மே 16, 2010

சமூகக் கவிதைகள்

• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

• இக்காலமும் பொற்காலம்
அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்

• தெளிவு கொள்
பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...

• நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது

• கவலைப்படாதே …

மழைக்காகக் கூட
பள்ளிக் கூடம்
ஒதுங்க வில்லையா
கவலைப்படாதே !
ஒன்றும் பிரச்சினை இல்லை
MLA
MP
Doctor
பட்டங்களைப் போட்டுக் கொள்ளலாம்

• பணம் பார் ஆளும்
பிணம்
வாய்த்திறக்கிறதோ இல்லையோ
வாக்காளன்
பட்டனை அழுத்தும்போது
பிணமாகிப் போகிறான்

• திருத்தல்கள்
நண்பர்கள் நாங்கள்
ஜோசியம் பார்த்தோம்
கிளி
சீட்டை எடுத்துக் கொடுத்தது
அவன் சொன்னான்:
வரும் 'தை'யில் கல்யாணம்
சரி விட்டுத் தொலையுங்கள்,
எங்களைப் பார்க்கும்
சமூகம் சொல்கிறது:
'தள்ளிக்கிட்டுப் போறான்'

• பொய்கள்
கண்ணால் பார்ப்பதும் பொய்!
காதால் கேட்பதும் பொய்!
தீர விசாரிப்பதும் பொய்!
நீதி மன்றத்தில் தீர்ப்பு

• விதன்டா வாதம்
மரண தண்டனைக்கு
இடைவிடாமல்
குரல் கொடுக்கும்
அந்த சப்தத்தில்
என்கவுண்டர்கள்
காதில் விழுவதில்லை

• பின்பற்றுதல்
'பசித்திரு
தனித்திரு
விழித்திரு'
பக்கத்தில்
தொலைக்காட்சி பெட்டி

• ஆட்டோகாரனுக்கு
'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ

• சுயம் வரம்
எலி வலையில்
மாப்பிள்ளை தேடும்போது
ஜாக்கிறதை
பாம்பும் இருக்கலாம்
எலிக்குப்
பல 'படுக்கை'களும் இருக்கலாம்

• விபச்சாரம்
ஒரு விபத்தில்தானே
விழுந்து விட்டாய்
ஏன் 'படுத்துக்கொண்டே' இருக்கிறாய்?
விழித்து எழுந்திடு

• உண்மை
கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை

• சோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்
வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்

• பரபரப்பு தீர்ப்பு
குற்றவாளியென
உயர்நீதி மன்றம்
ஆயுள் தண்டனை...
மறுநாள்
அவனுக்கு
உச்சநீதி மன்றம்
விடுதலை...

• படைப்பாளனிடம் ஒரு கேள்வி
இறைவா
இதென்ன விளையாட்டு
பிள்ளையார் படிக்கப் போய்
குரங்கானக் கதையாய்
ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?

• இந்தியா
ஒரு வேகத்துக்காக
மாட்டை அடிக்கும்
வண்டியோட்டி...
தலையில் கொட்டி
திறமையை அடக்கும்
பெற்றோர்...
வல்லரசிற்கு
நடைபோடும்போது
அரசியல் ஓட்டுக்காக
இலவசங்கள்...

• திருமணம்
காலையில் வரும்
அரசியல்வாதிக்கு
நள்ளிரவில் தயாராகும்
சாலைகள்போல
6 - 7.30 முகூர்த்தத்திற்காக
நீயும் தயாராகிறாய்
சடங்காயிருந்த
திருமணம்
அரசியல் விழாக்களாகி விட்டதால்
கலாச்சார வேகத்தில்
திருமணத்தின் புனிதமும்
கெட்டுவிட்டது

• கவிப்பேரரசு வைரமுத்துவே!
நவீன பெண்கள்
சமையலரைக்கும்
கட்டியலரைக்கும் இடையே
ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிட வில்லை
சீரியல்களின் இடைவேளைகளில்
சமையலரைக்கும்
தொலைக்காட்சி அறைக்கும்
ஓடி ஓடி ஓடி
ரன்கள் எடுத்து
களைத்துவிடுகிறார்கள்.

• குதர்க்கம் 1
அண்ணலும் நோக்க வில்லை
அவ ளு ம் நோக்க வில்லை
வால்மீகி சொன்னது சரி
உன் ராமன்
சந்தேகப் பட்டவன் கம்பா!

• குதர்க்கம் 2
இன்றும்
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
பாதுகையைப்
பறித்துக் கொள்கிறார்கள்

• அப்படியா? அப்படித்தான்!
இரத்த பாசத்தைத் தவிர
சிரையில் என்ன?
என்பதே இல்லை

• சதை அழகு
பூக்களின் அழகு
அதன் ஆடை
உடுத்துதலில் இருக்கிறது!
ஆண்டாண்டுக்கு
மாறும் அழகு...
தெரு அழகி -
ஊர் அழகி -
உலக அழகியே -
உங்கள் அழகு
எதில் இருக்கிறது?
ஆடை உடுத்திக் கொண்டிருக்கும்
பூக்களைப் பார்.


•அழகிய முரண்கள் 1
குற்றவாளியென
சிறை தண்டனை
நன்னடத்தையில்
விடுதலை

•கேளுங்கள் சொல்லப்படும்
விபத்தில் சிக்குண்டவரிடம்
வேலையின்றித் திரிபவரிடம்
ஏன்
காதலில் தோற்றவரிடம் கூட
வலியைப் பற்றிக் கேட்காதீர்கள்
முதியோர் இல்லத்தில்
போய் கேளுங்கள்
வலி சொல்லப்படும்

•நடைப் பிணங்கள்
அடிப்பட்டுத் துடிக்கிறான்
எல்லோரும் விரைகிறார்கள்
அவரவர் அலுவலுக்கு...
ஒரு நடைப்பிணம்
அருகில் சென்றது
நகை பணம்
அபகரித்துச் சிரித்தது
சைரன் ஒலி கேட்ட போது
மெதுவாக
அவன் உயிர்
பிரியத் தொடங்கியது.

•மெளனமாய் இறைவன்
வேல் குத்தி
அழகு குத்தி
உண்ணா நோம்பிருந்து
மொட்டையிட்டு
நீ
படைத்த உடம்பை
வதைத்துக் கொண்டவனுக்கு
அப்படி என்ன
பெரியதாகக் கொடுத்துவிட்டாய்?

•முடிவு தேடும் தொடக்கம்!
ஏழு திணைகளாய்...
கடையெழு வள்ளல்களாய்...
வல்லரசுகள் தோன்றும்.
வேந்தரும் அரசருமாய்
அரசியல்வாதிகளுக்கு
ஊராட்சிகள் மாவட்டங்கள்
தனித்தனி நாடுகளாக்கப்படும்.
கப்பம் கட்டுவார்கள்...
விபச்சாரிகள் மீண்டும்
தேவதாசிகளாய்ப் போற்றப்படுவர்...
நக்கீரன் பாட்டில்
எந்தக் குற்றமும் இருக்காது...
முப்படைகளுக்குப் பதிலாக
அணுகுண்டு வீச்சுகள்...
உண்மைக் காதல் கொண்ட
ஓர் ஆண்
ஒரு பெண்ணைத் தவிர
பாம்பும் இறந்திருக்கும்...
இருவரும் ஆடையின்றித் திரிவார்கள்
விலக்கப்பட்ட கனியென்று
எதுவும் இல்லை.

•விபச்சாரி உண்மை பேசுகிறாள்
இருபத்து மூன்றில்
ஒன்று...
இரண்டு...
மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில்
நான்காகிப்போனது...
இப்படியே
வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்
இல்லை என்றாள்
நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”

•கண்டது கனவு
நேற்று இரவின் காலையில்
இந்தியா வல்லரசாகி இருந்தது.
சுவிஸ் வங்கியிலிருந்து
கறுப்பு பணம் திரும்பியிருந்தது!
இருந்தும்
உலக வங்கியிடம்
கடன் கேட்டுக்கொண்டிருந்தது!!
தனிக் குடித்தனங்களில்
விவாகரத்து வழக்குகள்...
காதல் போர்வைக்குள்
காம விளையாட்டுகள்...
அரசியல்வாதிகள்
தனி வங்கி ஆரம்பித்திருந்தார்கள்...
எல்லோர் கையிலும் துப்பாக்கி...
நீதிமன்றம்
மனித இன படுகொலைக்கு மாற்றாக
பறவை, விலங்கு சுட்டதற்கு
மரண தண்டனை விதித்துக் கொண்டிருந்தது...
திரைப்படம், தொலைக்காட்சி
ஆடையை முற்றும் துறந்த
நவீன கலாச்சாரத்தை
போதனை செய்து
‘நாமே குழந்தை
நமக்கேன் குழந்தை’ என்றது.
நான்
கலைந்த ஆடையை
உடுத்திக்கொண்டு எழுந்தேன்.


• இதுதான் உண்மை
முற்றும் துறந்தேன்-
ஓடி வந்து
தன் அங்கியை
ஆடையாக உடுத்தினார்
இயேசு...
ஞானப் பழத்தோடு
ஓடி வந்தார்
முருகன்.
ஆச்சரியமாகப் பார்த்தேன்
சொன்னார்:
“அப்போதே அண்ணன்
கொடுத்து விட்டார்”
பாபர் மசூதியிலிருந்து
நபியும் ராமனும்
பால் சொம்போடு
புறப்பட்டதாகப்
புத்தர் சொன்னார்.


• திணை மாற்றம்
சோர்ந்துபோய்
தரையில் விழுந்தேன்.
நத்தைகள்
தண்ணீர் கொடுத்தது...
வண்டுகள்
தேன் கொடுத்தது...
காற்று
புழுக்கத்தைப் போக்க
காக்கை வாயில் எச்சமிட்டது.
இதுகூட பரவாயில்லை!
கண் விழித்துப் பார்த்தேன்:
என்னைச் சுற்றி மனிதர்கள்-
செய்தி சேகரிப்பாளர்கள்
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்-
காவல் துறையினர்
என்னைக் கோடுபோட்டு
ஓவியமாய் வரைந்திருந்தார்கள்-
வயிற்றுப் பசியைப் போக்க
இவைகள் எதுவும்
சிந்திக்கவில்லை.


• ஈழக் காதலி!
எத்தனை ஆயிரம்
கனவுகளோடு
உலா வந்தோம்.
இன்று
உன் நினைவுகளே இன்றி
சுற்றுகிறேன் நடைப்பிணமாய்
உன் சடலத்தைத் தேடி.
எந்தத் தாக்குதலுக்கு
எந்த இடத்தில்

வீர மரணமடைந்தாய்.


• ஈழக் காதலன்
உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்


• ஈழத்தின் நெருப்பு
சடலத்தினைத்
தேடும் போது
உடன்கட்டை ஏறினாள்!
அவள் தலைமேல்
குண்டுமழை


• பைத்தியங்கள்
சங்க காலம்
இனி எக்காலம்?
எப்படிப் பாடுவது
வீர மரணத்தை?
தோட்டாக்கள்
புற முதுகைத் துளைக்கிறதே!


• வாக்கு சேகரிப்பு
ஒலிப் பெருக்கியின்
சப்தத்திற்கிடையே
யார் காதிலாவது
விழுந்ததா அரசியல்வாதிகளே?
அந்த
ஊமையின் கோரிக்கை.


• வெளிநாட்டு மோகம்
தாயின்
முலைப் பாலைத்தானே
குடித்தாய்.
வேசிக்குச் சோறூட்ட
ஏன் பறக்கிறாய்?


• மகன் தாய்க்காற்றும் உதவி
மகனே
உன்னப் பாக்க
என் மனசு
அருவறுக்குது!
இனிமே
என்ன வந்து பாக்காத
முதியோர் இல்லத்துல.


• ம்ருக நேயம்
அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக