அக்டோபர் 08, 2012

கடவுள் 11, 12


கடவுள் – 11

பூங்காவில் அமர்ந்து
வண்ணத்துப்பூச்சியை
ரசித்துக்கொண்டிருந்தார் கடவுள்.
பூக்கள் அழகா?
வண்ணத்துப்பூச்சி அழகா?
கடவுளே நடுவராகவும்
வலது இடது பேச்சாளராகவும் இருந்து
ஒரு மணி நேரம்
வெற்றுப் பேச்சு பேசி முடிவெடுக்கப்பட்டது
இரண்டுமே அழகென்று!
சிறுவர்கள் ஓடிவிளையாடினார்கள்.
பூக்கள் அழகு என்றான் காதலன்!
பறிக்க முடியாத வண்ணத்துப்பூச்சிதான்
மிகவும் அழகு என்றாள் காதலி!
அந்தக் காதலர்கள் சிறிது இடைவெளியில்
முத்தத்தோடு கொஞ்சிக் கொண்டார்கள்.
முதியவர்கள் கைதாங்களாக நடந்தார்கள்.
விவாகரத்தானவளின் பார்வை
விவாகரத்தானவனின் புது மனைவி
ஊனமுற்றவனின் தன்னம்பிக்கை
போதையில் தடுமாறிய நடை -
ச்சிஎன்ன அது
வண்ணத்துப் பூச்சியைத்தானே
ரசித்துக்கொண்டிருந்தேன்.
கடவுளே!
மனசு ஏன் கட்டுப்பாட்டுக்குள்
வரமாட்டேன்கிறதுஎன்று
நொந்துகொண்டார் கடவுள்!!!


கடவுள் – 12

ஒற்றைக் காற்சிலம்போடு
கண்ணகியாக மாறி
பாண்டியன் அவை சென்றார் கடவுள்.
என்ன அது மீண்டும் கண்ணகி!
மதுரை தீக்கு இரையாகப்போகிறதா?
அன்றேதான் அழித்துவிட்டாளே!
கோயில்கூட கட்டியாகிவிட்டதே!
தவறு செய்யாதபோதும்
நடுநடுங்கிக்கொண்டிருந்தார் பாண்டியன்.
பக்கத்தில் மனைவி நம்பிக்கையற்று
என்ன தவறு செய்தாரோ!
“மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி” வீழ்வதற்குமுன்
“தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது”
இந்த முறை நான் அவருக்கு முன்பாகச்
செத்துவிட எண்ணி மரணித்துப் போனாள்
இன்னும் என்னென்ன நடக்குமோ என்று
அவையோர் அஞ்சும்முன்
கண்ணகி பாண்டியனிடம்,
கோவலனைத் திருத்த முடியாமல்
மதுரையை எரித்ததற்கு
மன்னித்திடுங்கள்என்றாள்!
மகிழ்ச்சியோடு கையில் இருந்த
மற்றொரு சிலம்பைக் கொடுத்து
என்னால் எரிந்த மதுரையை
புணரமைத்துக்கொள்ளுங்கள் என்றாள்!
மயானத்தில் சந்தனக் கட்டையின்மேல்
எப்போதும்
தவறே செய்யாத
கோப்பெருந்தேவி எரிந்துகொண்டிருந்தாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக