செப்டம்பர் 30, 2012

கடவுள் 2,3


கடவுள் – 2

மழையே இல்லையே!
பொங்க வைப்போம் வாங்க!
அப்பவாவது கடவுள்
கண்ணு தொறக்கறாரான்னு பாப்போம்.’
பொங்க வைத்தார்கள்.
மழை கொட்டியதில்
இடி விழுந்து
ஒருத்தி இறந்துபோனால்!
இப்போது ஒருத்தி
இன்னொருத்திக்குச் சொல்லிப்
புலம்பிக்கொண்டால்
கடவுளுக்குக் கண்ணே கெடையாது!’


கடவுள் – 3

கடவுளின் முகவரி
இன்னும் மாறாமல்
அதே வார்டில்
வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தது.
தனக்கு இறப்பு இல்லை என்பதை
நினைப்பதற்கு முன்
கடவுளின் விரலில் மை வைக்கப்பட்டது.
மின்னனு எந்திரத்தில்
பட்டன் அழுத்தியதும்
நினைத்துக்கொண்டார்
ஓட்டு யாருக்குப் பதிந்ததோ
கடவுளுக்கே வெளிச்சம்!

கடவுள் - 1


எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி.
சலூன்காரன் முன்
கடவுளின் முகம்
கண்ணாடியில் தெரிந்தது.
சலூன்காரன்
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!

செப்டம்பர் 19, 2012

விநாயகர் - ம. ரமேஷ் ஹைக்கூ


அருள் தந்த பிள்ளையார்
முடமாகிப் போனர்
சிலைகள் கரைப்பு

மூன்று நாள் அருள்
ஊர்வலமாய் விநாயகர்
யார் சாபம் கரைதல்

கை கால் உடைத்தும்
ஏதும் செய்யாதிருந்தார்
பின்லேடன் விநாயகர்

தும்பிக்கை இழந்தும்
மதம் பிடிக்க வில்லை
விநாயகர் சிலைக்கு!

கரை ஒதுங்கிக் கிடக்கிறது
கவனிப்பார் யாருமில்லை
விநாயகர் சிலை

காதலிக்கு ஒரு பூ! - கஸல்


உனக்கு
மாலைகள் வேண்டும்
காதலிக்கு
ஒரே ஒரு பூ போதும்!

என் கொஞ்சல்
உன் சிணுங்கல்
காதலில் இசையாகிப்போகிறது

தொலைவில்
சோகப்பாடல் ஒலிக்கிறது
அலைபேசியில்
நீ அழைக்கிறாய்!

செப்டம்பர் 17, 2012

என்னையே அழிக்கும் காதல்! - கஸல்


என் காதல்
என்னில் உண்டாகி
என்னையே அழிக்கிறது

முகத்திரையை
விலக்கிவிட்டு
உன் கவிதைகளைப் படிக்கிறேன்

முக மலர்ச்சியோடு
வண்டுகளின்
காதலை ஏற்கிறது
பூக்கள்

மீண்டும் புது வலி - கஸல்


சந்திப்பின் ஆவலிலும்
துக்கமே மேலிடுகிறது!

இதயம் முழுவதும்
மீண்டும்
புது வலி

நேற்று
என்ன புண்ணியம் செய்தேன்
இன்று அப்படி என்ன
பாவம் செய்தேன்?

செப்டம்பர் 16, 2012

கூடங்குளம் - ம. ரமேஷ் சென்ரியு


கூடங்குளம்
குளம் இல்லை
கடல்

கொஞ்சம் உயிர்
நிறைய பலன்
கூடங்குளம்

கூட்டம் கூட்டமாய்
கூடுகிறது கூடு களைக்க
கூடங்குளம்

கூடங்குளம்
கூடு களைந்தால்
சுள்ளி பொருக்க முடியாது

குயில்
கூடுகட்டிவிட்டது
கூடங்குளம்

கூடன் குயில்
ஒரு முட்டை பொறித்தது
ஆயிரம் குஞ்சுகள்

உயிர்களைவிட
தேவையாகிப்போனது
கூடங்குளம்

இடியும்
என்பதாலோ என்னவோ
இடிந்தகரை பெயர்

அக்கரை வெளிச்சத்துக்கு
இக்கரையாய்
இடிந்தகரை

கூடு பக்கத்தில்
இன்னொரு கூடு
பக்கத்து மாநிலத்துக்கு

எதுவும் தரமாட்டோம்
நீங்கள் தாருங்கள்
அணுமின்சாரம்

இடிந்தகரை இடிந்தாலென்ன
ரூமில்
ஏசி இயங்கவில்லை

ம. ரமேஷ் சென்ரியு


விபச்சாரியாவது
உடலை விற்கிறாள்
லஞ்சம்?

