பிப்ரவரி 01, 2013

கடவுள் – 19


கடவுள் கடவுளாகிப்போனார் - கடவுள் – 19

பூ பழம் தேங்காய் உடன்
கோயிலுக்குச் சென்றார் கடவுள்!
பீய்ந்த செருப்பை விட
கட்டணமாக 5 ரூபாய் தண்டம் -
கற்பூரம் ஊதுவத்தி 10க்கு வாங்கி
கோயில் வாசப்படிக்கு வந்தவர் அதிர்ந்தார்!
எந்தச் சாமி இத்தன பேரின்
கண்ணைக் குத்தியிருக்கும்!
பள்ளிக்குச் செல்லாத அவர்கள்
மனப்பாடம் செய்து வைத்திருந்த
டீக்குப் பணம் 5 ரூபாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்!
கடவுளுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை
விரைவு அர்ச்சனை சீட்டை
10 ரூபாய் கொடுத்து வாங்கியவர்
மறுபடியும் அதிர்ந்தார்
அந்த வரிசையிலும் நீண்ட கூட்டம்!
முதியவர்கள் ஏதோ தெரிந்த மந்திரத்தை
முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்
கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி
அந்த வாரத்தில் புதிதாக வந்த
திரைப்படத்தின் குத்துப்பாடலை
சப்தமாகப் பாடிக்கொண்டிருந்தது!
காதலர்கள் கைகளை இறுக்கமாகப் பிடித்துகொண்டு
தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு
முன்னால் போக அனுமதியளித்து
நின்ற இடம்விட்டு நகராமல் இருந்தார்கள்.
கடவுள் கொஞ்சம்கொஞ்சமாய் முன்னேறி
4 மணிநேரத்துக்குப் பின்
ஓரிரண்டு வினாடியே தரிசித்துவிட்டு வெளியேறினார்.
பசியெடுத்ததோ என்னவோ
வேற்று மதத்தினர் கொடுத்துக்கொண்டிருந்த
பிரசாத்ததை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்!
வெளியேறியபோது வாங்கிவந்த
பிரசாத்ததை 5 ரூபாய் கேட்டவர்களுக்குக் கொடுக்க
கூட்டத்தில் ஒருவர்
முறைத்த பின் வாங்கிக்கொண்டார்!
நெரிசல். அமைதிக்காகச் சென்ற இடத்தில் சப்தம்.
கழிவுகள்.
பயணம் முடிவதற்குள் பேரூந்து விபத்து
நான்கு பேர் பலியாக
அதிஷ்டவசமாக
மயிரிழையில் உயிர்ப் பிழைத்தார் கடவுள்!
வருத்தத்தோடு தெரு முனையில் வந்தபோது
இளைஞன் ஒருவன்
வேப்பமரத்தடியில் இருந்த
கல்லை வணங்கி
மகிழ்ச்சியோடு திரும்பியதைக் கண்டார்.
பேசாம நாமும் இங்கேயே
சாமி கும்பிட்டு
இருக்கும் வேலையைக்
கவனித்திருக்கலாம்…
கடவுளுக்கும் புத்தி வந்தது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக