மே 16, 2010

பெண்ணியக் கவிதைகள்


• பெண்ணியம் பேசுகிறேன்
அச்சம்
மடம்
நாணம்
களையெடுங்கள்
பயிர்ப்பு செழிக்கட்டும்

• கள்ளத் தனம்
கற்பென்றதும்
பொங்கிவிடுகிறது
சர்க்கரைப் பொங்கல்
இரண்டாவது
காதலில்தானே
எல்லோரும்
வாழ்ந்து வருகிறோம்



• வரம் தந்த சாமிக்கு ஆராரிராரோ...

சீரியல் பார்த்து
தாய் அழுகிறாளென்று
தெரியாமல்
குழந்தையும்
சேர்ந்து அழுகிறது பாவம்

• பாவம் என்பது பாவம்
மாங்காய் கடிப்பது
மசக்கைக்காக அல்ல
அந்த ஆசை முடிந்து
பத்தாண்டுகளாகி விட்டது
பத்து சவரன் இல்லாமல்...
மாங்காய் கடிப்பது
ஒரு வேளைக் கஞ்சை
ரசித்து குடிக்க...

• நில் கவனி செல்
'நாலு புள்ள பெத்தா
நடுத்தெருவுல சோறு'
பழமொழி தப்புடா கண்ணா
'அனாத இல்லத்துல சோறு'

• விடுபட்டவர்கள் பட்டியலில்...

செல்வ செழுமையினருக்கும்
நடிகைகளுக்கும் கூட
'பட்டம்' கிடைப்பதில்லை...
பள்ளிக்கூட பக்கமே ஒதுங்காத
ஏழைக்கு கிடைத்து விடுகிறது
முதிர்க்கனி 'பட்டம்'

• உங்களோடு ஒரே போராட்டம்
உனக்கெதிரான ஒரு குரல்
வெளியே
ஒலித்துக் கொண்டிருக்கிறது
நீ
கதவைத் தாழிட்டு
தொலைக்காட்சியைக்
கட்டியழுதுக் கொண்டிருக்கிறாய்

1 கருத்து: