அக்டோபர் 30, 2012

கல்லறையும் உடையத் தயாராகிறது (கஸல்)


இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடையத் தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!

© கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

அக்டோபர் 27, 2012

குறட்கூ கவிதைகள்


நடிகைகளிடம்  போட்டி
ஆடை  குறைப்பதற்கு

காதல்  வானில்
நட்சத்திரங்களாய்  தடைகள்

கன்னித்தமிழ் கற்பிழந்தது
ஆங்கிலக்  கலப்பு

காதல்  அழகானது
வாழ்க்கைப்  பாழானது

அக்டோபர் 25, 2012

ம. ரமேஷ் ஹைபுன் - 7


மலையின் உச்சியில் நான் மட்டும் தனித்திருக்கிறேன். தண்ணீர் தாகம். கையில் மினரல் வாட்டர் இல்லை. என்ன கடவுளே இது எனும் போது என் கிராமத்து விளையாட்டுத்திடலில் கபடி ஆடும் இடத்தில் ஒரே சப்தம். ஐயோ அவனுக்கு அடிப்பட்டுவிட்டதே... தண்ணி எடுத்துனு வாங்க... தண்ணீ எடுத்துனு வாங்க... பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலை உச்சியில் இருக்கும் எனக்கு அவர்களின் சப்தமும் அழுகையும் கேட்கிறது. அவர்களின் உருவம் தெளிவாய் தெரிகிறது... இந்நாள் வரை கபடி ஆடாத ஒருவனுக்கு அடிபட்டிருக்கிறது. அவன் தண்ணீ குடிக்கும் நேரம் மழை பெய்து பாறையில் தண்ணீர் தேங்க நான் அதை அள்ளிக் குடிக்கிறேன்.

தண்ணீருக்காக ஏங்குகிறது
பாவம் உலகம்
மரம் செடி கொடி


அக்டோபர் 22, 2012

நான்தான் பாவி! (கஸல்)


காதலனே போதும்!
காதலியே போதும்!
ஆம்... போதும் என்ற
பொன்செய் மருந்தைக்
காதல்தான் தரும்

காதல் தோல்வி
சோகமான மகிழ்ச்சி

நான்தான்
பாவி!

மரணம்போல் காதல் (கஸல்)


மரணம்போல்
காதல்  இயற்கையானதுதானே
நீ ஏன் அழுகிறாய்
விடு!

நீ ஒளி
நான் இருள்
நான் உன்னை
எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம்!

உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது
பயம்!

அக்டோபர் 18, 2012

ஏசு ஒரே முறைதான் உயிர்த்தெழுந்தார் (கஸல்)


ஏசு ஒரே முறைதான்
உயிர்த்தெழுந்தார்
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன

ஆசைகள்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
மரணித்துப்போகிறோம்

பிரிந்தவர்கள் கூட
அழுததில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்

ம. ரமேஷ் சென்ரியு


ஏதோ கொஞ்சமாய்
புரிகிறது
அதட்டல்

காற்றில் அசையும் கொடி
தடிவைத்திருந்தும் தள்ளாடுகிறார்
காந்தியடிகள்

முள்  பாதையில் கவனமாய்
செருப்போடு நடக்கிறேன்
தேய்ந்த செருப்பு

கவனமாகக் கேட்கிறேன்
ஆசிரியர் பாடம் நடத்துகிறார்
பழைய பாடம்

ம. ரமேஷ் லிமரைக்கூ


எத்தனை ஆயிரம் கவிதைகள்
அத்தனையிலும் கருப் பொருள் இருக்குமா?
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள்


வகுப்பில் கவனச் சிதறல்
நடத்தியப் பாடத்தில் கேள்வி கேட்டால்
அவமானத்தில் கொஞ்சம் உதறல்

சுற்றிலும் பசுமை
வந்து போகும் நினைவுகளால்
மனத்தில் வெறுமை

அக்டோபர் 15, 2012

கூந்தலில் சிக்குண்ட பூ (கஸல்)


உன் காதல்
கூந்தலில்
சிக்குண்ட பூ!

பூக்களுக்குள் இருக்கும் சோகம்
தேன்!
மனிதர்களுக்குள் இருக்கும் சோகம்
காதல்!

எனக்கு காதலி வேண்டும்
உனக்கு காதலன் வேண்டும்
சரி… நம்முடைய
கணவன் மனைவி
உறவு என்னாவது?

அக்டோபர் 13, 2012

எத்தனை ஆசைகள் (கஸல்)


காதலை
எப்படிச் சொல்வது
கனவிலும்
தடுமாறுகிறேன்!

தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!

அன்று
சிலுசிலுத்துக் கொண்டதிலும்
இன்று
சிடுசிடுங்கிக் கொள்வதிலும்
காதல் தொலைந்திருக்கிறது!

காதல் வாழ்க்கையைப்போல் ஆகாது! (கஸல்)


அங்கொன்றும் இங்கொன்றுமாக
சிதறிக் கிடந்தாலும்
நிறைந்திருக்கும்
விண்மீன்களைப் போன்றுதான்
உன் நினைவுகளும்
என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது!

அமைந்த வாழ்க்கையோ!
அமைத்துக் கொண்ட
வாழ்க்கையோ!
காதல் வாழ்க்கையைப்போல் ஆகாது!

நீ
மணக்கோலம்
சூடும்போது
எனக்கான பாடையும்
பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது!

அக்டோபர் 12, 2012

மனத்தில் இன்னும் நிறைந்திருக்கிறது (கஸல்)


இதழ்
ரோஜா
கண்
முள்

மனத்தில்
இன்னும் நிறைந்திருக்கிறது
காதல்
தோல்வியில் முடிந்த பின்பும்
நிறைவேறும் என்ற ஆசை!

நினைவுகளை
வலிந்து
‘கொல்’லும்போது
மரணத்திருந்த நினைவுகள்
உயிர் பெறுகின்றன!

நன்றி கெட்டவள்/ன் (கஸல்)


நாயாவது
வாலை ஆட்டுகிறது
நீ
நன்றி கெட்டவள்/ன்

கண்ணாடி முன் நின்று
நான் அழுதுகொண்டே
கண்ணீரைத் துடைக்கிறேன்
கண்ணாடிக்கு!

தனித்திருப்பினும்
காதலில்
ஒரு சுகம் வாய்க்கிறது!

அக்டோபர் 09, 2012

கடவுள் – 14, 15


கடவுள் – 14

முதியவன் தோற்றம் தரித்து
கடவுள் முதியோர் இல்லத்தில்
அடைக்கலமானார்!
பணம்தான் குறையாக இருந்தது
அன்பும் பாசமும்
கொட்டிக் கிடைத்த
குடும்ப வாழ்க்கையில்
இன்று அனாதையாகக் கடவுள்!
பெற்றப் பிள்ளைகள்
கையில் பணம் இருக்கிறது என்பதற்காகப்
பெற்றோர்களை அனாதையாக்கவதா? என்றதற்கு
அங்கிருந்தவர்கள்
மகனைத் திட்டாதீர்கள் என்றார்கள்.
அவர்களுக்குப் பாடம்
கற்பிக்க வேண்டும் என்றார்.
அவர்கள்
நாங்கள் படிக்க வைத்த
ஆங்கிலப் பாடமும் சரி இல்லை
அவர்களாகப் படித்தப் பாடமும்
சரி இல்லைஎன்றார்கள்.
பிறகு தண்டிக்காமல் இருப்பதா?
விட்டுவிடுங்கள்அவர்கள் தம் பிள்ளைகளுக்கு
நாங்கள் தராத கல்வியைத்தானே தருகிறார்கள்.
தாமதமாக அவர்களும் இங்கு வருபவர்கள்தான்!

கடவுள் – 15

கவிதை எழுத
பேப்பர் தேடிக்கொண்டிருந்தார் கடவுள்.
பேப்பர் கிடைத்ததும்
பேனாவில் மை தீர்ந்திருந்தது.
அதையே கவிதையாக்கி
பேனா இருக்கும்
எழுத மை இருக்காது.
காதலி இருப்பாள்
உதட்டில் முத்தம் இருக்காதுஎன்று எழுதி
கவிஞராகிவிட்டார்!
அடுத்தடுத்த இரண்டு படைப்புகள்
சாகித்திய அகாதெமி விருதுக்கான
தகுதியைப் பெற்றிருந்தும்
விருது கை நழுவிப்போனது.
ஐந்தாம் ஆண்டு -
கருவற்ற கவிதைத் தொகுதிக்கு
சாகித்திய அகாதெமி விருது கொடுக்கப்பட்டது!
இந்த ஆண்டு
இவருக்குக் கொடுக்க வேண்டும் என்று
ஏதோ ஒரு காரணத்துக்காக
விருது கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்த
கடவுள் மகிழ்ச்சியின்றி
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி
பேட்டிக் கொடுத்தார்.
பத்திரிகைகள்
பணம் கொடுத்து வாங்கிவிட்டாரென்று
மறுநாள் தலைப்புச் செய்தியானது.
இன்றும் பரிசுக்குரிய படைப்புகள்
பரிசு பெறாமல் போவது
அரசியலால்தான் என்பதை உணர்ந்தார்!

அக்டோபர் 08, 2012

கடவுள் 11, 12


கடவுள் – 11

பூங்காவில் அமர்ந்து
வண்ணத்துப்பூச்சியை
ரசித்துக்கொண்டிருந்தார் கடவுள்.
பூக்கள் அழகா?
வண்ணத்துப்பூச்சி அழகா?
கடவுளே நடுவராகவும்
வலது இடது பேச்சாளராகவும் இருந்து
ஒரு மணி நேரம்
வெற்றுப் பேச்சு பேசி முடிவெடுக்கப்பட்டது
இரண்டுமே அழகென்று!
சிறுவர்கள் ஓடிவிளையாடினார்கள்.
பூக்கள் அழகு என்றான் காதலன்!
பறிக்க முடியாத வண்ணத்துப்பூச்சிதான்
மிகவும் அழகு என்றாள் காதலி!
அந்தக் காதலர்கள் சிறிது இடைவெளியில்
முத்தத்தோடு கொஞ்சிக் கொண்டார்கள்.
முதியவர்கள் கைதாங்களாக நடந்தார்கள்.
விவாகரத்தானவளின் பார்வை
விவாகரத்தானவனின் புது மனைவி
ஊனமுற்றவனின் தன்னம்பிக்கை
போதையில் தடுமாறிய நடை -
ச்சிஎன்ன அது
வண்ணத்துப் பூச்சியைத்தானே
ரசித்துக்கொண்டிருந்தேன்.
கடவுளே!
மனசு ஏன் கட்டுப்பாட்டுக்குள்
வரமாட்டேன்கிறதுஎன்று
நொந்துகொண்டார் கடவுள்!!!


கடவுள் – 12

ஒற்றைக் காற்சிலம்போடு
கண்ணகியாக மாறி
பாண்டியன் அவை சென்றார் கடவுள்.
என்ன அது மீண்டும் கண்ணகி!
மதுரை தீக்கு இரையாகப்போகிறதா?
அன்றேதான் அழித்துவிட்டாளே!
கோயில்கூட கட்டியாகிவிட்டதே!
தவறு செய்யாதபோதும்
நடுநடுங்கிக்கொண்டிருந்தார் பாண்டியன்.
பக்கத்தில் மனைவி நம்பிக்கையற்று
என்ன தவறு செய்தாரோ!
“மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி” வீழ்வதற்குமுன்
“தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது”
இந்த முறை நான் அவருக்கு முன்பாகச்
செத்துவிட எண்ணி மரணித்துப் போனாள்
இன்னும் என்னென்ன நடக்குமோ என்று
அவையோர் அஞ்சும்முன்
கண்ணகி பாண்டியனிடம்,
கோவலனைத் திருத்த முடியாமல்
மதுரையை எரித்ததற்கு
மன்னித்திடுங்கள்என்றாள்!
மகிழ்ச்சியோடு கையில் இருந்த
மற்றொரு சிலம்பைக் கொடுத்து
என்னால் எரிந்த மதுரையை
புணரமைத்துக்கொள்ளுங்கள் என்றாள்!
மயானத்தில் சந்தனக் கட்டையின்மேல்
எப்போதும்
தவறே செய்யாத
கோப்பெருந்தேவி எரிந்துகொண்டிருந்தாள்!

அக்டோபர் 07, 2012

கடவுள் 8, 9, 10


கடவுள் – 8

புத்தகத்தைக் கையில் எடுக்காமல்
குழந்தைத் தொழிலாளியானார் கடவுள்.
கல்வி உரிமைச் சட்டம் இருக்கிறதே!
ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல்
வீடுவீடாகச் சென்றார்கள்!
கடவுளின் வீட்டுக்கும் சென்று
நீ படிக்கத்தான் வர வேண்டும்.”
எனக்குப் படிப்பு ஏறவில்லை!”
பத்தாம் வகுப்பு வரை
படிக்காவிட்டாலும் பாஸாக்கிவிடுகிறோம்!”
அதற்குமேல்?”
நீதான் படிக்க வேண்டும்!”
பத்தாவது வரை படிக்காதவனால்
பதினொன்னாவதிலிருந்து எப்படி படிக்கமுடியும்?”
அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை.”
“ஏன் அதற்கும் சேர்த்து
தேர்தல் வாக்குறுதி கொடுக்கச் சொல்லுங்களேன்!”
“முடிவா என்னதான்டா சொல்ற?”
“அதான் சொல்லிட்டேனே
என்னால் படிக்க முடியாதுன்னு!”
நீ எங்கிட்ட தைரியமா சொல்லிட்ட
நான் எப்படிப் போய்
மேலதிகாரியிடம் சொல்வேன்.
“கடவுளே
என்ன ஏன்தான் வாத்தியாராக்கினியோ தெரியலையே!”

கடவுள் – 9

ஏர்பிடித்து உழ ஆரம்பித்தார் கடவுள்.
வறண்டு இருந்தது பூமி.
கடவுளே மழை பெய்ய வெக்கக்கூடாதா?
மழை பெய்தது.
ஏர்பிடித்த பாதி வயல்
மழையால் சேறாகிப் போனது.
3 நாள் கழித்து
ஏர் பூட்டி
முன்பு உழுத இடத்திலிருந்தே
ஏர் பிடிக்கத் தொடங்கியதும்
பூமி ரொம்ப ஈரமா இருக்கு என்று
சலித்துக்கொண்டார்.
டிராக்டர் பிடித்து உழவு செய்தார்
விதைத்தார்.
நாற்றுநடவும் களை எடுக்கவும்
100 நாள் வேலையால் பாதிக்கப்பட்டதாக
வருந்திக்கொண்டார்.
அறுவடைக்கும் யாரும் வரவில்லை
அறுவை எந்திரம்கொண்டு காரியத்தை முடித்தார்.
கணக்குச் சரி பார்த்தலில்
செலவே அதிகம் இருந்தது.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
நிலத்தை வீட்டுமனைபோடுவோரிடம்
5 கோடிகளுக்கு விற்றுவிட்டு
நகரத்தில் வீடு கட்டி குடியேறிவிட்டார்!


கடவுள் – 10

கடவுள்
விமானப் பணத்தில் நம்பிக்கையற்று
புஷ்பக விமானத்தில்
நேரடியாகக் கூடங்குளம் வந்திறங்கினார்.
ஓராண்டு அமைதியாகப் போராடியும்
நீதி கிடைக்கவில்லையா?
உயர்நீதி மன்றம்கூட
கைவிரித்துவிட்டது என்ற உதயகுமார்
உச்சநீதி மன்றத்தை நம்பி இருக்கிறோம் என்றார்.
ஆய்வாளர்கள்
உச்சநீதி மன்றத்துக்குக்கூட பொய் அறிக்கை
சமர்பிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.
அப்படியென்றால் என்னால்கூட
இனி தடுத்துநிறுத்த முடியாது என்று
கை விரித்தார் கடவுள்.
சரிஅரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
ஓட்டுக்காக முன்னுக்குப் பின்
பேச்சை மாற்றிக் கொள்கிறார்கள்.
பணம் போனால் என்ன
சம்பாதித்துக் கொள்ளலாம்
உயிர் போனால்
வாட்டமுற்ற கடவுள்
அறிவியலில் முன்னேறிவிட்டார்கள்
என்பதைக் காட்ட உயிரோடு விளையாடுவதா!
அணு எல்லாம் வேண்டாம் என்றுதானே
இயற்கை சக்திகளைப் படைத்தேன்.
சோம்பேறிகள் தான்
இயற்கைக்கு மாற மாட்டார்கள் என்று
கோபமுற்றுப் பேசியபோது
உதயகுமார் சிரித்துக்கொண்டார்.