செப்டம்பர் 19, 2015

இதுதான் ஹைக்கூ – தொடர் விளக்கம் 5

ஹைக்கூவின் வெளிப்பாடு

கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்தி விடுவதில்லை. கவிதையின் மிகச் சிறிய வடிவமே, இதற்குக் காரணம் என்று கருதுதல் சரியன்று. ஹைக்கூ முழுப்பொருளையும் வெளியிட விரும்புவதில்லை என்பதே உண்மை.

“கருத்துப் பொருண்மையின் அளவில் எழுபது அல்லது எண்பது விழுக்காட்டை வெளியிடும் ஹைக்கூ நன்று. ஐம்பதிலிருந்து அறுவது விழுக்காட்டை மட்டுமே வெளியிடும் ஹைக்கூ மிக விழுமியது.” – என்று ஆர்தர் இ. கிறிஸ்டி தொகுத்த நூல் கூறுகிறது.

மழை வந்து செல்கிறது
ஒளி மயமாக கோடை நிலவைப்
புற்களின்மேல் விட்டுவிட்டு – ஷோயு

இதில் உள்ள இயற்கைப் பின்னணி, நாமே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஓடும் மேகங்களால் ஏற்படும் கோடை மழை; இரவு நேரம்; மழையின் செல்வாக்குச் சிறிது நேரத்திற்கே! விடை பெற்றுச் செல்லும் மழையினால், மீண்டும் சந்திரன் வானில் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. மாறாகப் புல்லின் மீதுள்ள மழைத்துளிகளில் எல்லாம் நிலவின் பிம்பங்கள்! கோடை மழையின் அற்ப விளம்பர வாழ்வினை, உலகியலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்! நிரந்தரமான இருட்டடிப்பு, நிலையான பொருள்களுக்கில்லை. இவற்றையெல்லாம் கவிஞர் விரிவாக எடுத்துக் கூறவில்லை. உட்குறிப்பால் உணர்த்துகிறார். நாம் எழுதும் ஒவ்வொரு ஹைக்கூவும் இவ்வாறுதான் பயணிக்க வேண்டும்…


நன்றி – நிர்மலா சுரேஷ் – ஹைக்கூக் கவிதைகள் ஆய்வு நூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக