அக்டோபர் 21, 2016

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்

மகிழ்நன் மறைக்காடு - ஹைக்கூக்கள்
மழை நின்ற பின்னிரவு
மெல்ல நகர்ந்து செல்கிறது
ஆமை முதுகில் நிலவொளி !
---------------------------------------------
உடைந்த வளையல்
உருப்பெறுகிறது பூக்களாய்
கலைடாஸ்கோப் !
---------------------------------------------
திரும்பத் திரும்ப
சலித்துக் கொள்கிறாள் உழத்தி
களத்தில் தானியங்களை !
---------------------------------------------
பட்டமரம்
கணநேரத்தில் பசுமையாகிறது
வந்தமரும் கிளிக்கூட்டம் !
---------------------------------------------
கைகளில்லை
முகத்தில் அறைகிறது...
கதவைத் திறந்ததும் காற்று !
---------------------------------------------
ஓய்வே இல்லை
முத்தமிட்டுக் கொண்டே...
கரையை அலைகள் !
---------------------------------------------
இணையாய்ப் பயணம்
இறுதிவரை தொடாமலேயே
வண்டிச்சுவடுகள் !
---------------------------------------------
முண்டியடிக்கும் கூட்டம்
அளந்து பேச முடியவில்லை
ரேசன்கடைக்காரர்.
---------------------------------------------
ரொம்ப கூச்சமோ ?
தொட்டதும் சுருண்டு விட்டாயே...
மரவட்டை !
---------------------------------------------
அருவருத்தவன்
ஆராதிக்கிறான்
பட்டாம்பூச்சி !
---------------------------------------------
புத்தகத்தில் மயிலிறகு
குஞ்சு பொரித்திருக்கிறது...
உதிர்த்துச் சென்ற மயில் !
---------------------------------------------
நடுநிசி தார்ச்சாலை
மனம் பிறழ்ன்றவன் காறியுமிழ...
சிறைபடுகிறது நிலா !
---------------------------------------------
எண்ணற்ற கால்கள்
இறந்து போன ஈக்கு...
இழுத்துச் செல்லும் எறும்புகள் !
---------------------------------------------
அசையும் வயற்கோரை
சிதறித் தெறிக்கும் சிறுமின்னல்
மழைக்கால நிலவொளி !
---------------------------------------------
சிவப்பாக இல்லை
பச்சையாகவே ; கிளிமூக்கு
மாங்காய் !
---------------------------------------------
குறைந்து வரும் மரங்கள்
கூடிக் கொண்டே போகிறது...
மண் - மழை இடைவெளி.
---------------------------------------------
உறக்கம் வராத இரவு
வானத்தை மூடி மூடித் திறக்கிறது
இமைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக