ஆகஸ்ட் 31, 2017

ஹைக்கூ உலகம் - தொகுப்பு நூல்

சென்னையில் அக்டோபர் 1 ல் வெளியீடு... வாருங்கள் சிறப்பிக்க... 
இது ஹைக்கூ உலகம்… 
உலகம் இணையத்தால் சுருங்கிவிட்டது. கவிதை வடிவங்களும்; ஆம் இது ஹைக்கூ உலகம். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். கருத்திற்கேற்பத் தமிழ் இலக்கியங்கள் சங்க காலம் முதல் இக்காலம்வரை பல மாற்றங்களுடன் வளர்ச்சிப் பெற்று வந்துள்ளன. மேனாட்டார் வருகையால் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், கல்வி பயில்வோர் பலதரப்பட்டவர்களாக அமைந்தமையும், மனப்பாடத்தின் தேவையின்மையும், அச்சு நூல்கள் மற்றும் இதழ்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றமும் புதுக்கவிதை என்னும் யாப்பு கடந்த கவிதை வகைத் தோன்றிச் சிறக்கக் காரணமாயின. அவ்வாறான வளர்ச்சியில் இன்று ஹைக்கூ வடிவமும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. இன்று கவிதை என்றால் அது புதுக்கவிதையைக் குறிப்பது போல, இன்னும் பத்தாண்டு கால இடைவெளியில் கவிதை என்றால் அது ஹைக்கூவை குறிக்கும் என்ற நிலையை எட்டிப் பிடிக்கும்.
தமிழ்க் கவிதை காலம்காலமாக இயற்கை, சமுதாயம், காதல், ஆன்மிகம் என்ற பாடுபொருள்கள் நான்கினை உள்ளடக்கியதாக இருந்து வருகின்றன. கவிஞர்கள் புதுக்கவிதையில் இந்த நான்கு பாடுபொருள்களைக் கொண்டே கவிதைகளைப் படைத்துள்ளார்கள். இந்தப் பிரிவுகள் தனித்தனி வகையாகப் பரிணமித்து இயற்கையை ஹைக்கூவிலும், காதல், ஆன்மிகத்தைக் கஸலிலும், சமுதாயத்தைச் சென்ரியுவிலும் தனித்தனி இலக்கிய வகைமையாக்கி கவிதைகள் புனைந்து வருவது இருபத்தோராம் நூற்றாண்டின் வளர்ச்சிப் போக்காக ஆய்வாளர்களால் அடையாளம் காண முடியும்.
இன்றைய தமிழ்க் கவிதைகளின் போக்கானது, சுருங்கச் சொல்லுதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுக்கவிதையில் பல அடிகளில் சொல்ல வேண்டிய கருத்தை ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, பழமொன்ரியு என்னும் கவிதைகளும் அதன் வகைமைகளும் மூன்றே அடிகளில் வெளிப்படுத்தி விடுகின்றன. அவ்வாறு சுருக்கமாக இயம்பினாலும் அக்கவிதைகளின் பொருளானது வாசகனின் மனநிலைக்கு ஏற்ற வகையில் விரிந்துச் சென்று பல பொருள்களைத் தருவதாக அமையும் சிறப்பினையும் பெற்றுத் திகழ்கின்றன என்பது இவ்வடிவங்களின் தனிச் சிறப்பாகிறது.
இன்று 350 க்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவந்திருந்தபோதிலும் இன்னும் சரியான புரிதல் இல்லாமல் சென்ரியுவை ஹைக்கூக்கள் என்று எழுதி வருகின்றார்கள். தமிழில் தொடக்கக் கால ஹைக்கூக் கவிஞர்களின் கவிதைகள் ஹைக்கூக்களாக இருப்பதையும், அதைத் தொடர்ந்து எழுத வந்தவர்களின் ஹைக்கூத் தொகுப்பில் சென்ரியு தன்மையே ஹைக்கூக்களாக இருப்பதையும் அடையாளம் காண முடிந்தது. அதன் விளைவாகவே இன்று ஹைக்கூ என்ற பெயரில் மூன்று அடியில் எழுதப்படும் பல கவிதைகளும் வெறுமனே விடுகதைகளாக, உவமை, உருவகங்களாக, தன்மைப் பாங்குடன் அமைந்த நேரடித் தத்துவக் கருத்துகளாகவும் துணுக்குகளாகவும், காதல் கவிதைகளாகவும் அமைந்திருப்பதை அடையாளம் கண்டேன். 
ஹைக்கூவைத் தமிழுக்குக் கொண்டு வருகிறபோது எல்லா மரபுகளையும் தூக்கிக் கொண்டுவரவேண்டியதில்லை எனக் குறிப்பிடும் கவிக்கோ அப்துல் ரகுமான் கூட, ஹைக்கூவின் முதல் இரண்டு அடிகள் ஒருகூறு; ஈற்றடி ஒருகூறு. ஹைக்கூவின் அழகும், ஆற்றலும் ஈற்றடியில்தான் இருக்கிறது, அது ஒரு திடீர் வெளிப்பாட்டை உணர்த்தி - அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிப்படுத்தும். மற்றொரு மரபு, ஹைக்கூவின் மொழியமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்திமொழியைப் போல அவசியமற்ற இணைப்புச் சொற்களை அது விட்டுவிடும். உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்தும் என்று ஜப்பானிய ஹைக்கூவின் இரண்டு முக்கிய மரபுகளை மட்டும் குறிப்பிட்டாலும் பல ஹைக்கூக் கவிஞர்கள் இதனைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காண முடிகின்றது. 
ஹைக்கூ சிற்றிதழ்கள், வார இதழ்களில் வரும் ஹைக்கூக் கவிதைகளை நானும் கல்லூரி காலக் கட்டங்களில் படித்து அதன் படியே ஹைக்கூ எழுதி வந்தவன்தான். என் ஹைக்கூக்களைப் புத்தகமாகத் தொகுக்கும்போதுதான் சென்ரியு என்ற வடிவம் இருக்கிறது என்பதை அறிந்து தெளிவு கொள்ள முடிந்தது. இதைத் தொடர்ந்த இணையத்தில் - குறிப்பாக முகநூலில் அடியெடுத்து வைத்தபோது, என்னைப் போன்றே பலரும் சென்ரியுவையே ஹைக்கூ என்று நம்பி எழுதி வந்ததை அறிந்தபோதுதான், முகநூலில் ஹைக்கூ உலகம் என்னும் குழுவை ஆரம்பித்து ஹைக்கூவின் உள்ளடக்கத்தையும் பாடுபொருளையும் பாடும் முறையைக் கற்பித்தும், சென்ரியு வடிவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் பலருக்கும் தெரியப்படுத்திச் சென்ரியு தன்மையிலிருந்தும், விடுகதை அமைப்பிலிருந்தும், உவமை உருவம் மிகைப்படுத்தாமல் ஹைக்கூ எழுதும் முறைகளையும் கற்பிக்க நேர்ந்தது. 
மூன்று அடியில் எழுதப்படும் எவ்வகைப் பொருளும் ஹைக்கூ என்று சொல்வதை மூத்த ஹைக்கூக் கவிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏற்காமல், இவை எல்லாம் ஹைக்கூ அல்ல என்று வருந்திய காலக் கட்டம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் மறையும். காரணம், இது வரையில் வந்த பல ஹைக்கூத் தொகுப்புகளில் சென்ரியுவும் கலந்து மயக்கம் தந்திருக்கலாம். இன்று ஹைக்கூ என்றும் சென்ரியு என்றும் அல்லது ஹைக்கூ தொகுப்பிலேயே ஒரு பகுதியாகச் சென்ரியு என்றும் தனித்தனியாகக் கவிதைகளைப் பிரித்துக்காட்டி வெளியிடும் சூழல் உண்டாகிவிட்டது என்பதால் இனி இது சாத்தியமான ஒன்றுதான்.
இன்று தமிழ் ஹைக்கூக் கவிஞர்கள் என்று இணையத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையில் வேறு வேறு முகநூல் குழுமங்களிலும், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற வேறு பல இணையத் தொடர்புகளில் கவிதைகள் படைத்து வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் ஹைக்கூவைத் திறம்பட எழுத சிலர் முன்வந்து உதவுகிறார்கள். எழுதப்படும் ஹைக்கூக்களில் காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு திருத்தம் செய்து செவ்வனே ஹைக்கூக்களைப் புனையும் திறம் பெற்றவர்களாகத் திகழ்கின்றார்கள். எனவே, இனி வரும் ஹைக்கூத் தொகுப்புகள் எல்லாமே உண்மையான ஹைக்கூ அல்லது சென்ரியு தொகுப்புகளாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதற்கான முதல் சான்றுதான் ‘ஹைக்கூ உலகம்’ என்னும் இந்தத் தொகுப்பு நூல்.
இத்தொகுப்பு நூலில் பதினொரு கவிஞர்களின் ஹைக்கூக்கள் இடம்பெற்றிருக்கிறது. ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைக்கூ எழுத வேண்டிய அவசியமில்லை என்ற அப்துல் ரகுமான் அவர்களின் கருத்தை முன்நின்று ஏற்று, பருவ காலங்களின் பகுப்புகள் தொடங்கி உவமை, உருகம் மேலோங்காமல், தன்மைப் பாங்கும் உலகியலுக்கான பொதுமையாய் அமைய, இன்றைய சுற்றுச்சுழல், சமுதாயத் தாக்கத்தையும் இக்கவிஞர்கள் மனதில் நிறுத்தி, அவர்கள் கண்ட காட்சிகளையும் ஹைக்கூக்களாக வார்த்தெடுத்த பாங்கை உணர்ந்து, ஒவ்வொரு கவிஞர்களின் தனிச்சிறப்பான ஹைக்கூக்களையும், இத்தொகுப்பில் எந்த ஒரு கவிஞரின் ஒரு ஹைக்கூவும் சரியில்லை என்று ஒதுக்கி விட்டோ, பக்கங்களைப் புரட்டிவிட்டோ படிக்கத் தோன்றாதவாறான ஹைக்கூக்களே தொகுத்துக் கொடுத்துள்ளேன். 
இத் தொகுப்பு முயற்சிக்குக் காரணமாய் அமைந்த ஹைக்கூக் கவிஞர்களுக்கும், தொகுப்பு நூலினை வெளியிடும் ஓவியா பதிப்பகம் - வதிலைபிரபா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 
ம.ரமேஷ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக