உடலும் சாந்தமாக - உயிரற்று வருவதற்கும் பொருந்தி மீனவர்களின் துயரையும் சித்திரிப்பதாய் அமைந்திருக்கிறது.

மே 15, 2016

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 24

(2) சேற்றில் கால்கள்
சிக்க சிக்க… நடக்கும்
எருதுகள்

முதலில் இப்படி எழுதப்பட்டது:
(1) உழவனின் கால்
சேற்றில் சிக்க சிக்க… நடக்கிறது
நான்கு கால்களில் எருதுகள்

ஹைக்கூ வாசிப்பின்படி முதல் இரண்டு அடிகளை வாசிக்க ‘சிக்க சிக்க’ எது நடக்கிறது? யார் நடக்கிறார்? நடக்கிறார்கள்? என்று வினா எழுகின்றது. மூன்றாவது அடியில், எருதுகள் என்று வரும்போது, உழவனின் கால்தான் சேற்றில் சிக்குகிறது எனவும் பொருள் விரியும். திருத்தப்படாத ஹைக்கூவில் (1) உழவுன், சேறு என்பதால் அவன் வயலை உழுதுகொண்டிருக்கலாம். ‘சிக்க’ என்பதால் அது ‘சேடை’யாக இருக்கலாம் என்பது உறுதியாகிறது. ‘சிக்க’ என்று ஒரு முறைமட்டுமே எழுதியிருக்கலாம். ஏன் இரண்டு முறை என்றால், ‘சிக்க’ ‘சிக்க’ என்று வரும்போது அவர் புதியவர் என்று பொருள்படவும் செய்யும்… மேலும், அவர் சலித்துப்போகாமல் மீண்டும் மீண்டும் உழுதலையும் எடுத்துக்காட்டும். இரண்டாவது அடியில் ‘நடக்கும்’ என்பது ‘நடக்கிறது’ என்று முதலில் எழுதப்பட்டது. பின்னர் உழுபவருக்கும் எருதுகளுக்கும் பொருந்துமாறு சிந்திக்க ‘நடக்கும்’ என்பது சரியெனப்பட்டது. ஹைக்கூ வாசிப்பின்படி திரும்பவும் முதலிரண்டு அடிகளை வாசித்துவிட்டு மூன்றாவது அடிக்கு வருகிறோம். ஹைக்கூவின் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்கு பெயர்ச்சொல் மூன்றாம் அடியில் அமைய வேண்டும் என்ற அறிஞர்களின் கூற்றுப்படி எருதுகள் எழுதப்பட்டது. மூன்றாவது அடியில் ‘எருதுகள்’ என்று மட்டுமே கூட வந்திருக்கலாம். பின்னர் ஏன் அந்த ‘நான்கு கால்களில்’ என்றால், அந்தப் பக்கமாய் போகும் – பார்க்கும் யாரேனும் இப்படிப் பேசிக்கொண்டு போகலாம்: “நாலு காலு இருக்கிற மாடுகளே சிக்காம நடக்குதுங்கள்… அவரைப் பாரு…” என்பதாலும், வடிவ நெருடலுக்கு இட்டுச் செல்லாத அமைப்புக்குமாக சேர்த்தே எழுதப்பட்டது. இறுதியில் உழவன் என்று ஏன் முதலிலேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்று எண்ணி, இறுதியாக கொஞ்சம் மாற்றி (2வது) – ஹைக்கூவாக மாற்றம் செய்யப்பட்டது. இப்போது ஒன்று, இரண்டிற்கும் மேற்பட்ட பொருளைத் தரும் ஹைக்கூவாக மாறியிருக்கிறதை கவனிக்கவும்.  

முதலில் இப்படி எழுதப்பட்டது:
(1) உழவனின் கால்
சேற்றில் சிக்க சிக்க… நடக்கிறது
நான்கு கால்களில் எருதுகள்

முடிவாக:
(2) சேற்றில் கால்கள்
சிக்க சிக்க… நடக்கும்
எருதுகள்

மே 14, 2016

எம்.ஜி.ஆர் செத்துட்டாரா? - தேர்தல் சென்ரியுக்கள்

எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?
என்ன தம்பி சொல்ற?
அப்ப ரட்ட எல சின்னம் இருக்கே?

தொழுவத்தில் மாடுகள்
அம்மா அம்மா… சட்டசபையில்
தமிழக MLAக்கள்

எங்கிருந்து வந்தது
இத்தனை கோடி
லட்சக்கணக்கான தொண்டர்கள்

ஒருவர்கூட சிறையில்லை 
தேர்தலுக்கு யாரும் கொடுக்கவில்லை
யாரும் பணம் பெறவில்லை!

ஐந்தாண்டுகள் எட்டிப்பாராதவர்
வீட்டுக்கு வீடு பொய்யாய்…
உங்கள் வீட்டுப் பிள்ளை

மின்சாரம் துண்டிப்பு
வீடுவீடாய் பணம்; திருட்டு
வேட்பாளரின் தொண்டன்

தன் பணம் - கட்சி பணத்தில்
கொடுப்பதுதான் இலவசம்
நீதிமன்றம் தீர்ப்பு தருமா?

ஓட்டுக்குப் பணம்; கொடுப்போர்
வாங்குவோரை காட்டிகொடுக்க மாட்டோம்
எதிர் எதிர் கட்சியினர் சத்தியம்!

மே 07, 2016

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23

”பசி வேளை
நாலுபேருக்கு நிறைந்தது
கூட்டாஞ்சோறு” – ம.ரமேஷ்.

திருத்தத்திற்கு முன்னர் இப்படி எழுதப்பட்டது:
கொஞ்சம் சோறு; பசி வேளையில்
நான்கு பேருக்கு மனம் நிறைந்தது
கூட்டாஞ்சோறு

-    மூன்றாம் அடியில் கூட்டாஞ்சோறு என்று வந்துவிட்டதால் முதல் அடியில் வரும் கொஞ்சம் சோறு என்பது தேவையற்ற சொல்லாகப்பட்டது. பசி வேளையில் என்பது பசி வேளை என்று மாற்றப்பட்டது. வேளையில் என்பது உரைநடை வார்த்தை. வேளை என்பது ஹைக்கூ வார்த்தை. மனம் என்ற வார்த்தை நால்வருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. யாரேனும் ஒருவருக்காவது இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று இருந்திருக்கும். அதனால் மனம் என்ற சொல் நீக்கப்பட்டது. நீக்கப்பட்டதால் இன்னும் அதன் பொருள் விரிகின்றது. நால்வருக்கும் நிறைந்தது என்றால்? கொஞ்சம் சோறு எப்படி நிறைத்திருக்கும்? மனம், மகிழ்ச்சி, விளையாடும் சுதந்திரம் என்பவை நிறைந்திருக்கும் என்பதைக் குறிப்பால் சுட்டும் விதமாக அமையும். நான்கு பேருக்கு என்பது நாலுபேருக்கு என்று மாற்றப்பட்டது. நான்கு பேர் என்றால் நால்வரைமட்டுமே குறிக்கும்… நாலு பேர் என்றால் நான்கு என்ற எண்ணிக்கையைமட்டுமே குறிக்காது இன்னும் சிலரையும் சேர்த்துக் குறிக்குதானே. அந்த நாலுபேரு குழந்தைகளா? வளர்ந்தவர்களா? என்ற வினாவிற்கு மூன்றாம் அடி பதில் சொல்கிறது. கூட்டாஞ்சோறு என்பதால் சிறுவர்கள்தான் என்று. ஒரு மூன்று அடி ஹைக்கூவுக்குள் இவ்வளவு இருக்க வேண்டுமா என்றால்? இருந்தால் நல்லது.

ஏப்ரல் 09, 2016

வேண்டுதல் பலிக்காது!

வேண்டுதல் பலிக்காது!
ஐயனாருக்கு வைத்த பூவிடத்தில்…
உதிர்ந்து நின்ற சருகு

ஏப்ரல் 07, 2016

பூப்பூவாய்...

தோட்டத்தில்
உதிர்ந்து கிடக்கும்
ஒரு பூவில் தெரிகின்றது
நேற்று 
நாம் சந்திக்காததை.

ஐய்யனார்

பல ஆண்டுகளுக்குப் பிறகு
குலத்தோடு கும்பிடுகிறார்கள்…
அதே கோபத்தில் ஐய்யனார்

மார்ச் 23, 2016

அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது!

செய்தித்தாள் கொண்டு வரும்
என் குழந்தையிடம்
தினமும் சொல்கிறேன்...
“அம்மாவிடம் கொடு படிக்கட்டும்”
தவறாமல் சொல்கிறது குழந்தை -
“அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது!”
இத்தனைக்கும் அம்மா 
அரசு ஊழியர்!!

மார்ச் 09, 2016

புன்னகைத் தவழும் முகம்

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22

நடுங்கிக் கொண்டு ரசிக்கிறான்
புன்னகைத் தவழும் முகம்
புல்லில் பனித்துளி - ம. ரமேஷ்


முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாகவோ ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. புன்னகை முகத்தோடு உள்ள யாரையோ எதையோ ரசிக்கின்றானா? அம்முகம் பெண் என்றால் பார்த்துவிட்டால் என்ற நடுக்கமும் ஏற்பட்டு திரும்பவும் ரசிக்கின்றானா? மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கிக் கொண்டு ரசிக்கும் அந்த நேரத்தில் அவன் முகம் புன்னகைத் தவழ்கின்றது.  அல்லது பனித்துளிகளைப் பார்ப்பதால் புன்னகை வந்துள்ளது. அந்த முகமே 2 வது அடியாகப் பனித்துளியில் 3 அவது அடியாகப் பிரதிபலிக்கிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை  ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது? அதற்காக ஏளனம் செய்வதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா?  அவன் அப்படி ரசிக்கின்றான் என்றால் அவன் நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்த  புதியவனா?... இன்னும்… இன்னும்… 

மார்ச் 01, 2016

சின்னவீடு

- தஞ்சை. சாயிராம்
 
மனைவி ரசிக்கவில்லை 
குழந்தை வரைந்த காகிதத்தில் 
சின்னவீடு

பல பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த ஹைக்கூ. மனைவிக்கு ஏதோ மனசு சரியில்லை - அந்த நேரத்திற்கு ரசனை இல்லை என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் - அந்தச் சின்ன வீடு வீடு பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. - சின்னவீடு என்பது குறியீடாகி அது கணவனின் நடத்தை சரியில்லை என்பதையும் குறிப்பாய்ச் சுட்டிக் காட்டும் விதம் வெளிப்படுகிறது...

பிப்ரவரி 25, 2016

வசந்த கால(ம்) - ஹைக்கூக்கள்

https://www.facebook.com/groups/haikusenryuworld/

1. கவிஞர் வீரா 

மூடுபனிக் காலம்
முகம்மூடிச் செல்கிறான்
மனைவியை இழந்தவன்
2. Raja Kumaran 
கடற்கரை மணல்/
மாறவில்லை காலடிச்சுவடு /
சுண்டல் விற்பவன்
3. GurunAthan RamaNi
சித்திரை யிலோர் மாலை
வாய்க்கால் வழியெங்கும் சலசல…
தனியாய் ஓர் உழவன்.
4. NeelakandanSirkali
இதமான இளம் வெய்யில்/
குளிர் காயும் அழகு/
ஈர வார்ப்பு பொம்மைகள்!
5. Jothi Jothi
வாசமாய் காற்று/
முன்னே செல்கிறது/
இறுதி ஊர்வலம்/
6. Premkumar Prajana
புத்தாடை கிடைக்கும்
அடுத்த வாரம் தீபாவளி
மெல்ல நகரும் நாள் !
7. S Naga Lingam
கடின உழைப்பு
சோர்வுடன் எழும் மானிடம்
குறுகிய இரவு
8. Somasundara Barathy
இலையுதிர் காலம்/
ஆடையில்லா கிளைகள் /
தூரத்தில் வசந்த காலம்
9. லெனின் ராசபாண்டி
முந்நூறு கதைபேசி
மூழ்கியபடிமுணுமுணுக்குது
தவளைக் குஞ்சுகள்
10. Sayee Ram
பறக்கிறது
பட்டாம்பூச்சியின் சடலம்
கொடியில் காயும் பட்டுச்சேலை
11. மகிழ்நன் மறைக்காடு
எண்ணத் துவங்குகிறாள் குழந்தை/
நேற்று விட்ட இடத்திலிருந்து/
நட்சத்திரங்களை.
12. மகிழ்நன் மறைக்காடு
எதை வாங்கலாம் ?/
குழம்பிப் போகிறாள் குழந்தை /
பொம்மைகள் திருவிழா.
13. Premkumar Prajana
தனிமை பயணம்
தொடரும் பாதச்சுவடுகள்
கடற்கரை !
14. Shahul Hameed
கீழிறங்கும் இலைகள்
நீருக்குள் புகும்
தவளைகள்
15. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
நாற்று நடும் தாய்.
விழுதுகளின் தொட்டிலில் விழுது.
கொஞ்சும் கிளி.
16. Maruthurmamu Mamu Mamu
மலர்களின் புன்னகையில்
மயங்கி விழுந்தன
தேனருந்த வந்த வண்டுக்கள்...!
17. Kuppu Venkat
ஆற்றோடு போகிறது
அத்தனை அழுக்குகளும்
ஊர் குடி நீர்!
18. கிளித்துரை ஜே ஜே
கோடையை எண்ணி
கோரைப்புல் கண்ணீர்
வயலில் உருகும் உறைபனி..
19. Raja Kumaran
அதிக விலை/
பொம்மை திருவிழா/
ஏமாறும் குழந்தைகள்/
20. முல்லை நாச்சியார் 
வெப்ப மிகுதி
தவம் கலைகிறது
வண்ணத்துப்பூச்சி பிறப்பு

பிப்ரவரி 23, 2016

ஹைக்கூக் கவிதைகளில் பொம்மைத் திருவிழா

நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/

1. Tkeshav Tkeshav 
நடனமங்கை,பாடும் குயில்
பாயும்புலி, பாலூட்டும் தாய்
பொம்மை திருவிழா
2. Tkeshav Tkeshav
மாரியம்மன் திருவிழா
மகிழ்வில் மக்கள்
பொம்மை கடையில் சிறுமி
3. Mani Faro
உயிர்கள் விற்ற
உயிரற்ற உருவம்
பொம்மைகள் திருவிழா
4. Premkumar Prajana
வேடிக்கை பார்க்கும் சிறுவன்
கையில் காசு இல்லை
பொம்மைத்திருவிழா !
5. Rajan Raj
பொம்மைத் திருவிழாவில்
அதிகம் வாங்கினார்....
ஊர் தூற்றும் மலடி
6. Rajan Raj
பொம்மைத் திருவிழா பார்க்காது
வேகமாக வீதியை கடக்கிறாள்
ஏழைத்தாய்
7. மகிழ்நன் மறைக்காடு
எதை வாங்கலாம் ?/
குழம்பிப் போகிறாள் குழந்தை /
பொம்மைகள் திருவிழா.
8. கவிஞர் வீரா
திருவிழாவில்
தொலைந்து போனது
விற்காமலிருந்த பொம்மை
9. Rajan Raj
பொம்மைத் திருவிழாவில்
விலை உயர்வாயிருக்கிறகிறது...
உபதேசிக்கும் புத்தர்சிலை
10. Rajan Raj
பொம்மைத் திருவிழாவில்
மலிவாக விற்பனையாகிறது....
கடவுள் சிலை
11. Mani Faro
இழந்த அப்பாவின்
ஞாபக தேடலில்
பொம்மைத் திருவிழா
12. Shahul Hameed
பொம்மைத்திருவிழா
கைநீட்டிய படி
பொம்மைகள்
13. Premkumar Prajana
வண்ண விளக்கு ஜொலிக்குது
மகிழ்ச்சியுடன் சிறுவர்கள்
பொம்மை திருவிழா !
14. Vanarajan N
துக்கத்தில் தந்தை
ஆற்றுப்படுத்தும் குழந்தை
பொம்மைத் திருவிழா!
15. Raja Kumaran
அதிக விலை/
பொம்மை திருவிழா/
ஏமாறும் குழந்தைகள்/
16. Jothi Jothi
திருவிழா நடக்கிறது/
பொம்மைகளுக்கு/
குழந்தைகள் கைகளில்/

பிப்ரவரி 02, 2016

செத்துத்தான் போவேன்!

“உன்னை பிரிஞ்சா
செத்துத்தான் போவேன்!”

இன்று
சுடுகாட்டில்
மாலையோடு காத்திருக்கிறேன்!!
எந்தச் சவமும்
வரவேயில்லை!!!

ஜனவரி 14, 2016

'உள்ளாடையா? மேலாடையா?'

அந்தப் பாடல்காட்சி
அழகாயிருந்தது…
'உள்ளாடையா? மேலாடையா?'


ஜனவரி 12, 2016

இதுதான் ஹைக்கூ...

"என்ன அவசரம்?
அடுத்தமுறை பார்த்துக்கொள்வேன்...
குறிஞ்சிப் பூவை!" - ம. ரமேஷ்

https://www.facebook.com/groups/TamilHaikuClub/ 
வதிலை பிரபா அவர்களின் விளக்கம் - 
இருக்கலாம்.. பூ பூப்பது அதன் இயல்பு.. அந்த இயல்பு மாறாமல் பூக்கலாம் மீண்டுமாய்.. ஜென்னில் இயல்பை இயல்பாக விடுவதும் உண்டு.. மரணத்தை இயல்பாக எடுத்துக் கொள்வது மாதிரி.. 

இரண்டாம் வரியில் "அடுத்தமுறை பார்த்துக் கொள்வேன்" என்றிருப்பது தொடரும் பயணத்தைக் குறிக்கிறதா என்ன? இங்கே இந்த யாத்ரிகன் தன் பயணத்தை தொடர்கிறதும், முடித்துக் கொள்வதும் அவன் இயல்பாய் வருடுகிற மரணத்தின் நிஜம்..


"என்ன அவசரம்
அடுத்தமுறை பார்த்துக் கொள்வேன்"
என சொல்லும்போதே புரிந்து விடுகிறது.. உள்ளுக்குள் எழும் மரண வதை. இந்த வதை இன்னும் கூடுதலாக அவனுள் நம்பிக்கையைத் தரும்தான்.. 


மூன்றாவது வரியில்..
"குறிஞ்சிப் பூவை"
எனும்போது அவன் நம்பிக்கை இன்னமும் அதிகரிக்கிறது.. குறிஞ்சிப் பூ 12 ஆண்டுக்கொருமுறை பூக்குமென்று தெரியும் அவனுக்கு.. நாட்களை நகர்த்துகிறவன், ஆண்டுகளில் நம்பிக்கை வைக்கிறான்.. இந்தப் பயணம்தான் எத்தனை எத்தனை செய்திகளைத் தருகிறது நமக்கு.. 


மொத்தத்தில் கலங்காதிரு மனமே என்கிறதோ கவிதை.
கவிஞனின் அகத்திலிருந்து எரியும் அகல்விளக்கின் வெளிச்சம் பரவுகிறது பாருங்கள்.. அதோ.. சலனமின்றி ஒரு புதிய பாதை புலப்படுகிறது... அந்த மரண வதையையும் தாண்டி..  அருமை ரமேஷ்..

ஜனவரி 04, 2016

மாமழை போற்றுதூஉம்... அழிப்பதூஉம்...

Jothi Jothi
1. நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.

2. உலையில்லை வலையில்லை/
மகிழ்வில் மீனவர்/
படகில் மக்கள்/

3. வெள்ளம்
செழிப்பாக்குகிறது
ஊழல்அதிகாரிகளை

4. ஊரே வெள்ளம்
உறக்கம் தொலைத்தனர்
அரசியல்வாதிகள்

5. வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது/
நிவாரணநிதி/

Tkeshav Tkeshav
1. காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்

2. வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம்

3. உயிர் தப்ப கடைசிமாடிக்கு
ஓட்டமாய்
படி ஏறிவரும் வெள்ளம்

4. ஓட்டுக்கு பணம்
கட்சிகள் பகிங்கிரமாக
வெள்ள நிவாரணம்

5. விவசாயி அழுகிறான்
அணைகடந்தவெள்ளம்
திரும்புமா?

Rajan Raj
1. வானவில்லின் திசை நோக்கி
பறக்கிறது
மழையில் நனைந்த பட்டாம்பூச்சி

2. செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு

3. ஏழை வீட்டில் வெள்ளம்
அதிகாரி வீட்டில் புகுந்துவிட்டது...
நிவாரணம்

4. கடவுளுக்கு நிவாரணம்
கொடுத்தது அரசாங்கம்
வெள்ளத்தில் போனது கோயில்

5. ஜன்னலோரத்தில் கரைகிறது
குழந்தை வரைந்த...
வானவில்

ஜனவரி 03, 2016

மழை - வெள்ளம் - பேரழிவு - அரசியல்

https://www.facebook.com/groups/haikusenryuworld/

•Jothi Jothi - நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
•Tkeshav Tkeshav -காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்
•Rajan Raj - செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு
•விஜயகுமார் வேல்முருகன் -பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு..!
•Dhakshan Haiku - மழை வெள்ளத்தால்
கன்னத்தில் கைவைத்த சிறுவன்
கவிழ்ந்தது காகித கப்பல்.
•Sivakumar Sivakumar -சுத்தப்படுத்திய மழைக்கு
நன்றி சொன்னது
கூவம்!
•RRavi Ravi -சாலையை எரியாக்கியது
ஏரியில் இடமில்லாததால்
மழை !
•Ssprabhu Ssp -இழுத்து சென்ற வெள்ளம்...
விட்டுச் சென்றிருந்தது,
தொலைந்திருந்த மனிதம்.
•கவிஞர் வீரா -வடியும் வெள்ளம்
திரும்பவில்லை
தொட்டிலில் மீன்கள்
•மகிழ்நன் மறைக்காடு -
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு/
வெள்ளப் பாதிப்பும் ஒருநாள்/
மெல்ல மறையும் நம்பு.
•விஜயகுமார் வேல்முருகன் -
நிவாரணம் வாங்குவோர் ஒருபுறம்
அதை திருடி பதுக்க காத்திருக்கும்
மனசாட்சியிலா கூட்டம் மறுபுறம். !
•Dhakshan Haiku -
இரவுநேர மழையால்
தூக்கமில்லாச் சிறுவன்
தொலைந்துபோன நாய்குட்டி.
•Vanarajan N -
வெள்ள நிவாரணம்
பெற்றுச் செல்கின்றன
மதுக்கடைகள்!
•Gnanasoory Suganya -
வருத்தத்தில் இருக்கிறதோ வருணன்?
பெரும் மழையாகி பிரியாவிடை தருகிறதே
ஓய்வு பெறுகிறார் இரமணன்!
•S Naga Lingam -வெள்ளம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
முந்தைய ஊழலை
•முல்லை நாச்சியார் -சுதந்திரமாக பறந்த பட்டாம்பூச்சி
முதுகில் சுமையாகி விட்டது
மழைநீரின் ஒரு துளி
•Raja Kumaran -
மழைத்துளி வெள்ளமாச்சு
சாதிமதம் கூடி வந்து
மனித அன்பு மலரலாச்சு
•NeelakandanSirkali -மழையழகு பெருமழைப் பேரழகு/
மலை,காடு கழனி,கடல் நீர்நிலையில்/
வீட்டில் வீதியில் பேரழிவு!
•Dhakshan Haiku -
வெட்டிய மரத்திற்காக
பழிதீர்த்ததோ மழை?
நனைந்த கோடரியில் துரு
•Vanarajan N -சென்ரியு
மாடி வீடுகளில் வெள்ளம்
ஊடகங்களால் மறைந்து போனது
குடிசைவீடுகளின் சுவடுகள்
•கவிஞர் வாலிதாசன் -நிரம்பி இருக்கிறது
ஏரி குளங்களில்
குடிசை வீடுகள்
•வந்தை ஆறு -
மழை சத்தத்தின் ஊடே
மனதை கிழிக்கறது...
மழலையின் சத்தம்
•வெற்றிப்பேரொளி- மெத்தையில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
வெள்ளநீர்!
•alimuthu Suka -
துணித்துண்டுகளாய் மனிதர்கள்
தைத்து ஆடையாக்கியது
மழை ஊசி