10 ரூபாய் ஏற்றம்
5 ரூபாய் குறைவு
மக்கள் சமாதானம்

அரைகுறை சிணுங்கள் (கஸல்)


அழகாய்
உறங்கிக் கொண்டிருப்பாய்
இங்கு, நான்
உன் நினைவுகளைத்
தாலாட்டிக் கொண்டிருக்கிறேன்

உன் முழுமையைவிட
அரைகுறை சிணுங்கள்
நன்றாக இருக்கின்றது

நல்ல வேளை
நம் காதல்
தோல்வியில் முடிந்துவிட்டது

ம. ரமேஷ் ஹைக்கூ


பாழுங்கிணறு
தெரிந்தே விழும்
நிலவு

சொர்கத்துள்
நுழைகிறது
பூவினுள் வண்டு

செப்டம்பர் 13, 2012

ம. ரமேஷ் சென்ரியு


பிணவறையில்
சரம் சரமாய்
வெடிவிபத்துப் பிணங்கள்

தீபாவளிக்குமுன்
உயிர்பலிகள்
மௌனமாய் ஊர்வலம்

விதி மீறல்
முடித்து வைத்தது
தலை விதியை

சரம் சரமாய்
கோர்த்த ஆசைகள்
கல்லறையில் உறங்குகிறது

வெடித்துச் சிதறிய
காகிதங்கள்
மனிதச் சதைகள்

தூங்கும் அப்பாவை
தூக்கிச் செல்கிறார்கள்
அடம்பிடிக்கும் குழந்தை

வெடிக்கும்தான்
கொண்டாடாமல் இருக்காதீர்கள்
வயிறு நிரம்ப வேண்டும்

ம. ரமேஷ் ஹைக்கூ


நெடுநாள் தவம்
ஒற்றை மழைத்துளி
விதையின் துளிர்ப்பு

வெடிப்புகள்
அழகு
வயல்வெளி

வெட்டியதும்
வீழ்ந்தன
வியர்வைத் துளிகள்

இத்தனை நாளாய்
எங்கிருந்திருக்கும்
மழை இரவுத் தவளைகள்

எரித்து முடிக்கும் நெருப்பும்… - கஸல்


காதலின்
கட்டளைகளால்
உலகம் சுருங்கிப்போனது

இன்று, நமக்கு
காதலைவிடவும்
அதிகமாக வருகிறது
கோபம்

என்னை
எரித்து முடிக்கும் நெருப்பும்
என்னுள் இருந்த
உன் அன்பினைக் கண்டு
கொளுந்துவிட்டு எரியும்

செப்டம்பர் 12, 2012

காதலை மறைத்துவைத்துவிட்டு - கஸல்


மனத்தைத் திறந்தாய்
காதலை மட்டும்
மறைத்துவைத்துவிட்டு

உனக்காக
என் நினைவுகள்
வாசலில் காத்திருக்கிறது
விடியற்காலையில்
அதன்மேல்
தண்ணீர்த் தெளித்து
கோலமிடுகிறாய்

உன் நினைவுகள்
என்னை விரட்டியடித்தது
மதுசாலைக்கு

செப்டம்பர் 10, 2012

புதிதாய்க் கொஞ்சம் ரணம் (கஸல்)




பூ உதிரும்போதும்
தொலைவில்
பாடல் ஒலிக்கும்போதும்
புதிதாய்க் கொஞ்சம் ரணம்
உண்டாகிறது

அழுதுத் துடித்துத்
தவித்துப் பார்த்தும்
நீயேதான் வேண்டுமென்று
திரும்பக் திரும்பத்
உன்னிடம் கெஞ்சத் தோன்றுகிறது

நாம் என்ன தவறு செய்தோம்?
சரி…
எந்தச் சாமி
நம்
காதலின் கண்ணைக் குத்தியிருக்கும்