மார்ச் 30, 2014

அரசியல்வாதிகள் கவனத்திற்கு! – சென்ரியூ

ஐந்தாண்டுகள் கழித்து
ஊருக்குள் வருபவர்கள்
வெளியேற்றப்படுவார்கள்

மார்ச் 27, 2014

அஃறிணை இளைஞன் - ஹபுன் கவிதை

கிராமத்தை நோக்கிப் பயணமானேன். சாலையோர நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டிருந்தன. முதியவர் ஒருவர் கலப்பையோடு எதிர்பட்டார். இந்தத் தள்ளாத வயதிலுமா என்று வினவினேன்… இளைஞர்கள் விவசாயம் செய்ய தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவை உடல் உழைப்பில்லா சம்பளம்தான்… என்னென்னமோ பேசினார்…

தென்னை மரத்தின் கீழ்
நெற்கதிர்களைக் கொரிக்கும்
அணிற் கூட்டம்


(கவிதையின் பொருள் புரியாதவர்களுக்கு… உயரப்போய் தென்னையை ருசிக்க இன்றைய அஃறிணை உயிர்களும் தவிர்த்து எளிமையாகக் கிடைக்கும் நெற்கதிர்களை ருசிக்கிறது. வயிறு நிறைந்தால் சரி என்று. இன்றைய இளைஞர்களும் அப்படியே...)

மார்ச் 25, 2014

நன்றிக்காக எச்சம்! - ஹைபுன் கவிதை

(உண்மை சம்பவம் – ஹைபுன் கவிதையாகியுள்ளது)
நேற்று காலைப்பொழுதில் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காக்கையின் குஞ்சு ஒன்று சாலையில் பறக்க சக்தியின்றி வாகனங்களுக்கு மத்தியில் தத்தித் தத்தித் தப்பித்துப் பிழைப்பதைப் பார்த்து, காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி அதைப் பிடித்து சாலை பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையில் விட்டேன்… மாலையில் அவ்வழியே திரும்ப பயணிக்கையில் அந்த மரத்தின் கீழ் நின்று பார்த்தேன். ஒரு காக்கை என் தலைமேல் எச்சமிட்டது. உற்றுப்பார்க்கையில் எச்சமிட்ட காக்கையின் பக்கத்தில் காப்பாற்றிய  குஞ்சு பத்திரமாக இருந்தது.

காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை

(இன்னும் சுருக்கமாக இப்படி எழுதலாம்)

நன்றிக்காய்
எச்சமிட்டது

காக்கை

மார்ச் 18, 2014

தேர்தல் சென்ரியூ -2

மின்தடையில்லாத
தமிழகத் தொகுதிகள்
இடைத் தேர்தல்

புது வேட்டி சட்டை
கையில் கோட்டர், பிரியாணி
தேர்தல் கூட்டம்

டாஸ்மாக் டார்கெட்
ஐந்து மடங்கானது
தேர்தல் காலம்

கொல்லும் கோடையில்
அமைச்சர் நடைபயணம்
தேர்தல்

பகைவன்
நண்பனானான்
தேர்தல் கூட்டணி

மார்ச் 17, 2014

காதல் காயங்கள் (கஸல்)

கடவுளை  ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?

திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது  என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?

என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்


மார்ச் 15, 2014

ம. ரமேஷ் ஹைபுன்

வரிசையாய் செல்கிறது எறும்புகள். என் கண் பட்டுவிட்டதென்றோ என்னவோ திருஷ்டி வைக்க மேலிருந்து பூ ஒன்று உதிர்ந்தது. பாவம் எறும்புகள் கலைந்து விட்டது!

இயற்கை
தன் வழியில் நடக்கிறது

நாம் குறுக்கிடாதவரை

மார்ச் 12, 2014

அழகுப் பொய்கள் - ஹைபுன்

எதிர்காலம் சொன்ன
வண்ணக்கிளி
அழகாய்ப் பொய்ப்பேசி
கூண்டிற்குள் செல்கிறது
ஒற்றை நெல்லை
அலகில் கொத்தி
கண்களில் கண்ணீரோடு

மனிதனைத் தவிர
வேறெதுவும் பேசுவதில்லை
பொய்கள்

மார்ச் 11, 2014

நம்பிக்கைத் துரோகத்திற்கான கண்ணீர்

உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றுவிட்டது

எத்தனை பிரச்சினைகள்
இருந்தபோதும்
அன்று
மகிழ்ச்சி மட்டுமே
நம் மனத்திற்கு வாய்த்திருந்திருக்கிறது

நான் மணவறையில்
அழுவது
பெற்றோரின் பிரிவுக்காக அல்ல
உனக்குச் செய்த
நம்பிக்கைத் துரோகத்திற்கான
கண்ணீர்

மார்ச் 09, 2014

மரணம் - ஹைபுன் கவிதை

கண்களுக்கு
விருந்தளித்தபடி
வலசை போகிறது
பறவைகள்
இருப்பினும்
ரசிக்க முடியவில்லை
எந்த உயிரையோ கொல்ல
வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது
பருந்து

நடப்பவை எல்லாம்
நன்மைக்கே
மரணம்!

மார்ச் 06, 2014

மனைவிக்குக் கல்யாணம் (பெண்ணியம்)

என்னால்
என் மனைவிக்கு
குழந்தை பாக்கியம் இல்லையென்று
மருத்துவம் கைவிட்டுவிட்டது.

என்ன செய்வேன்
என் மனைவிக்கு
வேறொரு திருமணம்
செய்து வைப்பதைத் தவிர!

அவள் வாரிசு
தரணியில் தவழட்டும்
அவளின்
பெண்மை
புனிதமாகட்டும்!!

மாங்கல்யம் தந்துநானே…’!!!
முடிந்ததும்
செய்திகள் பரபரத்தன
இப்படியுமா செய்வான்
அவனுக்குப்
பைத்தியம் கீய்த்தியம்
பிடிச்சிப்போச்சா என்று
பெண்களும் பெண்ணியவாதிகளும்
பேசிக்கொண்டிருக்கும்
அதே வேளையில்

ஆண்கள் சிலர்
நானும்
என் மனைவிக்குத்
திருமணம் செய்துவைப்பேன் என்று
சபதம் ஏற்றார்கள்.

புதுப் பால் புரட்சி துவங்கியது!

தேர்தல் - சென்ரியூகள்

தினந்தோறும்
கோட்டர், பிரியாணி
தேர்தல் அறிவிப்பு

ஏழை வீட்டிற்கு
வெள்ளையடிக்கப்பட்டது
தேர்தல் பிரச்சாரம்

வெற்றி பெற்று
தலைவர் நுழைகிறார்
தேர்தல் ஓட்டுக்கு

மதிப்பும் மரியாதையும்
மக்களுக்குக் கிடைக்கிறது
தேர்தல் களத்தில் அமைச்சர்கள்

என் இனம் என் மக்கள்
இப்பத்தான் தெரிகிறது
தேர்தல் நேரம்

மார்ச் 02, 2014

முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை! (பெண்ணியம்)

முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!

குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.

மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
ஜட்டிஅளவே

மறைத்திருந்த போஸ்டரை!

மார்ச் 01, 2014