நவம்பர் 22, 2013

கடவுளின் பெரியப்பா!

கடவுளின் பெரியப்பா – (கடவுள் கடவுளாகிப்போனார் - 23)

பெரிய தொகை கட்டும்படி
கடவுளிடம் பில் நீட்டப்பட்டது.
ஆமாம்.
கடவுளின் பெரியப்பாவுக்கு
உடல் நலம் சரியில்லை!
விழுந்து விழுந்து கவனித்துதார் கடவுள்!
நாற்பது ஆண்டுகள்
வாயக் கட்டி வயித்தக் கட்டி
சேர்த்து வைத்த பணம் எல்லாம்
ஏழுநாள் மருத்துவச் செலவுக்கே போதவில்லை.
பக்கத்து வீட்டுக்காரரிடம்
கடன் வாங்கும்படி பெரியப்பா கட்டளையிட்டார்.
கடவுள்
பக்கத்து வீடு அக்கத்துவீடு என்று
பலரிடமும் கடன் வாங்கி
மருத்துவம் பார்த்தார்.
சரியாகிவிடும் சரியாகிவிடும்
இந்தப் பணத்தைக் கட்டுங்கள்
அந்தப் பணத்தைக் கட்டுங்கள் என்று
கடவுளிடம்
பணத்தைப் பற்றி மட்டுமே
மருத்துவர்கள் பேசினார்கள்.
நான்கு மாதம் கடந்த நிலையிலும்
உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.
பணம் கட்ட திண்டாடிய போது
இன்னும்
ரண்டு நாளுதான் இருப்பாரு…’ என்று சொல்ல
வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
ஆறுமாதம்
உயிரோடிருந்து பின்னர் இறந்தார்!
பத்தாண்டுகள் கழித்து
கடவுளுக்கும் நோய் வந்தது
பிள்ளைகளுக்கு
பணமாவது நஷ்டமாகாமலிருக்கட்டும் என்று எண்ணி
தனது நோயை மறைத்துவிட்டார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
கடவுளின் பிள்ளைகள்
மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.
கடவுளுக்கே
நேரம் குறித்துவிட்டார்கள் என்று
வெளியே பேசிக் கொள்ள
மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள்:
ரண்டு நாளைக்கு
முன்ன வந்து இருந்தா காப்பாத்தியிருக்கலாமுன்னு…’
கடவுள்
பெரியப்பாவின் நிலையை நினைத்துக்கொண்டார்.
எந்தக் கடனும் இல்லாமல்
மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக