செப்டம்பர் 19, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 5

ஹைக்கூவின் வெளிப்பாடு

கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்தி விடுவதில்லை. கவிதையின் மிகச் சிறிய வடிவமே, இதற்குக் காரணம் என்று கருதுதல் சரியன்று. ஹைக்கூ முழுப்பொருளையும் வெளியிட விரும்புவதில்லை என்பதே உண்மை.

“கருத்துப் பொருண்மையின் அளவில் எழுபது அல்லது எண்பது விழுக்காட்டை வெளியிடும் ஹைக்கூ நன்று. ஐம்பதிலிருந்து அறுவது விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் ஹைக்கூ மிக விழுமியது.” – என்று ஆர்தர் இ. கிறிஸ்டி தொகுத்த நூல் கூறுகிறது.

மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு

இதில் உள்ள இயற்கைப் பின்னணி, நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஓடும் மேகங்களால் ஏற்படும் கோடை மழை; இரவு நேரம்; மழையின் செல்வாக்குச் சிறிது நேரத்திற்கே! விடை பெற்றுச் செல்லும் மழையினால், மீண்டும் சந்திரன் வானில் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாகப் புல்லின் மீதுள்ள மழைத்துளிகளில் எல்லாம் நிலவின் பிம்பங்கள்! கோடை மழையின் அற்ப விளம்பர வாழ்வினை, உலகியலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்! நிரந்தரமான இருட்டடிப்பு, நிலையான பொருள்களுக்கில்லை. இவற்றையெல்லாம் கவிஞர் விரிவாக எடுத்துக் கூறவில்லை. உட்குறிப்பால் உணர்த்துகிறார். நாம் எழுதும் ஒவ்வொரு ஹைக்கூவும் இவ்வாறுதான் பயணிக்க வேண்டும்…


நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்

செப்டம்பர் 18, 2015

பசியுடன்...

தேன் எடுக்கும்
பட்டாம்பூச்சியின் மேல் பறக்கிறது
பசியுடன் வண்டு

செப்டம்பர் 17, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 3

பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது – பாஷோ

பாஷோ 1094 ஆம் ஆண்டு பத்தாவது திங்கள், பன்னிரண்டாம் நாள் தனது ஐம்பத்தொன்றாம் வயதில் இறந்தார். மாபெரும் ஹைக்கூக் கவிஞரின் கடைசிக் கவிதை இது. ஒரு பயணத்தின்போது பாஷோ கடுமையான நோய்க்கு உள்ளானார். அவருடைய மாணவர்கள் அவரிடம் விடைபெறு கவிதை (மரணத்திற்கு முன் எழுதுவது) எழுதச் சொன்னார்கள். என்னுடைய எந்தக் கவிதையும் மரணக் கவிதையாக இருக்க முடியும் என்று கூறி அவர்களுக்காக மேலேயுள்ள இறுதி ஹைக்கூ எழுதினார். பின்னர் நான்கு நாட்கள்  உயிரோடிருந்தார். அவருடைய கனவுகள் அலைந்து திரிய வறண்ட வயல்களே கிடைத்தன. ஆனால் அவருடைய ஹைக்கூக் கவிதைகள் ஆயிரம் பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்னும் பசுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நன்றி – ஈரோடு தமிழன்பன், ஜப்பானிய ஹைக்கூ 100 குறிப்புரையுடன்.

செப்டம்பர் 16, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் (விளக்கம்) 2

சீனா நடைமுறைத்தன்மை, ஜப்பானிய எளிமையும் தெளிவும், கொரியசுதந்திர உணர்வு, இந்தியாவின் தன்முனைப்பற்ற தன்மை இவற்றின் சங்கமமே கீழ்த்திசைஞானம். இத்தகைய ஞானத்தின் மீதான ஸென் குறித்தான கலையாக்க நுட்பமே ஹைக்கூ.

உலகமெல்லாம் விழிகள்
உறங்கித்தான் போனது
காத்திருக்கும் கதவு

இந்த ஹைக்கூவின் புரிதல் கடைசி வரியான காத்திருக்கும் கதவு என்ற வரியிலேயே ஊடாடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா என்னும் கதவு இருக்கிறது. உலகத்தின் மீதான இன்பம், துன்பம் என பல்வேறு வழிகள் உலகத்திற்கு உள்ளது. அத்தகைய பதிவுகள் நிரந்தரமாக விலகுவதில்லை என்பதைப் போன்றே, தூக்கமும் நிரந்தரம் கிடையாது என முதல் இரண்டு வரிகளுக்கான ஒப்புமை கட்டமைப்பு, கடைசிவரியில் ஹைக்கூவிற்கான ஞானவிசாரணையை தருவித்து, ஊக்குவித்துப் பயணிக்கிறது.


நன்றி – செல்லம்மாள் கண்ணன், ஓஷோ - தமிழ் ஹைக்கூவில் புரிதல்