மே 27, 2010

இதழ் பிரசுரம்

என் தொடக்கக் காலக் கவிதைகள் சில பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. அவ்வாறு இதழ்களில் பிரசுரமானக் கவிதைகளைத் தொடக்கத்தில் மகிழ்ச்சியோடு சேகரிக்கத் தொடங்கினேன். பின்னர் சேகரிப்பதை நிறுத்திக் கொண்டேன். இப்போது நிறுத்திக் கொண்டதின் தவற்றை உணர்கிறேன்.(பல இதழ்களை நண்பர்கள் எடுத்தும் சென்று விட்டார்கள்.) பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளை ஆதாரத்துடன்  தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

 
காதல் வயப்பட்டவள்...

துடப்பமே கையில் எடுக்காதவள்

காலை மாலை

தெரு வாசலைப் பெறுக்குகிறாள்...

குடத்தையே கையில் எடுக்காதவள்

தெருக் குழாயில்

நீர்ப் பிடித்து

இடுப்பில் சுமக்கிறாள்...

புள்ளிகளே வைக்கத் தெரியாதவள்

கோலம் போட

தொடங்கிய இடத்திலேயே

வந்து முடிக்க முடியாமல்

எதிர் வீட்டு

ஜன்னலைப் பார்த்து சிரிக்கிறாள்!

(தினத்தந்தி - குடும்ப மலர் 18.1.2004 )



 
தெருக்கோடிப் பெண்ணே...

நீ உலாவியது என்னமோ

தெருவில் தான் ஆனால்

அடிவைத்ததெல்லாம்

என் இதயத்தில்!

நீ போகின்ற பாதை

எதுவென்று தெரியவில்லை

ஆனால் நீ

வருகின்றப் பாதை

என் இதயமாக இருக்கட்டும்!

(முத்தாரம் 1.8.2003)

 
வடு...

வேறு ஒருவனுடன்

திருமணமானாலும்

பழைய நைந்த

பட்டுச் சேலையைப்

பார்க்கும்போது

ஞாபகம் எனக்கு...

பூப்பெய்திய போது

வாங்கிக் கொடுத்த

முறைமாமனுக்குக்

கட்டி அழகு காட்டியது!

(தினமலர் - வாரமலர் 13.7.2003)



நவீனக் காதல்

எல்லோரையும் போல

ஆயிரம்

ஆயிரம்

கனவுகளோடுதான்

காதலிக்க ஆரம்பித்தேன்

நீயோ

ஆயிரமாயிரம் வைத்திருப்பவனை

காதலிக்க ஆரம்பித்து விட்டாய்!

(முத்தாரம் 31.1.2003)



ரட்டை அழகு!

அழகானக் கவிதை

பெண்கள்!

அதைவிட அழகு

எத்தனை முறை உச்சரித்தாலும்

சலிக்காத

உங்களின் பெயர்கள்!!

(ராணி 2.2.2003)



சுமைதாங்கி!

ஆறடிக் கூந்தலில்

ஐந்து ஆறு முழம் பூ

அழகாய்தான் இருக்கிறது

ஆனால்

அதன் சுமை தாங்காமல்

என் இதயம்

( ராணி 23.3.2003)



நிம்மதி…

பிரிந்திருந்து

கஷ்டப்படுவதைவிட

வா, காதலி

திருமணம் செய்துகொண்டு

கஷ்டப்படுவோம்

இருவரும்

இணைந்து விட்டோம் என்ற

நிம்மதியாவது இருக்கட்டும்

(முத்தாரம் 23.1.2004)



உன்னிடமிருந்து...

எப்பொழுதாவது

ஒரு கடிதம்...

என்றாவது ஒரு

தொலைபேசி அழைப்பு...

ஆயுள் முடிவதற்குள்

ஒரு சந்திப்பு...

இவைகளில்

ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு

என் முதல் காதலியே!

(தினத்தந்தி - குடும்ப மலர் 7.12.2003)



உன்னிடம்

கற்றுக் கொண்ட

காதலுக்காக

என் இதயத்தை

குருதட்சனையாக

ஏற்றுக்கொள்

(முத்தாரம் 14.5.2004)

 
வடியும் ரத்தம்...

காதலே நீ

ஏற்படுத்திவிட்டுப் போன

காதல் காயங்களிலிருந்து

வடியும் ரத்தம்

என் கவிதைகள்

(முத்தாரம் 3.9.2004)



நீ காதலித்துத் தோற்றதால்

அனுபவித்துக் கொண்டிருக்கும்

ஒரு தலையின்

கொடுமையைத் தானே

உன்னை நான்

காதலித்துக் கொண்டிருப்பதால்

அனுபவிப்பேன்

என்பது கூடத் தெரியாமல்

நீ என்னை

வெறுத்துக் கொண்டுள்ளாயே!

(குடும்ப நாவல் டிசம்பர் 2003)


தன்னைத் தானே

எரித்துக் கொள்கிறாள்

என்பது கூடத் தெரியாமல்

எரித்துக் கொண்டுள்ளாள்!

அவளை வர்ணித்து

எழுதிக் கொடுத்த

கவிதைகளை!!

(குடும்ப நாவல் ஜுன் 2004)

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள் அருமை நண்பரே, கவி வரிகள் அனைத்தும் தேன் சுவையுடையதாய் இருக்கிறது.. தொடருங்கள் உங்கள் தமிழ் பணியை

    பதிலளிநீக்கு