அக்டோபர் 09, 2012

கடவுள் – 14, 15


கடவுள் – 14

முதியவன் தோற்றம் தரித்து
கடவுள் முதியோர் இல்லத்தில்
அடைக்கலமானார்!
பணம்தான் குறையாக இருந்தது
அன்பும் பாசமும்
கொட்டிக் கிடைத்த
குடும்ப வாழ்க்கையில்
இன்று அனாதையாகக் கடவுள்!
பெற்றப் பிள்ளைகள்
கையில் பணம் இருக்கிறது என்பதற்காகப்
பெற்றோர்களை அனாதையாக்கவதா? என்றதற்கு
அங்கிருந்தவர்கள்
மகனைத் திட்டாதீர்கள் என்றார்கள்.
அவர்களுக்குப் பாடம்
கற்பிக்க வேண்டும் என்றார்.
அவர்கள்
நாங்கள் படிக்க வைத்த
ஆங்கிலப் பாடமும் சரி இல்லை
அவர்களாகப் படித்தப் பாடமும்
சரி இல்லைஎன்றார்கள்.
பிறகு தண்டிக்காமல் இருப்பதா?
விட்டுவிடுங்கள்அவர்கள் தம் பிள்ளைகளுக்கு
நாங்கள் தராத கல்வியைத்தானே தருகிறார்கள்.
தாமதமாக அவர்களும் இங்கு வருபவர்கள்தான்!

கடவுள் – 15

கவிதை எழுத
பேப்பர் தேடிக்கொண்டிருந்தார் கடவுள்.
பேப்பர் கிடைத்ததும்
பேனாவில் மை தீர்ந்திருந்தது.
அதையே கவிதையாக்கி
பேனா இருக்கும்
எழுத மை இருக்காது.
காதலி இருப்பாள்
உதட்டில் முத்தம் இருக்காதுஎன்று எழுதி
கவிஞராகிவிட்டார்!
அடுத்தடுத்த இரண்டு படைப்புகள்
சாகித்திய அகாதெமி விருதுக்கான
தகுதியைப் பெற்றிருந்தும்
விருது கை நழுவிப்போனது.
ஐந்தாம் ஆண்டு -
கருவற்ற கவிதைத் தொகுதிக்கு
சாகித்திய அகாதெமி விருது கொடுக்கப்பட்டது!
இந்த ஆண்டு
இவருக்குக் கொடுக்க வேண்டும் என்று
ஏதோ ஒரு காரணத்துக்காக
விருது கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்த
கடவுள் மகிழ்ச்சியின்றி
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி
பேட்டிக் கொடுத்தார்.
பத்திரிகைகள்
பணம் கொடுத்து வாங்கிவிட்டாரென்று
மறுநாள் தலைப்புச் செய்தியானது.
இன்றும் பரிசுக்குரிய படைப்புகள்
பரிசு பெறாமல் போவது
அரசியலால்தான் என்பதை உணர்ந்தார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக