அக்டோபர் 08, 2015

இதுதான் ஹைக்கூ -6

நன்றி - காவனூர் சீனிவாசன்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க. -மகிழ்நன் மறைக்காடு.

இதை இரண்டு மூன்று முறை வாசிப்புக்கு உட்படுத்துங்கள்.
ஒவ்வொரு வரியாய் மனதிற்குள் வாசித்து நிறுத்தி அடுத்த வரிக்கு செல்லுங்கள்.

இலைகள் உதிர்த்தமரம்...
அடுத்தவரி வினாக்குறியீடுடன்-
வந்தமருமா பறவைகள் ? ..
பொருள் மிகச்சாதரணமாக உள்ளதா?
ஒரு சாதாரணவரிபோல் தொடர்கிறதா?
ஏதேனும் சொல்ல வருகிறதா?
இலைகள் உதிர்த்தமரம் - என்பது ஒரு காட்சிப்பதிவை உணர்த்தவருகிறதென்றால் அடுத்தவரி வினாக்குறி மிகச்சரியாக பொருந்தவேண்டும். நீங்கள் மூன்றாவது வரிக்கு செல்லும்முன் நீங்கள் யூகிப்பதை கவிஞர் தரும்வரி இறுதியில் மாற்றிப்போட்டு ஒரு அதிர்வை அல்லது சிறு சலனத்தை நிகழ்த்தவேண்டும்.
இப்போது முதல் இரண்டுவரிகளை வாசியுங்கள்.
முதல்வரி வாசித்ததும் கொஞ்சம் இடைவெளி கொடுத்து பொறுமையாக..பொறுமையாக..

இலைகள் உதிர்க்கும் மரம்
வந்தமருமா பறவைகள் ?..

உங்களுக்குள் மூன்றாவது வரி தோன்றவேண்டும்.அதேவரி கவிஞருக்கும் வாசகனாய் மாறியிருந்தால் தோன்றும். வாசகனாய் அல்லாமல் கவிஞனாய் நின்று அதை கவிஞன் மாற்றிப்போடவேண்டும்.

மாற்றிப்போடும் தன்மை கொண்டதாய் இருந்தால் அது ஹைக்கூ ஆகிறது. மிகச்சாதரணமாக இருந்தால் அது கவித்துவமிக்கவரிகளாய் புதுக்கவிதை வகைமையிலோ அல்லது நவீனத்தன்மை வடிவிலோ உட்படுகிறது.
மூன்றுவரிகள் கொண்ட உரைநடை பலர் ஹைக்கூவாகவே கருதிக்கொள்வதால் ஹைக்கூக்கள் அடையாளமிழக்கின்றன.
சரி இப்போது மூன்றாவது வரிக்கு வருவோம்.

இலைகள் உதிர்த்த மரம்
வந்தமருமா பறவைகள் ? -என்றவினாக்குறியோடு இரண்டுவரிகள் கவிஞர் முடித்துள்ளார்.

என்ன காடசிப்பதிவை மூன்றாவது வரி மாற்றிப்போடும் ? வாசகனைவிட இங்குதான் கவிஞன் அதிகம் நுட்பமாகதீவிரமாகயோசிக்கவேண்டும்.
அமரும் அல்லது அமராது எனசாதரணமாக பதில் தந்துவிடக்கூடியதாகஇது அமைந்தால் இது ஒரு உரைநடைத்தன்மை கொண்டதாய் ஆகிவிடும். திருப்பம் இல்லாமல் போனால் இதை ஹைக்கூவாக ஏற்கவும் இயலாது.
மேலும் அழகாக்க - என்றவரியை இறுதியில் வைத்துள்ளார்.
இப்போது சேர்த்து படியுங்கள்:
இலைகள் உதிர்த்தமரம்
வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க.
-மூன்றாவது வரி ஒரு சாதாரண திருப்பத்தை தந்து ஒரு கவித்துவத்தைமட்டும் உணர்த்திப்போகிற ஒரு தொடர்வரியாகத்தானே இருக்கிறது?

என்னஅதிர்வை இது தருகிறது?
இதே வார்த்தைகள்; இதே மூன்று வரிகள் கொஞ்சம் நுட்பமாய் சிந்தித்தால் ஒரு அதிர்வை சிறிதேனும் தரும்படி அமைத்து ஹைக்கூவாக தரலாம்.
எழுதி முடித்தபின் கொஞ்சம் மாற்றிப்போட்டு மாற்றிப்போட்டு சிந்தியுங்கள்.
முதல் வரியை இறுதியில் போட்டு இதே கவிதையை வாசித்துப் பாருங்கள் :
' வந்தமருமா பறவைகள்?
மேலும் அழகாக்க
இலைகள் உதிர்த்தமரம் '
இப்போது இது ஹைக்கூவாக நன்கு அடையாளம் காட்டலாம்.

எழுதிய உங்கள் கவிதைகளை மீளவாசித்துப்பார்த்து ஹைக்கூவாக அடையாளம் காணுங்கள் .

- காவனூர் சீனிவாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக