அக்டோபர் 07, 2012

கடவுள் 8, 9, 10


கடவுள் – 8

புத்தகத்தைக் கையில் எடுக்காமல்
குழந்தைத் தொழிலாளியானார் கடவுள்.
கல்வி உரிமைச் சட்டம் இருக்கிறதே!
ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல்
வீடுவீடாகச் சென்றார்கள்!
கடவுளின் வீட்டுக்கும் சென்று
நீ படிக்கத்தான் வர வேண்டும்.”
எனக்குப் படிப்பு ஏறவில்லை!”
பத்தாம் வகுப்பு வரை
படிக்காவிட்டாலும் பாஸாக்கிவிடுகிறோம்!”
அதற்குமேல்?”
நீதான் படிக்க வேண்டும்!”
பத்தாவது வரை படிக்காதவனால்
பதினொன்னாவதிலிருந்து எப்படி படிக்கமுடியும்?”
அதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை.”
“ஏன் அதற்கும் சேர்த்து
தேர்தல் வாக்குறுதி கொடுக்கச் சொல்லுங்களேன்!”
“முடிவா என்னதான்டா சொல்ற?”
“அதான் சொல்லிட்டேனே
என்னால் படிக்க முடியாதுன்னு!”
நீ எங்கிட்ட தைரியமா சொல்லிட்ட
நான் எப்படிப் போய்
மேலதிகாரியிடம் சொல்வேன்.
“கடவுளே
என்ன ஏன்தான் வாத்தியாராக்கினியோ தெரியலையே!”

கடவுள் – 9

ஏர்பிடித்து உழ ஆரம்பித்தார் கடவுள்.
வறண்டு இருந்தது பூமி.
கடவுளே மழை பெய்ய வெக்கக்கூடாதா?
மழை பெய்தது.
ஏர்பிடித்த பாதி வயல்
மழையால் சேறாகிப் போனது.
3 நாள் கழித்து
ஏர் பூட்டி
முன்பு உழுத இடத்திலிருந்தே
ஏர் பிடிக்கத் தொடங்கியதும்
பூமி ரொம்ப ஈரமா இருக்கு என்று
சலித்துக்கொண்டார்.
டிராக்டர் பிடித்து உழவு செய்தார்
விதைத்தார்.
நாற்றுநடவும் களை எடுக்கவும்
100 நாள் வேலையால் பாதிக்கப்பட்டதாக
வருந்திக்கொண்டார்.
அறுவடைக்கும் யாரும் வரவில்லை
அறுவை எந்திரம்கொண்டு காரியத்தை முடித்தார்.
கணக்குச் சரி பார்த்தலில்
செலவே அதிகம் இருந்தது.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை
நிலத்தை வீட்டுமனைபோடுவோரிடம்
5 கோடிகளுக்கு விற்றுவிட்டு
நகரத்தில் வீடு கட்டி குடியேறிவிட்டார்!


கடவுள் – 10

கடவுள்
விமானப் பணத்தில் நம்பிக்கையற்று
புஷ்பக விமானத்தில்
நேரடியாகக் கூடங்குளம் வந்திறங்கினார்.
ஓராண்டு அமைதியாகப் போராடியும்
நீதி கிடைக்கவில்லையா?
உயர்நீதி மன்றம்கூட
கைவிரித்துவிட்டது என்ற உதயகுமார்
உச்சநீதி மன்றத்தை நம்பி இருக்கிறோம் என்றார்.
ஆய்வாளர்கள்
உச்சநீதி மன்றத்துக்குக்கூட பொய் அறிக்கை
சமர்பிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.
அப்படியென்றால் என்னால்கூட
இனி தடுத்துநிறுத்த முடியாது என்று
கை விரித்தார் கடவுள்.
சரிஅரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
ஓட்டுக்காக முன்னுக்குப் பின்
பேச்சை மாற்றிக் கொள்கிறார்கள்.
பணம் போனால் என்ன
சம்பாதித்துக் கொள்ளலாம்
உயிர் போனால்
வாட்டமுற்ற கடவுள்
அறிவியலில் முன்னேறிவிட்டார்கள்
என்பதைக் காட்ட உயிரோடு விளையாடுவதா!
அணு எல்லாம் வேண்டாம் என்றுதானே
இயற்கை சக்திகளைப் படைத்தேன்.
சோம்பேறிகள் தான்
இயற்கைக்கு மாற மாட்டார்கள் என்று
கோபமுற்றுப் பேசியபோது
உதயகுமார் சிரித்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக