ஆகஸ்ட் 20, 2017

காவனூர் சீனிவாசன் - ஹைக்கூக்கள் விளக்கம்


மரமிருந்த இடம்
மனதுள்
சருகுகளும் ஓசைகளும்

வேரோடு பிடுங்கியெறிந்தது
மரமாகும் கனவை
ஒருசிறு செடி

ஒரு சிறு விளக்கம்:  

மரம் வளர்த்தலும் அழித்தல் பற்றிய பொருளில் சார்ந்தது இக்கவிதைகள்.
ஒரு புறம் மரக்கன்று நடுவதும் பிறிதொருபுறம் மரங்களை; வனத்தை அழித்தும் வருகிறோம்.
 
முதலாவது கவிதை:
மரமிருந்த இடம்
மனதுக்குள்
சருகுகளும் ஓசைகளும்.

- இது மேலோட்டமாகவே ஒரு புரிதலை நிகழ்த்தவல்லது. மிகச்சாதாரண போன்றும் தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் காட்சி விரியும் கோணங்கள் புலப்படும். மரமிருந்த இடம்- நிலத்தில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டு அகற்றியது இங்கு மறைமுகமாக சொல்லப்படுகிறது. அவ்இடத்தை கடக்கும் போது அம்மரம் வெட்டாமல் இருந்திருந்தால் அங்கு காற்றின் அசைவால் சருகுகள் சத்தமும் நமக்கு கேட்கும். அதிகம் என்று சொல்லும்போது அது விருட்சமாகவும் இருக்கலாம். ஓசைகளும் என்று குறிப்பிடும் போது பறவைகளின் சப்தமும் இதில் அடங்குகிறது. மரத்தை வெட்டியதால் முதல்வரி அதை குறியீடாக்கி மரமிருந்த இடம் எனச்சொல்லப்பட்டது. வெட்டி அகற்றப்பட்டு விட்டதால் அங்கு சருகுகளின் சப்தமும் பறவைகளின் ஒலிகளையும் இழந்து நிற்கிறோம். அனுபவித்து கடந்த இன்பம் மனதில் தேங்கி இருப்பதால் இல்லாத போது அது மனதுள் நீங்காமல் ஓசைகள் கேட்கிறதென்பது முதல் வாசிப்பில் புரிந்து கொள்ளலாம். இருந்தபோது மனதில் இடம்பிடித்தவைகள் காட்சியில் இல்லாதபோதும் மனதுள் அசைவது இரண்டாவது கோணம். மனதில் மரம் வளர்ப்போம் என்றில்லாமல் வனங்களை ஒருபுறம் அழித்துவருகிறோம். மனதில் இடம்பிடித்தமரங்கள் கூட நினைவில் இப்போது இல்லை. வெறும் சொல்லாகவே வெற்றாகவே ஆகிவிடுகிறது. மரம் வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தஇடம் மனம்.
நிலமாகி கிடந்தமனம். வளர்க்க நினைவுகளற்று போனபின் மனதுள் சருகுகளும் ஓசைகளும் மட்டுமே. மனதில் வளர்க்கவேண்டும் எண்ணம் பிடுங்கியபின் அங்கு மனதுள் எஞ்சியிருப்பது சருகின் ஓசைகளும் பறவையின் ஒலிகளும் மட்டுமே. இது நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பு மனங்களை மறைமுகமாக சுட்டும். மண் மணத்தோடு கிராமம்விட்டு நகர்ப்புறம் நகர்கிற மனங்களில் மரமிருந்த இடம் இப்போது வெறும் சருகுகளும் ஓசைகளும். மூன்றாவது கோணத்தில் ஓசைகள் என்பது அவன் மன ஓலங்களை, சொல்லமுடியா கையறு நிலையின் ஆதங்கமாகவும் எதிரொலிக்கும். வாசகர்கள் முதல் கவிதையை பல்வேறு காட்சிகளை மனதுள் நிறுத்தி சுவைபட சுவைக்கலாம்.

அடுத்தது இரண்டாவது கவிதை:
வேரோடு பிடுங்கியெறிந்தது
மரமாகும் கனவை
ஒரு செடி.

-இது சமுதாய அவலத்தை சுட்டி மறைமுகமாக வைத்து எழுதப்பட்டது. ஒரு முரண்சுவையும் இதில் வாசிக்கையில் ஈர்ப்பினை தரும். வழக்கமாக செடியை பிடுங்கி வேறோர் இடத்தில் நடுவோம்.ஆனால் இங்கு சிறுசெடி தான் மரமாகும் கனவை வேரோடு பிடுங்கியெறிகிறது. தான் மரமானால் வெட்டப்படுவோம் என்ற உணர்வை ;எண்ணும்படியான ஒரு ஆக்கம். ஒரு செடி மரமாகும் வரை பல தடைகள். வளர்ந்தபின்னும் அது வெட்டப்படும் சூழல்.முன்கூட்டியே ஒரு செடிக்கு அதன்நிலை உணர்த்தப்பட்டு இருப்பதால் தன்நிலை அறிந்த பக்குவம்பெற்ற அஃறிணை உயிரோட்டமான உயர்திணையாக மாற்றம்பெற்று மரமாகிற கனவை தவிர்க்கிறது. போராட்டங்களும் வன்மங்களும் பாலியல் கொடுமைகளும் சிறுவயதிலேயே எதிர்கொள்கிற சிறுவயது மனங்கள் பலத்தசேதாரம் அடைகிறது. மனச்சிதைவில் தன் எதிர்கால கனவுகளைமட்டுமல்ல தன்னையே பலிகொடுத்து கொள்கிறது. சிறுசெடிகளை சிறுவயதுள்ளவர்களோடும் பலன்தரக்கூடிய மரங்களை வெட்டி வீழ்த்துவதைப்போல சமூகச்சூழல் இவர்களின் கனவுகளையும் அழித்துப்போவதற்கு மனிதர்கள் பெரும்பாலும் காரணமாகின்றனர். இக்கருத்தை மையமாக வைத்து தான் இரண்டாவது கவிதை தோற்றம் கண்டது. மரம்வளர்த்தல் அவசியம். சிறுவயதிலேயே பிஞ்சுமனங்களை நல்ல எண்ணங்கள் அடையச்செய்யுமாறு வளர்த்தல் அவசியம். சிறுவயதிலேயே விரக்திஅடையும் நிலையை இச்சமூகம் சார்ந்து பல வன்முறைகள் நிகழ்வதை நாம் தடுக்கவேண்டும். மரம் வெட்டி வேரோடு பிடுங்குதல் தவறு. கலாச்சாரங்களை அழித்து நம் அடையாளங்களை இழப்பதும் தவறு. மரபை போற்றி காக்கவேண்டும்.
 இந்த அடிப்படையை மனதிற்குள் என்னால் இவ்வளவு தான் ஊன்றிச்செல்ல முடிகிறது. மனதுக்குள் துளிர்விட இதில் ஏராளமான கோணங்கள் காட்சிகள் நீங்கள் காணலாம். ஹைக்கூ கவிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாம்.

 -காவனூர்.சீனிவாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக