மார்ச் 12, 2017

Kavanur Srinivasan - பாரியன்பன் - ஹைக்கூ விமர்சனம்

நன்றி - Kavanur Srinivasan - 
ஹைக்கூ கவிதைகள் முகநூலில் ஆர்வத்துடன் எழுத முயற்சிக்கின்றனர்.பலர் எழுதியும் வருகின்றனர். இக்கவிதைகளை பல குழுக்கள் வரவேற்று கவிஞர்களை ஊக்குவித்து வருவதும் வாசகர்கள் அறிந்தவொன்று.
ஹைக்கூ உலகம் - முனைவர் ம.ரமேஷ் அவர்களால் கவிஞர்களுக்கு பயிற்சிகொடுத்து இவ்வகைமைகளை இனங்காட்டி எழுதவைத்துக்கொண்டிருக்கிறது.
' ஒரு ஹைக்கூவும் ஒரு தேநீர் கோப்பையும் ' என இக்குழுமமும் நடத்திவருகிறது.
ஒரு நூறு கவிஞர்கள் இருக்கலாம்.இப்படி மூன்றுவரிகளில் மூழ்கி முத்தெடுத்து தந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்னும்ஒரு சரியான வழிகாட்டியின்றி தான் ஆரம்பகவிஞர்கள் மனம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. போட்டிகள், விருதுகள், சான்றுகள் என ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 
ஹைக்கூ சற்று எழுதி பழகக்கற்றுக்கொண்டவர்கள் சக நண்பர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் தங்கள் பதிவுகளை முன் வைத்து நடத்துகின்றனர்.
யுகபாரதி கந்தகப்பூக்கள் அவர்களும் இதுகுறித்து விளக்கமளித்து வருதலை நானும் வாசித்து கடக்க தவறுவதில்லை.
ஹைக்கூ பற்றி நா.விச்வநாதன் அவர்களும் அடிக்கடி அடர்த்தியுடன் இவ்வகைமையில் கருத்துக்களையும் கவிதைகளையும் நகர்த்திச்செல்கிறார்.
ஹைக்கூ தோட்டம் என்ற குழுமம் ஆர்வத்துடன் தொடங்கி முழுதாக தொடரவியலாமல் நிறுத்தமும் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து ஹைக்கூ தோட்டம் , ஹைக்கூ உலகம் , எனது முகநூல் பக்கம் என்று அவ்வப்போது ஹைக்கூ பற்றிய கருத்துக்களை பதிவுசெய்து தற்போது இக்குழுவிலும் இதைப்பற்றி கருத்தினை இங்கு முதல்முறையாக பதிவிடுகிறேன்.
ஹைக்கூவை தெளிவுபடுத்தும் நபர்களின் வரிசையில் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. 
இதைப்பற்றி புரிதலின்றி சிலர் எழுதிவருகிறார்கள் என்பது மேலோட்டமான கருத்து. சிலர் போலச்செய்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு. சிலர் அடிபிறழாமல் எடுத்து கவிதைதிருட்டு நடக்கிறது என்பதை ஆதாரத்தோடு எடுத்து பதிவது மனதை தடுமாறச்செய்துவிடுகிறது.
எது ஹைக்கூ ? அதை எப்படி எழுதவேண்டும் ? எப்படி அதை வாசிக்கவேண்டும் ? என்றெல்லாம் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன.ஒரு ஹைக்கூ படிப்படியாக எப்படி தோன்றியது என்றும் அது மூன்றுவரிகளில் எப்படி காட்சிபடுத்துகிறதென்றும்; அது முடிந்தபின் மனதிற்குள் விரிகிற காட்சிகளையும் கவிஞர்கள் அடிக்கடி சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
படங்கள் தந்தும்; இரண்டு வரிகள் தந்தும் ஹைக்கூவை பயிற்சியின் அடிப்படையென்று ஹைக்கூவை வலிந்தும் எழுத வைக்கப்பட்டு வருகின்றன.
ஹைக்கூவைப்பற்றிய செய்திகள்; கருத்துரைகள் எல்லோரும் கூறியது கூறலையே தரப்பட்டு வருகின்றன.
ஈரோடு.தமிழன்பன், நா.விச்வநாதன், மித்ரா, அமுதபாரதி, மு.முருகேஷ் மற்றும்பலர் ஹைக்கூவில் முத்திரை பதித்தவர்கள்.அவர்கள் நூலினை ஹைக்கூ எழுதவிரும்புபவர்கள் முழுமையாக வாசித்து பின் எழுதத்தொடங்கலாம்.
ஜப்பானிய ஹைக்கூக்கள் போல எழுதுவதென்றால் மனதில் ஜென் துளிர்க்க வேண்டும்.
தமிழக ஹைக்கூக்கள் சற்று வேறு நிலைப்பாடுகளில் பரவிகிடக்கிறது.
தெரிந்தவைகளையே சொல்லிக்கொண்டு இன்னும் வரிகளை நகர்த்தவிரும்பவில்லை. ஹைக்கூ உலகத்தில் ரமேஷ் இதனை சிறப்பாக வகைப்படுத்தியிருப்பார்.
சில புரிதல்களும் தெளிவுகளும் கவிஞர்களிடம் நிறைவாக இல்லையென்பதே ஹைக்கூவை பொருத்தவரை பொதுவில் வைக்கப்படுகிற ஒரு குற்றச்சாட்டு.
கவிஞர்கள் ஹைக்கூவை படைப்பதில் எந்த இடத்தில் கவனத்தை சிதறடித்து விடுகிறார்கள் என்பதை நான் வாசிக்கும் போது கவனிப்பதுண்டு.சில சமயம் சுட்டும்போது அது விவாதகளமாகவும்; தர்க்கமாகவும் மாறி மனதை உளவியல் ரீதியாகவும் பாதித்தும் இருக்கிறது.
நான் சரியான வழிகாட்டியா எனத்தெரியாது. இருந்தாலும் சில எனது அனுபவங்கள் உங்களுக்கு நல்ல ஒரு ஹைக்கூ எழுத மனதை கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை தான் அடிக்கடி எழுத தூண்டுகின்றன.
இன்றைய தினமலர் வாரமலரில் இதழின் பின் அட்டையில் பாரியன்பன், குடியாத்தம் அவர்களின் ஹைக்கூக்கள் பிரசுரமாகியிருந்ததை வாசித்தேன்.
நண்பர் பாரியன்பன் கவிதை சிந்தனை அதிகம் பெற்றவர். ஹைக்கூ , நவீனம் என்று எல்லா சிற்றிதழ்களிலும் வணிக இதழ்களிலும் முகநூலிலும் எழுதி வருபவர். எனது அருவி இதழிலும் தொடர்ந்து எழுதிவரும் இனிய நண்பர். சமீபத்தில் அவரது ஹைக்கூ நூலொன்றிற்கும் அணிந்துரை வழங்கியிருக்கிறேன். அவரது ஹைக்கூ கவிதைகள் இப்பதிவுக்காக இங்கு எடுத்துக்கொள்கிறேன்.
சில நிறைவுகளும் சில குறைகளும் இங்கு பொதுவில் வைப்பதால் எல்லோரும் திருத்திக்கொள்ளவும், ஒரு புரிதல் ஏற்படவும் இது பயன்படும்.
-இலைக்குப் பின்னால்
மறைந்து கொள்கிறேன்
பலத்த காற்றும் மழையும்.
சிறப்பான கற்பனை. இதை ஹைக்கூ என்று ஏற்கலாமா வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது ஒரு நவீன சிந்தனை.நவீன கவிதைத்தன்மையை உள்ளடக்கியிருக்கிறது.
கொஞ்சம் வரிகளை மாற்றிப்போட்டால் ஒரு ஹைக்கூவின் தன்மை பளிச்சிடும்.
- மறைந்து கொள்கிறேன்
இலைகள் பின்னால்
பலத்த காற்றும் மழையும்.
ஹைக்கூ மூன்றுவரி.ஒரு ஹைக்கூ இரண்டுவரியில் உள்ளது.
-முன் வாசலில் மணக்கிறது
கொடிமுல்லை.
ஆழ்ந்து யோசித்தால் சிறு மாற்றம் தரலாம்.
- ரசிக்கிறேன்
முன் வாசலில் கோலமில்லை
கொடி முல்லை.
பொதுவாக ஹைக்கூவிற்கு சொற்சிக்கனம் தேவை. ஒரு முறை எழுதிபார்த்துவிட்டு பொருள் மாறாமல் தேவையற்ற சொற்களை நீக்கலாம்.
பாரியன்பனின் ஹைக்கூ:
நேற்றின் மீதமிருந்தது
நெஞ்சில் உன் நினைப்பும்
சட்டியில் பழைய சோறும்.
இதை இப்படி சொற்கள் குறைத்து எழுதலாம் .
-நேற்றின் மீதமிருந்தது
உன் நினைவும்
கொஞ்சம் பழைய சோறும்.
பாரியன்பனின் இன்னொரு ஹைக்கூ:
-பிரார்த்தனைக்காக
ஏற்றப்படாத போதிலும்
கண்ணீர் சிந்தும் மெழுகுவர்த்தி.
கொஞ்சம்இப்படி மாற்றி யோசிக்கலாம்.
-பிரார்த்தனை
கண்ணீர் சிந்துகிறது
எரியும் மெழுவர்த்தி.
வாரமலரில் இன்று பிரசுரமான கவிதைகளில் சிலமட்டும் இப்படி அமைந்திருந்தால் ஹைக்கூ வாசிக்க சுவைகூடும் என்பதை முன்வைக்கிறேன்.
நணபர் பாரியன்பனுக்கும்; இக்குழுவிற்கும் வாசித்துக்கடப்பவர்களுக்கும் என் நன்றிகள்.
-காவனூர்.சீனிவாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக